Saturday, April 4, 2026

என் உடல் என் மூலதனம் - போப்பு !

'உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே' என்ற திருமூலரின் வழி வந்தவர்கள்தான் நாம். நாம் எல்லோருமே நமது உடல் குறித்த கவனம் இல்லாமல் வாழவே உலகவணிகமயமாக்கல் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் , நமக்கே தெரியாமல் இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து விலகிக்கொண்டே இருக்கிறோம். உதாரணமாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பல நவீன கருவிகளை நாம் பயன்படுத்துகிறோம். அந்தக் கருவிகளை பயன்படுத்துவதால் நேரமும் மிச்சம், பணமும் மிச்சம் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் யதார்த்தத்தில் நேரமும் மிச்சமாகவில்லை, பணமும் மிச்சமாகவில்லை. 


வாழ்க்கை குறித்து நாம் வகுத்து வைத்திருக்கும் விசயங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம். இப்படியான சூழலில் நமது உடல் குறித்தான அக்கறை நமக்கு கண்டிப்பாக தேவை என வலியுறுத்துகிறது, போப்பு எழுதிய இப்புத்தகம். நாம் நமது உடலை மதிப்பதில்லை , நமது உடல் சொல்வதைக் கேட்பதில்லை என்று பேச ஆரம்பித்து எவ்வாறு உடலுடன் நெருங்குவது என்பதையும் இப்புத்தகம் விளக்குகிறது.


குளித்தல் என்பது உடலில் சேர்ந்துள்ள வெளி அழுக்குகளை நீக்குவதற்கான செயல்பாடு மட்டுமல்ல, உடலில் தோன்றியுள்ள அதிகப்படியான வெப்பத்தை நீக்குவதும்தான் என்கிறார், போப்பு. ஆரோக்கியமான விதவிதமான குளியல் முறைகள் பற்றி இப்புத்தகத்திலும் விளக்குகிறார். அனைவரும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்வது அவசியம் எனவும், அந்த நடை பயிற்சியை உங்கள் உடலுடன் பேசுவதற்கான செயல்பாடாக மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் போப்பு கூறுகிறார்.


உடலில் கழிவுகள் தேங்குவதால்தான் பல நோய்கள் தோன்றுகின்றன, என்கிறார்‌, போப்பு. இரவுத் தூக்கம் என்பது கழிவுநீக்கச் செயல்பாடு. தினமும் இரவில் நமது உடல் உறுப்புகள் மராமத்து வேலைகளில் ஈடுபடுகின்றன. நமது உடலில் ஏற்படும் சின்னச்சின்ன குறைபாடுகளே நமது உடலே இரவுத் தூக்கத்தின் மூலம் சரி செய்து விடுகிறது, என்று விளக்குகிறார். இரவுத் தூக்கம் தடைபடும்போது கழிவுநீக்கச் செயல்பாடும் தடைபடுகிறது.


நவீன வாழ்க்கை என்று சொல்லிக்கொள்ளும் தற்போதைய வாழ்க்கை முறையில் நமது தூங்கும் நேரம் மிகுந்த பாதிப்பைச் சந்தித்திருக்கிறது. மின்சாரம் வராத காலகட்டம் வரை 'முன் தூங்கி முன் எழுவது'-தான் நமது வாழ்க்கை முறையாக இருந்தது. இன்று வரை நமது உடலும் அதற்கே பழக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் இப்போது ' பின் தூங்கி பின் எழுகிறோம்'. அதானால் உருவாகும் சிக்கல்களையும் எதிர்கொள்கிறோம். இப்போதும் முன் எழுபவர்கள் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். பின் எழும் நாம் சோம்பேறிகளாகிவிட்டோம். 


இரவு 9 மணி முதல் காலை 5 வரை உறக்கத்திற்கான நேரம் என்றாலும் நாம் இரவு 10 மணிக்காவது தூங்க ஆரம்பித்து காலை 6 மணிக்குள் எழுவது அவசியமாகிறது. எப்படி இருந்தாலும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது கட்டாயம். அந்த நேரத்திலும் நாம் விழித்திருப்பதன் மூலம் நமது உடலில் கழிவுகள் நீங்குவதற்கு பதிலாக, சேர்ந்து நோயாக மாறுகிறது, என்கிறார்,போப்பு. நமது ஆரோக்கியத்திற்கும் தூக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது.


'பசித்துப் புசி', ' அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' இந்த இரண்டு விசயங்களையும் நாம் கடைபிடிப்பதேயில்லை. இன்றைய இயந்திர வாழ்வில் பொறுமையாக சாப்பிடுவதற்கான நேரத்தைக்கூட நாம் உருவாக்கிக்கொள்ளவில்லை. வேறு வேலைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நாம் உண்ணும் உணவிற்கும், உண்ணும் நேரத்திற்கும் கொடுப்பதில்லை. பசித்த பிறகே உணவு உண்ணும் வழக்கம் முன்பு பரவலாக இருந்தது. இப்போது இப்பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. மிகச்சிலரே பசித்த பிறகு உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். 


எல்லோருக்குமான உணவை உறுதி செய்ய முடியாத சூழலே நிலவுகிறது. அது ஒரு பெரும் அரசியல், ஏகாதிபத்திய அரசியல். எது எளிதில் செரிமானமாகும் உணவு, எது எளிதில் செரிமானமாகாத உணவு என்றெல்லாம் நாம் பிரித்துப் பார்ப்பதில்லை. நமது பணிகளுக்கு மத்தியில் கிடைக்கும் உணவை சாப்பிட பழகிவிட்டோம். அதே போல பசித்தாலோ பசிக்காவிட்டாலோ குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிடும் பழக்கத்தையும் உருவாக்கிக் கொண்டோம். அவ்வளவு எளிதில் இதிலிருந்து விடுபடமாட்டோம் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக பசித்தவுடன் சாப்பிட பழக வேண்டும்.


எந்த உணவு சாப்பிடுவது ? இதுவும் பெரிய அரசியல். சமூக ஊடகங்களில் லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கின்றன. எந்த மாறுதலுக்கும் உட்படாத நேரடியாக சாப்பிடக்கூடிய இயற்கை உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிறார், போப்பு. பழங்களை எந்த அளவிற்கு அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டுமோ அந்த அளவிற்கு எடுக்கலாம், என்கிறார்.‌ உணவின் ஊடாக சாப்பிடுவதற்கு பதிலாக ஒரு நேர உணவாக, குறிப்பாக இரவு நேர உணவாக பழங்களை உண்ணலாம் என்று பரிந்துரைக்கிறார். மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த உணவே நம் உடலுக்கு ஏற்றது. ஆனால் இப்போது நாம் உண்பதோ இயற்கையிலிருந்து விலகிய பதப்படுத்தப்பட்ட உணவுகளைத்தான். நாம் குடிக்கும் தண்ணீர் கூட மாறுதல் அடைந்த பிறகே பயன்படுத்துகிறோம். மாற்று வழிகள் நமக்கு தெரிய வருவதில்லை.


உணவு சார்ந்த விசயங்களில் மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் சவாலான காரியமாகவே இருக்கிறது. ஆரோக்கமற்றது என்று தெரிந்தும் உண்கிறோம். ஆரோக்கியமுள்ளது என்று அறிந்தும் உண்ண மறுக்கிறோம். நாம் வாழும் பகுதிகளில் விளைந்த உணவுப்பொருட்களை ஏற்றுக்கொள்ளும் அளவிலேயே நமது உடல் இருக்கிறது. ஆனால் நாம் இவற்றை ஒதுக்கிவிட்டு 'சத்தானது' என வணிக நிறுவனங்கள் விளம்பரப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அந்த உணவு சத்தானதாக இருந்தாலும் ஏதோ ஒரு நாட்டில் விளைந்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை ஏற்றுக்கொள்ளும் அளவில் நமது உடல் இல்லை. 


நாம் வெப்ப மண்டலப்பகுதியில் வாழ்கிறோம் என்பதை மறந்துவிட்டு வேகவைத்த , நீர்த்த உணவுகளை தவிர்த்துவிட்டு எண்ணையில் பொறித்த உணவுகளை அதிகம் உண்டு செரிமானமாகாமல் தவித்துக்கொண்டு இருக்கிறோம். 


" இயற்கை சார்ந்து வாழ்வோம்.

  வாழ்வில் நிறைவு காண்போம்.

  வாழ்வை முழுமை செய்வோம்."


என்று இந்த ' என் உடல் என் மூலதனம் ' புத்தகத்தை நிறைவு செய்கிறார்,போப்பு . 


'காயமே இது மெய்யடா' , 'உணவுக்கு முதல் வணக்கம் ', ' என் உடல் என் மூலதனம் ' என போப்பு அவர்கள் எழுதிய உடல்நலம் சார்ந்த மூன்று புத்தகங்களை வாசித்த பிறகும் அவர் கூறியதில் மிகவும் சிலவற்றை மட்டுமே கடைபிடிக்க முடிந்திருக்கிறது. இரவு 10 மணியிலிருந்து 10.30க்குள்ளாக தூங்கப்பழகியாச்சு. ஆனால் காலையில் 6 மணிக்குதான் எழ முடிகிறது. 5 மணியிலிருந்து 5.30க்குள்ளாக எழுந்திருக்கப் பழக வேண்டும். அவர் சொன்ன குளியல் முறைகளில் சில பயன்பாட்டில் உள்ளன. உணவு சார்ந்த விசயங்களில் சிறிய மாற்றத்தைக்கூட உருவாக்க முடியவில்லை. ஆனால் முயற்சி தொடர்கிறது. எது எப்படியோ நாம் நல்லதொரு வாழ்வை வாழ நமது உடலையும், மனதையும் முறையாக பேண வேண்டும்.

மேலும் படிக்க :

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

காயமே இது மேய்யடா - போப்பு !

Tuesday, March 31, 2026

காயமே இது மேய்யடா - போப்பு !


சரியான நேரத்தில் வாசிக்க கிடைத்த சரியான புத்தகம். தற்போதைய நமது வாழ்க்கை முறை, உடல்நலம் குறித்தான நிறைய சந்தேகங்களையும், குழப்பங்களையும் உருவாக்குகிறது. நமது உடல் குறித்தான பிரக்ஞையே நம்மிடம் இல்லை. உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் நாம் பேணி காக்க தவறிவிடுகிறோம். இப்படியான சூழலில், தோழர் போப்புவின் இந்தப் புத்தகம் நமது உடல் குறித்தான ஒரு குறுக்குவெட்டு பார்வையை முன்வைக்கிறது. 


தி இந்து தமிழ் நாளிதழின் ' நலம் வாழ' இணைப்பிதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அந்த கட்டுரைகளின் மூலமே போப்பு அவர்கள் அறிமுகம். அதன் பிறகு முகநூலில் தேடிப்பிடித்து நண்பராக சேர்ந்தாச்சு. உலகின் மிகப்பெரிய தொழிற்சாலை என்று மனித உடலைச் சொல்லுவார்கள். அது முற்றிலும் உண்மை. அமேசான் காடுகளில் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத உயிரினங்கள் இருப்பது போல நமது உடலிலும் இன்னமும் விடுவிக்கப்படாத புதிர்கள் இருக்கின்றன. உலகவணிகமயமாக்கலுக்கு பிறகான நமது வாழ்க்கை முறையால் நமது உடல் பெரிய அளவில் இன்னல்களைச் சந்தித்து வருகிறது. உடல் வெளிப்படுத்தும் சமிக்கைகளை கவனத்தில் எடுத்து செயல்பட வேண்டியது அவசியம் என இப்புத்தகம் வலியுறுத்துகிறது.


நமது உடல் குறித்தான நிறைய புரிதல்களை இந்நூலை வாசிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். போப்பு அவர்கள் சொல்லியிருக்கும் அனைத்தையும் எல்லோராலும் இன்றைய வாழ்வில் செயல்படுத்த இயலாத சூழலே நிழவுகிறது. அவர் கூறியிருப்பதில் கால்வாசியை நாம் நடைமுறைப்படுத்தினால் கூட அது இந்த நூலின் வெற்றிதான். அவர் முக்கியமாக குறிப்பிடுவது இரவில் கண்டிப்பாக 10 மணிக்குள் தூங்க வேண்டும் என்பதுதான். இது எல்லோருக்கும் சாத்தியமா என்று தெரியவில்லை. சாத்தியமுள்ளவர்கள் இதை நடைமுறைபடுத்துவதன் மூலம் நற்பலன்களைப் பெற முடியும். அதே போல காலையில் 6 மணிக்குள் எழுவதும். 


நமது உடலைப் பொறுத்தவரை இதுவரை பழக்கப்படாத எதுவும் அந்நியப் பொருள்தான். நாம் பயன்படுத்தும் பற்பசை, சோப்பு , சாம்பு மற்றும் பிற பொருட்கள் எவ்வளவு உயர்வானதென்று நாம் கருதினாலும் அவை நமது உடலின் இயல்பிற்கு எதிராக செயல்படுவதை விளக்குகிறார். அதே போல அதிக வாசனையுள்ள உணவோ அல்லது அதிக வாசனையுள்ள அழகுசாதனப் பொருட்களோ நமது உடலுக்கு அதிக தீங்குகளை விளைவிப்பதையும் குறிப்பிடுகிறார். 


மொத்தத்தில் நாம் தற்போது வாழும் வாழ்க்கை முறை நமது சூழலுக்கும் நமது உடலுக்கும் பொருந்தாத வாழ்க்கை முறைதான். இயற்கையின் ஒரு பகுதியான மனித இனம் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைக்கு திரும்புவதுதான் ஒரே தீர்வாக இருக்க முடியும். நடைமுறையில் இது எந்த அளவிற்குச் சாத்தியம் என தெரியவில்லை. ஆனால் ஓரளவிற்கு சிக்கலில்லாத வாழ்க்கையை மனித இனம் இப்பூமியில் வாழ இதை விட்டால் வேறு வழியும் இல்லை. 


இவ்வளவு தகவல்களையும் " நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை " என்ற பாணியில் முன்வைக்காமல் உடலின் இயக்கத்தை விளக்குவதன் மூலம் முன் வைப்பதால் இந்நூல் நம்பகத்தன்மையை ஏற்படுத்துகிறது. எப்படி " கேளுங்கள் மனம் சொல்வதை ..." என்று சொல்கிறமோ அதே போல உடல் சொல்வதையும் நாம் கேட்க வேண்டியது அவசியமாகிறது. நமது உடலுக்கு நேரும் பெரிய பாதிப்புகள் கூட அவை சிறிய பாதிப்புகளாக இருந்த போது உடல் வெளிப்படுத்திய சமிக்கைகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் காரணம் என்கிறார், ஆசிரியர். 


ஒரு படைப்பின் வெற்றி என்பது அந்தப் படைப்பை வெளிப்படுத்திய படைப்பாளியின் மற்ற படைப்புகள் நோக்கி நகர வைப்பதுதான். அந்த வகையில் இந்தப் படைப்பு வெற்றி பெற்றிருக்கிறது. தோழர் போப்புவின் மற்ற நூல்களையும் வாசிக்க வேண்டும்.


நதி போல தனது வாழ்க்கையை வாழும் போப்பு அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்! 

( பிப்ரவரி 11 2022 )

மேலும் படிக்க:

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

Sunday, March 29, 2026

உணவுக்கு முதல் வணக்கம் - போப்பு !

திரைகடலோடியும் திரவியம் தேடுகிறோமோ இல்லையோ ? தெரியாது. ஆனால் உணவை தேடி உண்ணும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது. அப்படித் தேடி உண்ணும் உணவு இயற்கையோடு இணைந்ததாக உடலுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை தோழர் போப்பு இந்தப் புத்தகத்தின் மூலம் சொல்கிறார். 


நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று தெரிந்தே நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் உணவு பொருட்களுக்கு மாற்றான உணவு பொருட்களைப் பற்றி விளக்குகிறார். பாலுக்கு மாற்றாக தேங்காய்பால் , ராகிபால், பருத்திபால் போன்றவற்றை முன் வைக்கிறார். தேங்காய்பாலின் முக்கியத்துவத்தை பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதே போல சர்க்கரை நோயும் நிலையான நோயல்ல என்பதையும் பல இடங்களில் குறிப்பிடுகிறார் ( ஏன் அப்படி சொல்கிறார் என்பதற்கான விளக்கம் இப்புத்தகத்தில் இல்லை ). 


நமக்கு அருகில், அந்தந்த பருவங்களில் கிடைக்கும் பழங்களை உண்பதன் அவசியத்தை விளக்குகிறார். பழங்களை இணை உணவாக உண்பதை விட முழு உணவாக, அதிலும் இரவு நேர உணவாக உண்பது நல்ல பலனளிக்கும் என்கிறார். உடைத்த பருப்புகளை விட பயறு வகைகள் உடலுக்கு நல்லது என்கிறார். உப்பு, காரம், புளி இப்போது நாம் பயன்படுத்தும் அளவை விட குறைவாக பயன்படுத்துவது நல்லது என்றும் குறிப்பிடுகிறார். 


இதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமா என ரொம்ப யோசிக்காமல் சாத்தியமுள்ள சிலவற்றையாவது மாற்ற முயற்சி செய்வோமே. மாற்றம் ஒன்றுதானே மாறாதது. அவர் குறிப்பிடுவதில் பெரும்பாலானவை நமது கண்ணில் படுபவை என்பதுதான் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம். அதிலும் முக்கியமாக இயற்கைக்கு நெருக்கமானது. மாற்றம் உருவாக நமது மனதில்தான் இடம் கொடுக்க வேண்டும். சவர்மா நம்ம ஊர்ல எந்தக் கடையில் கிடைக்கிறது என தேடி உண்ண ஆரம்பித்து விட்டோம். மிகச்சிறிய ஊர்களில் கூட இப்போது சவர்மா கிடைக்க ஆரம்பித்துவிட்டது. என்னென்னமோ கலந்து செய்யப்டுகிற சவர்மாவை ருசி பார்ப்பதுடன் இயற்கைக்கு நெருக்கமான உணவுப் பொருட்களை ருசி பார்க்கவும் நாம் முன்வர வேண்டும். 


எப்படிப் பார்த்தாலும் ஏதோ ஒரு உணவை உண்ணத்தான் போகிறோம். அந்த உணவு இயற்கைக்கு நெருக்கமாக இருப்பதில் எந்தக் குறையும் இல்லை. நம்மில் பெரும்பாலானோர் தினமும் காலையில் டீயோ , காபியோ குடிக்கத்தான் போகிறோம். ஒரு நாள் காலையில் தேங்காய்பால் குடித்துதான் பார்ப்போமே. நல்ல மாற்றம் தெரிந்தால் வாரத்தில் ஒரு நாளோ ,இரண்டு நாளோ குடிக்க வேண்டியதுதான். பிடிக்கவில்லை என்றால் விட்டுவிட வேண்டியதுதான். இது போலவே மற்ற உணவு பொருட்களும். பருப்புக்கு மாற்றாக பயறுகள், உண்ணும் பழங்களின் அளவை அதிகரிப்பது என்று முயற்சித்து பார்க்க வேண்டியதுதான்.




இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது போப்பு என்ற மனிதரையும் கூடவே சேர்த்து வாசிக்கிறோம் என்ற உணர்வு உருவாவதை தடுக்க முடியாது. போப்பு அவர்கள் ஒசூரில் ஒரு நல்ல உணவகம் நடத்தினார் என்பது இசை விமர்சகரான ஷாஜியின் நேர்காணல் மூலமே தெரிய வந்தது. அவர் ஒரு சிங்கப்பூர்வாசியாகவும் இருந்திருக்கிறார் என்பதை இப்பத்தகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. போப்பு அவர்களின் பதிவுகளிலிருந்து இயற்கை தொடர்ந்து அவதானித்து வருபவர்களால் இப்படித்தான் எழுத முடியும் என்பதை உணரலாம்.


தமிழ்நாட்டில் இருக்கும் உணவகங்களில் எந்த ஊரில் எந்த உணவகம் சிறந்தது என்ற பட்டியல் போப்புவிடம் இருக்கிறது. அதை அவரிடமிருந்து நாம் பெற வேண்டும். 


மேலும் படிக்க :

காதில் விழுந்த கதைகள் - கி.ராஜநாராயணன் !

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !

Saturday, January 24, 2026

புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் ஒரு சகாப்தம் !


 (12-10-2020) இதுவரையிலுமான 12 பகுதிகளும் பார்த்து முடித்தாகிவிட்டது. தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஒரே ஒரு பகுதி தான். மீதி எல்லாம் 'Zee 5' செயலியில் தான். ஆரம்ப பகுதிகள் பார்க்கும் போது பொறுமையை சோதிக்கும் அளவிற்கு அதிக அளவிலான விளம்பரங்கள் வந்தன. இவ்வளவு சிரமபட்டு பார்க்கனுமா என்று கூட தோன்றியது. ஆனால் தொடரைப் பார்ப்பதை நிறுத்தவில்லை.இந்த வாரம் விளம்பரங்களே இல்லை. அதனால் ஒரே மூச்சில் நான்கைந்து பகுதிகள் கூட பார்க்க முடிந்தது.


தீண்டாமையின் கோர முகம் ஒவ்வொரு பகுதியிலும் தோலுரித்து காட்டப்படுகிறது. பீமாக நடித்திருக்கும் குட்டிப் பையன் நிறைய இதயங்களை வென்றுவிட்டார். அவருக்கு தமிழில்  பின்னணி குரல் கொடுத்தவரையும் பாராட்டியே தீர வேண்டும். " பச்சமண்ண என்னா பாடு படுத்தியிருக்கானுக " என்று தொடரைப் பார்க்கும் பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். இதுவரை தொலைக்காட்சி தொடர் பார்க்கும் மக்களுக்கு பழக்கமில்லாத சாதிய ஏற்றத்தாழ்வுகள் இந்தத் தொடரில் காண்பிக்கப்படுகின்றன. பல இடங்களில் மிகவும் அழுத்தமாகவே காட்சிகள் விரிகின்றன. 


கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும் கடந்த காலங்களில் சாதியின் பெயரால்  கல்வி எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதையும் இந்தத் தொடரைப் பார்க்கும் இன்றைய தலைமுறை கொஞ்சமேனும் தெரிந்து கொள்ளும். கல்வி ஒன்று மட்டுமே பிரிவினையை முற்றிலுமாக அழிக்கும். கல்வி ஒன்று மட்டுமே எல்லோரையும் சமநிலைப்படுத்தும். அதனால்தான், சமத்துவத்திற்கு எதிரான  பார்ப்பனியம் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறது. கல்வியும், வாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்கக்கூடாது என பார்ப்பனியம் விரும்புகிறது. இதை முறியடிப்பது பார்ப்பனியத்திற்கு எதிரான மக்கள் மற்றும் இயக்கங்களின் கைகளில்தான் இருக்கிறது. 


இந்த ஒரு தொடர் எல்லாவற்றையும் மாற்றி விடுமா ? தெரியாது. ஆனால் இத்தொடர் மக்கள், தங்களவில் சிறிதளவிலேனும் மாற நிச்சயம் தயார்படுத்தும். 


நாயகத்துதிபாடலுக்கு எதிரானவர், அம்பேத்கர். ஆனால் அவரது தொடரே நாயகத்துதிபாடல் மனநிலையில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் உருவாகும் விதத்தில் தொடர்ந்து காட்சிகள் இடம்பெறுகின்றன. இது ஒன்றே தவிர மற்ற எதுவும் உறுத்தலாக இல்லை. மற்றபடி நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, இசை, வடிவமைப்பு என எல்லாம் சிறப்பாகவே உள்ளன. தமிழில் உரையாடல் எழுதியிருக்கும் தோழர் கவிதா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள் . காட்சிகளுடன் ஒன்றிப் போக வசனங்கள் உதவுகின்றன. நேரடியாக வசனங்கள் எழுதுவதை விட , மொழி மாற்றம் செய்யும்போது , அவர்களின் வாயசைப்பிற்கு ஏற்றவாறு வசனங்கள் எழுதுவது சிரமமானது. ஒரளவு சிறப்பாகவே தோழர் கவிதா பாரதி அவர்கள் பணியாற்றியிருக்கிறார். எந்தவிதமான  வாயசைப்பிற்கும் எப்படிப்பட்ட வசனமும் எழுதும் அளவிற்கு தமிழ் மொழி செழுமை நிறைந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 


(24-01-2021) மதவாத வலதுசாரிகளின் ஆட்சியில் தினமும் எதிர்மறை விசயங்களே மக்களுக்கு பரிசாக கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் தொடர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் யாரிடமிருந்தாவது அல்லது எதனிடமிருந்தாவது பெறுவது அவசியமாகிறது. எனக்கு அப்படியான நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருப்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் ஒரு சகாப்தம் ' எனும் இத்தொடர். இன்று வரை (24-01-2021) ஒளிபரப்பப்பட்டிருக்கும் 49 பகுதிகளையும் பார்த்தாச்சு. பெரும்பாலும் Zee5 செயலியின் உதவியுடன்தான் பார்த்திருக்கிறேன். 


ஒரு மொழிபெயர்ப்புத் தொடரை அதுவும் ஒரு வாழ்க்கை வரலாற்றுத் தொடரை இவ்வளவு சுவாரசியமாக கொண்டு செல்வது என்பது மிகவும் சவாலானது. பெரும் உழைப்பு கொடுக்கப்பட்டே இத்தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு வெப் சீரியல் போலவே இத்தொடரை அணுகலாம். இது வரை பார்க்காதவர்கள் கூட இனிமேல் Zee5 செயலியின் உதவியுடன் பார்க்க ஆரம்பிக்கலாம். சமத்துவத்தை விரும்பும் எவரையும் இத்தொடர் ஏமாற்றாது. இத்தொடரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கொடுப்பது என்பதும் மிகவும் சவாலான பணிதான். அந்தப் பணியும் சிறப்பாகவே நடந்து வருவதை உணர முடிகிறது. சமூக நீதி பேசும் உரையாடல்களை தோழர் கவிதா பாரதி அவர்கள் எழுதி வருகிறார். மொழிமாற்றுத் தொடர் என உணர முடியாத அளவிற்கு மிகவும் பொருத்தமான அதே சமயம் அனல் தெறிக்கும் வசனங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பின்னணி இசையும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. நாயகத் துதிபாடலை மிக கடுமையாக எதிர்த்த அம்பேத்கரின் கதாப்பாத்திரம் மட்டும் நாயகத்துதிபாடல் மனநிலையில் அணுகப்பட்டிருப்பது மட்டுமே தொடர்ந்து சிறு நெருடலாக இருந்து வருகிறது. மற்ற சிக்கல்கள் எதுவும் தென்படவில்லை. 


தீண்டாமையை கடைபிடிக்கும் சாதிய ஆதிக்க மனநிலையை தெரிந்து கொள்வதுடன் கூடவே சமத்துவம், கல்வியின் முக்கியத்துவம்,பெண் கல்வி, குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு, சமூக நீதி, நன்னெறிகள் என பல விசயங்களை உள்ளடக்கிய அடர்த்தியான தொடராகவே இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வரும் காலங்களில் பெரியார் பற்றியோ அல்லது வேறு யாரைப் பற்றியுமோ தொடர் எடுக்க இருப்பவர்களுக்கு டாக்டர்.அம்பேத்கர் பற்றிய இத்தொடர் நிச்சயம் உதவி செய்யும்.இந்தத் தொடரை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒருவித உத்வேகத்தையும் ,நம்பிக்கையையும் இத்தொடர் தொடர்ந்து கொடுத்து வருகிறது. 


சாதித் தலைவராக சுருக்கப்பட்ட ஒரு மாமேதையை கொஞ்சமேனும் மக்களின் மனங்களில் பதிய வைக்க இத்தொடர் உதவி வருகிறது. நீ டாக்டர் ஆக வேண்டும், இஞ்சினியர் ஆக வேண்டும் என்று குழந்தைகளை கேட்டு பழக்கப்பட்ட குடும்பங்களில் ' நீ படிச்சு அம்பேத்கர் மாதிரி அறிவாளி ஆகனும்' என்ற குரல் கேட்க ஆரம்பிப்பது எவ்வளவு பெரிய சாதனை. அதைத்தான் இத்தொடர் நிகழ்த்தி வருகிறது. சமத்துவத்தை நோக்கிய பாதை என்பது மிகவும் நீண்டது. அந்த சமத்துவப் பாதையில் இத்தொடர் நம்மை பயணிக்க வைக்கிறது.


கொரோனா அலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொடரும் பாதியில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்.

மேலும் படிக்க :

பெரியார் ஒருவரே ! 

ஜே.சி.குமரப்பா பிறந்தநாள் (ஜனவரி 4) !






 


Saturday, January 17, 2026

பொங்கல் - ஒரே அர்த்தமுள்ள பண்டிகை !


