Tuesday, November 13, 2012

உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட ...!

 நாம் முன்தீர்மானம் செய்யும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி அசுர வேகத்தில் சுழல்கிறது,காலம் . எதைப்பற்றியும் கவனம் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம் . மனிதன் சமூகமாக வாழ ஆரம்பித்த காலத்திலிருந்தே விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன . பண்டிகைகள் சமூக வாழ்வின் ஓர் அங்கம் . வேலை நிமித்தமாக பிரிந்து இருக்கும் மனிதர்களை ஒன்று சேர்க்க பண்டிகைகள் உதவுகின்றன . முன் எப்போதையும் விட தற்போது ,செய்யும்  வேலை காரணமாக மனிதர்கள் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடக்கிறார்கள் . அவர்களை ஒன்று சேர்க்க , ஒரு நாலாவது தங்களது இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட பண்டிகைகள் உதவுகின்றன .

 தீபாவளி பண்டிகை கொண்டாடுவது குறித்து தற்போது பலவிதமான கருத்துகள் உருவாகியுள்ளன . சுற்றுச்சூழல் சார்ந்து சிந்திக்க ஆரம்பித்திருப்பது மிகநல்ல விசயம் . ஆனால் ஒரே நாளில் நம் பட்டாசு கொளுத்துவதை நிறுத்திவிட முடியாது . பட்டாசு தொழிலை நம்பி லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள் .யாரும் விருப்பப்பட்டு வெடிமருந்துடன் கழியும் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்லவில்லை . உயிர் பிழைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் தான் பட்டாசு செய்யும் வேலைக்குச் செல்கின்றனர் . அவர்களுக்கு மாற்று வழி தேட வழி செய்துவிட்டு பட்டாசு கொளுத்துவதை நிறுத்த முயல வேண்டும் . உரிய பாதுகாப்பு இல்லாத பட்டாசு ஆலைகளை செயல்பட அனுமதி அளிக்கக்கூடாது .

பிளாஸ்டிக் போலத்தான் பட்டாசும் பல வருடங்கள் அதோ இதோ என்கிறார்கள் எதுவும் நடந்தபாடில்லை . முன்பைவிட பிளாஸ்டிக்கும் ,பட்டாசும் அதிகமாகத் தான் மக்கள் பயன்படுத்துகிறார்கள் . தற்போது கிராமங்களில் நடக்கும் குடும்ப விழாக்களில் கூட  பட்டாசுகள் பயன்படுத்தப்படுகின்றன . ஊடகங்கள் மூலம் மோசமான பழக்கங்களையே மக்களுக்குப் போதிக்கிறோம் . ஊடகங்கள் மூலம் நாம் நினைக்கும் அனைத்து மாற்றங்களையும் சமூகத்தில் கொண்டு வர முடியும் . அனைத்தும் வணிகமாகி விட்ட இன்றைய சூழலில் ஊடகங்கள் வருமானம் வராத எதையும் செய்யப்போவதில்லை . பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்துப் பேசும் நம்மில் எத்தனைபேர் கடைக்குப் பொருட்கள் வாங்க பை எடுத்துக்கொண்டு போகிறோம் . பட்டாசின் தீமைகள் குறித்துப்பேசும் எத்தனைபேர் பட்டாசு வெடிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை . யாராக இருந்தாலும் முடிந்தவரை பிளாஸ்டிக்கையும் ,பட்டாசையும் பயன்படுத்துவதை தவிர்க்கலாம் .முடியாதபோது குறைவாக பயன்படுத்தலாம் .

எப்படிப் பார்த்தாலும் பண்டிகைகள் நம் சமூக வாழ்வின் வரம் . பண்டிகைகள் காரணமாக விதவிதமான பொருட்கள் விற்பதன் மூலம் பயனடையும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் . பண்டிகைகளை தவிர்க்க வேண்டியதில்லை . காலத்துக்கேற்ற மாற்றத்தைச் சந்திக்காத எதுவும் நிலைப்பதில்லை . காலத்திற்கு ஏற்ற மாற்றத்துடன் பண்டிகைகளைக் கூடிக் கொண்டாடுவோம் .

தீபாவளி குறித்து எத்தனையோ பாடல்கள் இருக்கின்றன . A.M.ராஜாவின் இசையமைப்பில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த " கல்யாண பரிசு " திரைப்படத்தில் இடம்பெற்ற "உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட.." பாடல் தீபாவளிப் பாடல்களில் ஒன்று . பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடலிது . இப்படாலை P .சுசீலா பாடியுள்ளார் .

அந்தப்பாடல் :


பாடல்வரிகள் :

உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட
உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா _ ஆ… உறவாடும் நேரமடா

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீவாடா -கன்ன
எண்ணத்தில் உனக்காக இடம்நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?
வல்லமை சேர நல்லவ னாக
வளர்ந்தாலே போதுமடா… வளர்ந்தாலே போதுமடா

சித்திரைப் பூப்போல சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு!
முத்திரைப் பசும்பொன்னே ஏனிந்தச் சிரிப்பு?
முகமோ? மலரோ? இது என்ன ரசிப்பு!
மின்னொளி வீசும் உன்எழில் கண்டால்
வேறென்ன வேணுமடா? _  வேறென்ன வேணுமடா? (உன்னை…

 எனக்குப்பிடித்த இன்னொரு தீபாவளிப் பாடல் " வா வா வசந்தமே ... " . 1982 ஆம் ஆண்டு வெளிவந்த புதுக்கவிதை திரைப்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது . மலேசியா வாசுதேவன் இப்பாடலை அற்புதமாகப் பாடியிருப்பார் .


மேலும் படிக்க :

இருக்கும் பொழுதை ரசிக்கணும் !

பட்டுவண்ண ரோசாவாம் ...!
 
...........................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms