Saturday, December 23, 2017
முடிவிற்கு வந்த டீக்கடை!
6:41:00 PM
மானிடன்
கடை தொடங்குவதற்குத் தேவையான சாமான்கள் வாங்கக் கூட பணமில்லாமல் அப்பாவின் நண்பர்கள் உதவியுடன், அவர்களின் நிர்பந்தத்தால் தொடங்கப்பட்ட கடையிது. அப்புறம் கடையின் வருமானத்தின் மூலம் அந்த கடன் படிப்படியாக கட்டப்பட்டது. அதன் பிறகு இதை தங்களின் வாழ்க்கையாக நினைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டு தங்களின் அயராத உழைப்பால் மேலே வந்தது தான் எங்கள் குடும்பம். அம்மா , அப்பா ஆகிய இருவரின் உழைப்பைக் கண்டு இன்று வரை மிரண்டு தான் போகிறேன். ' sun-கு ஏது sunday ' என்பது போல இன்று வரை உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பிற்கு சித்தப்பா துணை நிற்கிறார்.
ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள் என்று சொல்வார்கள். ஒரு எளிய தொழிலுக்கும் அது தான் வயதோ ? சரியான சரக்கு மாஸ்டர் அமையாதது தான் முதல் பின்னடைவாக இருந்தது. அம்மாவிற்கு எல்லாவிதமான பலகாரங்களும் சுடத் தெரியும். சித்தப்பாவின் உதவியுடன் சரக்குகள் தயார் செய்யப்பட்டு விற்கப்பட்டன. அடுத்து டீ மாஸ்டர் அமையவில்லை. அப்புறம் டீயும் எங்களாலேயே போடப்பட்டது. கடை NH- 7 ல் இருந்ததால் எங்களுக்கான பிரச்சனைகள் இருந்தாலும் கடை வருமானம் ஓரளவு வந்து கொண்டிருந்தது. அடுத்த பின்னடைவு தங்கநாற்கர சாலை. ஊரை ஒதுக்கி சாலைகள் அமைக்கப்பட்டன. தொடர்ச்சியாக கிடைத்து வந்த வருமானம் குறையத் தொடங்கியது. அப்போதே கடையை நிறுத்தலாம் என திட்டமிட்ட நிலையில் கடைக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்ட தேசிய வங்கி கிளையால் அப்போதைக்கு அந்த முடிவு கைவிடப்பட்டது.
அடுத்து அம்மாவிற்கு ஓய்வளிக்கும் விதமாக பலகாரங்கள் நாங்களே போடுவது நிறுத்தப்பட்டு வெளியே வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்தோம். ஆனாலும் அம்மா, ஓய்வைத் தேடவில்லை, வேறு வகையில் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார். இப்போது எங்கள் பகுதியில் டீக்கடைகள் அதிகரித்து விட்டதாலும் , சித்தப்பாவிற்கு ஓய்வளிக்கும் விதமாகவும் கடையை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முன்பை விட தற்போது கடையை நடத்துவதிலும் செலவீனம் அதிகம். பால் , டீத்தூள் , கேஸ் எல்லாமே உயர்ந்த வண்ணமே இருக்கின்றன.
டீக்கடையை நிறுத்தும் முடிவால் வறுத்தமெல்லாம் இல்லை. அந்த கடைக்கு நாங்கள் உண்மையாக இருந்தோம். அதுவும் எங்களின் உழைப்பிற்கேற்ற பலனைக் கொடுத்திருக்கிறது. இப்போது நாங்கள் வாழும் இந்த வாழ்க்கை அந்த டீக்கடை கொடுத்தது தான். எழுதும் இந்த எழுத்தும் அந்த டீக்கடை கொடுத்தது தான். ஆம் , 'தினத்தந்தி ' வாசித்து தமிழ் கற்றவர்களில் நானும் ஒருவன். ' யார் ஆட்சியில் இருந்தாலும் , ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஜால்ரா போடுவது தான் தினத்தந்தி ' என்று தினத்தந்தி நாளிதழ் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்று வரை பிழையின்றி தமிழை அச்சிடுவதில் முதன்மையான நாளிதழது. வாசிக்கவும் , எழுதவும் தூண்டியது அந்த தினத்தந்தி தான். இப்படி பலவற்றை அந்தக் கடையிலிருந்து நான் தனிப்பட்ட முறையில் பெற்றிருக்கிறேன். இப்போதும் அந்த டீக்கடை வருமானத்திலிருந்து தொடங்கப்பட்ட மளிகை கடையில் இருந்து கொண்டுதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
டீக்கடை, தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கம். டீக்கடைகள் எப்படி தமிழகத்திற்குள் நுழைந்தன என்று தெரியவில்லை. ஆண்களுக்கான ஒரு கலாச்சார வெளியை டீக்கடைகள் உருவாக்குகின்றன. ஆடியோ கேசட்டுகள் புழக்கத்தில் இருந்த காலத்தில் டீக்கடைகள் தான் திரைக்கு வர இருக்கும் படங்களிலிருந்து பாடல்களை முதலில் ஒலிபரப்பும். பாடல்களை கேட்பதற்காகவே கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். நாங்களும் பள்ளி விட்டு வந்தவுடன் சில பாடல்களையாவது கேட்டுவிட்டு தான் கடையை விட்டு நகர்வோம்.
பல்வேறு படங்களிலிருந்து பாடல்களை ஆடியோ கேசட்டில் பதிந்து தர ஒவ்வொரு ஊரிலும் ' மியூசிக்கல்ஸ் ' என்ற பெயரில் பல கடைகள் இருந்தன. 60, 90 என்று கேசட்டுகள் பயன்பாட்டில் இருந்தன. 60 கேசட்டில் பக்கத்திற்கு 6 என 12 பாடல்களும் , 90 கேசட்டில் பக்கத்திற்கு 9 என 18 பாடல்களும் பதிவேற்ற முடியும். முதன் முதலில் கேசட் வாங்கி அதில் பிடித்த பாடல்களை பதிவேற்றிய அனுபவம் அவ்வளவு ஆனந்தம். Mp3 வந்த பிறகு ஆடியோ கேசட்களின் காலமும் , மியூசிக்கல்ஸ்களின் காலமும் முடிவிற்கு வந்தன.
காலை (தினத்தந்தி ) , மாலை (மாலை மலர் ) நேரங்களில் நாளிதழ் படிக்க மட்டும் ஒரு தனிக்கூட்டம் கூடிவிடும். அரசியல் விவாதங்கள் சூடு பறக்கும். அதிகமாக ஜெயலலிதா , கருணாநிதியை முன் வைத்தே விவாதங்கள் நடக்கும். இப்போதும் கருணாநிதி தான் முன்னிலையில் இருக்கிறார்.
வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்வது தான் இப்போது மிகச்சிரமமான காரியமாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஒன்று , இப்போது இல்லை என்பதே அவர்களால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது எல்லா இடங்களிலும் நிகழக் கூடியது தான். இவை எல்லாவற்றையும் கடந்து தான் வாழ்க்கை இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது !
மேலும் படிக்க :
மண் பேசும் !
தமிழர்களின் மரபை மீட்போம் !
..................................................................................................................................................