" இந்திய நாட்டு விவசாயம் என்பது வெறும் மண் மட்டும் சார்ந்ததல்ல. மண் , மனிதர், மாடு இந்த மூன்றும் சேர்ந்தது தான் நம் நாட்டு விவசாயம் " 

- ஜே.சி.குமரப்பா 

இந்திய நாட்டு விவசாயத்திலிருந்து மாட்டைப் பிரிக்கவே முடியாது. இன்றைய விவசாயத்தில் பாரம்பரிய மாடுகள் அழிந்து கலப்பின மாடுகள் ஆக்கிரமித்திருந்தாலும் கூட மாடுகளை விவசாயத்திலிருந்து நீக்க முடியாது. பாரம்பரிய மாடுகள் நாளெல்லாம் உழைத்தன. "மாடாய் உழைத்தும் என்னத்தை கண்டோம் " என்ற அங்காலாய்ப்பும் இருந்தது. இன்றைய கலப்பின மாடுகளுக்கு எந்தவித உழைப்பும் இல்லை. இன்று "மாடாய் உழைக்கிறேன்" என்று சொன்னால் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது என்ற பொருளாகிவிடும். டிராக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது ஜே.சி.குமரப்பாவால் சொல்லப்பட்டது தான் மேலே உள்ள வாசகம். இதனுடன் இன்னொன்றும் சொன்னார். அது, " டிராக்டர் சாணி போடுமா ?" என்பது தான். இதை சாதாரண கேள்வியாக கடந்து போய்விட முடியாது. பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்று சொல்லப்பட்டவை ஏற்கனவே இருந்த உற்பத்திமுறை பாரம்பரியத்தை அழித்து மனிதர்களுக்கு தீங்குகளை மட்டுமே கொடுத்திருக்கிறது. மண்ணை அழித்தது பசுமைப்புரட்சி, மாடுகளை அழித்தது வெண்மைப்புரட்சி. எத்தனையோ விதமான கருவிகள் அறிமுகம் ஆன பிறகும் விவசாயமும், விவசாயப் பரப்பும் அதிகரிக்கவில்லை; மக்களின் ஆரோக்கியமும் மேம்பட வில்லை. இந்த புரட்சிகள் அனைத்தும் மக்களின் ஆரோக்கியத்தை அழிக்க வந்த எமன்கள். 


இப்போதும் விவசாயத்தை மீட்டெடுக்க ஒரே வழி தான் இருக்கிறது. அதுவும் ஜே.சி.குமரப்பா சொன்னது தான். உணவுப் பயிர்களுக்கு முன்னுரிமை தரும் தன்னிறைவு வேளாண்மைக்கு முன்னுரிமை தருவது தான் அது. இதில் நெல்லையும்,கரும்பையும் சேர்க்க முடியாது. இவை இரண்டும் ஆலைப்பயிர்கள். அதுவும் இல்லாமல் இவற்றை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரும் அதிகம் தேவை. அப்படியே உற்பத்தி செய்தாலும் அரசின் உதவியுடன் ஆலை முதலாளிகள் நிர்ணயிப்பது தான் விலை. இது ஒரு அடிமை விவசாயம் என்றே சொல்லலாம். நெல்லையும், கரும்பையும் விட நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தைத் தரும் எத்தனையோ பயிர்கள் இருக்கின்றன.அவற்றை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. பொதுவாகவே விவசாயம் என்பது பணப்பயிர்களை உற்பத்தி செய்வதுதான் என்ற நிலை உருவாகிவிட்டது. பணப்பயிர்களை உற்பத்தி செய்யும் போது உரிய விலை கிடைக்காத போது பெரிய இழப்பு ஏற்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் தனது விரிவான ஆய்வுகள் மூலம் சரியான தீர்வுகளை அப்போதே சொல்லிவிட்டு போயிருக்கிறார், ஜே.சி.குமரப்பா. உண்மையிலேயே ஜே.சி.குமரப்பா ஒரு தீர்க்கதரிசி தான்.


விவசாயத்திலிருந்து கிடைக்கும் அனைத்தும் மனிதர்களும், மாடுகளும் எடுத்தது போக மீதி மண்ணுக்கே கொடுக்கப்படுகிறது.நாம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் மட்டும் தான் உண்மையிலேயே ஒரே அர்த்தமுள்ள பண்டிகை.பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பொங்கல் ஒரு அறுவடைத் திருவிழா. பெரும்பாலும் பொங்கல் மண்ணிலேயே வைக்கப்படுகிறது. பூமியில் இருக்கும் சக்திகளில் சூரிய சக்தியே முதன்மையானது. பூமியில் புதியது என்ற ஒன்று உண்டென்றால் அது தினமும் பூமியின் மீது விழும் சூரிய கதிர்கள் மட்டுமே. மற்றவை அனைத்தும் பூமியில் ஏற்கனவே இருப்பவை தான். ஏற்கனவே பூமியில் இருப்பதிலிருந்து ஏதோ ஒன்றை உருவாக்கி நம் மன திருப்திக்காக புதியது என அழைத்துக் கொள்கிறோம். அப்படிப்பட்ட பேராற்றல் உள்ள சூரியனுக்கு நன்றி சொல்கிறோம். இன்றும் விவசாயத்தைக் காப்பாற்றி வருவது மாடுகள் போன்ற கால்நடை வளர்ப்பு வருமானம் தான். அப்படிப்பட்ட மாடுகள் ,ஆடுகளுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்துகிறோம். 


பொங்கலில் சாதி , மதங்களுக்கு துளியும் இடமில்லை. அதுமட்டுமில்லாமல் பொங்கல் ஒரு சூழியல் பண்டிகை. வடக்கிலிருந்து திணிக்கப்பட்ட திபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற மற்ற பண்டிகைகள் போல சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் பொங்கல் பண்டிகையால் உருவாவதில்லை. தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு எல்லாவித சிறப்புகளும், நியாயமான காரணங்களும் பொங்கல் பண்டிகைக்கு இருக்கிறது. ஒரு வேளை தற்போதைய அரசு பொங்கல் பண்டிகையை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்குமானால் முன்பை விட பெரும்பாலானோர் தற்போது ஆதரிப்பார்கள். தமிழ் சமூகத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுத்தாலே போதும் எல்லாம் சரியாகி விடும். 

தமிழர் என்றொரு இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு !

பொங்கல் தமிழர்களின் அடையாளம் !

தமிழ்நாடு வாழ்க !

மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !

Sunday, January 4, 2026

ஜே.சி.குமரப்பா பிறந்தநாள் (ஜனவரி 4) !


'இயற்கையோடு இயைந்த உற்பத்தி முறைதான் இயற்கை ஆதார வளங்களை சிதைக்காது’ என்று சொன்னவர் தான் ஜே.சி.குமரப்பா. தொழிற்புரட்சி என்ற பெயரில் இயற்கையை அழித்துவிட்டு தான் இப்போதெல்லாம் உற்பத்தியே தொடங்குகிறது. குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதிக உற்பத்தி என்பது செல்வம் ஒரே இடத்தில் குவியவே வழிவகுக்கும் என்று அப்போதே சொல்லியிருக்கிறார். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 


காந்திய பொருளாதாரம் என்பது கீழிருந்து மேல்நோக்கிய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய வளர்ச்சி என்று சொல்லப்படுவது இதற்கு அப்படியே எதிரானதாக இருக்கிறது. எல்லோரையும் உள்ளடக்கிய சூழலைப் பாதிக்காத மிகச்சிறந்த பொருளாதார மாதிரியை ஜே.சி.குமரப்பா உருவாக்கினார். ஆனால்  இந்த மாதிரியை இதுவரை பதவியில் இருந்த எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. முன் எப்போதையும் விட ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார மாதிரிக்கான தேவை தற்போது தான் அதிகமாக இருக்கிறது. இனிவரும் அரசுகளாவது ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார மாதிரியை செயல்படுத்த முன்வர வேண்டும். தேர்தல் அறிக்கையில் இந்த விசயம் இடம்பெறும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு நாம் நெருக்கடி கொடுக்க வேண்டும். 


ஜே.சி.குமரப்பா மாதிரி ஏன் தேவை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் தற்போதைய பிளாஸ்டிக் தடையால் நிறைய குறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்த தொழிலில் அவர்கள் முதலீடு செய்திருந்தால் இந்த பாதிப்பு உருவாகியிருக்காது. இது முதலீட்டாளர்களின் தவறு என்பதை விட அரசின் தவறு என்பது தான் பொருத்தமாக இருக்கும். சிறியதே அழகு என்பது தான் குமரப்பாவின் பொருளாதார மாதிரி.


விவசாயத்துறையிலும் குமரப்பாவின் சித்தாந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று விவசாயம் இந்த அளவிற்கு மோசமான நிலையை அடைந்திருக்காது. தன்னிறைவு வேளாண்மைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குமரப்பா கூறி வந்தார். ஆனால் தொடர்ந்து அதிக தண்ணீர் தேவைப்படும் பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவைத் தான் தற்போது அனுபவித்து வருகிறோம். இப்போதும் விவசாயத்தை மீட்பதற்கு குமரப்பாவின் விவசாய சிந்தனைகளே தேவை. தன்னிறைவு வேளாண்மை மட்டுமே விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும். 


" அறம் சாராத பொருளாதார அமைப்பு மனசாட்சிக்கு விரோதமானது.  மனிதன் வெறும் பணம் திரட்டும் யந்திரமல்ல. அறமற்ற பொருளாதாரம் உயிரற்ற உடல்தான் " என்றார்,ஜே.சி.குமரப்பா. அறமற்ற பொருளாதாரம் தான் நம் காலத்தின் மிகப்பெரிய எதிரி.


" முன்னேற்றம் என்பது இயற்கையில் பொதிந்துள்ள அறிவையும், உண்மையையும் தேடி உணர்ந்து, மனிதருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இயற்கையை உபயோகிப்பது "  என்பதுதான் ஜே.சி.குமரப்பாவின் நிலைப்பாடு.


ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார, விவசாய சிந்தனைகளே இன்றைக்கு தேவை.


ஆம். ஜே.சி.குமரப்பா ஒரு மறக்கப்பட்ட தீர்க்கதரிசி !


மேலும் படிக்க :

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !


Saturday, January 3, 2026

மண்டோவும் கட்டக்கும் !

 


நந்திதாதாஸ் இயக்கியிருக்கும் திரைப்படம், மண்டோ. சதக் ஹசன் மண்டோ என்ற பெயர் மட்டுமே தெரிந்திருந்த நிலையில் அவரின் வாழ்வு பற்றிய புரிதலை இத்திரைப்படம் உருவாக்கியிருக்கிறது. மண்டோவின் கலை சார்ந்த உணர்வுகளை நமக்கு கடத்த முயன்று, அதில் வெற்றியும் பெற்று விடுகிறார், இயக்குநர். பம்பாய் என்ற நகரத்திற்கும் மண்டோவிற்கும் உள்ள பிணைப்பு அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் பிடித்திருந்த போதிலும் மதவாதத்தால் வெளியேற வேண்டிய நிலை. லாகூரில் வசித்தாலும் பம்பாயின் நினைவுகளே அவரை ஆக்கிரமிக்கின்றன. 


" என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது " என்கிறார், சதத் ஹசன் மண்ட்டோ. இதன் மூலம் படைப்புகள் சார்ந்த தெளிவான பார்வை அவருக்கு இருந்ததை அறிய முடிகிறது. 


இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே இவரைப் போன்ற மனிதர் ஒருவர் அறிமுகம் ஆனாரே அவர் யாராக இருக்கும் என்ற குழப்பம் இருந்தது. திரைப்படம் முடிந்த பிறகு தான் அந்த ஆளுமை நினைவிற்கு வந்தார். அவர், ரித்விக் கட்டக். படச்சுருள் வெளியிட்ட ரித்விக் கட்டக் பற்றிய சிறப்பிதழில் கட்டக் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. கட்டக் பற்றி எழுத்து மொழியில் வாசித்ததை , திரைமொழியில் பார்த்தது போலவே இருந்தது மண்டோ திரைப்படம். இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமைகள்.


இருவருமே மதவாதம் உருவாக்கிய பிரிவினைகளால் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள்.இருவரின் படைப்புகளிலும் பிரிவினையின் தாக்கங்கள் அதிகமாகவே இருக்கும். இருவருமே மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதற்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டவர்கள். இருவராலுமே குடும்பத்தை சரிவர கவனிக்க முடியவில்லை. இருவருக்கும் அவர்களது நண்பர்களே அவர்களின் படைப்பாளுமையை அடையாளம் கண்டு ஆதரித்தார்கள். படைப்பு மனமே இருவரையும் ஆட்டுவித்திருக்கிறது. இருவருமே படைப்பிற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். மண்டோ எழுத்தாளர், கட்டக் திரைப்பட இயக்குநர் அவ்வளவு தான் வித்தியாசம். இருவருமே நல்ல படைப்பாளிகள். இருவருமே உன்னத கலைஞர்கள்.

( 2019 )


மேலும் படிக்க :


Thursday, January 1, 2026

சாய்ராட் - கலையின் அரசியல் !


மக்களையும் மக்களுக்கான அரசியலையும் காட்சிகளின் வழியே மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் , இயக்குநர் , நாகராஜ் மஞ்சுளே. ஒவ்வொரு காட்சியிலும் சமூகத்தின் முகம் அப்பட்டமாக காட்டப்படுகிறது. முதல் பாதியில் காட்டப்படும் காதல் காட்சிகள் அவ்வளவு அழகியலுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஸ்லோமோஷன் காட்சிகள் தனித்து நிற்கின்றன. காதல் காட்சிகளை எவ்வளவு முறை திரைகளில் பார்த்தாலும் நமக்கு திகட்டுவதேயில்லை. இத்திரைப்படத்தின் காதல் காட்சிகளும் அப்படி தான். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கதாநாயகி ரிங்கு , இந்தத் திரைப்படத்தில் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். அவரது உடல்மொழியும் அற்புதம். பாடல்களும் ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காதலுக்கு எதிரான சாதிய வெறி அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் ;வீட்டை விட்டு துரத்துங்கள். பரவாயில்லை. ஆனால் சாதி மாறி காதலித்ததால் எவ்வளவு காலம் ஆனாலும் அவர்களை கொன்றால் தான் வெறி அடங்கும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுபோன்ற திரைப்படங்கள் சாதியத்திற்கு எதிராக எதிர்மறையில் இருந்தே குரல் கொடுக்கிறது. அப்படியில்லாமல் சாதிய படிநிலைகளைத் தாண்டி காதல் செய்பவர்களை இரு குடும்பமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நேர்மறையில் காட்சிப்படுத்தப்படும் படங்களுக்கும் தேவையிருக்கிறது.

காதல் என்பது இயல்பான ஒன்று , அந்தக் காதலுக்கு சாதி தடையில்லை என்பதை பொருத்தமான காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தலாம். ஒருவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பெண்ணுக்கு பெற்றோர் பார்த்து சொந்த சாதிக்குள் மணமுடித்து வைக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுவது போலவும் , மற்றொரு பெண் காதலித்து சாதி மாறி திருமணம் செய்து கொண்டு நன்றாக இருப்பது போலவும் காட்சிப்படுத்தினால் ஒரு நேர்மறையான மனமாற்றம் நிகழுமே.

சாதிவெறியை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் இப்போதும் எடுக்கப்படும் சூழலில் சாதிவெறிக்கு எதிரான படங்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இந்த சாய்ராட் முக்கியத்துவம் பெறுகிறது. சகமனிதனை மனிதனாக மதிக்க கற்றுத் தருவது தான் கலையின் தேவை. கலைஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.
கலை  மக்களுக்கானது. அழகியல் மட்டும் கலை அல்ல . அழகியலுடன் அரசியலும் பேசும் கலை தான் முழுமையானது. சாய்ராட் ஒரு முழுமையான கலைப்படைப்பு.
காதல் என்பது சலிக்காத ஒன்று.  இதுவரை எத்தனையோ விதமான காதலைத் திரையில் பார்த்திருப்போம். மீண்டும் திரையில் காதலைப் பார்க்கும் போதும் நாம் சலிப்படைவதேயில்லை. அதிலும் இத்திரைப்படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம். கதாநாயகி ரிங்குவின் முகபாவங்களும் , வசனங்கள் உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகு. ரிங்குவின் நடிப்பு இத்திரைப்படத்திற்கு பெரிய பலம்.
ஒவ்வொரு காட்சியிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அப்பட்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.காதல் வீட்டில் தெரிந்த பிறகு கடைசிவரை ஒருவிதமான பதைபதைப்பு இருந்து கொண்டே இருக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்தக் குழந்தையை பக்கத்து வீட்டுக்கார பெண் அழைத்துச் செல்லும் போதே படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது. வீட்டின் வாசலில் போடப்பட்ட முழுமைடையாத கோலத்தைப் போல அவர்களின் வாழ்வும் முழுமை பெறவில்லை.
நமது இந்திய தேசத்தில்  படிப்பறிவு சதவீதம் அதிகரித்து கொண்டிருக்கும் விதத்தில் சாதியப்பாகுபாடுகள் குறையவில்லை. பல்வேறுவிதமான அதிகாரங்கள் மக்களைக் கட்டுப்படுத்தும் தேசத்தில் போராட்டங்களின் மூலமும் , கலையின் மூலமுமே  நமது எதிப்பை வெளிப்படுத்த முடியும். நாகராஜ் மஞ்சுளே , சாதியத்தின் மீதான கோபத்தை , எதிப்பை வலுவாக திரைமொழியில் பதிவு செய்திருக்கிறார்.
சாதியம் ஒழியட்டும். சகமனிதனை மனிதனாக மதிப்பதை நோக்கி நம் சமூகம் நகர்வதற்கான ஒரு படியை இத்திரைப்படம் எடுத்து வைத்திருக்கிறது.
மேலும் படிக்க :

AMAR SINGH CHAMKILA ❤️❤️❤️

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms