Tuesday, October 27, 2015

49ஓ - பொறுப்புள்ள கலைஞரின் மறுவருகை !

எளிய மனிதர்களின் கதாப்பாத்திரங்களில் நடித்து நாட்டு நடப்புகளையும் , மூட நம்பிக்கைகளையும் பகடி செய்யும் வசனங்களைப் பேசி சிரிக்க வைத்தவர் தான் கவுண்டமணி. நகைச்சுவைப் பாத்திரங்களில் தனி முத்திரையைப் பதித்திருந்தாலும் , குணச்சித்திர வேடங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களை மிஞ்சும் வகையில் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். வில்லன் வேடங்களிலும் அசத்தியிருப்பார்.

சமீப காலங்களில் மிகவும் தேர்ந்தெடுத்தே படங்களில் நடிக்கிறார். அதிலும் அவரை கதாநாயகனாக நடிக்க வைக்க (49 ஓ,  எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை ) பெரும் முயற்சி தேவையாய் இருந்திருக்கிறது. திரையில் அதிகம் பேசப்படாத விவசாயிகளின் வாழ்வைப் பேசியதாலேயே இந்த 49ஓ திரைப்படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார். திருப்பங்கள் நிறைந்த நல்ல கதை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் .

கதையையும் , கவுண்டமணியையும் மட்டுமே நம்பி படமெடுத்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ மற்றவற்றில் போதிய கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.கவுண்டமணி நாயகனாக நடித்த படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வை விட கவுண்டமணியுடன் சேர்ந்தமர்ந்து ஒரு படத்தைப் பார்த்தோம் என்ற உணர்வே மேலோங்கி இருக்கிறது.
வசனங்களுக்கு பெயர் பெற்ற கவுண்டமணி இந்தப் படத்திலும் ஏமாற்றவில்லை. நிறைய வசனங்கள் கவனிக்கும்படியாய் உள்ளன.

முதலில் இப்படி ஒரு கதையை படமாக்க முன்வந்ததற்காகவே படக்குழுவினரைப் பாராட்டலாம்.தமிழ்த் திரைப்படங்களின் சமூகக் கடமையான  வலிந்து திணிக்கப்பட்ட காதல் , பாடல்கள் , சண்டைக் காட்சிகள் இல்லாதது சிறப்பு. விவசாயி , விவசாயம் என்ற வார்த்தைகளையே உச்சரிக்கத் தயங்கும் ஆட்சியாளர்களும் , அதிகாரிகளும் , கலைஞர்களும் வாழும் தேசத்தில் விவசாயம் , விவசாயி என்ற வார்த்தைகளை உச்சரித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் வலியை ஓரளவிற்கு இத்திரைப்படம் பதிவு செய்துள்ளது. இயற்கை விவசாய செயல்பாட்டாளரான நம்மாழ்வாரின் புகைப்படம் இடம்பெற்ற தட்டியை ஒரு காட்சியில் காண்பிக்கிறார்கள்.சிறிய நிகழ்வென்றாலும் திரையில் நம்மாழ்வாரைக் காண்பது மகிழ்வைக் கொடுத்தது.

விவசாய நிலங்கள் மனைகளாக மாறுவதை மட்டும் காட்டாமல் தேர்தல் ஆணையத்தையும் கேள்வி கேட்கிறார்கள். ரியல் எஸ்டேட் புரோக்கராக வரும் ஆசாமியை போன்றவர்கள் கடந்த ஆட்சியில் எல்லா ஊர்களிலும் காணக்கிடைத்தவர்கள் தான். அதிலும் அவரது உடையான கருப்பு பேண்ட் , வெள்ளை சட்டை அவ்வளவு பொருத்தம். இப்பவும் பல பேர் இந்த ஆடைகளுடன் உலவுகிறார்கள். கருப்பு பேண்ட் , வெள்ளை சட்டை என்பது நில புரோக்கர்களின் டிரஸ் கோடோ என்னவோ !

நடைமுறையில் சாத்தியமோ இல்லையோ , மனைகளாக பிரிக்கப்பட்ட நிலத்தை மீட்டு அதில் டிராக்டரில் கவுண்டமணி உழுவது போல் முடியும் இறுதிக் காட்சி ரசிக்க வைத்தது.மசாலா படங்களுக்கு கொடுக்கும் ஆதரவில் சிறிதளவையாவது இம்மாதிரியான திரைப்படங்களுக்கு கொடுக்க வேண்டும்.

 "தான் ஒரு நடிகன் , அவ்வளவு தான் .அதைத் தாண்டி எதுவும் இல்லை" என்று எம்.ஆர்.ராதாவிற்கு பிறகு நாயக துதிபாடலை வெறுக்கும் கலைஞர் தான் , கவுண்டமணி. இந்தப் பொறுப்புள்ள கலைஞரின் மறுவருகையை வரவேற்பதுடன் , அவரை மீண்டும் திரையில் காண காத்திருப்போம் !

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !
...................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms