Sunday, January 29, 2012

ராக் அண்ட் ரோல் - சந்திரபாபு நடனம்

1940 ஆண்டுவாக்கில் அமெரிக்காவில் தோன்றிய இசை வடிவம் தான் ராக் அண்ட் ரோல் ( Rock & Roll or Rock 'n' Roll ) . ஆப்பிரிக்க இசையும் அமெரிக்க இசையும் கலந்து தான் " ராக் அண்ட் ரோல் " உருவானதாக சொல்லப்படுகிறது . இந்த இசை வடிவத்தில் முதலில் பியானோ அல்லது  சாக்ஸபோன் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது . பிறகு கிட்டார் முதன்மை இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டது .1960 குப்  பிறகு தான் இந்த இசை வடிவம் பெரிய அளவில் புகழ் பெற்றதாம் . 

1958 ஆம் ஆண்டு வெளிவந்த பதிபக்தி என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளனர் . இந்தப்பாடலை எஸ் .சண்முகசுந்தரம்  மற்றும் ஆர் .கணேஷ் ஆகியோர் பாடியுள்ளனர் . சந்திரபாபு இந்தப்பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார் . என்னை ஆச்சரியப்படுத்திய விசயம் , இந்தப் பாடலை எழுதியிருப்பவர் , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்பது தான் . 

அந்தப்பாடல் :

 பாடல்  வரிகள் : 

1-வது ஆள் : ஒன்… அண்ட்டூ… அண்ட்த்ரீ… அண்ட்போர்
2-வது ஆள் : தைதைதை… தை… தை… தை… தை… தை
1-வது ஆள் : ராக் ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல் (ராக்…
இங்கிலீஷ் டேன்ஸ் ஒன் அண்ட் டூ அண்ட்
இண்டியன் டேன்ஸ் தை… தை… தை… தை…
சைனா டேன்ஸ் சிங் சாங் சிங் சாங்
பர்மா டேன்ஸ் டிங் டாங் டிங் டாங்
லேடி டேன்ஸ் ஜோடி டேன்ஸ்
பாடி பியூட்டிகள் பப்ளி சிட்டிகள்
பாடி ஆடிடும் டேன்ஸ்!

2-வது ஆள் : ஆடினார் அன்றே ஆடினார்
தில்லை அம்பலத்தே நின்று
அரகரனாம் திருநடன சபேசன்
ஆடினார் அன்றோ!
அண்டம் குலுங்கிடத் தொண்டர் நடுங்கிட
நந்தி மத்தளம் எங்கும் முழங்கிட
அரங்கினில் ஆடினார் (அன்றே…)

1-வது ஆள் : ஸார்… ஸார்… ஸார்… டோண்டு ஒரி ஸார்
பார்… பார்… பார்… வேலைகளைப் பார்
பாய்… பாய்… பாய்… படேபடே பாய்
ரார்… டீடி… ராட்டி… டா
கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!
லவ்வுலே மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!
வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…
கலை… கலை… கலை!

2-வது ஆள் : கோபியர் கூடவே காவினி லாடிடும்
குறும்புக்காரன் கோபலன் நந்தபாலன்
குழலோசை கேட்காத குறைசெய்த காது
குறைந்தென்ன வளர்ந்தென்ன
ஒன்றுக்கும் உதவாது!

1-வது ஆள் : ராக் ராக் ராக் அண்ட் ரோல்
ஷேக் ஷேக் ஷேக் அண்ட் ரோல்

" கொம்பிலே பழம்பழுத்துத் தொங்குறதும் கலை!  லவ்வுலே  மனம்மயங்கிப் பொங்குறதும் கலை!  வீதியிலே கர்ணம்போட்டு ஆடுறதும் கலை!
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும்…கலை… கலை… கலை! " என்ன அருமையான வரிகள் .

நன்றி : http://www.pattukkottaiyar.com/site/ .

மேலும் படிக்க :

திண்ணைப் பேச்சு வீரரிடம் !

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே ! 
..................................................................................................................................................................

Saturday, January 21, 2012

நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ?

நியூட்ரினோ என்பது மின்சுமை இல்லாத ஒளியை விட வேகமாக(?) பயணிக்கும் துகள் என்று சொல்லப்படுகிறது . இது , மின்காந்த அலைகள் மற்றும் வேறு எந்தத் துகள்களாலும் பாதிக்கப்படாமல் மிக நீண்ட தூரம் பயணிக்கக் கூடியது . நியூட்ரினோக்கள், இயற்கையான முறையில் சூரியனில் நடைபெறும் வேதியல் மாற்றங்களால் கிடைக்கின்றன . செயற்கையான முறையில் அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் கதிர்கள் மூலமாக அணுவைத் தாக்குவதன் மூலமாகவோ நியூட்ரினோக்களை உருவாக்க முடியும் .ஆனால் , இது மிகவும் கடினம் மற்றும் ஆபத்து அதிகம் . அதனால் , சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களை பிடித்து ஆய்வு செய்யவே உலகெங்கும் நியூட்ரினோ ஆய்வுமையங்கள் அமைக்கப்படுகின்றன . இதுவும் எளிதல்ல .


நியூட்ரினோக்களை ஆய்வு செய்வதன் மூலம் பிரபஞ்சம் உருவான விதத்தையும் , சூரியனின் ரகசியங்களையும் அறியமுடியும் என்று அறிவியல் அறிஞர்கள் நம்புகிறார்கள் . மேலும் இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் . இவர்களால் நம்பிக்கை மட்டுமே தெரிவிக்க முடியும் . ஆனால் , முடிவு எப்போதும் இயற்கையின் கையில் .

மூன்று விதமான நியூட்ரினோக்கள் :
                         Electron நியூட்ரினோ ( ne), Muon நியூட்ரினோ( nm) மற்றும்  Tau நியூட்ரினோ( nt)  என்று மொத்தம் மூன்று விதமான நியூட்ரினோக்கள் இருக்கின்றன .

Neutrino ne nm nt
Charged Partner electron (e) muon
(m)
tau
(t)

1930  ஆம் ஆண்டிலிருந்தே நியூட்ரினோ பற்றிய ஆய்வுகள் தொடங்கி விட்டன . ஆனால் இன்றுவரை பெரிதாக எதுவும் சாதிக்க முடியவில்லை . நியூட்ரினோ துகள்களுக்கு எடை உண்டு என்று மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது .ஜப்பான்ல வச்சிருக்காக ,அமெரிக்கால வச்சிருக்காக அதனால நாமும் ஒன்ன உண்டு பண்ணலாம் என்று நெடு நாட்களாக இந்தியா முயற்சித்து வருகிறது . இதற்கு  முன்பு வடமாநிலத்தில் ஏதோ ஒரு இடத்தில் அமைய இருந்ததும் , நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் அமைய இருந்ததும் இயற்கை ஆர்வலர்களின் பலத்த எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டது . அதனால்   கோலார் தங்க வயலில் நியூட்ரினோ  ஆய்வுமையம் செயல்பட்டு வந்தது . இதுவரை எவ்வளவு பணம் செலவளிக்கப்பட்டுள்ளது ? என்ன கண்டுபித்திருக்கிறார்கள்  ? என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை .


இந்தநிலையில் தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் கரட்டு மலைப்பகுதியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பில் இந்தியன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது . இதற்கு தேவாரம் பகுதி மக்கள் கடந்த ஆண்டே எதிர்ப்பு தெரிவித்தனர் . ஆனால் , பெரிய போராட்டமாக முன்னெடுக்க முடியவில்லை . கண்டிப்பாக ஆய்வு மையம் அமையும் இடத்தில் இயற்கை சமநிலை பாதிக்கப்படும் . இந்தப்பாதிப்பு இன்னொரு " தானே " புயல் போல ஏதோ ஒரு வடிவத்தில் பூமியைப் பாதிக்கும் . இயற்கையின் அடி வலிமையாக மட்டுமே இருக்கும் .
இந்திய மூளைகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்றே வைத்துக்கொள்வோம் . இவர்களை ஜப்பான் அல்லது அமெரிக்காவிற்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து ஆய்வுகளை நடத்தச் சொல்லலாமே . அதை விடுத்து புதிதாக ஆய்வு மையம் அமைப்பதன் மூலம் மக்களின் வரிப்பணம் அதிகளவு விரையமாகப்  போகிறது .மலையைக் குடைவதன் மூலமும் , சுரங்கம் அமைப்பதன் மூலமும் இயற்கை சூழலும் , சுற்றுச்சூழலும் பெருமளவு பாதிக்கப்படும் .


இத்தாலி கரோன் சாஜோ மலையில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகத்தில் கடந்த 2002 ஆம் வருடம் ரசாயனக் கசிவு ஏற்பட்டதன்  விளைவாக  மக்கள் மீதும், காட்டுயிர்கள் மீதும், நிலத்தடி நீர் மீதும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறி, அந்த நியூட்ரினோ ஆய்வகத்தை 2003 ஆம் ஆண்டு இத்தாலி அரசாங்கம் மூடியது.  


அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் தொடர்ந்து இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளில் கவனம் செலுத்துகிறது ஒரு கூட்டம் . இன்று உலகில் கோடிக்கணக்கான ஆலைகள் மற்றும் ஆய்வு மையங்கள்  உள்ளன . ஆலையின் கழிவுகள் நுண்ணுயிரிகளை அதிகம் பாதிக்கின்றன . இயற்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாத கழிவுகளை வெளியிட எந்த அறிவியல் முறையாலும் முடியவில்லை . அதே வேளையில் இயற்கையில் கழிவு என்பதே இல்லை . இயற்கையின் கழிவு மற்றொரு உயிரினத்தின் வளர்ச்சிக்கு ஊட்டமாக மாறுகிறது .  

" இடுப்பு வேட்டிக்கு வக்கில்லையாம் ; இதுல இன்டர்நெட் கனெக்சன் கேட்குதாம் " என்று சுஜாதா வேடிக்கையாக சொன்னது போல, " சோத்துக்கே வழியில்லையாம் (இந்தியாவில்  வாழும் 40 % சதவீத மக்களுக்கு இன்னும் சரியான உணவு கிடைத்தபாடில்லை ) ; இதுல நியூட்ரினோ  ஆய்வுமையம் கேட்குதாம் " .

மேலும் படிக்க :

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 

...................................................................................................................................................................

Saturday, January 7, 2012

ஒற்றையடிப் பாதை !


ரயிலில் பயணிக்கிறேன்
சிறியதும் பெரியதுமாக
நீளமும் குட்டையுமாக
குறுக்கும் நெடுக்குமாக
வழியெங்கும்
ஒற்றையடிப் பாதைகள்
நினைவூட்டுகின்றன
முன்பு நான் நடந்த
ஒற்றையடிப் பாதைகளின்
பாதையோரப் புற்களையும்
நான்கு பனைமரங்களுக்கு
அருகில் இருந்த
ஒரே நுங்கு மரத்தையும்
குளக்கரையையும்
பூவரசமர நிழலையும்
பலமுறை பார்த்த
வேறு வேறு பாம்புகளையும்
முள் தைத்து மிதிவண்டி
பஞ்சர் ஆனதையும்
அடைமழை காலத்தில்
பாதையின்  குறுக்கே இருந்த
ஓடையில் வந்த வெள்ளத்தையும்
தூக்கிபிடித்த பிறகும் கூட
டவுசரின் ஓரத்தை
நனைத்த வெள்ளத் தண்ணீரையும்
ஓடையை ஒட்டியிருந்த
நாவல்மர பழத்தின்
மறக்க முடியாத சுவையையும்
வாழ்க்கையைப் போலவே
பள்ளத்தையும் மேடையும்
கூடவே
ஒற்றையடிப் பாதைகளை
மறந்த என் நிகழ்காலத்தையும் !

மேலும் படிக்க :

நிலவே நீ ஒரு ...!

மெதுவான எளிய வாழ்க்கை !
.................................................................................................................................................................... 

தனிமை !


நீளமான மின் கம்பியில்
ஒரே ரெட்டைவால்குருவி
என்னைப் போலவே !

மேலும் படிக்க :

கவிதை மாதிரி ! 

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !
...................................................................................................................................................................

நிலவே நீ ஒரு ...!


உனது பெயர்
சில ஆண்களுக்கும்
சில பெண்களுக்கும்
உன்னைப்பற்றி எழுதாத
இலக்கியமுமில்லை
அறிவியலுமில்லை
 நீயில்லாவிட்டால்
ஜோதிட உலகமே
இயங்காது
இரவுகள் உனக்கானவை
வளர்ச்சியும் வீழ்ச்சியும்
நிரந்தரமல்ல
கற்றுத்தருவது நீ தான்
வர்ணிக்கப்படுகிறாய்
ஆண் என்றும்
பெண் என்றும்
உண்மையில்
நிலவே நீ ஒரு
திருநங்கை !

மேலும் படிக்க : 

கவிதை மாதிரி !

 நாமெல்லாம் குற்றவாளிகளே !
....................................................................................................................................................................

Sunday, January 1, 2012

கவிஞர்களே இவ்வருஷம் - எழுத்தாளர் சுஜாதா !

( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் )

கவிஞர்களே !  இவ்வருஷம்  குறைத்துக்  கொள்வோம்
                   கவிதைகளில்  தேன்தடவல்  நிறுத்திக்  கொள்வோம்
செவிகளுக்கு  இனிமைதரும்  செய்யுள்  வேண்டாம் 
                   சினிமாவுக்(கு)   எழுதிவரும்  பொய்கள்  வேண்டாம் 
உவமைகளைத்  துப்புரவாய்  நீக்கிப்  பார்ப்போம்
                   உலகத்தைத்  திருத்துவதைப்  போக்கிப்  பார்ப்போம்
சிவபெருமான்,  சீனிவாசர்  முருகன்  மீது
                   சீர்தளைகள் தவறாத கவிகள் போதும் ...

அரசியலில்  மாறுதலைச்  சாட  வேண்டாம்
                  ஆளுநர்கள்,  முதல்வர்களைப்  பாட  வேண்டாம்
பரிசுதரும்  தலைவர்களைத்  தேட  வேண்டாம்
                   பட்டிமன்றம்  கவிராத்திரி  கூட  வேண்டாம்
வரிச்சுமைகள்,  பெண்ணுரிமை,  தமிழின்  இனிமை
                  வாரொன்று  மென்முலைகள்,  வளையல் சப்தம்
முரசறைந்த   பழந்தமிழர்  காதல்,  வீரம்
                   முதுகுடுமிப் பெருவழுதி எதுவும் வேண்டாம் ...

இத்தனையும்  துறந்துவிட்டால்  மிச்சம்  என்ன
                   எழுதுவதற்கு  என்றென்னைக்  கேட்பீர்  ஆயின்
நித்தநித்தம்  உயிர்வாழும்  யத்த  னத்தில்
                  நேர்மைக்கும்  கவிதைக்கும்  நேரம்  இன்றி
செத்தொழியக்  காத்திருக்கும்  மனுசர்  நெஞ்சின்
                  சிந்தனையைக்  கவிதைகளாய்ச்  செய்து  பார்ப்போம்
முத்தனைய *   சிலவரிகள்  கிடைக்கா  விட்டால்
                  மூன்றுலட்சம்  ' ராமஜெயம் '  எழுதிப்  பார்ப்போம் ..!

* ஒரே ஒரு உவமைக்கு மன்னிக்கவும் .
                                                                                                 - சுஜாதா
                                                                                                    14 - 4 -1991
                                                                                                   ஆனந்த விகடன் 

 நண்பர்களே இந்த செய்யுள் அல்லது கவிதை எழுதப்பட்ட வருடத்தைக் கவனிக்கவும் . 1991 !?

நன்றி - ஆனந்த விகடன் .

மேலும் படிக்க :

2011 ம் வருடமும் சாமானியனும் ! 
.....................................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms