450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி
என்று இன்று அழைக்கப்படுகிற கிரகம் 7927 மைல் விட்டமுள்ள மிதக்கும் பாறை .இந்தப்பாறையில் கடல்கள் உருவாக 100
கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.350
கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் முதல் உயிரினம்
தோன்றியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது . பூமியில் எவ்வாறு உயிரினம் தோன்றியது
என்பது குறித்த ஆராய்ச்சி இன்று வரை தொடர்கிறது .சமீபத்தில் கூட சில ஆராய்ச்சியாளர்கள் ,செவ்வாய் கிரகத்திலிருந்து பிரிந்து வந்த ஒரு பாறை
பூமியின் மீது மோதியதால் தான் உயிரினம் தோன்றியது என்று தெரிவித்துள்ளனர். இப்படித்தான் உயிரினம்
தோன்றியது இதுவரை அழுத்தமாக யாராலும் சொல்ல முடியவில்லை .உண்மையான காரணம் இயற்கை
மட்டுமே அறியும் .
பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் முதலில் தோன்றின .பரிணாம
வளர்ச்சியின் காரணமாக அடுத்ததாக தாவரங்கள் தோன்றின.பரிணாம வளர்ச்சி என்பது
உயிரினங்களின் மரபணுக்களில் தேவை, சூழல்,
தன்னெழுச்சியான நிகழ்வுகள் சார்ந்து தொடர்ச்சியாக நிகழும் மாற்றங்கள் காரணமாக
உயிரினங்களின் தகவமைப்புகளில் ஏற்படும் மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லலாம் .இந்த
மாற்றம் நிகழ கோடிக்கணக்கான
வருடங்கள் தேவைப்படுகின்றன .உயிரினங்களின் உருவாக்கத்தில் தாவரங்களின் தோற்றம் முக்கியமான நிகழ்வு .
பூமியின் ஆதார சக்தியான சூரியஒளியைப் பயன்படுத்தி காற்றில் உள்ள கார்பன் டை
ஆக்சைடு மற்றும் நிலத்தில் உள்ள தண்ணீர்
உதவியுடன் ஒளிச்சேர்க்கை நடைபெற்று தங்களுக்குத் தேவையான உணவைத் தாங்களே தாயாரித்துக்கொள்வதுடன்
ஆக்ஸிஜன் வாயுவையும் தாவரங்கள் வெளியிடுகின்றன .
மேலும் படிக்க :
அடுத்ததாக நீர் வாழ்வன ,நில வாழ்வன , நீர் நில வாழ்வன , பறப்பன , ஊர்வன ,நடப்பன என்று
தாவரங்கள் வெளியிடும் ஆக்ஸிஜனை உயிர்மூச்சாக கொண்டு உயிர்வாழும் உயிரினங்கள்
தோன்றின . முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் உயிரினங்களிருந்து பரிணாம வளர்ச்சியின்
காரணமாக குட்டி போட்டு பால் கொடுக்கும் உயிரினங்களான பாலூட்டிகள் 6 கோடி
ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின.அந்தப் பாலூட்டி இனங்களில் ஒன்று தான்
குரங்கிலிருந்து உருவான மனித இனம் . மனித இனம் ஆப்பிரிக்காவில் தோன்றியது . மனித
இனத்தில் முதலில் தோன்றியது பெண் தான் . குரங்கிலிருந்து முழு பரிணாம வளர்ச்சி
அடைந்து மனிதனாக மாறியது 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான்.
அடர்ந்த ஆப்பிரிக்கக் காடுகளில் பல வகை குரங்குகள் வாழ்ந்து வந்தன . வெயிலும்
வெப்பமும் மிகுந்த அந்தச் சூழலில் மற்ற குரங்கினங்களால் விரட்டப்பட்ட குரங்கினம் தான்
பின்னாளில் மனிதனாக மாறியது . மற்ற விலங்குகளுக்கு இருப்பது போன்ற எந்தவித
சிறப்புத் தகுதிகளும் இல்லாத அந்த குரங்கினத்தால் அந்தச்சூழலில் வாழமுடியவில்லை .
சுற்றிலும் இருந்த
சிங்கம்,சிறுத்தை,பாம்பு ,கழுகு போன்றவற்றிடமிருந்து தப்பிப்பதே பெரும்
போராட்டமாக இருந்தது . எண்ணிக்கையில் குறைவாக இருந்த அந்த மனிதனாக மாறப் போகிற
குரங்கினம் அழிந்து போகும் ஆபத்துக்கு உள்ளாகி "அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள்
(Endangered
Species) " பட்டியலில்
சேர்ந்தது .இன்று அதே குரங்கினம் பல உயிரினங்களை Endangered Species ஆக மாற்றிக் கொண்டிருப்பது தான்
இயற்கையின் விளையாட்டு .
இயற்கைக்கு இரக்கம் என்பதே துளியும் கிடையாது . " திறமையிருந்தால் பிழைத்துக்கொள், இல்லையேல் அழிந்து போ " என்ற Survival
of the Fittest ( வலுத்தது நிலைக்கும் ) மட்டுமே இயற்கையின் ஒரே விதி . இந்த
விதிக்கு உட்பட்டு மிகத் திறமையாக 4 லட்சம் ஆண்டுகளாக இயற்கையின் விளையாட்டில்
பங்குபெற்றுள்ள இனம் தான் மனித இனம் . இந்த விளையாட்டில் மனிதன் என்று
தோற்கிறானோ அன்றே அழிந்துவிடுவான் . ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து உயிர் பிழைப்பதற்காக
வெளியேறிய குரங்கினம் மரக்கிளையில் தொங்கியபடி நடந்த பழக்கத்தில் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தது . பெரிய
குரங்கினங்களைச் சார்ந்து வாழ்ந்த பழக்கத்தில் விட்டுக்கொடுத்து அனுசரித்து
கூட்டமாக வாழப் பழகிக் கொண்டன .விதவிதமான பழங்களைத் தேடித் தின்ற பழக்கத்தில்
(ஓ..அந்தப் பழக்கத்துல தான் இன்றும் மனிதன் விதவிதமான உணவுகளைத் தேடித்தேடி
தின்கிறானோ ?) மாறுபட்ட நிறம் ,மணம், சுவை உணரத் தெரியும் . தங்களை பூமியில் நிலைநிறுத்திக்கொள்ள
இந்தத் திறமைகள் மட்டும் போதவில்லை . ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே பிழைக்க
முடியும் என்ற நிலை உண்டானது .
எதிர்பாரதவிதமாக அந்த அதிசயமும் நிகழ்ந்தது .இந்தப் பூவுலகில் கோடிக்கணக்கான
உயிரினங்கள் வாழ்கின்றன .இவற்றின் ஒரே பிறவிப்பயன் இனவிருத்தி தான். மற்ற
மிருகங்கள் வருடத்தில் சில வாரங்கள் மட்டும்,பருவகாலத்தில் இனம் சேர்ந்து தங்கள்
இனத்தைப் பெருக்கும் .இதற்கு நேர் மாறாக காலம்,நேரம் ,பருவம்,உருவம் கருதாமல் வருடத்தின்
முன்னூற்றி அறுபத்தைந்தே கால் நாட்களும் தாராளமாக உறவு கொண்டு தங்களது இனத்தை
பன்மடங்காக பெருக்கி காட்டியது ( இன்றும் பெருக்கிக் கொண்டே தான் இருக்கிறோம் )
மனித இனம் .
இயற்கையில் ஒரு வட்டம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறது . மற்ற பெரிய
குரங்குகளாலும் விலங்குகளாலும்
அடித்துவிரட்டப்பட்ட மனித இனம் இன்று அனைத்து விலங்குகளையும் அடித்து
விரட்டுகிறது ,ஏன் சக மனிதனையும் விட்டு வைக்கவில்லை . உயிர் பிழைத்திருக்க தான்
வாழ்ந்த சூழலைவிட்டு இடம் பெயர வேண்டிய கட்டாயத்தை எல்லா விலங்குகளுக்கும்
ஏற்படுத்திய பெருமை பெற்றது ,மனித இனம் .மற்ற விலங்குகள் மனிதனுக்குச் செய்ததை
இன்று மனிதன் மற்ற விலங்குகளுக்குச் செய்கிறான் .
மனிதனுக்கு முன்பு வாழ்ந்த எந்த உயிரினமும் பூமியை இந்த அளவிற்கு அக்குவேராக
ஆணிவேராக அலசி ஆராயவில்லை . பிறந்தோமா ,உணவைத் தேடித் தின்றோமா ,இனவிருத்தி
பண்ணினோமா ,செத்தோமா என்று இருந்தன . பூமியில் என்னென்ன எங்கெல்லாம் இருக்கிறது ,
என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன ,தனது இனம் எங்கெல்லாம் இருக்கிறது என்ற எந்தவித
ஆராய்ச்சியிலும் இறங்கவில்லை .பூமியைத் தாண்டியும் யோசித்து ஆகாயத்தையும் அடைய
நினைக்கவில்லை .காரணம், மனிதனைப் போல உயிர் பிழைத்திருப்பதற்கு மிக நீண்ட தொலைவு
பயத்துடன் பயணிக்க வேண்டிய தேவை அவற்றிற்கில்லை .அவை இருந்த இடத்திலேயே எல்லாம்
கிடைத்தன ,அதானால் பெரிதாக எதையும் யோசிக்கவில்லை .மனிதனின் நிலை அப்படி அல்ல ,ஒவ்வொரு விசயத்திற்கும் போராட வேண்டிய கட்டாயம் இருந்தது ,இன்றும் இருக்கிறது .
மனிதன் இன்றும் ஒரு நாடோடி தான் ,பணம் ,பொருளுக்காகவும் ,உயிர்
பிழைத்திருப்பதற்காவும் , ஊர் ஊராக ,நாடு நாடாக சுற்றி அழைகிறான் .மற்ற உயிரினங்களுக்கும்
,வளங்களுக்கும் மனிதன் எதிரி என்ற நிலை போய் மனிதனுக்கு மனிதனே எதிரி என்ற நிலை
உண்டாகிவிட்டது போல் தோன்றினாலும் , இயற்கையைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி , நல்லது
கெட்டது , சரி தவறு , கதாநாயகன் வில்லன் என்ற எந்தப்பாகுபாடும் இல்லை . மனிதனைப்
போல அறம் சார்ந்த வாழ்வை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே ஒவ்வொரு விசயத்திலும்
அறத்தை மீறும் வழக்கமும் இயற்கையில் இல்லை . " வலுத்தது நிலைக்கும் " - இது ஒன்று மட்டும் தான் இயற்கையின் ஒரே அறம் . இயற்கை
,அன்று ஆப்பிரிக்கக் காடுகளில் மனிதனுக்காகவும் கவலைப்படவில்லை ,இன்று மனிதனால்
பாதிக்கப்படும் மற்ற உயிரினங்களுக்காகவும் கவலைப்படவில்லை . இயற்கையின் முன் எல்லா உயிரினங்களும் சமம் தான் .
ஒரு சுழற்சி எங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது . பிரபஞ்சத்தில் இருக்கு
இல்லை ,இல்லை இருக்கு தான் தொடர்ந்து நிகழ்கிறது . பால்வீதியில் பெரிய பாறைகளும் ,
நட்சத்திரங்களும் எதிலாவது மோதி வெடித்துச் சிதறித் தூள் தூளாக மாறுகின்றன .
நாளடைவில் சிதறிய துகள்கள் மீண்டும் இணைந்து நட்சத்திரமாகவோ பாறையாகவோ மீண்டும்
மாறுகின்றன . இது பால் வீதியில் தொடர்ந்து நிகழ்கிறது ,இது பிரபஞ்சத்திற்கும்
பொருந்தும் .அறிவியலின்படி சூரியனிலிருந்து தோன்றியது தான் பூமி . பூமியின் ஆதார
சக்தியும் சூரியன் தான் . சூரியஒளி பூமியில் விழாவிட்டால் பூமியின்
இயக்கமே நின்றுவிடும் சூழல் உருவாகிவிடும் . பூமியில் ஒளிச்சேர்க்கை
நடைபெறாவிட்டால் தாவரங்கள் அழிந்துவிடும் . தாவரங்கள் அழிந்துவிட்டால் ஆக்ஸிஜன்
கிடைக்காது . ஆக்ஸிஜன் இல்லையென்றால் எல்லாம் காலி . சூரியனின் அழிவு தான்
பூமியின் அழிவும் , சூரியன் இருக்கும் வரை பூமியும் இருக்கும் . சூரியனிலிருந்து உருவான பூமி ஒரு நாள் சூரியனை அடையும் . அதுவரை மனிதன்
இருப்பானா எனபது சந்தேகமே !
பூமியில் வாழும் மற்ற
உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள்
பற்றியோ ,இழப்புகள் பற்றியோ
அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன
.மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை . எந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும்
இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை .
தாவரங்கள், தங்கள் தேவைக்கு
மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ
பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன
. நாளைக்கு
என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கமும் அவற்றுக்கு இல்லை
. இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா
உயிரினங்களுக்கும் இருக்கிறது .
மனிதனின் இந்த நம்பிக்கையின்மைக்கும் இயற்கையே காரணம் . பூமியில்
கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்தன ,வாழ்கின்றன ,வாழும் (சூரியன் இருக்கும் வரை
).உயிரினங்கள் அழிவதும் ,புது உயிரினங்கள் தோன்றுவதும் பூமியில் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது . இதை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது .இது இயற்கையின் ஒரு
அங்கம் .மனிதனின் செயல்பாடுகள் காரணமாக பூமியெங்கும் லட்சக்கணக்கான உயிரினங்கள்
அழிவைச் சந்தித்து வருகின்றன .இயற்கை , நம்மை வைத்தே இவ்வளவு உயிரினங்களை
அழிக்கிறதே, நம்மை அழிக்க என்னவெல்லாம் செய்யும் என்ற பயம் தான் ,இயற்கையின் மீதான
நம்பிக்கையின்மைக்குக் காரணம் . அதானால் தான் தொடர்ந்து இயற்கைக்கு எதிராக செயல்பட்டு, இயற்கையின் செயல்கள் அனைத்தையும் செயற்கையாக செய்து பார்த்து இயற்கையை வெல்ல நினைகிறான் . மனிதனும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்பதை உணர மற(று)க்கிறான் . பூமியில் மனித இனமும் அழிவது உறுதி . எப்போது என்பது தான் தெரியவில்லை .
பரிணாம வளர்ச்சி இன்றும் நிகழ்ந்து கொண்டிருப்பது உண்மையென்றால்
மனிதனிலிருந்து இன்னொரு உயிரினம் கண்டிப்பாக தோன்றியே தீரும் .குரங்கினத்தை
குரங்கே ஒடுக்கியதால் மனிதன் தோன்றினான் .மனிதயினத்தை மனிதனே ஒடுக்குவதன் மூலம்
யார் உருவாகப் போகிறார் என்று தெரியவில்லை . ஆறறிவுடன் ஒன்று சேர்ந்து ஏழறிவுள்ள
உயிரினம் உருவாகலாம் .எல்லாம் காலத்தின் கையில் . வலுத்தது நிலைக்கும் !
இந்தக் கட்டுரை " குறி " சிற்றிதழில் வெளிவந்துள்ளது .
இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.
இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை
kurimagazine@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
இந்தக் கட்டுரை " குறி " சிற்றிதழில் வெளிவந்துள்ளது .
தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .
சந்தாதாரர் ஆக:
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .
சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941
இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.
இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை
kurimagazine@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
மேலும் படிக்க :
சூரியன் - உலக சக்திகளின் மையம்
ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !
....................................................................................................................................................................
ரிமோட் கன்ரோல் வாழ்க்கை !
....................................................................................................................................................................
0 comments:
Post a Comment