1958-ல்
எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் வெளிவந்த ‘ கொஞ்சும் சலங்கை ’
திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ சிங்கார வேலனே தேவா... ’ என்ற பாடல் தமிழில் அவரது
முதல் வெற்றிப்பாடலாக அமைந்தது. பி.சுசீலா , பி.லீலா பொன்றவர்களால் சரிவர
பாடமுடியாமல் போன இப்பாடலைச் சிறப்பாக பாடி வெற்றிபெற்றாலும் தமிழ் திரையுலகம்,
எஸ்.ஜானகியை அந்த காலகட்டத்தில் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. எப்பவாவது ஓரிரு பாடல்களைப் பாட வைத்தது. ஆனால் அதே
காலகட்டத்தில் மலையாளத்திலும், கன்னடத்திலும்,தெலுங்கிலும் பாட அதிக வாய்ப்புகள்
கிடைத்தன. தமிழில் பாட கிடைத்த சொற்ப வாய்ப்புகளையும் இன்றும் ரசித்து கேட்கப்படும் வெற்றிப்பாடல்களாக மாற்றினார். உதாரணமாக ஜல்
ஜல் எனும் சலங்கையொலி...( பாசம் ), தூக்கமும் உன் கண்களை தழுவட்டுமே..( ஆலயமணி ), பாடாத
பாட்டெல்லாம்...( வீரத்திருமகன் ), அழக்கும் மலருக்கும்...( நெஞ்சம் மறப்பதில்லை )
சித்திரமே சொல்லடி....( வெண்ணிற ஆடை ), ராதைக்கேற்ற கண்ணனோ...( சுமைதாங்கி ),
உலகம் உலகம்...( உலகம் சுற்றும் வாலிபன் ), காற்றுக்கென்ன வேலி...( அவர்கள் ),
மலரே குறிஞ்சி மலரே...( டாக்டர் சிவா ) இன்னும் பல பாடல்களைச் சொல்ல முடியும்.
இருந்தாலும் இளையராஜாவின் வருகைக்குப் பிறகுதான் எஸ்.ஜானகி தமிழ்த்திரையிசையின்
தவிர்க்க முடியாத ஆளுமையாக மாறிப்போனார்.
சிஸ்லா
ஸ்ரீராமமூர்த்தி ஜானகி எனும் முழுப்பெயர் கொண்ட எஸ்.ஜானகி 1938ஆம் ஆண்டு ஏப்ரல்
23ஆம் தேதி அன்றைய சென்னை மாகாணத்திற்குட்பட்ட குண்டூர் ( தற்போது ஆந்திரா )
மாவட்டத்திலுள்ள பல்லேபட்லா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். மூன்று வயதிலேயே
இசை கற்க ஆரம்பித்து பத்து வயது வரை கற்றார். பின்பு தனது உறவினரின் பரிந்துரையால்
சென்னைக்கு இடம்மாறினார். ஏவிம் ஸ்டுடியோவில் குழுப்பாடகியாக பாடும் வாய்ப்பு
கிடைத்தது. 1957ல் டி.சலபதிராவ் இசையமைப்பில் ‘ விதியின் விளையாட்டு ’ என்ற
திரைப்படத்திற்காக தனது முதல் பாடலை எஸ்.ஜானகி பாடினார். ஆனால் இத்திரைப்படம்
வெளிவரவில்லை.
எஸ்.ஜானகியின் குரல் தனித்துவமானது. பின்னணி பாடகியான பிறகு இசைக்கான
எந்தப்பயிற்சியையும் ஜானகி எடுத்துக்கொள்ளவில்லை. தனது உள்ளுணர்வாலும், தனிப்பட்ட
முயற்சியினாலும் எந்த மொழிப்பாடலாக இருந்தாலும் அம்மொழிக்கேவுரிய தன்மைகளுடன்
அம்மொழியின் வட்டார வழக்கையும் சேர்த்தே தனது குரலில் வெளிப்படுத்தினார். இந்தத்
திறமையினாலேயே ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு
மொழிகளிலும் ஒரே நேரத்தில் சிறந்த பாடகியாக இருந்ததோடு
மட்டுமல்லாமல் காலத்தால் அழிக்க
முடியாத பல வெற்றிப்பாடல்களையும் அம்மொழிகளில் கொடுத்தார். இப்போதும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு
இசைரசிகர்கள் ஜானகியை எங்களுக்கானவர் என உரிமை கொண்டாடுகின்றனர் ;யாரும்
விட்டுக்கொடுக்கத் தயாராகயில்லை.
இதைவிட ஒரு கலைஞருக்கு பெரிய அங்கிகாரம் தேவையில்லை. தென்னிந்திய திரையிசைப் பாடகிகளில் எஸ்.ஜானகிக்கு முன்பும் பின்பும் இவரைப்போல் எவருமில்லை.. “ ஜானகி
பாடும்போது ஆழமான ஒரு உணர்ச்சிப்பெருக்கை நான் அடைந்தேன் என்று சொல்லலாம்.அது ஒரு
பாடகி பாடுவது போலவே இருக்கவில்லை; அந்தப்பாடலின் நாயகி பாடுவது போலவே எப்போதும்
ஒலித்தது. பலமொழி திரைப்பாடல்களிலும் பலவகை இசைகளிலும் என்னுடைய அறிதல் விரிந்த
பிறகு எஸ்.ஜானகிதான் தென்னிந்திய திரைப்பாடகிகளில் முதன்மையான உணர்ச்சி
வெளிப்பாட்டுத்திறன் கொண்ட பாடகி என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன் “ என்று எஸ்.ஜானகி
பற்றி எழுதிய முக்கியமான கட்டுரையில் இசைவிமர்சகர் ஷாஜி குறிப்பிட்டுள்ளார்.
இளையராஜாவின் ஆரவாரமான வரவு தமிழ்திரையிசையில்
ஒரு பெரும் பாய்ச்சலையே உருவாக்கியது. எல்லாத்தரப்பு
மக்களையும் இளையராஜாவின் திரையிசை சென்றடைந்தது. இன்றும் மற்ற இசையமைப்பாளர்களின்
இசையை விடவும் மீண்டும் மீண்டும் கேட்கப்படும் இசையாகவும், கேட்டாலும் சலிக்காத
இசையாகவும் இளையராஜாவின் இசையே இருக்கிறது. நாட்டார் இசையை, திரையிசையாக மாற்றிய
மாபெரும் சாதனை இளையராஜாவினுடையது. இளையராஜா மேற்கத்திய இசையை வைத்து நிறைய
கலப்புகளைச் செய்தார். ஒரு கிராமியப்பாடலுக்கும் மேற்கத்திய இசையைப் பயன்படுத்தினார். ஒரு நகரப்பாடலிலும் கிராமிய
இசையைக் கொண்டுவந்தார். இரண்டையும் கலந்தும் நிறைய பாடல்களை
உருவாக்கியிருக்கிறார்.
இன்றுவரை தமிழ்
திரையிசையின் முடிசூடா மன்னனாக இருக்கும் இளையராஜாவின் வெற்றிக்குப் பின்னால்
நிறையபேர் இருந்தாலும் எஸ்.ஜானகியின் பெரும் பங்களிப்பை எப்போதும் தவிர்க்க
முடியாது. இளையராஜாவின் மாறுபட்ட இசை முயற்சிகளுக்கு உற்ற துணையாக ஜானகியின் பாடும்
திறமையே முன் நின்றது. அந்தத் திறமையைக் கண்டடைந்து அதைச் சரியாக
பயன்படுத்தியவரும் இளையராஜா தான். கிராமியப் பாடலாக இருந்தாலும், கர்னாடக சங்கீதத்தில்
அமைந்த பாடலாக இருந்தாலும் ஜானகி எப்போதுமே இளையராஜா எதிர்பார்த்ததைவிட ஒரு மடங்கு
அதிகமாகவே தனது குரலில் பங்களிப்புச் செய்தார். சிக்கலான மெட்டுகளையும் எளிதாகப்
பாடினார். ஒரு பாடல் , அத்திரைப்படத்தில் பாடப்படுகின்ற சூழலுக்கு ஏற்றவாறு ,
திரையில் யார் பாடப் போகிறார் என்பதைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருத்தமான
உணர்ச்சியை வெளிப்படுத்திப் பாடும் திறமையைப் பெற்ற ஒரே பாடகி எஸ்.ஜானகி தான்.
இளையராஜாவின்
முதல் திரைப்படமான ‘ அன்னக்கிளி ’
திரைப்படத்தில் எஸ்.ஜானகி பாடிய ‘ மச்சானைப் பாத்தீங்களா.. ‘ , ‘
அன்னக்கிளி உன்ன தேடுதே... ’ இந்த இரண்டு பாடல்களும் இளையராஜாவைப் பட்டி
தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தன. அதன் பிறகு இந்த இணையைப் பிரிக்க முடியவில்லை. இளையராஜாவின்
பெரும்பாலான வெற்றிப்பாடல்களில் எஸ்.ஜானகியின் பங்கும் இருக்கும். இளையராஜாவின்
இசையில் அதிகளவில் ஒலித்த பெண்குரலும்
எஸ்.ஜானகியினுடையதுதான். இளையராஜா தனது சொந்தக் குரலில் பாடிய ஜோடிப்பாடல்களின்
முதன்மைத் தேர்வாக எஸ்.ஜானகி தான் இருந்தார். தனது தனித்திறமையாலேயே எஸ்.ஜானகி
அதிகளவு பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றார். குழந்தையின் சிணுங்கல், சிறுவர்
சிறுமியின் குரல், கிழவியின் குரல், ஆணின் குரல் என்று பல குரல்களில் பாடியதோடு
மட்டுமில்லாமல் மிகவும் பொருத்தமாக பாடியதால் தான், “பல குரல்களில் சிறப்பாகப் பாடும் திறமையுள்ளவர் ” என்று இன்றும்
பலராலும் எஸ்.ஜானகி நினைவு கூறப்படுகிறார்.
பாடல்களில்
இடம்பெறும் ஹம்மிங்கிலும் நிறைய ஜாலங்களை எஸ்.ஜானகி புரிந்திருக்கிறார். ல, லா
வில் ஆரம்பிக்கும் ஹம்மிங் பாடல்களே நிறைய இருக்கின்றன. “ லல்லா லல்லா லல்லா லல்லா
... சின்ன சின்ன வண்ணக்குயில்... (மெளனராகம்), “ லால லால ல ... ஆத்துமேட்டிலே ஒரு
பாட்டு கேட்குது...( கிராமத்து அத்தியாயம்),” “லாலலல்லா லாலலல்லா ...
எந்தப்பூவிலும் வாசம் உண்டு... (முரட்டுக்காளை) ” என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எஸ்.ஜானகியால் பாடப்பட்ட எந்தவொரு ஹம்மிங்கும் அலாதியான குரலிலேயே ஒலிக்கும். மெல்லிசைப்
பாடல்கள் என்றாலும் அவர் பாடிய எல்லா மெல்லிசைப் பாடல்களையும் ஒரே வகைமைக்குள்
அடக்க முடியாது. ஒவ்வொரு மெல்லிசைப் பாடலும் ஒவ்வொரு விதமான உணர்வைக் கொடுக்கும்
வகையில் பாடப்பட்டிருக்கும். இதே போலவே தான் சோகம், ஜோடி, தனி மற்றும்
குழுப்பாடல்களும் தனித்தன்மையுடன் இருக்கும்.எஸ்.ஜானகி பாடிய பாடல்களில் இவரின்
குரல் பெரும்பாலும் பின்னணி இசையை மிஞ்சியே ஒலிக்கிறது.
1980களில்
வெளிவந்த திரைப்படங்களில் ஒரு பாடலாவது காமரசம் சொட்ட சொட்ட
உருவாக்கப்பட்டிருக்கும். இந்தப் பாடல்களில் ஒலிக்கும் பெண் குரல் பெரும்பாலும்
எஸ்.ஜானகியினுடையதாகவே இருக்கும். அதிலும் அந்தப்பாடல்களில் வரும் ஹம்மிங்களிலும்,
கொஞ்சல்களிலும், சிணுங்கல்களிலும் நம்மை கிறங்க வைத்துவிடுவார். “ ஆ..ரீராரிரோ.. கண்ணத்
தொறக்கணும் சா..மி... (முந்தானை முடிச்சு)”, “ பொன்மேனி உருகுதே.. என் ஆசை
பெருகுதே... (மூன்றாம் பிறை) ”, “ நிலா காயுது ..நேரம் நல்ல நேரம்.., நேத்து
ராத்திரி.. யம்மா...(சகலகலா வல்லவன்) ” என்று இன்று கேட்டாலும் சொக்கித்தான்
போய்விடுகிறோம். இந்த வகைப்பாடல்களில் ஜானகி அளவிற்கு உணர்வுப்பூர்வமாக வேறு
எவராலும் பாடிவிட முடியாது என்பதை உறுதியாகக் கூற முடியும்.
எஸ்.ஜானகி பாடிய
பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன.
இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம் ,ஆசை, தாய்மை எனப்
பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும்
கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன. “ காற்றில்..எந்தன் கீதம்...(ஜானி),
அன்பே வா அருகிலே...( கிளி பேச்சு கேட்க வா ), மந்திர
புன்னகையோ மஞ்சள் நிலவோ...( பூவிழி வாசலிலே ),பட்டுவண்ண ரோசாவாம்...( கன்னிப்பருவத்திலே
), பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா..( நீங்கள் கேட்டவை ), சின்னத் தாயவள் தந்த
ராசாவே...( தளபதி), எந்தன் கண்ணில் ஏழுலகங்கள்...(குரு), இது ஒரு நிலாக்காலம்...(டிக்
டிக் டிக்), ஊருசனம் தூங்கிருச்சு...(மெல்லத் திறந்தது கதவு), புத்தம் புது
காலை...(அலைகள் ஓய்வதில்லை), செந்தூரப்பூவே செந்தூரப்பூவே..., மஞ்சள் குளிச்சி..(16
வயதினிலே), வான்மதியே வான்மதியே...(அரண்மைக்கிளி), ஆசை அதிகம்
வச்சு...(மறுபடியும்), நெஞ்சினிலே நெஞ்சினிலே...( உயிரே ) இன்னும் பல பாடல்களைக்
குறிப்பிட முடியும். இசை மேடைகளில் எஸ்.ஜானகியின் பாடல்களையே மீண்டும் மீண்டும்
பாடுகிறார்கள்.
இளையராஜாவின்
இசையில் பாடியவர்களில் சிறந்த ஜோடிப் பாடகர்களாக எஸ்.ஜானகியையும், மலேசியா
வாசுதேவனையையுமே குறிப்பிட முடியும். “எஸ்.ஜானகிக்கு ஈடு கொடுக்கும் வகையில்
மலேசியா வாசுதேவனால் மட்டுமே பாட முடியும்” என்று ஷாஜி குறிப்பிடுகிறார். காலத்தின்
விளையாட்டால் குறைவான பாடல்களே இவ்விருவரும் இணைந்து பாடியிருந்தாலும் அவை என்றும்
கேட்கக்கூடிய இனிமை உடையவை. பூங்காற்று திரும்புமா..., வெட்டிவேரு வாசம்...( முதல்
மரியாதை ) ,கோவில்மணி ஓசைதன்னை..., மலர்களே...( கிழக்கே போகும் ரயில் ), வான்
மேகங்களே...( புதிய வார்ப்புகள் ), ஆழக்கடலில்
தேடிய முத்து...( சட்டம் என் கையில் ), இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு...( சிகப்பு
ரோஜாக்கள் ), கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச...( என் ஜீவன் பாடுது ), தங்கச்
சங்கிலி மின்னும் பைங்கிளி...( தூரல் நின்னு போச்சு ), ஆகாய கங்கை பூந்தேன் மலர்
சூடி....( தர்மயுத்தம் ), பேர் வச்சாலும் வைக்காம போனாலும்...(
மைக்கேல் மதன காமராஜன் ) இவர்களிருவரும் இணைந்து பாடிய இன்னும் பல பாடல்களைக்
குறிப்பிட முடியும். இவை அனைத்துமே எப்போது கேட்டாலும் சலிக்காதவை. இவர்கள்
பாடிய எந்தப்பாடலையும் இன்றைய பாடகர்களால் நகலெடுத்து பாடிவிட முடியாது. இவர்களின் குரல்களில் தான் நாம் உண்மையான கிராமத்து வாசனையை
உணர முடியும்.
நல்ல திறமையிருந்தும்
எஸ்.ஜானகி பாடிய அளவில் குறைந்தபட்ச வாய்ப்பு கூட மலேசிய வாசுதேவனுக்கு
கிடைக்கவில்லை.இருந்தும் தமிழ் திரையிசையில் ஒரு தவிர்க்கமுடியாத தனியிடத்தை
மலேசியா வாசுதேவன் பெறுகிறார். எல்லா வகையான பாடல்களையும் சிறப்பாக பாடக்கூடிய
திறமை இருந்தும் அதிகபட்ச டப்பாங்குத்து பாடல்களை மட்டுமே பாடுவதற்கு தமிழ்
திரையிசையுலகம் மலேசியா வாசுதேவனுக்கு வழங்கியுள்ளது. ஆனால்,இன்று டப்பாங்குத்து
பாடல்களைத் தாண்டியும் வாசுதேவன் நினைவு
கூறப்படுகிறார் அவரது மற்ற அற்புத பாடல்களுக்காக. இதற்கு அவரது இசையாளுமையே
காரணம். தமிழ் சமுகம் கொண்டாடத் தவறிய கலைஞர்களில் மலேசியா வாசுதேவனும் ஒருவர்.
இசைக்கும்
மொழிக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இசையமைப்பாளர் எவ்வளவு தான் உழைத்து சிறப்பான மெட்டை அமைத்தாலும் நல்ல பாடல்
வரிகளும், நன்றாக பாடக்கூடியவர்களும் அமையாவிட்டால் அப்பாடல் வெற்றி பெறாது.
விதிவிலக்காக சில பாடல்கள் மெட்டுக்காகவும், பாடல் வரிகளுக்காகவும், , சிறப்பான
பாடும் முறைக்காகவும் நினைவில் இருக்கலாம். ஆனால் இவை மூன்றுமே சிறப்பாக அமைந்த
பாடல்கள் மட்டுமே செவ்வியல் தன்மை கொண்டு காலத்தால் அழியாதிருக்கும். இம்மூன்றில்
மெட்டு , பாடல் வரிகளை விட பாடகரின் பாடும் திறமையே அப்பாடலை மக்களிடம் கொண்டு
சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளையராஜாவிற்கு
முன்பு வரை பாடகர்கள் பாடல் வரிகளைப் பாடும்போது மொழியை பிழையில்லாமல் பாடுவதில்
கறார் தன்மை இருந்தது. பழைய பாடல்களில் லகரம் (ல,ள,ழ ), னகரம்( ன,ண ), ரகரம்( ர,
ற) போன்றவை பெரும்பாலும்
திருத்தமாக பாடப்பட்டதாலேயே அவற்றை இன்றும்
ரசித்துக் கேட்கிறோம். இளையராஜா இவ்விசயத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றே
தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் மொழியில் கவனம் செலுத்தி திருத்தமாக பாட கற்றுக்கொண்ட
டி.எம்.எஸ்., ஜானகி ,வாசுதேவன் போன்றவர்கள் மட்டுமே சிறப்பாகப் பாடியிருக்கிறார்கள். நாம் எங்கு சென்றாலும் ,
எங்கு வாழ்ந்தாலும் இம்மூவரின் குரல்கள் ஏதோ ஒரு விதத்தில் நம் காதுகளை அடைகின்றன.
அந்த அளவிற்கு நம்முடன் கலந்துவிட்ட குரல்கள் இவை.எழுத்து மொழியில் ஆங்காங்கே எழுதப்படும் வாசகங்களில் இருக்கும் எழுத்துப்பிழையைச் சுட்டிக் காட்டுகிறோம். அதே சமயம் நமது பேச்சு மொழியிலோ , கோடிக்கணக்கானவர்களைச் சென்றடையும் திரையிசைப்பாடல்களிலோ பிழைகளை எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ்
திரையிசையுடன் சுருங்கிப்போனது வருத்தமே. கலை என்பது எப்போதுமே மக்களுக்கானது ;
மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடியது என்று சொல்கிறார்கள். அப்படி
இருக்கையில் கலை வடிவத்தில் ஒன்றான இசையும் திரைப்படத்தைச் சார்ந்து இயங்காமல்
தன்னிச்சையாக இயங்க வேண்டும்.
2013 ஆம் ஆண்டு
தனக்குக் கொடுக்கப்பட்ட பத்மபூஷண் விருதை
எஸ்.ஜானகி நிராகரித்தார். இதற்கு அவர் சொன்ன காரணம் ,” இது காலம் கடந்த
கொடுக்கப்பட்ட விருது. மேலும் என்னை விட சிறந்த தென்னிந்திய கலைஞர்களுக்கே இன்னும்
கொடுக்கவில்லை. இப்போதைய நிலையில் பாரத ரத்னா கொடுத்தால் வாங்கிக் கொள்வேன் ”. 55
ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசைக்கு பங்களிப்பு செய்தவரிடம் வேறு என்ன
பதிலை எதிர்பார்க்க முடியும். எந்த விருதாக இருந்தாலும் அதை வேண்டாம் என்று
சொல்வதற்கு துணிச்சலும் தைரியமும் வேண்டும். 77 வயதிலும் தனது சுயமரியாதையை
இழக்காமல் இருக்கும் எஸ்.ஜானகியைக் கொண்டாடுவோம். “ எனது ரசிகர்கள் தான் எனக்குப்
பெரிய விருது “ என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே
அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின்
குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.
குறிப்பு :- இக்கட்டுரை 'காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து ' என்ற தலைப்பில் தி இந்து நாளிதழின் இணைப்பிதழான இந்து டாக்கீஸில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் .
மேலும் படிக்க :
எக்காலத்திற்குமான கலைஞன் !
மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
பட்டுவண்ண ரோசாவாம் ...!
...................................................................................................................................................................
குறிப்பு :- இக்கட்டுரை 'காற்றை கவுரப்படுத்தும் குரல் ! - தி இந்து ' என்ற தலைப்பில் தி இந்து நாளிதழின் இணைப்பிதழான இந்து டாக்கீஸில் வெளிவந்த கட்டுரையின் முழு வடிவம் .
மேலும் படிக்க :
எக்காலத்திற்குமான கலைஞன் !
மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
பட்டுவண்ண ரோசாவாம் ...!
...................................................................................................................................................................