Friday, August 30, 2013

மதுவும் மனிதனும் !

மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது .மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது .நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் . மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான் .

' நாகரீகமும் புளிக்கவைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ' என்றார் ஓர் அறிஞர் . காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான் . அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று . அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானம். பீர் . முளைவிட்ட தானியத்தில் தண்ணீரை ஊற்றி ,சுடவைத்து புளிக்கவைத்தபோது பீரின் சுவை இன்னும் கூடி வெறித்தன்மையும் அதிகமாகியது ( பீர் தான் மனிதன் கண்டுபிடித்த முதல் பானம் என்பது எனக்கெல்லாம் ஆச்சரியமானது ).

 பீருக்கு அடுத்தபடியாக மனிதன் கண்டுபிடித்த பானம் வைன் .பழச்சாறைப் புளிக்கவைத்துக் கிடைப்பது வைன் . வைனைக் காய்ச்சி வடிகட்டினால் கிடைப்பது பிராந்தி .பீரைக் காய்ச்சி வடிகட்டும்போது கிடைப்பது விஸ்கி .கரும்புச்சக்கையிலிருந்து வீரியமிக்க மது செய்ய்லாம் என்பதை 1657 -ல் ரம்புல்லியன் என்பவர் கண்டுபிடித்தார் . குடித்தவுடன் வெறிக்கச் செய்யும் அந்த மதுவின் பெயர் ரம் ஆனது .அடிமைகளைப் பிடிப்பவர்களுக்கு ரம் விலையாகத் தரப்பட்டது . ரம்மை உற்பத்தி செய்யும் அடிமைகளுக்கு சம்பளமும் ரம் .இப்படி மது உலகம் முழுக்க ஆளத் தொடங்கியது .

எத்தியோப்பியாவில் ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது சில ஆடுகள் ஒரு செடியின் காய்களைத் தின்று விட்டு துள்ளிக் குதிப்பதை அவதானித்தான் . அவனும் அந்த விதைகளைத் தின்று பார்த்தபோது புத்துணர்ச்சி உண்டானது .மனிதனை சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இயங்கவைக்கும் காபி பிறந்த கதை இது . 4700 ஆண்டுகளுக்கு முன்னர் சீனப் பேரரசர் ஷென் நுங் காட்டிலே தண்ணீர் கொதிக்கவைத்துக் கொண்டிருந்த போது சில இலைகள் காற்றில் அடிபட்டு நீரில் விழுந்தன . அந்த நீரை அரசர் பருகியபோது புத்துணர்வு பெற்றதுபோல உணர்ந்தார் . அப்படிப் பிறந்தது தான் தேநீர்.

சீனாவின் தேயிலை ஆட்சியை முறியடிக்க பிரிட்டன் முடிவு செய்தது . இந்தியாவில் அதை எங்கே வளர்க்கலாம் என ஆராய்ச்சி செய்தபோது அஸ்ஸாமில் ஏற்கனவே தேயிலை காட்டுச்செடியாக வளர்ந்தது தெரியவந்தது . இந்தியாவில் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது . இன்று உலக அளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியா முதல் இடம் ( 23% ) .இவ்வாறு தேயிலை உற்பத்தி செய்ய எவ்வளவு காடுகளை அழித்தார்களோ ? 1886 ம் ஆண்டு பெம்பர்டன் என்ற அமெரிக்கர் தலைவலிக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் . அவருடைய முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தாலும் அவர் தளராது பல்வேறு விதமான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார் . ஒரு நாள் ,தென் அமெரிக்காவில் கிடைக்கும் கொக்கோ இலை
 (உண்ணும் போது மயக்கம் தருவது ), மேற்கு ஆப்ரிக்காவின் கோலாநட் ( இதுவும் போதைப் பொருள் தான் ) இவை இரண்டையும் சேர்த்து ஒரு பழுப்பு நிற பானத்தைத் தயாரித்தார் .அது தான் ' கொக்கோ கோலா '.

பீர்,வைன்,பிராந்தி,விஸ்கி,காபி,தேநீர் ,கொக்கோ கோலா இந்தப் பானங்களின் கதையைப் பற்றி தமிழ் மொழியின் ரசவாத எழுத்தாளர் அ.முத்துலிங்கம் ,ஆகஸ்ட் "உயிர்மை " மாத இதழில் 'ஆறு கோப்பைகள் ' என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து சில பகுதிகளை மேலே குறிப்பிட்டுள்ளேன் . அ.முத்துலிங்கம் அவர்களின் எழுத்துச் சுவை அவ்வளவு ருசியானது . அந்தச் சுவையை நீங்களும் ருசிக்க அவரது எழுத்துக்களை வாசியுங்கள் ; இடைவிடாமல் ஆச்சரியங்களும் ,புதுமைகளும் கிடைத்துக் கொண்டே இருக்கும் .

 உலகில் மனிதன் வாழும் அனைத்து இடங்களிலும் பல விதமான பானங்கள் அருந்தப்படுகின்றன. அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அந்த பானங்களின் தன்மை இருக்கும் . உலகமயமாக்கல் காரணமாக இன்று எந்தப் பானமும் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கிறது ;அருந்தப்படுகிறது .வலுத்தது நிலைக்கும் என்பது இந்தப் பானங்களுக்கும் உண்டு . ஆங்கிலேயர் இந்தியாவின் மீது படையெடுக்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் இவ்வளவு பானங்கள் இருந்திருக்காது .

மனிதன் குழுவாக வாழ ஆரம்பித்த போதே மதுவின் பயன்பாடு தொடங்கிவிட்டது .காலம் சுழல சுழல மனிதனின் பெருக்கத்தைப் போல மதுவும் பெருகிவிட்டது .புளிக்க வைக்கும் எந்த உணவிற்கும் ஒரு வித போதை இருக்கும் போல .இரவில் மிச்சமான சாதத்தில் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலையில் எழுந்து அதைக் குடித்தால் கள் குடிப்பது போல் இருக்கும் . ஆனால் , இது நம் வயிற்றுக்கு மிகவும் நல்லது .சென்னைப் பகுதியில் சுண்ட கஞ்சி என்ற பானம் ,இவ்வாறு புளிக்க வைப்பதன் மூலமே தயாரிக்கப்படுகிறது .

இன்றைய சூழலில் கலாச்சார பானங்கள் அழிவைச் சந்தித்து வருகின்றன . கலாச்சாரக் குடிதாங்கிகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லை . ஜாதி ,மதம் மட்டும் முக்கியமாய்த் தெரிகிறது இந்தக் குடிதாங்கிகளுக்கு . தமிழ்நாட்டில் அருந்தப்பட்ட உள்ளூர் பானங்களுக்கு மாற்றாக விதவிதமான நிறங்களில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் அயல்நாட்டு குளிர் பானங்கள் ,மதுபானக் கடைகளில் விற்கப்படும் பலவிதமான மதுபானங்கள் (இலவசங்களின் வருமானம் ) மட்டுமே மக்களுக்கு கிடைக்கின்றன . மிஞ்சி நிற்கும் சில கலாச்சார உள்ளூர்  பானங்கள் ஜிகர்தண்டா,நன்னாரி சர்பத்,பன்னீர் சோடா ,பொவண்டோ ,காதலோ....இளநீர் ( பணப் பேய்களிடமிருந்து தப்பித்த ஒரே பானம் , விலை மட்டும் இடத்திற்கு இடம் மாறுபடுவதால் மக்கள் தொடர்ந்து இளநீர் குடிக்கத் தயங்குகின்றனர் .விலை எவ்வளவாக இருந்தாலும் தமிழகத்திற்கென்று பொதுவான விலை நிர்ணயிக்கலாம் !) . தண்ணீர் ( தண்ணீரையும் பானங்கள் வரிசையில் சேர்க்கும் நிலைக்கு கொண்டுவந்துவிட்டார்கள், படுபாவிகள் ! பெட்ரோல் ,டீசல் போல தண்ணீரையும் மாற்றி விட்டார்கள் .அடுத்த பெரிய வணிகம் தண்ணீர் வணிகம் தான் . இன்று எண்ணைக் கிணறு வைத்திருப்பவன் பெரிய ஆள்,நாளை தண்ணீர்க் கிணறு வைத்திருப்பவன் தான் பெரிய ஆள் ).

மதுபானங்கள் வரவிற்கு முன்பு கள் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்துள்ளது .இரண்டு விதமான கள் இருக்கின்றன .தென்னங்கள் மற்றும் பனங்கள் . இயற்கையான மதுபானங்கள் என்று இவற்றை அழைக்கலாம் . அரசே மதுக்கடைகளை நடத்தும் சூழலில் கள் இறக்க தடை இருப்பது முரணான விசயமாக இருக்கிறது .கையில் கிடைப்பதை எல்லாம் போட்டு சாராயம் காய்ச்சுவார்கள் போல , பல நேரங்களில் நல்ல சாராயமாக இருப்பது மரணங்கள் நிகழும் போது வெளிச்சத்திற்கு வந்து கள்ளச்சாராயமாக மாறிவிடுகிறது . இன்று சாராயம் காய்ச்சுவது முற்றிலும் தடுக்கப்பட்டது போலவே தெரிகிறது .இன்று சாராயத்தினால் மரணங்கள் நிகழ்வது நின்று போனாலும் மதுவினால் சாராயத்தை விட அதிக மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன .     

எந்த பானமும் பானமாக இருக்கும் வரை எந்தப் பிரச்சனையும் இல்லை ,அது பழக்கமாக மாறும் போது தான் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது .எந்த பானமும் அது தேநீர் ,காபியாக  இருந்தாலும் சரி மதுவாக இருந்தாலும் சரி அளவோடு அருந்தினால் எந்தப் பாதிப்பும் இல்லை . தேநீர் மற்றும் காபி அதிகமாக அருந்துவதால் உண்டாகும் பாதிப்புகளை விட மது அதிகமாக அருந்துவதால் உண்டாகும் சமூக பாதிப்புகள் அதிகம் .

ஒரு மனிதன் புகைப்பிடிப்பதால் அவனுக்கு மட்டுமே பாதிப்பு அதிகம் ,மற்றபடி அந்தப் புகையைச் சுவாசிக்கும் வேறு மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கவே செய்யும் .ஆனால் புகைப்பிடிப்பதால் பெரிய அளவில் சமூகப்பாதிப்புகள் இல்லை ( அதிக பணத்தை புகைப்பிடிக்க செலவு செய்வதால் குடும்ப பாதிப்புகள் இருக்கலாம்). மதுவினால் குடிப்பவருக்கு உடல்ரீதியான பாதிப்புகள் அதிகம் .அதைவிடவும் அந்த பழக்கத்தால் ஏற்படும்  சமூகப் பாதிப்புகள் அதிகம் .அடுத்த மனிதனைப் பாதிக்காத எந்தப் பழக்கமும் தவறில்லை .அடுத்த மனிதனைப் பாதிக்கும் எந்தவொரு செயலுக்கும் சமூக அமைப்பில் இருக்கும் மனிதன் பதில் சொல்லியே ஆக வேண்டும் .

சமீப காலமாக மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகரித்துள்ளன . அதுவும் தமிழகத்தில் நிலமை மிகவும் மோசம் . மதுவை வணிகரீதியாக பயன்படுத்துவதன் விளைவு தான் இது . உணவுவிடுதி போல தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. சாராயத்தை ஒழிப்பது தான் நோக்கம் என்றால் ஊருக்கு ஒரே ஒரு டாஸ்மாக் கடை திறக்க வேண்டியது தானே. இதில் ஒவ்வொரு மாவட்டமும் மாதம் இவ்வளவு ரூபாய்க்கு மது விற்க வேண்டும் என்ற மாத இலக்கு வேறு. எல்லா வகையிலும் மது குடிப்பதை ஊக்கப்படுத்திவிட்டு " மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு " என்று பிரச்சாரம் செய்கிறார்கள் .

மதுவை யார் குடிக்கலாம் ? வயது வந்தவர்கள் தான் குடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது . தொலைக்காட்சியிலும் ,சினிமாவிலும் மதுக் குடிப்பதை நேரடியாக காட்டுகிறீர்கள் .இதை தொடர்ந்து பார்த்து வளரும் குழந்தைகள் 18 வயதிற்கு முன்பே மது குடிக்கப் பழகிவிடுகின்றனர் .ஆண் ,பெண் உடலை ,உடல் உறவை ஒரு வரம்பிற்குள் தான் காட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது . மதுக்குடிப்பதைக் திரையில் காட்டுவதில் எந்தக் கட்டுப்பாடும் ("மது உடல் நலத்திற்கு தீங்கானது " என்ற ஒரு வரி போடுவதைத் தவிர ) கிடையாது . மது என்ன எல்லோரும் குடிக்கும் பானாமா? "வயது வராதவர்கள் பார்க்க வேண்டாம் " அடைமொழியுடன் ஆண் பெண் உடலுறவு காட்சியை நேரடியாக திரையில் காட்ட வேண்டியது தானே .

நாட்டில் கற்பழிப்பு அதிகமாக நடக்கிறது என்ற காரணத்திற்காக வீதிக்கு வீதி டாஸ்மாக் கடைகளைப் போல சிவப்பு விளக்கு பகுதியை உருவாக்க வேண்டியது தானே .இதிலும் வருமானம் கிடைக்கும் இதை வைத்து இன்னும் மக்களை சோம்பேறியாக்க ரேசன் கடைகளில் உணவுப் பொருளுடன் மாதம் மாதம்  ஒரு தொகையும் கொடுக்கலாம் .நம்ப முடியாது ,ஒரு வேளை இது நடந்தாலும் நடக்கும் ! அவ்வளவு கேடு கெட்ட அரசியல்வாதிகள் நம் நாட்டில் இருக்கின்றார்கள் . அதிகளவு மது விற்பதை சாதனை என்று கொண்டாடும் ஜென்மங்கள் அல்லவா நம் அரசியல்வாதிகள் .

வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தான் .ஒவ்வொருவருக்கும் இருப்பது ஒரு வாழ்க்கை தான் அதை எல்லாவிதத்திலும் கொண்டாட எல்லொருக்கும் உரிமை உண்டு .இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை .மது என்பது கொண்டாட்டத்திற்கான பானம் . மது அருந்துவதில் எந்தத் தவறும் இல்லை . மனித இன வரலாறு முழுவதும் மதுவிற்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது .இன்றும் உணவின் போது உட்கொள்ளும் பானாமாக மது உலகெங்கும் பல நாடுகளில் ஆண்கள் மற்றும் பெண்களால் அருந்தப்படுகின்றன . ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் மதுக்கடைகள் இருக்கின்றன மதுவினால் உண்டாகும் சின்ன சின்ன தகராறுகளும் ( கிரிக்கெட் வீரர்கள் (வீரர்கள்!) அவ்வப்போது குடிபோதையில் தகராறு செய்து மாட்டிக் கொள்கிறார்கள் ) இருக்கின்றன. ஆனால் , நம் நாட்டைப் போல பெரிய அளவிலான சமூகப்பாதிப்புகள் இருகின்றனவா என்று தெரியவில்லை .  

போதையில் நண்பனைக் கொல்லுதல் , தாய்,தந்தை,மனைவியைக் கொல்லுதல் , பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் கொல்லுதல், வாகனத்தை தாறுமாறாக ஓட்டி தானும் செத்து மற்றவர்களையும் சாகடித்தல் .மற்றவர்களுடன் வீண் சண்டைக்குப் போதல், அதிக குடியால் தன் குடும்பத்தை தவிக்க விட்டு செத்துப் போதல் , குடும்பத்திற்காக பெண் சம்பாதிக்கும் பணத்தையும் புடுங்கி குடித்தல் , குடித்துவிட்டு பொதுமக்களிடமும் தகராறு செய்தல் ;பெண்களைத் தொந்தரவு செய்தல், குடித்துவிட்டு வந்து பொண்டாட்டி பிள்ளைகளை அடித்தல் என்று மது பழகத்தால் உண்டாகும் சமூகப்பாதிப்புகள் நம் நாட்டில் மிகவும் அதிகம் .மற்ற நாடுகளில் மதுவினால் இவ்வளவு பாதிப்புகள் உண்டாகின்றனவா என்று தெரியவில்லை .

பொதுவாக உணவாக இருந்தாலும் மதுவாக இருந்தாலும் நாம் வாழும் சூழலுக்கு எது பொருந்துமோ அதை உட்கொள்வதுதான் நம் உடலுக்கு நல்லது . இன்றைய உலக வணிகமயமாக்கத்தின் விளைவாக எந்த நாட்டு உணவும் ,பானமும் எங்கும் கிடைக்கின்றன .நாம் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் நம்மை வைத்து பணம் சம்பாதிக்க வித விதமான தளங்களில் வித விதமான பொய்களுடன் ஒரு  மாபெரும் கூட்டம் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது .  மது குடித்தல் என்பது சமூகத்திற்கு கேடு உண்டாக்கும் ஒரு பழக்கமாக மாறுவதை தடுக்காமல்  மது குடிப்பதை ஊக்கப்படுத்தும் ஒரு அரசு இருக்கும் வரை சமூகக் குற்றங்கள் அதிகரிக்கவே செய்யும் .

மதுவும் மனிதனும் - பிரிக்க முடியாதவை !

மதுப்பழக்கமும் மனிதனும் - பிரிக்க முடிபவை !

பின்குறிப்பு :

 இந்தக் கட்டுரையும் மதுவைப் போல நீண்ட நாட்களாக ஊர வைத்து எழுதியது தான் .

நன்றி :- அ.முத்துலிங்கம் ,உயிர்மை.

மேலும் படிக்க :

கலாசார விடுதலையே சமூக விடுதலை !

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

சமூகத்தின் மீது விழுந்த அதிகாரத்தின் அடி !
...................................................................................................................................................................

Saturday, August 3, 2013

நல்லவன் கையில் நாணயம் !

தமிழ்  இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை.

 அந்தப் பாடல் :


பாடல் வரிகள் :

நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

அது பொல்லாதவன் பையில் இருந்தால்
எல்லா உயிர்க்கும் பாதகம்
எல்லா உயிர்க்கும் பாதகம்
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான் 
 
இருப்பவன் கொடுத்தால் வள்ளல் என்றாகி
இறந்தும் இறவாதிருக்கின்றான்  
 
பணத்திமிர் கொண்ட மனிதர் நிமிர்ந்திருந்தாலும்
நடை பிணமாக நடக்கின்றான் 
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம்
எச்சிலை போலே பறக்குமடா
 
அச்சடித்திருக்கும் காகித பெருமை
ஆண்டவனார்க்கும் இல்லையடா
ஆண்டவனார்க்கும் இல்லையடா
 
நல்லவன் கையில் நாணயம் இருந்தால் 
நாலு பேருக்கு சாதகம் 

ஓடும் உருலும்
ஓடும் உருலும் உலகம் தண்ணில்
தேடும் பொருளும் தேவைதான்
தேடும் பொருளும் தேவைதான்
 
அதில் மயக்கம் இல்லாமல் அடக்கம் இருந்தால்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் 
அதுவே உயர்ந்த வாழ்க்கை தான்  
 
" லட்சங்கள் முன்னே லச்சியமெல்லாம் எச்சிலை போலே பறக்குமடா ", 
எது உயர்ந்த வாழ்க்கை என்பதற்கு சிறந்த விளக்கம் இந்த வரிகள்," ஓடும் உருலும்
 உலகம் தண்ணில்தேடும் பொருளும் தேவைதான், அதில் மயக்கம் இல்லாமல் 
அடக்கம் இருந்தால்,அதுவே உயர்ந்த வாழ்க்கை தான் "
 
மேலும் படிக்க :
 
எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?  

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது ! 
...................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms