Thursday, April 16, 2015

எக்காலத்திற்குமான கலைஞன் !

இந்த கலைஞனைப் பற்றி ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உலகெங்கும்  இன்றும் எழுதப்படுகின்றன. தொடர்ந்து அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் எடுக்கப்படுகின்றன ,புத்தகங்கள் எழுதப்படுகின்றன .திரைப்படம் எடுக்க கற்றுத்தரும் அனைத்து இடங்களிலும் இந்த கலைஞனின் படைப்புகள் விவாதிக்கப்படுகின்றன .எங்கெல்லாம் திரைப்படம் எடுக்கப்படுகிறதோ, பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த கலைஞனைக் கொண்டாடுகிறார்கள்.பெரியாரையும் ,பாரதியையும் பெற்றதற்கு தமிழ்நாடு பெருமைப்படலாம், காந்தியையும் , அம்பேத்கரையும் பெற்றதற்காக இந்தியா பெருமைப்படலாம். ஆனால், இந்த சார்லி சாப்ளினைப் பெற்றதற்காக உலகமே பெருமைப்படுகிறது .

நிறைய கலைஞர்கள் மொழி,இனம்,மதம்,நாடு இந்த மாதிரியான பிரிவினைகளுக்குள் அடங்குபவர்களாக இருக்கிறார்கள்.அதனால் இந்தப் பேதங்களைக் கடந்து அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. சார்லி சாப்ளின் ,இந்த மாதிரியான பேதங்களுக்குள் அடங்காதவராக இருக்கிறார். பேதங்களைக் கடந்த, சக மனிதர்கள் மீதான அக்கறையை அவரது படைப்புகள் வெளிப்படுத்துக்கின்றன.பொதுவாகவே நாம் கலைஞர்களை ஏன் கொண்டாடுகிறோம் ? ஏன் கொண்டாட வேண்டும் ?

வாழ்வியல் சூழலை ,இயற்கையை ,சக மனிதர்கள் குறித்த பதிவுகளை தங்களின் படைப்புகள் மூலமாக அழுத்தமாக வெளிப்படுத்துபவர்களைத் தான்  கலைஞர்கள் என்று சொல்கிறோம் . நாம் , கலைஞன் என்று கொண்டாடும் ஒரு மனிதனின் படைப்பு, ஏதோ ஒரு விதத்தில் எல்லைகளைக் கடந்து நிறைய மனிதர்களால் கவனிக்கப்படுகிறது .மற்றவர்களின் படைப்பை விட ,கலைஞனின் படைப்பில் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது .இந்த ஒரு கலைஞனைக் கொண்டாடுவதன் வாயிலாக நம்மை நாமே கொண்டாடுகிறோம் . நம்மை நாமே கொண்டாடத் தூண்டுகிற ஒவ்வொரு படைப்பும் உன்னதமே;ஒவ்வொரு மனிதனும் கலைஞனே.

சார்லி சாப்ளினை ஏன்  மீண்டும் மீண்டும் தொடர்ந்து  கொண்டாடுகிறோம் ?  " சார்லி சாப்ளின் " ,இந்தப் பெயரை நினைக்கும் போதோ,  வாசிக்கும் போதோ ,எழுதும் போதோ நம் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவே இருக்கிறது. எந்தவித  பேதங்களுக்கும் இடமளிக்காமல் இந்தக் கலைஞனை அப்படியே நம் மனம் ஏற்றுக் கொள்கிறது .இந்த ரசவாதம் தான் சர் சார்லியின் மாபெரும் சாதனை .சார்லியின் படைப்புகள் , சக மனிதர்கள் மீதான அக்கறையை ,வாழ்வின் எளிய தருணங்களை அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன. அதனால், சார்லி நமக்கு மிகவும் நெருக்கமானவராகி விடுகிறார்.

நாடகக்கலையின் மூலமே மிகச்சிறந்த நடிகர்கள் உலகெங்கும்  தோன்றியுள்ளனர் .தமிழ்நாட்டிலும் சிறந்த நடிகர்களாக இன்று கொண்டாடப்படும் அனைவரும் நாடகக்கலையின் கொடை தான். சாப்ளினும் நாடகக்கலையின் மூலம் கிடைத்தவர் தான் . இதில் சுவாரசியமும் ,சுடும் உண்மையும்  என்னவெனில் ,இவர்களில் யாரும் சிறந்த நடிகர்களாக உருவாக வேண்டுமென்று நாடகக்கலையைத் தேர்ந்தெடுக்கவில்லை . தங்களின் வயிற்றுப்பிழைப்புக்காக நாடகக்கலையைத் தேர்ந்தெடுத்தவர்கள் தான், உலகம் போற்றும் திறமை வாய்ந்த கலைஞர்களாக மாறியுள்ளனர்.

16-ஏப்ரல்-1889 அன்று இங்கிலாந்தில் பிறந்தார், சார்லி சாப்ளின். குழந்தைப்பருவத்தில் வறுமை அவரை வாட்டியது .5 வயதில் தனது அம்மாவிற்குப் பதிலாக முதன் முதலில் நடித்த சாப்ளின், 10 வயதிற்குப் பிறகு நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் .பின்பு ,சிறந்த நடிகராகவும் ,நகைச்சுவை நடிகராகவும் மாறினார். சாப்ளினின் திறமையைக் கண்டடைந்த பிரட் கார்னொ ( Fred Karno ) என்னும் இங்கிலாந்து நாடகக்கம்பெனி அவரை ஒப்பந்தம் செய்து அமெரிக்காவிற்கு ( 19வது வயதில் ) அழைத்துச் சென்றது. 1914-ல் கிஸ்டோன் ஸ்டுடியோ( Keystone Studios )விற்காக முதன் முதலாக திரையில் தோன்றினார் .அதன் பிறகு சார்லி சாப்ளினின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. 1918 -ல் உலகமே கண்டுகொள்ளும் நடிகராக மாறிய சார்லி சாப்ளினின் முதல் முழுநீளத் திரைப்படம் 1921-ல் வெளிவந்த "தி கிட் " . தனது திரைப்படங்களில்  திரைக்கதை,இயக்கம் ,தயாரிப்பு ,நடிப்பு என அனைத்தையும் சாப்ளினே செய்தார் .அவரது பிற அமெரிக்கப் படங்கள் , எ வுமென் ஆப் பாரிஸ் (1923)( நடிகராக நடிக்கவில்லை )  , தி கோல்டு ரஷ்  (1925), தி சர்க்கஸ் (1928),சிட்டி லைட்ஸ் (1931) ,மாடர்ன் டைம்ஸ் (1936), தி கிரேட் டிக்டேட்டர் (1940),மோன்சியர் வெர்டாக்ஸ்   (1947),லைம்லைட் (1952) .

தனது திரைப்படங்களின் மூலம் இடது சார்பு கருத்துக்களை பரப்பி வந்த சார்லி சாப்ளினை " கம்யூனிஸ்ட்"  என்று முத்திரை குத்தி அவரை அமெரிக்காவை விட்டு வெளியேற்ற நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர் FBI அதிகாரிகள்.அமெரிக்காவில் இருந்தாலும் தொடர்ந்து இங்கிலாந்து குடியுரிமையை நீட்டித்து வந்தார், சார்லி சாப்ளின்.1952 -ஆம் ஆண்டு தனது அடுத்த படமான  "  லைம்லைட் "  திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக இங்கிலாந்து சென்றிருந்தார், சாப்ளின்.இது தான் சமயம் என்று   FBI அதிகாரிகள் ,சாப்ளின் மீண்டும் அமெரிக்கா திரும்புவதற்கான நுழைவுச் சீட்டைக் காரணமே ( நேரடியான ) இல்லாமல் ரத்து செய்தார்கள் . அதனால் , அவர் ஐரோப்பாவிலேயே (சுவிஸர்லாந்தில்) தங்கும்படி நேர்ந்தது .  அன்றும் சரி ( சாப்ளின் ) , இன்றும் சரி ( ஸ்னோ டோன் ), அமெரிக்காவிற்கு பிடிக்காதவர்கள் தான் மக்களுக்காக போராடுபவர்களாக  இருக்கிறார்கள் . வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் இன்னும் நிறைய உதாரணங்கள் கிடைக்கும் .அமெரிக்காவை அமெரிக்காவில் பிறக்காத ஒபாமாவே ஆண்டாலும் அமெரிக்கப் புத்தி துளியும் மாறவில்லை . ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையே அடக்கி ஆள நினைப்பது தான் அமெரிக்கப் புத்தி .

சாப்ளின் , ஐரோப்பாவிலிருந்தபடியே படமெடுக்க ஆரம்பித்தார் . அவரது முதல் ஐரோப்பிய  படம் ," எ கிங் இன் நியூயார்க் (A King in New York) (1957) " .  அமரிக்காவால் அவருக்கு நேர்ந்த அனுபவங்களை இப்படத்தின் திரைக்கதையில் புகுத்தி அமெரிக்காவைத் தைரியமாக விமர்சனம் செய்தார் .

அடக்குமுறைக்கு எதிராக தனது கலையின் மூலமே குரல் கொடுக்கும் துணிச்சல் ஒரு உண்மையான கலைஞனுக்கு இருக்க வேண்டும் . அந்தத் துணிச்சல் சார்லி சாப்ளினுக்கு இருந்தது .ஹிட்லரை ,அவர் வாழ்ந்த காலத்திலேயே தனது "தி கிரேட் டிக்டேட்டர் " திரைப்படம் மூலம் விமர்சனம் செய்த சாப்ளினுக்கு இது சாதாரணம் தான் . இன்றைய சூழலை நினைத்துப் பாருங்கள் . ராஜபக்சேவை விமர்சனம் செய்து படமெடுக்க முடியுமா? அமெரிக்காவின் செயல்பாடுகளை நேரடியாக விமர்சனம் செய்ய முடியுமா ? கருணாநிதி, ஜெயலலிதாவை பகடி செய்து படமெடுக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லையே ஏன் ? எவ்வளவோ முன்னேறி விட்டதாகச் சொல்லிக் கொள்கிறோம் .மனித சமுதாயத்தைக் காக்க எத்தனையோ அமைப்புகள் உலகெங்கும் உள்ளன. ஆனாலும் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு தான் அனைத்தும் நடக்கிறது . அப்புறம் எப்படி தற்காலக் கலைஞர்களைக் கொண்டாடுவது ? வேண்டுமானால் சமீபத்தில்,  அமெரிக்காவின் பாதக செயல்களை துணிந்து அம்பலப்படுத்திய  ஜூலியன் அஸாஞ்ஜே  மற்றும் ஸ்நோ டோன் இவர்களை வேண்டுமானால் கொண்டாடலாம் .

அமெரிக்காவை எதிர்ப்பது மட்டும் கலையின் நோக்கமல்ல, மனித சமுதாயத்தின் நலனை கெடுக்கும் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் . அழகியல் மட்டும் கலையின் நோக்கமாக இருக்கக்கூடாது . அழகியலுடன்  அரசியலும் சேர்ந்தது தான் உண்மையான கலைப்படைப்பாக இருக்க முடியும் . சாப்ளின் வெறும் நகைச்சுவைப் படம் மட்டும் எடுத்திருந்தால் எப்போதோ அவரை மறந்திருப்போம் . சாப்ளின் இன்று வரை நம் நினைவில் இருப்பதற்கு அவரது அழகியல் சார்ந்த அரசியலும் ஒரு காரணம் . சாப்ளினிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும் நிறைய விசயங்கள் உள்ளன .

சாப்ளினின் கடைசி மூன்று படங்களான மோன்சியர் வெர்டாக்ஸ்  ,லைம்லைட் மற்றும் எ கிங் இன் நியூயார்க்  சர்வதேச அங்கிகாரத்தைப் பெறவில்லை .அதனால் ,தனக்கு பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த ட்ராம்ப் கதாப்பாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தார் .சாப்ளின் உருவாக்கிய  ட்ராம்ப் ( Tramp ), தொலதொல ஆடையும், தொப்பியும், கைத்தடியும், வேறுபட்ட காலணியும் அணிந்த குள்ள மனிதக் கதாப்பாத்திரம் . சாப்ளின்  ட்ராம்ப் -ஆக தோன்றிய முதல் படம் " கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ் " , கடைசி படம்  "மாடர்ன் டைம்ஸ் ". தனது  பழைய  ட்ராம்ப்  பேசா குறும்சித்திரங்களான, எ டாக்'ஸ் லைஃப் (A Dog's Life) ,சோல்டர் ஆர்ம்ஸ் ( Shoulder Arms) மற்றும் தி பில்கிரிம் (The Pilgrim) ஆகிய படங்களை ஒன்றிணைத்து , இசையமைத்து ,முதல் உலகப்போரின் சில  காட்சிகளையும் இணைத்து தி சாப்ளின் ரிவ்யு (1959) என்ற பெயரில் முழு நீள ட்ராம்ப் படமாக வெளியிட்டார் .சாப்ளினின் கடைசி மற்றும் முதல் கலர் படம் , எ கௌண்டஸ் ஃப்ரம் ஹாங் காங் (1967). இந்தப்படத்திலும் ,எ வுமென் ஆப் பாரிஸ் படத்திலும் மட்டுமே சாப்ளின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை . நகைச்சுவைப் படமான இதில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ,நடிகையான மார்லன் பிராண்டோ வும் சோபியா லாரனும் நடித்திருந்தனர் ,இருந்தும் இப்படம் பெரும் தோல்வியடைந்தது .இந்த எதிர்மறை விளைவால் மனமுடைந்த சாப்ளின் மீண்டும் படமெடுக்க விரும்பவில்லை .1972-ல் சாப்ளினுக்கு " கெளரவ ஆஸ்கார் விருது " அறிவிக்கப்பட்டது .முதலில் அமெரிக்கா செல்லத் தயங்கினார், சாப்ளின், பின்பு சமாதானம் ஆகி 20 வருடங்களுக்குப்  மீண்டும் அமெரிக்கா சென்று விருதைப் பெற்றுக்கொண்டார் .

திரையுலகில் பெரும் புகழ் பெற்றிருந்தாலும் சாப்ளினின் குடும்ப வாழ்க்கை அவருக்கு திருப்திகரமாக இல்லை .வயதில் மிகவும் குறைந்த பெண்களையே சாப்ளின் தொடர்ந்து மணமுடித்தார் . தனது முதல் மூன்று திருமணங்களும் கசப்பான விவாகரத்தில் முடிந்தது .மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சாப்ளினுக்கு விரைவாகவே நரைக்க ஆரம்பித்தது .சார்லியின் 54வது வயதில் 17 வயது ஓனா ஓ'நீலை நான்காவதாக மணமுடித்தார் . ஓனா ஓ'நீல் , சாப்ளினை நன்றாக புரிந்துகொண்டு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார் . இவர்களுக்கு மொத்தம் எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர் .1960களில் இருந்தே சிறு சிறு  உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த  சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் எனும் சார்லி சாப்ளின் 1977 டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்மஸ் தினத்தன்று இந்த மண்ணைவிட்டு மறைந்தார் .

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த கலைஞர் என்று சார்லி சாப்ளினைத் தைரியமாகக் குறிப்பிடலாம் .அரசியலை, வாழ்வியல் சூழலை ,இயந்திரங்களின் செயல்பாட்டை , சக மனிதர்களை, சாப்ளின் அளவிற்கு பகடி செய்த இன்னொருவரை கடந்த ஒரு நூற்றாண்டாக நாம்  கண்டதில்லை .பன்முகத்திறமை உடைய சாப்ளின், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என்று அனைத்து துறையிலும் வெற்றி பெற்றார் .

திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை மிகத்தெளிவாக உணர்ந்திருந்த சாப்ளின் பேசும் படங்கள் வந்த பிறகும் , பேசா படங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார் .சாப்ளினிடமிருந்து அனைத்து இயக்குனர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடமிது . திரைப்படம் என்று வரும் பொழுது மிகவும் முக்கியமாக கவனம் செழுத்த வேண்டிய பகுதி திரைக்கதை . திரைக்கதை மட்டும் சிறப்பாக அமைந்துவிட்டால் போதும் கதையே இல்லாத படங்கள் கூட பெரும் வெற்றி பெறும். இது உலகறிந்த உண்மை ,இருந்தும் நம் தமிழ் திரையுலகில் திரைக்கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை ,காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை . வெறும் கதையை படித்தோ ,கேட்டோ தெரிந்து கொள்ளலாம் .திரைக்கதையை காட்சிகளின் மூலமே வெளிப்படுத்த முடியும் .நிறைய தமிழக இயக்குனர்கள் தங்களையே சுயம்புவாக எண்ணிக்கொண்டு  முற்றிலும் பொருந்தாத , மடத்தனமான காட்சிகளை வைத்தும் , தர்க்கப்பிழைகள் நிறைந்த திரைக்கதையை வைத்தும் படமெடுத்து  நம்மை முட்டாளாக்குகின்றனர் தனக்குத்தெரியாத விசயத்தைப் பற்றிப் படமெடுக்கும் போது ,அந்த விசயம் தெரிந்தவர்களை துணைக்குச் சேர்த்துக்கொண்டு திரைக்கதையெழுதினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள் .தமிழ் திரைப்பட இயக்குனர்களுக்கு ஒரு வியாதி உண்டு . படத்தின் பெயர் பட்டியலில் கதை,திரைக்கதை,வசனம் ,இயக்கம்  என்று தங்கள் பெயரைப் போட்டுக்கொள்ளத் துடியாய் துடிப்பார்கள், அப்படி என்ன சுகம் கிடைக்குமோ தெரியவில்லை .எல்லோரும் சார்லி சாப்ளின் ஆகிவிட முடியுமா என்ன !

தி கோல்டு ரஷ்  ,சிட்டி லைட்ஸ் ,மாடர்ன் டைம்ஸ்  மற்றும் தி கிரேட் டிக்டேட்டர்  ஆகிய நான்கு படங்களும் சார்லியின் சிறந்த படங்கள் என்று பெரும்பான்மையான விமர்சகர்கள் சொல்கிறார்கள். இவற்றில் ஒவ்வொரு படமும் ஒவ்வொருவிதமாக இருத்தாலும் சிட்டி லைட்ஸ் -ம் ,மாடர்ன் டைம்ஸ் -ம் கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் . சார்லி  சாப்ளின் ஒரு பெர்பெக்சனிஸ்ட் (perfectionist) . அவரது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு திருத்தமாக இருக்கும் . எதைக் காண்பிக்கிறாரோ அது அதுவாகவே நமக்குத் தோன்றும் . சாப்ளினின் படங்களில் மாடர்ன் டைம்ஸ்  என்னை மிகவும் பாதித்த திரைப்படம் . இந்தப்படத்தைப் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம் ,முன்பே யாராவது எழுதியிருக்கக்கூடும் .இருந்தாலும் பரவாயில்லை இன்னொரு முறை கூட எழுதலாம்;தப்பில்லை . அந்த அளவிற்கு சிறந்த படமிது .

மாடர்ன் டைம்ஸ் -படம் பற்றி சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தாலும் எதையும் சொல்லப்போவதில்லை.சார்லி சாப்ளின் யார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்த ஒரே ஒரு படமே போதும் . ரசனையான அழகியலுடன் நிறைய காட்சிகள் இந்தப்படத்தில் உள்ளன. நம் எதிர்பார்ப்பை நிறைய இடங்களில் தவிடு பொடியாக்கிவிடுவார் .மனிதர்களின் விநோதமான பழக்கங்களை கேலி செய்வார். எது எதார்த்தம் என்பதை நிலைநிறுத்த கதாநாயக பிம்பத்தை உடைத்தெறிவார் .இயந்திரங்களைப் பகடி செய்வார் . இந்தப்படத்தைப் பற்றி எதையும் சொல்லப்போவதில்லை என்று சொல்லியே இவ்வளவு விசயங்களைச் சொல்லிவிட்டேன் . இந்தப்படத்தை பார்க்காதவர்கள் முதலில் பாருங்கள், பார்த்தவர்கள் மீண்டும் பாருங்கள் .கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் .

மகாத்மா காந்தியின் வரலாற்றை "காந்தி(1983)" என்ற பெயரில் திரைப்படமாக எடுத்த ரிச்சர்ட் அட்டன்பறோ ,சார்லி சாப்ளினின் வரலாற்றையும் "சாப்ளின்(1992)" என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார். ராபர்ட் டவ்னி எனும் நடிகர், சாப்ளினாக மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். முடிந்தால் இந்தப்படத்தையும் பாருங்கள். எல்லா நாடுகளுக்கும் பொதுவான இந்தக் கலைஞனை , அன்றும் கொண்டாடினார்கள்; இன்றும் கொண்டாடுகிறார்கள்;நாளையும் கொண்டாடுவார்கள். ஏனென்றால் சார்லி சாப்ளின் , எக்காலத்திற்குமான கலைஞன் !

குறி எனும் சிற்றிதழில் வெளிவந்த கட்டுரை இது . ஒரு மழை நாளில் ,அவரது பிறந்த நாளில் இதைப் பதிவிடுவதில் மகிழ்ச்சி.

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

தேவதச்சன் - கவிதைகளின் நாயகன் !

M.R.ராதாவின் சிறந்த பேச்சு !

K.A.தங்கவேலு - நகைச்சுவைச் சக்கரவர்த்தி !

...............................................................................................................................................................


Saturday, April 11, 2015

சூரியன் எரியும் கதை !

சூரியனும் சந்திரனும் ஒரு விருந்திற்கு சென்றார்கள்.அங்கே வடை ,பாயாசத்துடன் அறுசுவை உணவு படைக்கப்பட்டது. உணவை விரைவாக வயிறு நிறைய சாப்பிட்ட சூரியன் உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

வீட்டிற்கு வந்த சூரியனைப் பார்த்து அம்மா கேட்டார்,

 " வாடா, பெரியவனே விருந்தெல்லாம் முடிந்ததா ?"

 "முடிந்தது அம்மா ! ,இது போன்ற உணவை இதற்கு முன்பு உண்டதில்லை "

"எங்கடா மகனே எனக்கு உணவு ?"

சூரியன் மேலும் கீழும் விழித்தான்.
அப்போது சந்திரனும் வீடு வந்து சேர்ந்தான்.
சந்திரனிடமும் அதே கேள்விகளை அம்மா கேட்டார் .

"வாடா, சின்னவனே விருந்தெல்லாம் முடிந்ததா?"

"ஆமாம், அம்மா !"

"எங்கடா மகனே ,எனக்கு உணவு?"

"இலையை விரியுங்கள், அம்மா!"

"எதுக்குடா ?"

"முதலில் இலையை விரியுங்கள் ,பிறகு சொல்கிறேன் " என்றான் சந்திரன்.

வீட்டின் முன்புறத்தில் இருந்த வாழை மரத்தில் ஒரு இலையை அறுத்து வந்து விரித்தாள் ,அம்மா.

தனக்கு படைத்த உணவில் பாதியை எடுத்து வைத்துக் கொண்டு மீதியை உண்ட சந்திரன்.அந்த பாதி உணவை இலையில் வைத்தான்.பசியுடன் அந்த உணவை உண்ட அம்மாவின் வயிறு குளிர்ந்தது.அம்மா , மகன்களைப் பார்த்து

"சூரியனே,பசியால் என் வயிறு எரிந்தது போல நீயும் எரிந்து போ !"

"சந்திரனே , என் வயிறு குளிர்ந்தது போல நீயும் குளிர்ந்து போ !" என்று கூறினார் .

அதனால் தான் சூரியன் எப்போதும் எரிந்துகொண்டு வெப்பத்தையும்  ,சந்திரன் எப்போதும் குளிர்ச்சியையும் தருகிறார்களாம் .

சமீபத்தில் ஒரு டீக்கடையில் ,டீ மாஸ்டர் தனது வாடிக்கையாளரிடம் சொன்ன கதை இது .இந்தக் கதை நாடோடி கதைகள் பிரிவைச் சேர்ந்ததாகவே இருக்கும் என நினைக்கிறேன் . இந்த மாதிரியான அர்த்தமுள்ள வேடிக்கையான கதைகள் நம் வாழ்வை சுவாரசியப்படுத்துகின்றன .

கடந்த ஆண்டிற்கு முன்பு வரை வெப்பத்தை மட்டுமே அதிகமாக உணர்ந்தோம் . ஆனால் , கடந்த ஆண்டிலிருந்து வெப்பத்துடன் சேர்த்து எரிச்சலையும் தாங்க வேண்டியுள்ளது . கடந்த ஆண்டு , அக்னி நட்சத்திரத்திற்கு பிறகும் வெயில் கொளுத்தியது . இந்த ஆண்டு அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் கொளுத்துகிறது எரிச்சலுடன் .  அளவிற்கு அதிகமான வெப்பம் உமிழும் பொருட்களையும், விதவிதமான வாயுக்களை வெளியேற்றும் பொருட்களையும் பயன்படுத்துவது தான் எரிச்சல் அதிகமாவதற்கு காரணமாக இருக்ககூடும் .ஆனாலும் , சூரியன் இல்லாத வாழ்வை பூமியில் கற்பனை கூட செய்ய முடியாது . உலக சக்திகளின் ஆதாரம் சூரியன் தான் .

மேலும் படிக்க :

சூரியன் - உலக சக்திகளின் மையம்

அக்னியையும் தாண்டி ...!

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?
...................................................................................................................................................................


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms