Showing posts with label ஆவணப்படம். Show all posts
Showing posts with label ஆவணப்படம். Show all posts

Sunday, September 1, 2024

The Elephant Whisperers !


ஆவணப்படுத்துதல் என்பது முக்கியமான செயல்பாடு.இதில் நம் அனைவருக்கும் பங்கிருக்கிறது. ஆவணப்படுத்துதல் என்பது எல்லாத் தளங்களிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும். ஆவணப்படுத்தல் மூலம் அறிவும் வரலாறும் பதிவாகிறது. இது ஒரு தொடர் செயல்பாடு.ஆனால் இந்த விசயத்தில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். 

ஆவணப்படங்கள் உலகெங்கும் கவனம் பெற்றிருந்தாலும் இந்தியச் சூழலில் இன்னமும் போதிய கவனம் பெறவில்லை. இதன் முக்கியத்துவத்தையும் நாம் உணரவில்லை. மற்ற இயக்குநர்கள் வெளியே தெரிந்த அளவிற்கு இந்திய ஆவணப்பட இயக்குநர்கள் வெளியே தெரியவில்லை. இப்படியான சூழலில் ' The Elephant Whisperers ' ஆவண குறும்படத்திற்கு கிடைத்திருக்கும் விருதானது ஆவணப்படங்கள் குறித்தான புரிதலை கொஞ்சமேனும் அதிரிக்கும். இயற்கையையும், இயற்கையுடன் இணைந்த வாழ்வை வாழும் காட்டின் பாதுகாவலர்களையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஆவண குறும்படத்திற்கு விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. 


ஆசியாவிலேயே பழமையான யானை முகாம்களில் ஒன்றாக இருக்கும் முதுமலை யானைகள் முகாம் பற்றியோ அதன் செயல்பாடுகள் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு இதற்கு முன்பு தெரியாது. இந்த ஆவண குறும்படம் அதை நமக்கு தெரியப்படுத்தி இருக்கிறது. எந்த உயிரினமும் மனிதர்களாகிய நாம் கொடுக்கும் அன்பை பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுக்கின்றன. சமீபத்தில் கூட உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஆரிப் என்பவர், காயமடைந்த நாரை ஒன்றை குணப்படுத்தி இருக்கிறார். குணமாகி ஓராண்டான பிறகும் அந்த நாரை அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவர் கூடவே பறந்து செல்வதை தீக்கதிர் வெளியிட்ட ஒரு காணொளியில் காண முடிந்தது.


உலகெங்கிலுமே பல்வேறு விதமான உயிரினங்கள் மனிதர்கள் வாழுமிடங்களிலும், மிருக காட்சி சாலைகளிலும் வளர்க்கப்படுகின்றன. அனைத்துமே அன்பிற்கு கட்டுப்பட்டவனவாகவே இருக்கின்றன. " யானைக்களுக்கு உணர்ச்சிகள் அதிகம், புத்தியும் அதிகம். ஆனாலும் அது ஒரு காட்டு மிருகம் என்பதை அறிந்தே இருக்கிறோம் " என்று பொம்மன் இந்த குறும்படத்தின் ஓரிடத்தில் சொல்கிறார். இந்தப் பார்வை ரொம்ப முக்கியம். " எல்லாவற்றையும் நாங்களே சொல்லிதர முடியாது.அது யானை , யானைக்கூட இருந்துதான் கத்துக்கணும்" என்கிறார், பெள்ளி. இப்படியான புரிதல் இருப்பதால்தான் தாய் யானையைப் பிரிந்த யானைக்குட்டிகளை இவர்களால் வளர்த்தெடுக்க முடிந்திருக்கிறது. 


பொம்மன் மற்றும் பெள்ளியின் வெள்ளந்தியான முகங்களைக் காண்பதும், அவர்களின் வாஞ்சையான பேச்சைக் கேட்பதும் பெரும் மகிழ்வைக் கொடுக்கக் கூடியவை. இவர்கள் வளர்த்த யானைகளான ரகு மற்றும் பொம்மியுடனான இவர்களது உரையாடல்கள் இன்னமும் சுவாரசியமானவை. காட்டின் பாதுகாவலர்கள் (பழங்குடியினர்) குறித்தும், அவர்களுக்கிருக்கும் காடு பற்றிய புரிதல்கள் குறித்தும் , முதுமலை யானைகள் முகாம் குறித்தும் ஒரு சிறு துளி தான் ஆவண குறும்படமாக உருவாகியிருக்கிறது. அந்தச் சூழலிலேயே இன்னும் பதிவு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. 


இயக்குநர் கார்த்திகியும் மற்றும் குழுவினரும் இரண்டு ஆண்டுகளாக முதுமலை காட்டில் தங்கி இந்த ஆவண குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அந்தக் காட்டில் பதிவு செய்த பலவற்றை இக்குறும்படத்தில் இணைத்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் அவை காட்சிக்கு நெருக்கமாக இருந்தாலும் போக போக அவை இடையூறு தருபவையாக இருக்கின்றன. மற்றபடி நல்லதொரு உருவாக்கம்.


பொதுவாகவே விருது என்பதில் பல்வேறு விதமான அரசியல்கள் இருந்தாலும் விருது கிடைக்கும் போது குறிப்பிட்ட படைப்பு வெளியே தெரிய வரும், கூடவே படைப்பாளியும் தெரிய வருவார். ஒரு சில படைப்புகள் தான் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விருது பெற்ற கவனத்தால் பொம்மன், பெள்ளி உள்ளிட்ட 91 யானை பாகன்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டிருக்கிறது‌. இது மட்டுமல்லாமல் 91 பாகன்களுக்கும் தலா பத்து இலட்ச ரூபாய் அவர்கள் விருப்பப்படி வீடு கட்டிக்கொள்ள தமிழ்நாடு அரசால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. காட்டு மனிதர்களை நாட்டு மனிதர்கள் கெடுக்காமல் இருந்தால் சரி.


இயக்குநர் கார்த்திகி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉. 


மேலும் படிக்க :

Extraordinary Attorney Woo - Feel Good Series !

Life in Colour with David Attenborough - Documentary !

Life in Colour with David Attenborough - Documentary ❤️


இயற்கையின் வண்ணங்கள் எவ்வளவு சுவாரசியம் மிக்கவை என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகிறது. பல்வேறு விதமான உயிரினங்களின் விதவிதமான வண்ணங்கள் வெறும் வண்ணங்கள் மட்டும் அல்ல. தனது பலத்தை வெளிப்படுத்த, இணையைக் கவர, இரையை ஏமாற்ற, தன்னை பாதுகாத்துக் கொள்ள, உணவிற்காக என்று ஒவ்வொன்றிற்கு பின்னும் ஒவ்வொரு கதை இருக்கிறது. அத்தகைய சுவாரசியமான கதைகளில் கொஞ்சம் இந்த ஆவணப்படத்தில் காட்சிகளுடன் பேசப்படுகிறது.

நீங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு உங்களது கண்களை விலக்கிக்கொள்ளவே முடியாது. மிகவும் தரமான கேமிராக்களின் உதவியுடன் இயற்கையின் அற்புதங்களை கண்முன் நிறுத்துகிறார்கள். ஆவணப்படம், தென்னிந்தியாவிலிருந்து மயிலுடன்தான் தொடங்குகிறது. இந்திய புலியின் உடலிலுள்ள வண்ணங்கள் குறித்து மிகவும் விரிவாகவே பேசுகிறார்கள். 

நாம் பார்ப்பது போலவே மற்ற உயிரினங்களும் வண்ணங்களைப் பார்ப்பதில்லை. ஒரு சில உயிரினங்கள் நம்மைவிட குறைவான பார்வைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. ஒரு சில உயிரினங்கள் நம்மைவிட அதிக பார்வைத்திறன் கொண்டவையாக இருக்கின்றன. வன்முறைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ், திரைப்படங்களுக்கு இடையே இப்படியான ஒரு ஆவணப்படத்தைப் பார்ப்பது நமக்கு நிச்சயம் புத்துணர்வு அளிக்கும்.

மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

வலுத்தது நிலைக்கும் !

Tuesday, September 13, 2022

Wild Wild Country - ஓஷோ !

 


Wild Wild Country ❤

- Documentary About OSHO !

மிகவும் சிறப்பான ஆவணப்படம்.ஆறு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கின்றன. சார்பு நிலைகள் இல்லாமல் உருவாக்கப்படுள்ளது. ஒஷோவோடு தொடர்பில் இருந்தவர்களின் குரல்களின் வாயிலாகவும், 1981 முதல் 1985வரை அமெரிக்காவில் ஒரு குட்டி நகரத்தையே எப்படி உருவாக்கினார்கள் என்பதும் காட்சிகளாக விரிகின்றன. 40 ,50 பேர்கள் மட்டுமே இருக்கும் ஆன்டலோப் எனும் சிறு நகரத்திற்கு பக்கத்தில் 'ரஜ்னீஷ்புரம் ' என்ற ஒன்றை உருவாக்குகிறார்கள். இந்த ஆவணப்படத்தின் மூலம் ஓஷோவை விட அதிகம் கவர்ந்தவர் , ஓஷோவின் உதவியாளர், மா ஆனந்த் ஷீலா. 


மொரார்ஜி தேசாய் அரசு , பூனாவில் இருந்த ஓஷோவின் ஆசிரமத்திற்கு அளித்து வந்த வரிச்சலுகையை ரத்து செய்கிறது. ஏற்கனவே பூனா ஆசிரமத்தை விட பெரியதாக இந்தியாவில் வேறு இடம் கிடைக்குமா என்று அவர்கள் தேடிக்கொண்டிருந்த சூழலில் வரிச்சலுகையும் ரத்து செய்யப்பட அமெரிக்காவிற்கு பயணமாகிறார்கள். ஓஷோவிற்கு பெற்றோர் வைத்த பெயர், சந்திர மோகன் ஜெயின். அதை 'ரஜ்னீஷ்' என்று மாற்றிக்கொள்கிறார். 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் ' என்றே அமெரிக்காவில் அழைக்கப்படுகிறார். 


மா ஆனந்த் ஷீலாவின் பெரும் உழைப்பால் 'ரஜ்னீஷ்புரம்' உருவாகிறது. ரஜ்னீஷ் மீது எல்லையற்ற அன்பும்,நம்பிக்கையும் வைத்திருந்தார், வைத்திருக்கிறார். சில அதிகார பிரச்சனைகளால் ஷீலா அமெரிக்காவை விட்டு வெளியேறினாலும் இன்று வயோதிகத்தை அடைந்திருந்தாலும் ரஜ்னீஷ் மீதான அன்பும், நம்பிக்கையும் குறையவேயில்லை. அவரது நினைவுகளில் இன்றும் ரஜ்னீஷே நிறைந்திருக்கிறார். 


இப்போதும் மிரட்சியாகவே இருக்கிறது. அமெரிக்கா மாதிரியான ஒரு நாட்டில் போய் எவ்வளவு வேலை பார்த்திருக்கானுக. சொந்தமாக விமானநிலையம், ஆயுதம் ஏந்திய போலீஸ், ஆயவுக்கூடம் என்று ஐந்து ஆண்டுகள் மிரட்டியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழிற்நுட்பத்தில் சிறந்தவர்கள் ரஜ்னீஷை பின்தொடர்பவர்களாக இருந்திருக்கிறார்கள். பணத்திற்கும் குறைவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த சாமியார்களை கையிலயே பிடிக்க முடியாது போல. அதிலும் நவீன சாமியார்கள் படித்தவர்களையும் எளிதில் உள்ளே இழுத்துவிடுகிறார்கள். 


காலம், காலமாக இருந்து வருவதை தங்களுக்கு தகுந்தவாறு உடைத்துவிட்டு கவர்ச்சிகரமான பத்து, இருபது வார்த்தைகளை சிதறவிட்டால் போதும் கூட்டம் தானாக சேர்ந்துவிடும் போல. ஆசிரமங்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து வந்த சூழலில் எங்கள் ஆசிரமத்தில் பிரம்மச்சரியம் இல்லை. விரும்புபவர்கள், விரும்புபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் ஏன் கூட்டம் சேராது ? ஓஷோவிய் ஆசிரமத்தில் சேர்ந்தது உலகம் முழுவதிலும் இருந்து. 


'ஆசையே துன்பத்திற்கு காரணம் ' என்றார் புத்தர். இதற்கு மாற்றாக ' அத்தனைக்கும் ஆசைப்படு ' என்று சொல்லியே ஜக்கி என்னும் விஷக்கிருமி காட்டை அழித்ததோடு, இன்று கோவை பகுதியின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஜக்கியின் ரோல் மாடல் ஓஷோதான். சொல்லி வைத்ததுபோல இருவரும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு பக்தி, ' Enlightenment ' என்பதெல்லாம் பணத்திற்கு பின்புதான். 


ஷீலா ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ரஜ்னீஷூம் , ரஜ்னீஷ்புரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். அப்புறம் அங்கிருக்கிருந்த மற்றவர்களும் வெளியேறிவிடுகிறார்கள். ஆன்டலோப் மக்கள், அன்றும் சரி, இன்றும் சரி இந்த ரஜ்னீஷ் கூட்டத்தை காமெடியாகவே அணுகியிருக்கிறார்கள். அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு 21 நாடுகள் ரஜ்னீஷை உள்ளே விட அனுமதிக்கவில்லை. கடைசியில் மீண்டும் பூனா ஆசிரமத்திற்கே வருகிறார். இறப்பதற்கு ஒரு வருடம் (1989) முன்புதான் 'ஜென் ' தாக்கத்தால் தனது பெயரை 'ஓஷோ' என்று மாற்றிக் கொள்கிறார். இப்போது அதுவே நிலைத்துவிட்டது. ஓஷோவை அமெரிக்கா விரட்டி அடித்தது போல , ஜக்கியை நாம் கோவையை விட்டு விரட்டியடிக்க வேண்டும். 


இன்றும் ஓஷோவை பின்தொடர்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகும் ஓஷோவை நம்புகிறார்கள். ஆனால்

எல்லா சாமியார்களும் போலிகள்தான். Osho also a Fake. 


Very admiring personality, Ma Anand Sheela ❤


நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். பெரிய அளவிலான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன ! 


மேலும் படிக்க :

Ennio : The Maestro (The Glance of Music ) (2021) , Documentary Movie


சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !


Thursday, July 7, 2022 Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !

Thursday, July 7, 2022

Ennio : The Maestro (The Glance of Music ) (2021) , Documentary Movie ❤️


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவரான என்னியோ மாரிக்கோனி (  Ennio Morricone ) பற்றிய ஆவணப்படமிது. இசை ரசிகர்கள் மற்றும் உலக சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஆவணப்படமிது. சிறுவயதில் மருத்துவராக விரும்பியவரை காலம் ' மேஸ்ட்ரோ ' -வாக்கி அழகு பார்த்திருக்கிறது. டிரம்பட் கலைஞரான என்னியோவின் தந்தை, என்னியோவின் மருத்துவ கனவை கலைத்து டிரம்பட் கற்று கொள்ள அனுப்புகிறார். ஆரம்பத்தில் டிரம்பட் மட்டும் வாசிக்கப் பழகுகிறார். பிறகு இசைப்பாடல் எழுத பயிற்சி பெறுகிறார். அதன் பின்பு நடந்ததெல்லாம் வரலாறு. 


Cinema Paradiso, Django Unchained போன்ற திரைப்படங்களைப் பார்த்த போது அத்திரைப்படங்களின் இசையமைப்பாளர் யாரென்று தெரிந்து கொள்ளவில்லை. 'Once upon a time in America 'திரைப்படம் பார்த்தபோது தான் அத்திரைப்படத்தின் பின்னணி இசையைக் கேட்டு மிரண்டு போனேன். " யாருயா இந்த இசையமைப்பாளர் இப்படி மிரட்டியிருக்கிறார் " என்று தேடிப் பார்த்தபோதுதான் இசை , 'என்னியோ   மாரிக்கோனி' என்றிருந்தது. என்னியோவின் இசை மேதைமை குறித்து முன்பே நிறைய பேர் கூறியிருந்ததை வாசித்து இருந்தாலும் நேரடியான அனுபவம் 'Once upon a time in America' மூலமே கிடைத்தது. இப்போது இந்த ' Ennio : The Maestro ' ஆவணப்படத்தைப் பார்க்கும் போதுதான் ' Once upon a time in America' திரைப்படத்தை இயக்கிய  செர்ஜியோ லியோனிற்கும் ( Sergio Leone  )என்னியோவிற்கும் உள்ள உறவு தெரிய வருகிறது. 


செர்ஜியோவையும் என்னியோவையும் பிரிக்க முடியாது. பெரும்பாலான செர்ஜியோவின் திரைப்படங்களுக்கு இசை என்னியோதான். ஆனால் ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் என்னியோவை அதிக வேலை வாங்கியிருக்கிறார், செர்ஜியோ. இத்தனைக்கும் இருவரும் பள்ளி கால தோழர்கள். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இசைக்குறிப்புகளை எப்படி எழுதினார் என்பதை என்னியோ விவரிப்பதை பார்க்க அவ்வளவு ஆவலாக இருந்தது. அவருக்கும் உரிய காலத்தில் அங்கிகாரம் கிடைக்கவில்லை. பல முறை பரிந்துரைக்கப்பட்டும் தாமதமாகத்தான் ஆஸ்கர் விருதே வழங்கப்பட்டிருக்கிறது. 


என்னியோவின் இசையமைப்பில் இளையாராஜாவையும் காண முடிகிறது, ஏ.ஆர்.ரஹ்மானையும் காண முடிகிறது. அந்த அளவிற்கு பரிசோதனை முயற்சிகளை என்னியோ தனது திரைப்படங்களில் செய்திருக்கிறார். He is a real MASTER. எப்படி இளையராஜா இசையமைத்த அனைத்து திரைப்படங்களையும் நம்மால் பார்க்க முடியாதோ அதே போல என்னியோ இசையமைத்த அத்தனை திரைப்படங்களையும் காண்பது கடினம். இளையராஜா 90களில் இயங்கியது போலவே அவரும் 70களில் வெறித்தனமாக உழைத்திருக்கிறார். 1969 ல் மட்டும் என்னியோவின் இசையமைப்பில் 21 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. 


என்னியோவின் வெற்றிக்குப் பின்னால் இருந்தவர் அவரது மனைவியான 'மரியா'. 2007 ல் வாழ்நாள் சாதனைக்காக ஆஸ்கர் விருதை பெற்ற  போதும், 2016ல் ' The hateful Eight' திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்ற போதும் அதை தன் மனைவிற்கே அர்ப்பணித்தார். Their love story was very interesting. இணையத்தில் தேடி படித்துக்  கொள்ளலாம். இசைக்குறிப்புகள் எழுதி மரியாவிடம் யோசனை கேட்பாராம். மரியா சரி ( Ok ) என்று சொன்ன இசைக்குறிப்புகளை மட்டும் இயக்குனர்களிடம் காண்பிப்பாராம். மரியா இந்த ஆவணப்படத்திலும் பேசவில்லை , இணையத்திலும் அவரைப் பற்றிய அதிக தகவல்கள் இல்லை ஆனால் , என்னியோவின் மனமெங்கும் மரியாவே நிறைந்திருந்திருக்கிறார். 


இந்த ஆவணப்படத்தை பார்த்த நேரம் முழுவதும் வேறு ஒரு உலகத்தில் உலவியது போல இருந்தது. ரொம்ப நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார்களே யார் இயக்குநர் என்று தேடிய போதுதான் 'Cinema Paradiso ' திரைப்படத்தை இயக்கிய Giuseppe Tornatore -தான் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் என தெரிய வந்தது. நல்ல அனுபவம்.  ' The Dreamers '  திரைப்படத்தை இயக்கிய Bernardo Bertolucci -யின் வேறு திரைப்படங்களை காணலாம் என தேடிய போதுதான், இந்த ஆவணப்படம் கண்ணில்பட்டது. Ennio என்ற பேரைப் பார்த்ததும் உடனே பார்க்க ஆரம்பிச்சாச்சு. 


தமிழ்நாட்டிலும் ஒரு மேஸ்ட்ரோ இருக்கிறார். அவரைப்பற்றி ஆவணப்படம் எடுக்கத்தான் ஆளில்லை. ' ஆவணப்படுத்துதல்' என்ற விசயத்தில் தமிழ் சமூகம் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. 2600 ஆண்டுகளுக்கும் மேலான ஆதாரப்பூர்வமான வரலாறு இருந்தாலும் இன்று வரை வெற்று பெருமிதங்களிலேயே உலன்று கொண்டிருக்கிறோம். சங்க இலக்கியங்களில் பாதி கிடைக்கவேயில்லை. பல வரலாற்றுச் சின்னங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் அழிந்து வருகின்றன. எதையும் முறையாக ஆவணப்படுத்தும் வழக்கம் நம்மிடம் இல்லை.


மற்ற கலைச்செல்வங்களுக்குத்தான் இந்த நிலை என்றால் சினிமாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் சினிமா நுழைந்த காலத்திலேயே தமிழகத்திலும் நுழைந்தது. ஆனால் ஆரம்ப கால தமிழ் சினிமா குறித்த ஆவணங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. மகேந்திரன் ,பாலு மகேந்திரா இயக்கிய திரைப்படங்கள் கூட முழுமையாக நம்மிடம் இல்லை. அதுவுமில்லாமல் ஆவணப்படங்கள் மிகவும் குறைவாகவே எடுக்கப்படுகின்றன. அதுவும் பிரச்சார நெடியுடனேயே இருக்கின்றன. மகத்தான கலைஞர்களும், திரைக்கலைஞர்களும் நம்மிடம் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆவணப்படங்கள் தான் எடுக்கப்படுவதில்லை. இனி மேலாவது இந்நிலை மாற வேண்டும்.


நாம் இளையராஜாவிலிருந்து கூட ஆவணப்படம் எடுப்பதை  ஆரம்பிக்கலாம். ' Ennio ' ஆவணப்படம் போலவே இளையாராஜாவை அவரது பாடல்கள் உருவாக்கம் பற்றி பேசவிட்டு, அவருடன் பணியாற்றியவர்களின் கருத்துகளை பதிவு செய்து ஒரு நல்ல ஆவணப்படத்தை உருவாக்க எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன. ஆனால் இதை செய்வது யார் என்று தான் தெரியவில்லை.


' Music is the universal language '  என்று சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. இத்தாலியில் பிறந்து வளர்ந்த என்னியோவின் இசை நம்மை வசீகரிக்கிறது. பிடித்த புத்தக வரிகளைக் கூட நாம் மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்டே இருப்பதில்லை. ஆனால் பிடித்த இசையை, பாடலை நாள் முழுவதும் சலிப்பே இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். அந்த அளவிற்கு இசை நமது மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. என்னியோவைக் கொண்டாடுவோம்,இளையராஜாவக் கொண்டாடுவோம் ,  இசையைக் கொண்டாடுவோம். இசை வாழ்க !

மேலும் படிக்க :

சர்தார் உத்தம் - உலகத்தரம் !


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms