Monday, November 28, 2011

ஆய கலைகள் 64 !

ஆய கலைகள் 64 பற்றி நமது ராஜாக்கள் கதைகளிலும் ,பள்ளிப்பாடத்திலும் கேள்விப்பட்டு இருக்கிறோம் . இதுவரை ஏனோ அந்த 64 கலைகள் எது எது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் வரவில்லை . தற்செயலாக  இணையத்தில் கிடைத்தது . அவை ,
 
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)


நன்றி : Tamil .

மேலும் படிக்க : 
 
நாமெல்லாம் யார் ?  


சிவில் சர்வீசஸ் தேர்வில் கேள்விகள் தமிழிலும் இருக்க வேண்டும் ! 
 .............................................................................................................................
 

Sunday, November 27, 2011

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு !

சுய சிந்தனையே இல்லாமல் மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புபவர்களுக்கும் , மூட நம்பிக்கைகளை நம்புபவர்களுக்கும், " ஆறறிவில் ஓரறிவு அவுட்டு ! " என்று சொல்கிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் . 1965 ஆம் ஆண்டு வெளிவந்த " மகனே கேள் " என்ற திரைப்படத்திற்காக இந்தப் பாடலை எழுதினார் .

அந்தப் பாடல் :    பாடல் வரிகள் :

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ சிலருக்கு
ஆறறிவில் ஓரறிவு அவுட்டு _ இருக்கும்
ஐந்தறிவும் நிலைக்குமுன்னா
அதுவுங்கூட டவுட்டு  (ஆறறி…)


அடக்கமில்லாப் பெண்கள் சிலர்
நடக்கும் எடக்கு நடையிலும்
ஆதிகாலப் பண்பைக் காறறல
பறக்க விடும் உடையிலும் (ஆறறி…)

தன்ரேகை தெரியாத
பொய்ரேகைக் காரரிடம்
கைரேகை பார்க்கவரும் முறையிலும் _ அவன்
கண்டதுபோல் சொல்லுவதை
நம்பிவிடும் வகையிலும் (ஆறறி…)

ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும்
எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும்
சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும்
சொந்த நிலையை மறந்துதிரியும் ஈனப் பேச்சிலும்
சிந்திக்காத இடங்களிலும்
தெண்டச்சோத்து மடங்களிலும் (ஆறறி…)


 " தன்ரேகை தெரியாத பொய்ரேகைக் காரரிடம் " ," ஏமாறும் மனத்திலும் ஆமாஞ்சாமிக் கருத்திலும் எந்த நாளும் திருந்தாத மூடத்தனத்திலும் "," சோம்பேறி சுகத்திலும் துடைநடுங்கும் குணத்திலும் " , எவ்வளவு வலிமையான வரிகள் .

நமக்கு ஆறு அறிவா ? ஐந்து அறிவா ?

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

திண்ணைப் பேச்சு வீரரிடம் ! 

......................................................................................................................

Friday, November 25, 2011

நாமெல்லாம் குற்றவாளிகளே !

நாம் வாழும் இந்தப்  பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்
( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து  உயிரினங்களையும்  பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில்  வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .

 மற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்)  ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற்கையில் கழிவு என்பதே இல்லை .

மனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக்  கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .

எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்  இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே  எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .

மனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .

பூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக்   கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு  எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம்  குற்றவாளிகளே !

மற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்
தயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும்   எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து பெற்றுக் கொள்கின்றன .

மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு ???  பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .

மனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் !மேலும் படிக்க :

நீரின்றி அமையாது உலகு ! 

வேடந்தாங்கலில் ஒரு நாள் !  
............................................................ 

Monday, November 21, 2011

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

திண்ணை ,இதை நாம்  மறந்து ரொம்ப நாளாகிவிட்டது .இந்தப்பாடல் திண்ணையைப் பற்றிச் சொல்லவில்லை . வெட்டிக்கதைகள் பேசி நம் நேரத்தை வீணடிக்கும் ,வாய்ச்சொல்லில் மட்டுமே வீரர்களாக இருக்கும் வீணர்கள் பற்றி இந்தப் பாடலில் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் .பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றது .

திண்ணை ,இன்று இல்லை . ஆனால் , அதிக எண்ணிக்கையில் ,பல்வேறு விதமான இடங்களில் திண்ணைப் பேச்சு வீரர்கள் இன்றும் இருக்கிறார்கள் . இன்றைய சூழ்நிலையில்  தொ(ல்)லைக்காட்சியில் தான் திண்ணைப் பேச்சு வீரர்கள் அதிகம் தோன்றுகிறார்கள் . ராசிபலன் சொல்பவர்,அதிர்ஷ்டகல் விற்பவர், யந்திரம் விற்பவர் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்களில்  பேசுபவர்கள் (சின்னத்திரை நடிகர்கள், நாடகத்தில் நடிகிறார்களோ இல்லையோ தவறாமல் ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் நடிக்கிறார்கள் ), டெலி பிராண்ட் விளம்பரங்களில் பேசுபவர்கள் ,ஏழு நாட்களில் வெள்ளையாகி விடலாம் என்று விளம்பரம் போடுபவர்கள் என்று தொ(ல்)லைக்காட்சியில் தோன்றும்  திண்ணைப் பேச்சு வீரர்களின் எண்ணிக்கை அதிகம் .

மேடையில்  அரசியல்வாதிகள் பேசும் போலியான பேச்சு , ஆன்மீகவாதிகள்  பேசும் பேச்சு ,தற்போதைய பிரதமர் பேசும் பேச்சு இவையெல்லாம் எதற்கும் உதவாத திண்ணைப் பேச்சில் அடக்கம் .இவர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் பட்டுக்கோட்டையார்  அன்றே பாட்டு எழுதியிருக்கிறார் .

அந்தப்பாடல் : 


பாடல் வரிகள் : 


தர்மமென்பார் நீதியென்பார் தரமென்பார்
சரித்திரத்தைச் சான்று சொல்வார்
தாயன்புப் பெட்டகத்தைச் சந்தியிலே எறிந்துவிட்டுத்
தன்மான வீரரென்பார்
மர்மமாய்ச் சதிபுரிவார் வாய்பேசா அபலைகளின்
வாழ்வுக்கு நஞ்சுவைப்பார்
கர்மவினை யென்பார் பிரம்மனெழுத் தென்பார்
கடவுள்மேல் குற்றமென்பார்


இந்தத் _ திண்ணைப் பேச்சு வீரரிடம் _ ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி _ நாம
ஒண்ணாயிருக்கணும் அண்ணாச்சி
எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை உண்டாக்கணும் _ இந்தத் (திண்ணை…)

பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்
புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் _ அந்தப்
பொல்லாத மனிதர் சொல்லாமல் திருந்த
நல்லோரை எல்லோரும் கொண்டாடணும் _ இந்தத் (திண்ணை…)

கடவுள் இருப்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு
கஞ்சிக் கில்லாதார் கவலை நீங்கவே
கருதவேண்டியதை மறந்தாச்சு _ பழங்
கதைகளைப் பேசி காலம் வீணாச்சு;
கையாலே முன்னேற்றம் கண்டாகணும் _ இந்தத் (திண்ணை…)

நாடி தளர்ந்தவங்க ஆடி நடப்பவங்க
நல்லவங்க கெட்டவங்க நம்பமுடி யாதவங்க
பாடி கனத்தவங்க தாடி வளர்த்தவங்க
பலபல வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டவங்க
படிப்பவங்க வீடு புடிப்பவங்க
பொடிப்பசங்க பெரும் போக்கிரிங்க
இன்னும் _ பொம்பளைங்க ஆம்பளைங்க
அத்தனை பேரையும்வச்சு மாடாஇழுக்கிறோம் வேகமா;
நம்ம வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா
வண்டியை உருட்டி வறுமையை வெரட்டி
உண்டாலும் காய்ந்தாலும் ஒன்றாகணும் _ இந்தத் (திண்ணை…)

 எவ்வளவு அருமையான வரிகள் !"பொதுநலம் பேசும் புண்ணியவான்களின்
போக்கினில் அனேக வித்தியாசம்", "புதுப்புது வகையில் புலம்புவதெல்லாம்
புவியை மயக்கும் வெளிவேஷம் "," கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்  சபைக்கு உதவாத வெறும் பேச்சு ".

எந்நாளும் உலகில் ஏமாற்றும் வழிகள் இல்லாத நன்னாளை உண்டாக்கணும் !

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

நாமெல்லாம் யார் ?

............................................................................

Saturday, November 19, 2011

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது !

1956 ஆம் ஆண்டு வெளிவந்த " பாசவலை " எனும் திரைப்படம் அதன் பாடல்களுக்காகவே அதிக நாள் ஓடியது .பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்தப்படத்தில் 5 பாடல்கள் எழுதியிருந்தார் .அதில் ஒன்று தான் இந்தப்பாடல் .  சி .எஸ் .ஜெயராமன் அவர்களால் பாடப்பட்டது .படத்திற்கு இசை , விஸ்வநாதன் ராமமூர்த்தி .இந்தப் பாடலில் ஆட்டைக் குறிப்பிடுவது போல நாட்டைக் குறிப்பிடுகிறார் ,பட்டுக்கோட்டை .

பாடல் வரிகளுக்கு  ஏற்ற வகையில் கிருபாகரன்  அவர்கள் ,காணொளியில் காட்சிகளை இணைத்துள்ளார் .

அந்தப் பாடல் இதோ :


பாடல் வரிகள் : 

இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் _ பெருங்
கூட்டிருக்குது கோனாரே! _ இதை
ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒருமுடிவுங் காணாரே!
தில்லாலங்கிடி தில்லாலங்கிடி
எல்லாம் இப்படிப் போகுது
நல்லாருக்குள் பொல்லாரைப்போல்
நரிகள் கூட்டம் வாழுது (இநத…)

கணக்கு மீறித் தின்றதாலே
கனத்த ஆடு சாயுது _ அதைக்
கண்ட பின்னும் மந்தையெல்லாம்
அதுக்கு மேலே மேயுது
பணக்கிறுக்குத் தலையிலேறிப்
பகுத்தறிவுந் தேயுது _ இந்தப்
பாழாய்ப்போற மனிதக்கூட்டம்
தானாய் விழுந்து மாயுது (இநத…)

ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு
பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங்கண்டு
நேரம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு
நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு _ இதைப்
படித்திருந்தும் மனக்குரங்கு
பழைய கிளையைப் பிடிக்குது
பாசவலையில் மாட்டிக்கிட்டு
வௌவால்போலத் துடிக்குது
நடக்கும்பாதை புரிந்திடாமல்
குறுக்கே புகுந்து தவிக்குது;
அடுக்குப்பானை போன்ற வாழ்வைத்
துடுக்குப்பூனை ஓடைக்குது! (இநத…)

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :

கையில வாங்கினேன் பையில போடல ...! 

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  
..................................................................................................
                

கையில வாங்கினேன் பையில போடல ...!

தான் வாழ்ந்த 29 ஆண்டுகளுக்குள் 17 தொழில்களில் ஈடுபட்டவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ( http://www.pattukkottaiyar.com/site/?p=632) . அதனால் தான் எத்தனையோ கவிஞர்களுக்கு மத்தியில் ஒரே மக்கள் கவிஞராக திகழ்ந்தார் . திரையிசையில் பாட்டாளி மக்களின் குரலை ஒலிக்கச் செய்தார் . தனது பாடல் வரிகளையே சமூகத்தை விளாசும் சாட்டையாக பயன்படுத்தினார் .அவரது பாடலின்  வரிகள் நமக்கு மட்டுமல்ல , உலகத்துகே இன்றைக்கும் பொருந்தும் . ஈடு இணையில்லாத அந்த உன்னத கவிஞரைக் கொண்டாடுவோம் - (http://www.pattukkottaiyar.com/site/ ) .

சமீபத்தில் youtube தளத்தில் தேடலில் இருந்தபோது கிருபாகரன் என்பவர் இணைத்துள்ள காணொளிகளைப் ( வீடியோக்களைப் ) பார்க்க நேர்ந்தது .  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் வரிகளுக்கு பொருத்தமான படங்களைத் தேர்வு செய்து பாடலுடன் இணைத்து  காணொளிகளை உருவாக்கியுள்ளார் . அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது .கிருபாகரன் அவர்களுக்கு நன்றி . அதில் ஒரு பாடல் "கையில வாங்கினேன் பையில போடல..."

1960 ஆண்டு வெளிவந்த " இரும்புத்திரை " என்னும் திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெற்றது .இந்தப்படத்தைத்  தயாரித்து இயக்கியவர், திரு .எஸ் .எஸ் .வாசன் அவர்கள் .சிவாஜி கணேசன் ,வைஜெயந்தி மாலா ,தங்கவேலு ,சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர் .இந்தப்பாடல் பட்டுக்கோட்டையால் எழுதப்பட்டு ,திருச்சி லோகநாதனால் பாடப்பட்டு ,வெங்கட்ராமன் என்பவரால் இசையமைக்கப்பட்டு ,தங்கவேலு  அவர்களால் வாயசைக்கப்பட்டது .தங்கவேலு சிறப்பாக நடித்திருப்பார் .(அவர் நடிப்பைத் திரைப்படத்தில் தான் பார்க்க முடியும் " )


கையில வாங்கினேன் பையில போடல ...!
பாடல் வரிகள் :
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…)

விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே        -எதை
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…)

இந்தப்பாடல் இன்றைய சூழலுக்கும் அப்படியே  பொருந்துகிறது .

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/மற்றும்  கிருபாகரன் .


மேலும் படிக்க :
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா ...!  
......................................... ..................................................

Tuesday, November 15, 2011

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !

நாடகக்கலையின் தொடர்ச்சி தான் சினிமா .எல்லாவிதமான  நாடகங்களிலும் நகைச்சுவை நடிகர்கள் தேவைப்பட்டார்கள் .சினிமாவிலும் அப்படியே .பிரச்சனைகளுக்கு நடுவே வாழும் நம்மைச் சிரிக்க வைப்பது கடினம் . நகைச்சுவை நடிகர்கள் இதைச் சாத்தியப்படுத்தினார்கள் .தமிழ்த் திரையுலகில் பவனி வந்த நகைச்சுவை நடிகர்கள் ஏராளம் . T.S.பாலையா ,M.R.ராதா ,N.S.கிருஷ்ணன் ,K.A.தங்கவேலு ,காளி .N.ரத்னம் ,சந்திரபாபு ,V.K.ராமசாமி , நடிகர் கருணாநிதி,நாகேஷ் ,சுருளிராஜன் ,சோ ,என்னத்த கண்ணையா , தேங்காய் சீனிவாசன் ,கவுண்டமணி ,செந்தில் ,கல்லாபெட்டி சிங்காரம் ,S .S.சந்திரன் ,ஜனகராஜ் ,உசிலைமணி ,ஓமக்குச்சி நரசிம்மன் ,லூசு மோகன் , வெண்ணிறாடை மூர்த்தி , குமரிமுத்து , குண்டு கல்யாணம் , மௌலி ,விசு  என்று பெரிய பட்டியல் உள்ளது .

T.S.பாலையாவும்  , M.R.ராதாவும்  அசாத்தியமான நடிகர்கள் .T.S.பாலையா,எந்தவிதமான கதாப்பாத்திரமாக இருந்தாலும் அலட்டிக்காமல் நடிக்கக்கூடியவர் . M.R.ராதா , தனது கலகக் குரல் மூலம் கதாநாயகன் , நகைச்சுவை ,வில்லத்தனம் என்று பகுத்தறிவு கருத்துக்கள் பரப்பியவர் .
காளி .N.ரத்னம் , M.G.R.ருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் . " சபாபதி " என்ற படத்தைப் பாருங்கள் அவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் .

N.S.கிருஷ்ணன் , சிரிப்புடன் சிந்தனைகளைக் கலந்தவர் . சிந்தனைகளை வழங்குவதிலும் ,செல்வத்தை வழங்குவதிலும் கடைசி வரை வள்ளலாக வாழ்ந்தவர் . சந்திரபாபு , சிறந்த பாடும் முறையாலும் ,நடனத்தாலும் வசீகரித்தவர் . அவர் பாடிய பாடல்கள் இன்று வரை பெருமளவில் ரசிக்கப்படுகின்றன . K.A.தங்கவேலு , தான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் சிரிப்பாக மாற்றும் கலை இவருக்கு  மட்டுமே வாய்த்தது .  நடிகர் கருணாநிதி , வித்தியாசமான குரலாலும் ,உடல் மொழியாலும் சிரிக்க வைத்தவர் .

நாகேஷ் ,சிறந்த நடிகர் ,வித்தியாசமான உடல் மொழியால் நகைச்சுவையைத் தாண்டியும் நடித்தவர் .V.K.ராமசாமி , குணச்சித்திர நடிகரும் சிரிக்க வைக்கலாம் என்பதை உணர்த்தியவர் . தனது சிரிப்பால் நம்மைச் சிரிக்கவைத்தவர் .இவரை நினைக்கும் போதெல்லாம் இவரது சிரிப்பொலி ( க்கா கா கா க ) கேட்கிறது . அதுவும் V.K.ராமசாமியும் நாகேஷும் சேர்ந்துவிட்டால் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது .சுருளிராஜன் , சுருட்டைமுடியுடன்  வேறுபட்ட குரலாலும் ,உடல் மொழியாலும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் .

சோ , அறிவுப்பூர்வ அரசியல் வசனங்களாலும் , அலட்டிக்காத நடிப்பாலும் சிரிப்பை வரவைத்தார் .என்னத்த கண்ணையா , சிறு சிறு நகைச்சுவை   வேடங்களில் பல காலமாக நடித்து வருபவர் ( வரு...ம் ஆனா வரா...து ) .தேங்காய் சீனிவாசன் , இழுத்து இழுத்து பேசியே நகைச்சுவையைத்  தெளித்தவர் . கல்லாபெட்டி சிங்காரம் , எளிய தோற்றத்தாலும் ,குரலாலும் ,உடல் அசைவுகளாலும் சிரிப்பைக் கொடுத்தவர் ( டார்லிங் டார்லிங் டார்லிங் ).

கவுண்டமணி , செந்திலுடன் இணைந்து நீண்ட காலம் நகைச்சுவை உலகை ஆட்சி செய்தார் . நையாண்டி வசனங்களால் கூட நடிக்கும் ஏறக்குறைய அனைத்து நடிகர்களையும் கிண்டல் செய்தவர் . குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதித்தவர் . விளம்பர வெளிச்சம் இல்லாமல் இன்றுவரை வாழ்பவர் .
செந்தில் , மிக எளிமையான ,கோமாளித்தனமான தோற்றத்தாலும் ,வித்தியாசமான கேள்விகளாலும் (அண்ணே அண்ணே )சிரிக்க வைப்பவர் . கவுண்டமணியுடன் இணைந்தும் தனித்தும் கலக்கியவர் .

ஜனகராஜ் , சிரிப்பின் மூலம் சிரிப்பை வரவழைத்தவர் . லூசு மோகன் , பேச்சின் நடுவே  பிரேக் போட்டுக்கொண்டே  சென்னைத் தமிழை நகைச்சுவையாக்கியவர் .  வெண்ணிறாடை மூர்த்தி ,வாயால் வண்டி ஓட்டிக்கொண்டே ,இரட்டை அர்த்த வசனங்களால் புகழ் பெற்றவர் .  மௌலி மற்றும் விசு ,வசனங்களால் பெயர் பெற்றார்கள் .  S .S.சந்திரன் , அவ்வப்போது அரசியல் வசனங்கள் பேசியவர் . உசிலைமணி( " நரசூஸ் காபி பேஷ் பேஷ் நன்னா இருக்கு "  இன்னும் காதில் கேட்கிறது  ),ஓமக்குச்சி நரசிம்மன் , குமரிமுத்து மற்றும்  குண்டு கல்யாணம் , தங்களது வேறுபட்ட உடல் அமைப்பால் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்கள் .

ஒட்டுமொத்தத்தில் நல்ல குரல் வளம் உடையவர்களும் , தங்கள் உடல் மொழியைச்  சிறப்பாகப்  பயன்படுத்தியவர்களால்  தான் நம்மைச் சிரிக்கவைக்க முடிந்தது .வசனத்தை உச்சரிக்கும் விதத்திலும் ,வேறுபட்ட உடல் மொழியாலும்  சிரிப்பைக் கொண்டுவருவதுதான் நகைச்சுவையாளர்களின் சாமர்த்தியம் .   

நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி சொல்வோம் !

மேலும் படிக்க :

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !

...................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms