இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான என்னியோ மாரிக்கோனி ( Ennio Morricone ) பற்றிய ஆவணப்படமிது. இசை ரசிகர்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படமிது. சிறுவயதில் மருத்துவராக விரும்பியவரை காலம் ' மேஸ்ட்ரோ ' -வாக்கி அழகு பார்த்திருக்கிறது. டிரம்பட் கலைஞரான என்னியோவின் தந்தை, என்னியோவின் மருத்துவ கனவை கலைத்து டிரம்பட் கற்று கொள்ள அனுப்புகிறார். ஆரம்பத்தில் டிரம்பட் மட்டும் வாசிக்கப் பழகுகிறார். பிறகு இசைப்பாடல் எழுத பயிற்சி பெறுகிறார். அதன் பின்பு நடந்ததெல்லாம் வரலாறு.
Cinema Paradiso, Django Unchained போன்ற திரைப்படங்களைப் பார்த்த போது அத்திரைப்படங்களின் இசையமைப்பாளர் யாரென்று தெரிந்து கொள்ளவில்லை. 'Once upon a time in America 'திரைப்படம் பார்த்தபோது தான் அத்திரைப்படத்தின் பின்னணி இசையைக் கேட்டு மிரண்டு போனேன். " யாருயா இந்த இசையமைப்பாளர் இப்படி மிரட்டியிருக்கிறார் " என்று தேடிப் பார்த்தபோதுதான் இசை , 'என்னியோ மாரிக்கோனி' என்றிருந்தது. என்னியோவின் இசை மேதைமை குறித்து முன்பே நிறைய பேர் கூறியிருந்ததை வாசித்து இருந்தாலும் நேரடியான அனுபவம் 'Once upon a time in America' மூலமே கிடைத்தது. இப்போது இந்த ' Ennio : The Maestro ' ஆவணப்படத்தைப் பார்க்கும் போதுதான் ' Once upon a time in America' திரைப்படத்தை இயக்கிய செர்ஜியோ லியோனிற்கும் ( Sergio Leone )என்னியோவிற்கும் உள்ள உறவு தெரிய வருகிறது.
செர்ஜியோவையும் என்னியோவையும் பிரிக்க முடியாது. பெரும்பாலான செர்ஜியோவின் திரைப்படங்களுக்கு இசை என்னியோதான். ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் என்னியோவை அதிக வேலை வாங்கியிருக்கிறார், செர்ஜியோ. இத்தனைக்கும் இருவரும் பள்ளி கால தோழர்கள். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இசைக்குறிப்புகளை எப்படி எழுதினார் என்பதை என்னியோ விவரிப்பதை பார்க்க அவ்வளவு ஆவலாக இருந்தது. அவருக்கும் உரிய காலத்தில் அங்கிகாரம் கிடைக்கவில்லை. பல முறை பரிந்துரைக்கப்பட்டும் தாமதமாகத்தான் ஆஸ்கர் விருதே வழங்கப்பட்டிருக்கிறது.
என்னியோவின் இசையமைப்பில் இளையாராஜாவையும் காண முடிகிறது, ஏ.ஆர்.ரஹ்மானையும் காண முடிகிறது. அந்த அளவிற்கு பரிசோதனை முயற்சிகளை என்னியோ தனது திரைப்படங்களில் செய்திருக்கிறார். He is a real MASTER. எப்படி இளையராஜா இசையமைத்த அனைத்து திரைப்படங்களையும் நம்மால் பார்க்க முடியாதோ அதே போல என்னியோ இசையமைத்த அத்தனை திரைப்படங்களையும் காண்பது கடினம். இளையராஜா 90களில் இயங்கியது போலவே அவரும் 70களில் வெறித்தனமாக உழைத்திருக்கிறார். 1969 ல் மட்டும் என்னியோவின் இசையமைப்பில் 21 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
என்னியோவின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் அவரது மனைவியான 'மரியா'. 2007 ல் வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருதை பெற்ற போதும், 2016ல் ' The hateful Eight' திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்ற போதும் அதை தன் மனைவிற்கே அர்ப்பணித்தார். Their love story was very interesting. இணையத்தில் தேடி படித்துக் கொள்ளலாம். இசைக்குறிப்புகள் எழுதி மரியாவிடம் யோசனை கேட்பாராம். மரியா சரி ( Ok ) என்று சொன்ன இசைக்குறிப்புகளை மட்டும் இயக்குனர்களிடம் காண்பிப்பாராம். மரியா இந்த ஆவணப்படத்திலும் பேசவில்லை , இணையத்திலும் அவரைப் பற்றிய அதிக தகவல்கள் இல்லை ஆனால் , என்னியோவின் மனமெங்கும் மரியாவே நிறைந்திருந்திருக்கிறார்.
இந்த ஆவணப்படத்தை பார்த்த நேரம் முழுவதும் வேறு ஒரு உலகத்தில் உலவியது போல இருந்தது. ரொம்ப நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்களே யார் இயக்குநர் என்று தேடிய போதுதான் 'Cinema Paradiso ' திரைப்படத்தை இயக்கிய Giuseppe Tornatore -தான் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் என தெரிய வந்தது. நல்ல அனுபவம். ' The Dreamers ' திரைப்படத்தை இயக்கிய Bernardo Bertolucci -யின் வேறு திரைப்படங்களை காணலாம் என தேடிய போதுதான், இந்த ஆவணப்படம் கண்ணில்பட்டது. Ennio என்ற பேரைப் பார்த்ததும் உடனே பார்க்க ஆரம்பிச்சாச்சு.
தமிழ்நாட்டிலும் ஒரு மேஸ்ட்ரோ இருக்கிறார். அவரைப்பற்றி ஆவணப்படம் எடுக்கத்தான் ஆளில்லை. ' ஆவணப்படுத்துதல்' என்ற விசயத்தில் தமிழ் சமூகம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கும் மேலான ஆதாரப்பூர்வமான வரலாறு இருந்தாலும் இன்று வரை வெற்று பெருமிதங்களிலேயே உலன்று கொண்டிருக்கிறோம். சங்க இலக்கியங்களில் பாதி கிடைக்கவேயில்லை. பல வரலாற்றுச் சின்னங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. எதையும் முறையாக ஆவணப்படுத்தும் வழக்கம் நம்மிடம் இல்லை.
மற்ற கலைச்செல்வங்களுக்குத்தான் இந்த நிலை என்றால் சினிமாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் சினிமா நுழைந்த காலத்திலேயே தமிழகத்திலும் நுழைந்தது. ஆனால் ஆரம்ப கால தமிழ் சினிமா குறித்த ஆவணங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. மகேந்திரன் ,பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள் கூட முழுமையாக நம்மிடம் இல்லை. அதுவுமில்லாமல் ஆவணப்படங்கள் மிகவும் குறைவாகவே எடுக்கப்படுகின்றன. அதுவும் பிரச்சார நெடியுடனேயே இருக்கின்றன. மகத்தான கலைஞர்களும், திரைக்கலைஞர்களும் நம்மிடம் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆவணப்படங்கள் தான் எடுக்கப்படுவதில்லை. இனி மேலாவது இந்நிலை மாற வேண்டும்.
நாம் இளையராஜாவிலிருந்து கூட ஆவணப்படம் எடுப்பதை ஆரம்பிக்கலாம். ' Ennio ' ஆவணப்படம் போலவே இளையாராஜாவை அவரது பாடல்கள் உருவாக்கம் பற்றி பேசவிட்டு, அவருடன் பணியாற்றியவர்களின் கருத்துகளை பதிவு செய்து ஒரு நல்ல ஆவணப்படத்தை உருவாக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் இதை செய்வது யார் என்று தான் தெரியவில்லை.
' Music is the universal language ' என்று சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. இத்தாலியில் பிறந்து வளர்ந்த என்னியோவின் இசை நம்மை வசீகரிக்கிறது. பிடித்த புத்தக வரிகளைக் கூட நாம் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருப்பதில்லை. ஆனால் பிடித்த இசையை, பாடலை நாள் முழுவதும் சலிப்பே இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த அளவிற்கு இசை நமது மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. என்னியோவைக் கொண்டாடுவோம்,இளையராஜாவக் கொண்டாடுவோம் , இசையைக் கொண்டாடுவோம். இசை வாழ்க !
மேலும் படிக்க :