Saturday, January 24, 2026

புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் ஒரு சகாப்தம் !


 (12-10-2020) இதுவரையிலுமான 12 பகுதிகளும் பார்த்து முடித்தாகிவிட்டது. தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது ஒரே ஒரு பகுதி தான். மீதி எல்லாம் 'Zee 5' செயலியில் தான். ஆரம்ப பகுதிகள் பார்க்கும் போது பொறுமையை சோதிக்கும் அளவிற்கு அதிக அளவிலான விளம்பரங்கள் வந்தன. இவ்வளவு சிரமபட்டு பார்க்கனுமா என்று கூட தோன்றியது. ஆனால் தொடரைப் பார்ப்பதை நிறுத்தவில்லை.இந்த வாரம் விளம்பரங்களே இல்லை. அதனால் ஒரே மூச்சில் நான்கைந்து பகுதிகள் கூட பார்க்க முடிந்தது.


தீண்டாமையின் கோர முகம் ஒவ்வொரு பகுதியிலும் தோலுரித்து காட்டப்படுகிறது. பீமாக நடித்திருக்கும் குட்டிப் பையன் நிறைய இதயங்களை வென்றுவிட்டார். அவருக்கு தமிழில்  பின்னணி குரல் கொடுத்தவரையும் பாராட்டியே தீர வேண்டும். " பச்சமண்ண என்னா பாடு படுத்தியிருக்கானுக " என்று தொடரைப் பார்க்கும் பெண்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். இதுவரை தொலைக்காட்சி தொடர் பார்க்கும் மக்களுக்கு பழக்கமில்லாத சாதிய ஏற்றத்தாழ்வுகள் இந்தத் தொடரில் காண்பிக்கப்படுகின்றன. பல இடங்களில் மிகவும் அழுத்தமாகவே காட்சிகள் விரிகின்றன. 


கல்வி எவ்வளவு முக்கியம் என்பதையும் கடந்த காலங்களில் சாதியின் பெயரால்  கல்வி எவ்வாறு மறுக்கப்பட்டது என்பதையும் இந்தத் தொடரைப் பார்க்கும் இன்றைய தலைமுறை கொஞ்சமேனும் தெரிந்து கொள்ளும். கல்வி ஒன்று மட்டுமே பிரிவினையை முற்றிலுமாக அழிக்கும். கல்வி ஒன்று மட்டுமே எல்லோரையும் சமநிலைப்படுத்தும். அதனால்தான், சமத்துவத்திற்கு எதிரான  பார்ப்பனியம் புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறது. கல்வியும், வாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்கக்கூடாது என பார்ப்பனியம் விரும்புகிறது. இதை முறியடிப்பது பார்ப்பனியத்திற்கு எதிரான மக்கள் மற்றும் இயக்கங்களின் கைகளில்தான் இருக்கிறது. 


இந்த ஒரு தொடர் எல்லாவற்றையும் மாற்றி விடுமா ? தெரியாது. ஆனால் இத்தொடர் மக்கள், தங்களவில் சிறிதளவிலேனும் மாற நிச்சயம் தயார்படுத்தும். 


நாயகத்துதிபாடலுக்கு எதிரானவர், அம்பேத்கர். ஆனால் அவரது தொடரே நாயகத்துதிபாடல் மனநிலையில் உருவாக்கப்பட்டிருக்கிறதோ என்ற ஐயம் உருவாகும் விதத்தில் தொடர்ந்து காட்சிகள் இடம்பெறுகின்றன. இது ஒன்றே தவிர மற்ற எதுவும் உறுத்தலாக இல்லை. மற்றபடி நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, இசை, வடிவமைப்பு என எல்லாம் சிறப்பாகவே உள்ளன. தமிழில் உரையாடல் எழுதியிருக்கும் தோழர் கவிதா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள் . காட்சிகளுடன் ஒன்றிப் போக வசனங்கள் உதவுகின்றன. நேரடியாக வசனங்கள் எழுதுவதை விட , மொழி மாற்றம் செய்யும்போது , அவர்களின் வாயசைப்பிற்கு ஏற்றவாறு வசனங்கள் எழுதுவது சிரமமானது. ஒரளவு சிறப்பாகவே தோழர் கவிதா பாரதி அவர்கள் பணியாற்றியிருக்கிறார். எந்தவிதமான  வாயசைப்பிற்கும் எப்படிப்பட்ட வசனமும் எழுதும் அளவிற்கு தமிழ் மொழி செழுமை நிறைந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 


(24-01-2021) மதவாத வலதுசாரிகளின் ஆட்சியில் தினமும் எதிர்மறை விசயங்களே மக்களுக்கு பரிசாக கிடைத்துக் கொண்டிருக்கும் சூழலில் தொடர்ந்து வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் யாரிடமிருந்தாவது அல்லது எதனிடமிருந்தாவது பெறுவது அவசியமாகிறது. எனக்கு அப்படியான நம்பிக்கையைக் கொடுத்துக் கொண்டிருப்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'புரட்சியாளர் டாக்டர்.அம்பேத்கர் ஒரு சகாப்தம் ' எனும் இத்தொடர். இன்று வரை (24-01-2021) ஒளிபரப்பப்பட்டிருக்கும் 49 பகுதிகளையும் பார்த்தாச்சு. பெரும்பாலும் Zee5 செயலியின் உதவியுடன்தான் பார்த்திருக்கிறேன். 


ஒரு மொழிபெயர்ப்புத் தொடரை அதுவும் ஒரு வாழ்க்கை வரலாற்றுத் தொடரை இவ்வளவு சுவாரசியமாக கொண்டு செல்வது என்பது மிகவும் சவாலானது. பெரும் உழைப்பு கொடுக்கப்பட்டே இத்தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரு வெப் சீரியல் போலவே இத்தொடரை அணுகலாம். இது வரை பார்க்காதவர்கள் கூட இனிமேல் Zee5 செயலியின் உதவியுடன் பார்க்க ஆரம்பிக்கலாம். சமத்துவத்தை விரும்பும் எவரையும் இத்தொடர் ஏமாற்றாது. இத்தொடரை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கொடுப்பது என்பதும் மிகவும் சவாலான பணிதான். அந்தப் பணியும் சிறப்பாகவே நடந்து வருவதை உணர முடிகிறது. சமூக நீதி பேசும் உரையாடல்களை தோழர் கவிதா பாரதி அவர்கள் எழுதி வருகிறார். மொழிமாற்றுத் தொடர் என உணர முடியாத அளவிற்கு மிகவும் பொருத்தமான அதே சமயம் அனல் தெறிக்கும் வசனங்கள் தொடர்ந்து இடம் பெறுகின்றன. பின்னணி இசையும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது. நாயகத் துதிபாடலை மிக கடுமையாக எதிர்த்த அம்பேத்கரின் கதாப்பாத்திரம் மட்டும் நாயகத்துதிபாடல் மனநிலையில் அணுகப்பட்டிருப்பது மட்டுமே தொடர்ந்து சிறு நெருடலாக இருந்து வருகிறது. மற்ற சிக்கல்கள் எதுவும் தென்படவில்லை. 


தீண்டாமையை கடைபிடிக்கும் சாதிய ஆதிக்க மனநிலையை தெரிந்து கொள்வதுடன் கூடவே சமத்துவம், கல்வியின் முக்கியத்துவம்,பெண் கல்வி, குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு, சமூக நீதி, நன்னெறிகள் என பல விசயங்களை உள்ளடக்கிய அடர்த்தியான தொடராகவே இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வரும் காலங்களில் பெரியார் பற்றியோ அல்லது வேறு யாரைப் பற்றியுமோ தொடர் எடுக்க இருப்பவர்களுக்கு டாக்டர்.அம்பேத்கர் பற்றிய இத்தொடர் நிச்சயம் உதவி செய்யும்.இந்தத் தொடரை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு ஒருவித உத்வேகத்தையும் ,நம்பிக்கையையும் இத்தொடர் தொடர்ந்து கொடுத்து வருகிறது. 


சாதித் தலைவராக சுருக்கப்பட்ட ஒரு மாமேதையை கொஞ்சமேனும் மக்களின் மனங்களில் பதிய வைக்க இத்தொடர் உதவி வருகிறது. நீ டாக்டர் ஆக வேண்டும், இஞ்சினியர் ஆக வேண்டும் என்று குழந்தைகளை கேட்டு பழக்கப்பட்ட குடும்பங்களில் ' நீ படிச்சு அம்பேத்கர் மாதிரி அறிவாளி ஆகனும்' என்ற குரல் கேட்க ஆரம்பிப்பது எவ்வளவு பெரிய சாதனை. அதைத்தான் இத்தொடர் நிகழ்த்தி வருகிறது. சமத்துவத்தை நோக்கிய பாதை என்பது மிகவும் நீண்டது. அந்த சமத்துவப் பாதையில் இத்தொடர் நம்மை பயணிக்க வைக்கிறது.


கொரோனா அலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொடரும் பாதியில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் தொடர்ந்தாலும் மகிழ்ச்சி தான்.

மேலும் படிக்க :

பெரியார் ஒருவரே ! 

ஜே.சி.குமரப்பா பிறந்தநாள் (ஜனவரி 4) !






 


Saturday, January 17, 2026

பொங்கல் - ஒரே அர்த்தமுள்ள பண்டிகை !


" இந்திய நாட்டு விவசாயம் என்பது வெறும் மண் மட்டும் சார்ந்ததல்ல. மண் , மனிதர், மாடு இந்த மூன்றும் சேர்ந்தது தான் நம் நாட்டு விவசாயம் " 

- ஜே.சி.குமரப்பா 

இந்திய நாட்டு விவசாயத்திலிருந்து மாட்டைப் பிரிக்கவே முடியாது. இன்றைய விவசாயத்தில் பாரம்பரிய மாடுகள் அழிந்து கலப்பின மாடுகள் ஆக்கிரமித்திருந்தாலும் கூட மாடுகளை விவசாயத்திலிருந்து நீக்க முடியாது. பாரம்பரிய மாடுகள் நாளெல்லாம் உழைத்தன. "மாடாய் உழைத்தும் என்னத்தை கண்டோம் " என்ற அங்காலாய்ப்பும் இருந்தது. இன்றைய கலப்பின மாடுகளுக்கு எந்தவித உழைப்பும் இல்லை. இன்று "மாடாய் உழைக்கிறேன்" என்று சொன்னால் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது என்ற பொருளாகிவிடும். டிராக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது ஜே.சி.குமரப்பாவால் சொல்லப்பட்டது தான் மேலே உள்ள வாசகம். இதனுடன் இன்னொன்றும் சொன்னார். அது, " டிராக்டர் சாணி போடுமா ?" என்பது தான். இதை சாதாரண கேள்வியாக கடந்து போய்விட முடியாது. பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்று சொல்லப்பட்டவை ஏற்கனவே இருந்த உற்பத்திமுறை பாரம்பரியத்தை அழித்து மனிதர்களுக்கு தீங்குகளை மட்டுமே கொடுத்திருக்கிறது. மண்ணை அழித்தது பசுமைப்புரட்சி, மாடுகளை அழித்தது வெண்மைப்புரட்சி. எத்தனையோ விதமான கருவிகள் அறிமுகம் ஆன பிறகும் விவசாயமும், விவசாயப் பரப்பும் அதிகரிக்கவில்லை; மக்களின் ஆரோக்கியமும் மேம்பட வில்லை. இந்த புரட்சிகள் அனைத்தும் மக்களின் ஆரோக்கியத்தை அழிக்க வந்த எமன்கள். 


இப்போதும் விவசாயத்தை மீட்டெடுக்க ஒரே வழி தான் இருக்கிறது. அதுவும் ஜே.சி.குமரப்பா சொன்னது தான். உணவுப் பயிர்களுக்கு முன்னுரிமை தரும் தன்னிறைவு வேளாண்மைக்கு முன்னுரிமை தருவது தான் அது. இதில் நெல்லையும்,கரும்பையும் சேர்க்க முடியாது. இவை இரண்டும் ஆலைப்பயிர்கள். அதுவும் இல்லாமல் இவற்றை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரும் அதிகம் தேவை. அப்படியே உற்பத்தி செய்தாலும் அரசின் உதவியுடன் ஆலை முதலாளிகள் நிர்ணயிப்பது தான் விலை. இது ஒரு அடிமை விவசாயம் என்றே சொல்லலாம். நெல்லையும், கரும்பையும் விட நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தைத் தரும் எத்தனையோ பயிர்கள் இருக்கின்றன.அவற்றை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. பொதுவாகவே விவசாயம் என்பது பணப்பயிர்களை உற்பத்தி செய்வதுதான் என்ற நிலை உருவாகிவிட்டது. பணப்பயிர்களை உற்பத்தி செய்யும் போது உரிய விலை கிடைக்காத போது பெரிய இழப்பு ஏற்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் தனது விரிவான ஆய்வுகள் மூலம் சரியான தீர்வுகளை அப்போதே சொல்லிவிட்டு போயிருக்கிறார், ஜே.சி.குமரப்பா. உண்மையிலேயே ஜே.சி.குமரப்பா ஒரு தீர்க்கதரிசி தான்.


விவசாயத்திலிருந்து கிடைக்கும் அனைத்தும் மனிதர்களும், மாடுகளும் எடுத்தது போக மீதி மண்ணுக்கே கொடுக்கப்படுகிறது.நாம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் மட்டும் தான் உண்மையிலேயே ஒரே அர்த்தமுள்ள பண்டிகை.பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பொங்கல் ஒரு அறுவடைத் திருவிழா. பெரும்பாலும் பொங்கல் மண்ணிலேயே வைக்கப்படுகிறது. பூமியில் இருக்கும் சக்திகளில் சூரிய சக்தியே முதன்மையானது. பூமியில் புதியது என்ற ஒன்று உண்டென்றால் அது தினமும் பூமியின் மீது விழும் சூரிய கதிர்கள் மட்டுமே. மற்றவை அனைத்தும் பூமியில் ஏற்கனவே இருப்பவை தான். ஏற்கனவே பூமியில் இருப்பதிலிருந்து ஏதோ ஒன்றை உருவாக்கி நம் மன திருப்திக்காக புதியது என அழைத்துக் கொள்கிறோம். அப்படிப்பட்ட பேராற்றல் உள்ள சூரியனுக்கு நன்றி சொல்கிறோம். இன்றும் விவசாயத்தைக் காப்பாற்றி வருவது மாடுகள் போன்ற கால்நடை வளர்ப்பு வருமானம் தான். அப்படிப்பட்ட மாடுகள் ,ஆடுகளுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்துகிறோம். 


பொங்கலில் சாதி , மதங்களுக்கு துளியும் இடமில்லை. அதுமட்டுமில்லாமல் பொங்கல் ஒரு சூழியல் பண்டிகை. வடக்கிலிருந்து திணிக்கப்பட்ட திபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற மற்ற பண்டிகைகள் போல சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் பொங்கல் பண்டிகையால் உருவாவதில்லை. தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு எல்லாவித சிறப்புகளும், நியாயமான காரணங்களும் பொங்கல் பண்டிகைக்கு இருக்கிறது. ஒரு வேளை தற்போதைய அரசு பொங்கல் பண்டிகையை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்குமானால் முன்பை விட பெரும்பாலானோர் தற்போது ஆதரிப்பார்கள். தமிழ் சமூகத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுத்தாலே போதும் எல்லாம் சரியாகி விடும். 

தமிழர் என்றொரு இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு !

பொங்கல் தமிழர்களின் அடையாளம் !

தமிழ்நாடு வாழ்க !

மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !

Sunday, January 4, 2026

ஜே.சி.குமரப்பா பிறந்தநாள் (ஜனவரி 4) !


'இயற்கையோடு இயைந்த உற்பத்தி முறைதான் இயற்கை ஆதார வளங்களை சிதைக்காது’ என்று சொன்னவர் தான் ஜே.சி.குமரப்பா. தொழிற்புரட்சி என்ற பெயரில் இயற்கையை அழித்துவிட்டு தான் இப்போதெல்லாம் உற்பத்தியே தொடங்குகிறது. குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதிக உற்பத்தி என்பது செல்வம் ஒரே இடத்தில் குவியவே வழிவகுக்கும் என்று அப்போதே சொல்லியிருக்கிறார். அது தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 


காந்திய பொருளாதாரம் என்பது கீழிருந்து மேல்நோக்கிய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. தற்போதைய வளர்ச்சி என்று சொல்லப்படுவது இதற்கு அப்படியே எதிரானதாக இருக்கிறது. எல்லோரையும் உள்ளடக்கிய சூழலைப் பாதிக்காத மிகச்சிறந்த பொருளாதார மாதிரியை ஜே.சி.குமரப்பா உருவாக்கினார். ஆனால்  இந்த மாதிரியை இதுவரை பதவியில் இருந்த எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. முன் எப்போதையும் விட ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார மாதிரிக்கான தேவை தற்போது தான் அதிகமாக இருக்கிறது. இனிவரும் அரசுகளாவது ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார மாதிரியை செயல்படுத்த முன்வர வேண்டும். தேர்தல் அறிக்கையில் இந்த விசயம் இடம்பெறும் வகையில் அரசியல் கட்சிகளுக்கு நாம் நெருக்கடி கொடுக்க வேண்டும். 


ஜே.சி.குமரப்பா மாதிரி ஏன் தேவை என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் தற்போதைய பிளாஸ்டிக் தடையால் நிறைய குறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இயற்கையோடு இயைந்த தொழிலில் அவர்கள் முதலீடு செய்திருந்தால் இந்த பாதிப்பு உருவாகியிருக்காது. இது முதலீட்டாளர்களின் தவறு என்பதை விட அரசின் தவறு என்பது தான் பொருத்தமாக இருக்கும். சிறியதே அழகு என்பது தான் குமரப்பாவின் பொருளாதார மாதிரி.


விவசாயத்துறையிலும் குமரப்பாவின் சித்தாந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இன்று விவசாயம் இந்த அளவிற்கு மோசமான நிலையை அடைந்திருக்காது. தன்னிறைவு வேளாண்மைக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து குமரப்பா கூறி வந்தார். ஆனால் தொடர்ந்து அதிக தண்ணீர் தேவைப்படும் பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவைத் தான் தற்போது அனுபவித்து வருகிறோம். இப்போதும் விவசாயத்தை மீட்பதற்கு குமரப்பாவின் விவசாய சிந்தனைகளே தேவை. தன்னிறைவு வேளாண்மை மட்டுமே விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றும். 


" அறம் சாராத பொருளாதார அமைப்பு மனசாட்சிக்கு விரோதமானது.  மனிதன் வெறும் பணம் திரட்டும் யந்திரமல்ல. அறமற்ற பொருளாதாரம் உயிரற்ற உடல்தான் " என்றார்,ஜே.சி.குமரப்பா. அறமற்ற பொருளாதாரம் தான் நம் காலத்தின் மிகப்பெரிய எதிரி.


" முன்னேற்றம் என்பது இயற்கையில் பொதிந்துள்ள அறிவையும், உண்மையையும் தேடி உணர்ந்து, மனிதருடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இயற்கையை உபயோகிப்பது "  என்பதுதான் ஜே.சி.குமரப்பாவின் நிலைப்பாடு.


ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார, விவசாய சிந்தனைகளே இன்றைக்கு தேவை.


ஆம். ஜே.சி.குமரப்பா ஒரு மறக்கப்பட்ட தீர்க்கதரிசி !


மேலும் படிக்க :

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

எக்காலத்திற்குமான கலைஞன் !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !


Saturday, January 3, 2026

மண்டோவும் கட்டக்கும் !

 


நந்திதாதாஸ் இயக்கியிருக்கும் திரைப்படம், மண்டோ. சதக் ஹசன் மண்டோ என்ற பெயர் மட்டுமே தெரிந்திருந்த நிலையில் அவரின் வாழ்வு பற்றிய புரிதலை இத்திரைப்படம் உருவாக்கியிருக்கிறது. மண்டோவின் கலை சார்ந்த உணர்வுகளை நமக்கு கடத்த முயன்று, அதில் வெற்றியும் பெற்று விடுகிறார், இயக்குநர். பம்பாய் என்ற நகரத்திற்கும் மண்டோவிற்கும் உள்ள பிணைப்பு அழுத்தமாகவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பம்பாய் நகரம் பிடித்திருந்த போதிலும் மதவாதத்தால் வெளியேற வேண்டிய நிலை. லாகூரில் வசித்தாலும் பம்பாயின் நினைவுகளே அவரை ஆக்கிரமிக்கின்றன. 


" என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம். என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப் போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது " என்கிறார், சதத் ஹசன் மண்ட்டோ. இதன் மூலம் படைப்புகள் சார்ந்த தெளிவான பார்வை அவருக்கு இருந்ததை அறிய முடிகிறது. 


இத்திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே இவரைப் போன்ற மனிதர் ஒருவர் அறிமுகம் ஆனாரே அவர் யாராக இருக்கும் என்ற குழப்பம் இருந்தது. திரைப்படம் முடிந்த பிறகு தான் அந்த ஆளுமை நினைவிற்கு வந்தார். அவர், ரித்விக் கட்டக். படச்சுருள் வெளியிட்ட ரித்விக் கட்டக் பற்றிய சிறப்பிதழில் கட்டக் பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. கட்டக் பற்றி எழுத்து மொழியில் வாசித்ததை , திரைமொழியில் பார்த்தது போலவே இருந்தது மண்டோ திரைப்படம். இருவருக்கும் அவ்வளவு ஒற்றுமைகள்.


இருவருமே மதவாதம் உருவாக்கிய பிரிவினைகளால் பெரிதும் பாதிப்புக்குள்ளானவர்கள்.இருவரின் படைப்புகளிலும் பிரிவினையின் தாக்கங்கள் அதிகமாகவே இருக்கும். இருவருமே மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதற்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டவர்கள். இருவராலுமே குடும்பத்தை சரிவர கவனிக்க முடியவில்லை. இருவருக்கும் அவர்களது நண்பர்களே அவர்களின் படைப்பாளுமையை அடையாளம் கண்டு ஆதரித்தார்கள். படைப்பு மனமே இருவரையும் ஆட்டுவித்திருக்கிறது. இருவருமே படைப்பிற்கு தங்களை அர்ப்பணித்தவர்கள். மண்டோ எழுத்தாளர், கட்டக் திரைப்பட இயக்குநர் அவ்வளவு தான் வித்தியாசம். இருவருமே நல்ல படைப்பாளிகள். இருவருமே உன்னத கலைஞர்கள்.

( 2019 )


மேலும் படிக்க :


Thursday, January 1, 2026

சாய்ராட் - கலையின் அரசியல் !


மக்களையும் மக்களுக்கான அரசியலையும் காட்சிகளின் வழியே மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் , இயக்குநர் , நாகராஜ் மஞ்சுளே. ஒவ்வொரு காட்சியிலும் சமூகத்தின் முகம் அப்பட்டமாக காட்டப்படுகிறது. முதல் பாதியில் காட்டப்படும் காதல் காட்சிகள் அவ்வளவு அழகியலுடன் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதிலும் ஸ்லோமோஷன் காட்சிகள் தனித்து நிற்கின்றன. காதல் காட்சிகளை எவ்வளவு முறை திரைகளில் பார்த்தாலும் நமக்கு திகட்டுவதேயில்லை. இத்திரைப்படத்தின் காதல் காட்சிகளும் அப்படி தான். பார்த்துக் கொண்டே இருக்கலாம். கதாநாயகி ரிங்கு , இந்தத் திரைப்படத்தில் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார். அவரது உடல்மொழியும் அற்புதம். பாடல்களும் ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
காதலுக்கு எதிரான சாதிய வெறி அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் ;வீட்டை விட்டு துரத்துங்கள். பரவாயில்லை. ஆனால் சாதி மாறி காதலித்ததால் எவ்வளவு காலம் ஆனாலும் அவர்களை கொன்றால் தான் வெறி அடங்கும் என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதுபோன்ற திரைப்படங்கள் சாதியத்திற்கு எதிராக எதிர்மறையில் இருந்தே குரல் கொடுக்கிறது. அப்படியில்லாமல் சாதிய படிநிலைகளைத் தாண்டி காதல் செய்பவர்களை இரு குடும்பமும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நேர்மறையில் காட்சிப்படுத்தப்படும் படங்களுக்கும் தேவையிருக்கிறது.

காதல் என்பது இயல்பான ஒன்று , அந்தக் காதலுக்கு சாதி தடையில்லை என்பதை பொருத்தமான காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தலாம். ஒருவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு பெண்ணுக்கு பெற்றோர் பார்த்து சொந்த சாதிக்குள் மணமுடித்து வைக்கின்றனர். ஆனால் அந்தப் பெண் கொடுமைப்படுத்தப்படுவது போலவும் , மற்றொரு பெண் காதலித்து சாதி மாறி திருமணம் செய்து கொண்டு நன்றாக இருப்பது போலவும் காட்சிப்படுத்தினால் ஒரு நேர்மறையான மனமாற்றம் நிகழுமே.

சாதிவெறியை முன்னிலைப்படுத்தும் திரைப்படங்கள் இப்போதும் எடுக்கப்படும் சூழலில் சாதிவெறிக்கு எதிரான படங்களின் தேவையும் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இந்த சாய்ராட் முக்கியத்துவம் பெறுகிறது. சகமனிதனை மனிதனாக மதிக்க கற்றுத் தருவது தான் கலையின் தேவை. கலைஞர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.
கலை  மக்களுக்கானது. அழகியல் மட்டும் கலை அல்ல . அழகியலுடன் அரசியலும் பேசும் கலை தான் முழுமையானது. சாய்ராட் ஒரு முழுமையான கலைப்படைப்பு.
காதல் என்பது சலிக்காத ஒன்று.  இதுவரை எத்தனையோ விதமான காதலைத் திரையில் பார்த்திருப்போம். மீண்டும் திரையில் காதலைப் பார்க்கும் போதும் நாம் சலிப்படைவதேயில்லை. அதிலும் இத்திரைப்படத்தில் காதல் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அற்புதம். கதாநாயகி ரிங்குவின் முகபாவங்களும் , வசனங்கள் உச்சரிக்கும் விதமும் அவ்வளவு அழகு. ரிங்குவின் நடிப்பு இத்திரைப்படத்திற்கு பெரிய பலம்.
ஒவ்வொரு காட்சியிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் அப்பட்டமாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.காதல் வீட்டில் தெரிந்த பிறகு கடைசிவரை ஒருவிதமான பதைபதைப்பு இருந்து கொண்டே இருக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் அந்தக் குழந்தையை பக்கத்து வீட்டுக்கார பெண் அழைத்துச் செல்லும் போதே படத்தின் முடிவு தெரிந்து விடுகிறது. வீட்டின் வாசலில் போடப்பட்ட முழுமைடையாத கோலத்தைப் போல அவர்களின் வாழ்வும் முழுமை பெறவில்லை.
நமது இந்திய தேசத்தில்  படிப்பறிவு சதவீதம் அதிகரித்து கொண்டிருக்கும் விதத்தில் சாதியப்பாகுபாடுகள் குறையவில்லை. பல்வேறுவிதமான அதிகாரங்கள் மக்களைக் கட்டுப்படுத்தும் தேசத்தில் போராட்டங்களின் மூலமும் , கலையின் மூலமுமே  நமது எதிப்பை வெளிப்படுத்த முடியும். நாகராஜ் மஞ்சுளே , சாதியத்தின் மீதான கோபத்தை , எதிப்பை வலுவாக திரைமொழியில் பதிவு செய்திருக்கிறார்.
சாதியம் ஒழியட்டும். சகமனிதனை மனிதனாக மதிப்பதை நோக்கி நம் சமூகம் நகர்வதற்கான ஒரு படியை இத்திரைப்படம் எடுத்து வைத்திருக்கிறது.
மேலும் படிக்க :

AMAR SINGH CHAMKILA ❤️❤️❤️

Monday, December 29, 2025

ஏ.ஆர்.ரஹ்மான் எனும் ரசனைக்காரன் !


ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகே ரஹ்மானின் இசையைக் கேட்கிறேன் ( கேட்கிறேன் என்று சொல்ல முடியாது , ரசிக்கிறேன் என்று தான் சொல்ல முடியும் ). ரஹ்மானை ' ரோஜா ' விலிருந்து கேட்பது தான் வழக்கம்.தற்போதும் அப்படியே. இப்போது 'பாய்ஸ்' போய்க் கொண்டிருக்கிறது. இசையில் படிப்படியாக எவ்வளவு பரிமாணங்கள்.வியப்பாக இருக்கிறது. மாறி வந்த வாழ்க்கை முறையும் , இயக்குநர்களும் காரணம் தான் என்றாலும் அந்த பரிமாணங்களை இசையில் கொண்டு வந்ததில் ரஹ்மானின் பெரும் உழைப்பு இருக்கிறது.


ஆணுக்கும் பெண்ணுக்குமான நெருக்கத்தை மிக நெருக்கமாக இசையில் கொண்டு வந்திருக்கிறார். இருவருக்குமான அன்பை , காதலை , ஊடலை, கூடலை , பிரிவை, மகிழ்ச்சியை ,துயரத்தை , கொண்டாட்டத்தை என அனைத்தையுமே இசையால் கோர்த்திருக்கிறார். ஒரு தனியறையில் காதல் ததும்ப ததும்ப உருக ரஹ்மானின் இசையே ஏற்றது.


ரசனையான பாடல் வரிகள் , அதற்கேற்றவாறு வருடவோ , துள்ளவோ செய்யும் இசை, ஓரளவிற்கு பொருத்தமான கலவையான குரல் என நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறார். முன்னெப்போதும் ரஹ்மானின் இசை இந்த அளவிற்கு வசீகரிக்கவில்லை. காரணம் என்னவென்றும் தெரியவில்லை. என்னவாக இருந்தால் என்ன இந்த மார்கழி மாத கூதலுக்கு இதமாக இருக்கிறது ரஹ்மானின் இசை.ஒவ்வொரு திரைப்படத்தின் பாடல்களும் தனி ஆல்பம் போலவே இருக்கின்றன. 


ரசனைக்காரனின் ரசனையை ரசித்திருப்போமாக!

( 2017 )

மேலும் படிக்க :

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !


Tuesday, December 23, 2025

காதில் விழுந்த கதைகள் - கி.ராஜநாராயணன் !

 


இருபத்திஒன்றாம் நூற்றாண்டின் தொடுதிரை வாழ்விலிருந்து விலகி புத்தகங்களை வாசிக்க நேரம் ஒதுக்குவது சவாலானதாகவே இருக்கிறது. புத்தகங்களை வாசிக்க ஆசை இருந்தாலும் தினசரி வாழ்வு தரும் அழுத்தங்கள் நம்மை அனுமதிப்பதில்லை. இதையெல்லாம் கடந்துதான் வாசிக்க வேண்டியுள்ளது. இன்றைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வாசிப்பைத் தொடருபவர்கள் திறமையானவர்கள். 


கடந்த ஜுலை மாதத்தில் வேடசந்தூர் கிளை நூலகத்தில் நியூ செஞ்சுரி பதிப்பகம் சார்பாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கலந்து கொள்ளும் போதே " ஏற்கனவே வாங்கிய புத்தகங்களே வாசிக்காமல் கெடக்குது. இதுல இவரு புதுசா வேற புத்தகம் வாங்கக் கிளம்பி வந்துட்டாரு " என்று உள்மனது எச்சரித்தது. அதனால் உடனே வாசிக்கக் கூடிய எளிய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தே தேடல் தொடங்கியது. தேடலில் சிக்கியவை ' காதில் விழுந்த கதைகள்' மற்றும் ' சிறுவர் நாடோடிக் கதைகள் '. இந்த இரண்டு புத்தகங்களும் வாசித்து முடிக்கப்பட்டுவிட்டன. இந்த இரண்டு புத்தகங்களும் கொடுத்த நம்பிக்கையில்தான் அக்டோபர் மாதத்தில் நடந்த திண்டுக்கல் புத்தகக் கண்காட்சியில் கூடுதலாக புத்தகங்கள் வாங்கப்பட்டன. 


'Don't judge a book by its cover ' என்பதற்கு உதாரணம் இந்த ' காதில் விழுந்த கதைகள் ' புத்தகம். இந்தப் புத்தகம் இந்தளவிற்கு வசீகரிக்கும் என எதிர்பார்க்கவில்லை. கதைகள் என்றாலே வசீகரமானதுதான். அதிலும் நமது மண் சார்ந்த கதைகள் இன்னமும் வசீகரமானவை. அந்த அட்டகாசமான மொழிநடை கூடுதல் குதூகலம். பொதுவாகவே நாம் எல்லோருமே கதைகள் கேட்க எப்போதும் தயாராகவே இருக்கிறோம். கதைகளை பார்க்க விரும்புகிறோம்; கேட்க விரும்புகிறோம்; வாசிக்க விரும்புகிறோம்; பேச விரும்புகிறோம். கதைகள், காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கின்றன. 


பாரததேவி மற்றும் கழினியூரான் இவர்கள் சேகரித்த கதைகளுடன் தான் சேகரித்த கதைகளையும் சேர்த்து இந்நூலை தொகுத்து நமக்குக் கொடுத்திருக்கிறார், கி.ராஜநாராயணன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள், வாசிக்க சுவாரசியமாக இருப்பதுடன் எந்த கட்டுக்குள்ளும் அடக்க முடியாததாக இருக்கின்றன. தினம் ஒரு கதையாக வாசித்து முடிச்சாச்சு. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கதைகள் வாசிக்க நேரமிருந்தாலும் நாளுக்கு ஒரு கதை என்றே நாட்கள் கடந்தன. ஒவ்வொரு நாளும் அடுத்த கதை எப்படி இருக்கும் என்ற ஆவலுடன்தான் புத்தகம் கையிலெடுக்கப்பட்டது. அந்த அளவிற்கு ஒரு கதையே வாசிப்பிற்கான நிறைவைக் கொடுத்தது. இதற்கு முன்பு அப்படி வாசித்தது தேவதச்சன் கவிதைகளைத்தான். ஒரு நாளிற்கான நிறைவை அவரது ஒரு கவிதையே நிறைவு செய்தது.


தமிழ் நிலத்தில் இன்னமும் தீவிரமாக கொண்டாடப்பட வேண்டியவை கி.ராஜநாராயணனின் படைப்புகள். அவர் சேகரித்து கொடுத்த நாட்டார் கதைகளுக்காகவே நாம் அவரைக் காலமெல்லாம் கொண்டாட வேண்டும். நாட்டார் பாலியல் கதைகள் அடங்கிய தொகுப்பான ' வயது வந்தவர்களுக்கு மட்டும் ' ஒரு முக்கியமான தொகுப்பு. இப்போது வாங்கிய ' சிறுவர் நாடோடிக் கதைகள் ' தொகுப்பும் சிறப்பாகவே இருந்தது. மற்ற மொழிபெயர்ப்பு சிறார் கதைகளை விட இந்தத் தொகுப்பில் இருந்த சிறார் கதைகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தன. அது தான் தாய்மொழியின் சிறப்பு.


எது எப்படியோ தொடுதிரை வாழ்விலிருந்து கொஞ்சமேனும் விலகி வாசிப்பை நோக்கி திருப்பியிருக்கிறார், கி.ரா. இதைத் தொடர வேண்டும். அதுதான் இப்போதைய தேவையாக இருக்கிறது. பார்க்க வேண்டிய திரைப்படங்களின் பட்டியல் வேறு நீண்டுகொண்டே போகிறது. அதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.


மொத்தத்தில் Worth to read 👍


மேலும் படிக்க :

எது கலாசாரம் - கி.ரா...! 

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - அறந்தை நாராயணன்!


Saturday, November 22, 2025

துயர் 😥


தூரத்தில் இருந்து கேட்டாலும் 

துயர் மிக்கதாக இருக்கிறது 

மரம் அறுபடும் சத்தம்  


மேலும் படிக்க :

கவிதைகள்

Monday, November 3, 2025

தானந்தன கும்மி கொட்டி... !


ஒரு பாடல் வெற்றி பெற்றால் அதிகபட்ச புகழைப் பெறுவது பாடகர்களாகவே இருப்பார்கள். அதனால்தானோ என்னவோ பாடல் தொடங்குவதற்கு முன்னரான தொடக்க இசையிலேயே தனது ராஜாங்கத்தை நடத்தி முடித்து விடுகிறார்,  நம் இளையராஜா. இந்தப் பாடலின் தொடக்க இசையும் அவ்வளவு அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாடல் முழுவதும் இசை தொடர்ந்தாலும்  சரணங்களின் இடையில் ஒலிக்கும் மெல்லிய புல்லாங்குழல் இசை  இப்பாடலை மேலும் மெருகேற்றுகிறது.


மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பற்றி சொல்ல வேண்டியதில்லை. எப்போதும் போல தங்களின் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். இவர்களின் குரல்கள் நம்மை எப்போதும் வசீகரிக்க இவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஒரு காரணம். கேட்க கேட்க திகட்டாத குரல்கள். காலமெல்லாம் நாமும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான். " மலேசியா வாசுதேவனால் மட்டுமே எஸ்.ஜானகியின் குரலுக்கு ஈடு கொடுத்து பாட முடிந்திருக்கிறது " என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார், இசை விமர்சகர் ஷாஜி. அது என்னவோ உண்மைதான்.


இந்தப் பாடலை ரசிக்கும்படி எழுதியிருப்பவர், பிறைசூடன். சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை மூன்று முறை பெற்றிருந்தாலும் அதிகம் கவனம் பெறாத பாடலாசியர்களில் ஒருவராகவே இருந்திருக்கிறார். நிறைய வெற்றிப்பாடல்களைக் கொடுத்திருக்கிறார். 

'மீனம்மா மீனம்மா...'(ராஜாதிராஜா), 

'நூறு வருசம் இந்த மாப்பிளையும் பொண்ணும்தான்...'( பணக்காரன்), 

'சோளப் பசுங்கிளியே...'( என் ராசாவின் மனசிலே), 

' ஆட்டமா தேரோட்டமா...'( கேப்டன் பிரபாகரன் ),

 'இதயமே இதயமே...(இதயம்),  

‘என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட...'( உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்), 

 ' புன்னைவனப் பூங்குயிலே...' ( செவ்வந்தி) இன்னும் பல வெற்றிப் பாடல்களை எழுதியிருக்கிறார். 

All time favourite combo : 

இளையராஜா + மலேசியா வாசுதேவன் + எஸ்.ஜானகி = ❤️❤️❤️ 

மேலும் படிக்க :

பட்டுவண்ண ரோசாவாம் ...!

எஸ்.ஜானகி : தென்னிந்திய திரையிசையின் தனிப்பெரும் தலைவி !

Thursday, October 30, 2025

மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பிதழ்!


நாயகத் துதிபாடல் தான் தமிழ் சமூகத்தை தொடர்ந்து சீரழித்து வருகிறது. " ஊருக்கு ஒரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை , அவனவனுக்கு ஒரு டசன் பட்டினி பட்டாளம் " என்ற 'இரத்தக்கண்ணீர் ' -ல் இடம்பெற்ற எம்.ஆர்.ராதாவின் வசனம் இன்றும் பொருந்துகிறது. சினிமா மட்டுமல்ல அரசியல், ஆன்மீகத்திலும் இதே நிலை தான். ஒரு குறிப்பிட்ட மனிதரை தலைவராக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் நீங்கள் ஏற்றுக் கொண்டதற்காக அந்தத் தலைவர் எது சொன்னாலும் சரி என்று முட்டுக் கொடுப்பது தான் ஆபத்தானது. மனிதர்கள் தங்களின் செயல்கள் மூலமே அடையாளம் காணப்பட வேண்டும். படைப்புகளின் மூலமே படைப்பாளியை கண்டடைய வேண்டும். இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது செயல்களையும் , படைப்புகளையும் தானே ஒழிய மனிதர்களையும், படைப்பாளிகளையும் அல்ல. ஒரு நல்ல செயலை செய்ததற்காக அந்த மனிதர் செய்யும் எல்லா செயல்களையும் ஏற்றுக்கொள்வதும் , ஒரு நல்ல படைப்பைக் கொடுத்ததற்காக அந்த படைப்பாளியின் அனைத்து படைப்புகளையும் கொண்டாடுவதும் முட்டாள்தனம். 


'பாலிடிக்ஷ் தெரியாத பயலுகளெல்லாம் பாலிடிக்ஷ் பத்தி பேசறானுக ' என்ற எம்.ஆர்.ராதா தான் மீண்டும் நினைவிற்கு வருகிறார். வாரத்திற்கு ஒரு அரசியல் தலைவர் தமிழகத்தில் உதயமாகிறார். அதிலும் இந்த ரஜினி , கமல் பேசுவதெல்லாம் மகா மட்டமாக இருக்கிறது. பெரியாரின் கொள்கைகளை கடைப்பிடிப்பதாக சொல்லும் திமுக , திக வையும் விமர்சிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனென்றால் அங்கேயும் நாயகத் துதிபாடல் தான் இருக்கிறது. அரசியல் மக்களுக்கானது. மக்களுக்கான அரசியல் மாநிலத்திலும் இல்லை , மத்தியிலும் இல்லை. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் மக்களுக்கான அரசியலை தொடர்ந்து பேசி வருவது இடதுசாரி இயக்கங்கள் மட்டுமே. தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமானதற்கு எம்.ஜி.ஆர். தான் காரணம் என்கிறார்கள். எந்த வகையில் பாதிப்பை உருவாக்கினார் என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆரின் அதிமுக-வோடு கூட்டணி அமைத்தது தான் இடதுசாரி இயக்கங்கள் பலவீனமானதற்கு காரணமாக இருக்கலாம். தற்போதும் தமிழகத்தில் மக்களின் பிரச்சனைகளுக்கு முதலில் குரல் கொடுக்கும் இயக்கங்களாக இடதுசாரி இயக்கங்கள் தான் உள்ளன. மக்களோடு மக்களாகத் தான் இருக்கிறார்கள் , மக்களுக்காகத்தான் இயக்கங்கள் நடத்துகிறார்கள், மக்களுக்காகத்தான் போராடுகிறார்கள் , ஆனால் அரசியல் நிலைப்பாடு என்ற ஒன்றை எடுக்கும்போது மட்டும் மக்களின் மனநிலைக்கு எதிராக எடுக்கிறார்கள். அது தான் மக்களை ஒட்டவிடாமல் செய்கிறது. 


காலத்துக்கேற்ற மாற்றங்கள் இடதுசாரி இயக்கங்களில் நிகழ வேண்டியது அவசியமாகிறது. இந்தியாவின் இடதுசாரி இயக்கங்கள் தங்களின் வேற்றுமைகளை களைந்து ஒன்றிணைய முன் வர வேண்டும். உலகமயமாக்கலும் , வலதுசாரி இயக்கங்களும் வலுவடைந்து வரும் சூழலில் இடதுசாரி இயக்கங்களும் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. தமிழகத்தில் ஒரு இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாமல் இருப்பது இடதுசாரி கொள்கைகளை ஆதரிக்கும் மக்களுக்கு அவமானமாக இருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான தற்கால உதாரணம் , கேரளம். அவ்வளவு ஏன் தமிழகத்தில் கடந்த முறை இடதுசாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தற்போது வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பிர்களாக இருக்கும் தொகுதி மக்களைக் கேட்டாலே வித்தியாசம் தெரிந்துவிடும். 


இந்த சூழலில் இருந்து தான் வெளிவந்திருக்கும் 'மேற்குத் தொடர்ச்சி மலை' திரைப்படத்தின் முக்கியத்துவத்தை பேச வேண்டியிருக்கிறது. முதலில் இத்திரைப்படத்திற்கு சிறப்பிதழ் கொண்டு வந்த படச்சுருளுக்கு நன்றி. இத்திரைப்படத்தை பார்த்த ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் சலனம் உருவாகியிருக்கும். எளிய மக்களின் வாழ்க்கையை அவர்களின் இயல்பு மாறாமல் பதிவு செய்வது அவ்வளவு எளிதானதல்ல. தனது திட்டமிடப்பட்ட உழைப்பால் இதை சாத்தியமாக்கி இருக்கிறார் , லெனின் பாரதி. இந்த இதழில் இடம்பெற்ற அனைத்து கட்டுரைகளும் இந்தத் திரைப்படம் அவர்களுக்கு உருவாக்கிய மனப்பதிவுகளாக அமைந்திருந்தன. இந்த இதழில் இடம்பெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தில் நேரடியாக பங்குபெற்ற ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் நேர்காணலும் , இயக்குனர் லெனின் பாரதியின் விரிவான நேர்காணலும் முக்கியமானதாகிறது.


வசனம் எழுதிய ராசி தங்கதுரை மற்றும் படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் அவர்களின் மனநிலையையும் பதிவு செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஏனெனில் இத்திரைப்படத்தின் வசனம் மிகவும் முக்கியமான ஒன்று. படத்தொகுப்பு எனும் போது லெனின் பாரதி சொன்னது போல 99 நிமிடங்கள், இரண்டு மணி நேரம் மற்றும் 3 மணி 20 நிமிடங்கள் என மூன்று அளவுகளில் படத்தின் தன்மை மாறாமல் சுருக்க வேண்டிய சவால்கள் குறித்தும் தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். எந்த இதழும் அதற்கான பக்கங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள். அந்த வகையில் இதை குறையாகவும் பார்க்க வேண்டியதில்லை. 


லெனின் பாரதி இத்திரைப்படத்தை உருவாக்கிய விதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இங்கே நிறைய கதைகள் அறைக்குள்ளேயே எழுதப்பட்டு , அரங்குகளிலேயே தான் படமாக்கப்படுகின்றன. அப்படியே கதைக்களத்தில் எடுத்தாலும் அம்மக்களின் உணர்வுகள் பிரதிபலிக்கப்படுவதில்லை. இதற்கு முன்பும், சமீப காலங்களில் கூட மலையையும் , மலையை ஒட்டிய நிலப்பரப்பையும் கதைக்களமாக வைத்து பல படங்கள் வெளிவந்திருந்தாலும் அவை இயல்பாகவும் இல்லை, அம்மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் இல்லை. 


லெனின் பாரதி , இத்திரைப்பட உருவாக்கத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஒவ்வொன்றையும் திட்டமிட்டே செயல்பட்டதால் அவருக்கு இது சாத்தியமாகியுள்ளது. இத்திரைப்படத்தின் வசனங்களே இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்றாலும் இந்த திரைப்படத்தின் பல சொல்லாடல்கள் எங்கள் பகுதியிலும் உண்டு. ஒளிப்பதிவு நமது கவனத்தை மாற்றாமல் பார்த்து கொள்கிறது. மற்ற படங்களில் பின்னணி இசை மட்டுமே செய்யும் வேலையை இப்படத்தில் ஒளிப்பதிவும் இசையுடன் சேர்ந்து செய்திருக்கிறது.இதுவரை பார்த்த தமிழ் திரைப்படங்களில் 'சிவப்பு மல்லி' திரைப்படத்திற்குப் பிறகு கம்யூனிச கொடிகளை திரையில் பார்த்த திரைப்படமாக இதுவே இருக்கிறது. இடதுசாரி சிந்தனையுடன் படமெடுக்கவே இங்கே ஆட்கள் குறைவு. தங்கள் நிலப்பரப்பை தாண்டி வாழ்பவர்களின் நிலையை இன்னமும் தமிழ் சினிமா வெளிப்படுத்தவில்லை. விவசாயிகளின் வாழ்க்கையையும் , மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கும் இன்னல்களையும் அவர்களின் நிலையிலிருந்து அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இன்னமும் திரைப்படங்கள் வெளிவரவில்லை. ஆனால் தமிழக மக்கட்தொகையில் விவசாயிகளும் , மீனவர்களுமே அதிகம். இப்படி ' மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்படத்தை அது முன் வைக்கும் அரசியலைத் தாண்டி பேசுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. 


'மேற்குத் தொடர்ச்சி மலை ' திரைப்படம் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. படத்தின் பின் பகுதியில் ஏன் கழிவிறக்கத்தை உருவாக்க வேண்டும். ஈரானிய திரைப்படங்கள் எளிய மக்களின் வாழ்க்கையைத் தான் அதிகமும் வெளிப்படுத்துகின்றன. ஆனால் அங்கே எளிய மனிதர்களுக்கே உரித்தான பாசாங்கற்ற அன்பு தான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையிலும் அன்பிற்கு குறைவில்லை தான். ஆனால் கழிவிறக்க மனநிலை உருவாகாமல் தடுத்திருந்திருக்கலாம். இந்த வாழ்வு தரும் எவ்வளவு பெரிய இழப்புகளையும் அநாயசமாக கடந்து செல்வதுடன் , அந்த வாழ்க்கையை கொண்டாடுபவர்கள் தான் எளிய மனிதர்கள். அப்படியான மனநிலை தான் அவர்களின் நீடித்த மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது. அந்த எளிய மனிதர்களின் வாழ்க்கையையும் உலகமயமாக்கல் பாதிக்கவே செய்திருக்கிறது ,அதை மறுப்பதற்கில்லை. நிலத்தை அடைவதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்று காண்பித்து இருக்கலாம். 


இந்த பூமியின் ஒவ்வொரு நிமிடமும் உழைக்கும் மக்களின் உழைப்பால் தான் நகருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் உழைக்கும் மக்களின் நிலை இன்னமும் மேம்படவில்லை. தொழிற்சங்கங்கள் வலுவிழந்தது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அரசு வேலை செய்பவர்களுக்கு இருப்பது போன்ற வலிமையான தொழிற்சங்கங்கள் மற்ற உழைக்கும் மக்களுக்கு இல்லை. அமைப்பு சார்ந்த தொழிற்சங்களாலேயே இன்றைய முதலாளிகளையும் , அரசையும் எதிர்கொள்ள முடியவில்லை. சமீபத்திய யமாகா போராட்டம் ஒரு உதாரணம். தங்களின் உழைப்பை கூலியாக பெறும் ஒவ்வொருவரையும் அமைப்பிற்குள் கொண்டு வர வேண்டியது அவசியமாகிறது. அவர்களின் பணி பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தற்போது அரசு வேலையில் மட்டுமே பணிப்பாதுகாப்பு இருக்கிறது.அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ஏறக்குறைய 20,000 என இருக்கிறது. மற்றவர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியமாக 10,000 என்ற அளவிற்கு கூட இன்னமும் உயரவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என்பது இன்னமும் சாத்தியமாகவில்லை. விலைவாசி என்பது எல்லோருக்கும் ஒன்று தானே. உழைக்கும் மக்கள் விசயத்தில் கேரளமே முன்னோடி மாநிலமாக இருக்கிறது. 


வணிக நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் இன்னும் பல இடங்களில் பணியாற்றுபவர்கள் வேலை இல்லாத போதும் கூட உட்கார்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. திரைப்படங்களும் , சின்னத்திரையில் ஒளிபரப்படும் தொடர்களிலும் ஆண்டான் அடிமை மனநிலையையே பிரதிபலிக்கிறார்கள். வர்க்க பேதங்களை கேள்வி கேட்பதற்கு பதலாக அவை இயல்பானதாக சித்தரிக்கப்படுகின்றன. சாலையில் செல்லும் போது, சரக்கு வாகனங்களில், ஏற்றப்பட்ட சரக்குகளின் மீதமர்ந்து பயணிப்பவர்களையும், கூலி வேலைக்காக சேர் ஆட்டோவிலோ, சரக்கு வாகனத்திலோ நெருக்கிப்பிடித்து செல்லும் உழைக்கும் மக்களையும் காணும் போது மனம் குற்றவுணர்வடைகிறது. இப்படி இந்த திரைப்படம் உருவாக்கிய சலனங்கள் அதிகம். லெனின் பாரதி , இத்திரைப்படத்தை திரையரங்கோடு விட்டுவிடாமல் வேறு தளங்களுக்கும், பள்ளி , கல்லூரிகளுக்கும் கொண்டு செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது. அடுத்து வெளிவர இருக்கும் 3மணி 20 நிமிடங்கள் வடிவத்தைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். 


மேற்குத் தொடர்ச்சி மலை படக்குழுவிற்கு வாழ்த்துகள் !

30-10-2018 

மேலும் படிக்க :

ஜமா - கலையின் கலை ! 

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !

 


Friday, October 3, 2025

சலில் சௌதுரி 100 - மதுரை !

 


27-09-2025 அன்று கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் ஓவியர் ரவி பேலட் மற்றும் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் பிரபாகர் அவர்களின் ஒருங்கிணைப்பில் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. நமது சூழலில் சலில் சௌதுரி என்ற பெயருடன் எப்போதும் நமக்கு நினைவிற்கு வருபவர் இசை விமர்சகர், ஷாஜி . ஷாஜிக்கு சலில் சௌதுரி போல நாம் எல்லோருமே ஏதோ ஒரு இசைக்கலைஞரை மற்ற கலைஞர்களை விட தீவிரமாக கொண்டாடுபவர்களாகவே இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவர் பிடித்தமானவராக இருப்பார். அந்த வகையில் நான் தீவிரமாக கொண்டாடும் இசைக்கலைஞர், மலேசியா வாசுதேவன் ❤️.


ஷாஜி அவர்களுடனான நட்பின் தொடக்கமே மலேசியா வாசுதேவன் அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக சென்னையில் நடைபெற்ற அவரது இரண்டாவது நூலான ' இசையின் தனிமை ' நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வுதான் ( 18-09-2010). அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. இதற்கும் மலேசியா வாசுதேவன் நிகழ்விற்கு பிறகு சலில் சௌதுரி நிகழ்வில் தான் நேரில் சந்தித்துக் கொள்கிறோம். 15 ஆண்டுகள் இடைவெளி. நிகழ்விற்கு வந்திருப்பதை தெரிவிக்காமல் அரங்கத்தின் நடுவில் அமர்ந்திருந்தாலும் அடையாளம் கண்டுகொண்டு மேடையிலேயே நினைவுகூர்ந்தார்.


நண்பர் புஹாரி ராஜா அவர்களையும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யாரும் அடையாளப்படுத்தாத, யாரும் கண்டுகொள்ள விரும்பாத விளிம்பு நிலை மனிதர்களை தொடர்ந்து தனது ' Buhari Junction YouTube channel ' மூலமாக பதிவு செய்து வருகிறார். சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நாமெல்லாம் நினைக்க மட்டுமே செய்கிறோம். புஹாரி ராஜா போன்றவர்கள் தான் அதை செயல்படுத்துகின்றனர். முன்பே அறிமுகமில்லாத நபராக இருந்தாலும் நான் பேசுவதை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். பேச்சின் இடையில் " நீங்க மளிகை கடையில் உட்கார்ந்து இருக்கீங்க, நான் கறிக் கடையில் உட்கார்ந்து இருக்கேன் அவ்வளவு தான் வித்தியாசம்" என்று கூறியது அவரது பெருந்தன்மையை வெளிப்படுத்தியது. மளிகைக் கடையில் இருந்தாலும் தனிப்பட்ட எழுத்து, வாசிப்பு, இசை, சினிமாவுடன் முடிந்துவிடுகிறது. உங்களைப் போல சமூகத்துடன் நேரடி தொடர்பில் இல்லை தோழர். உங்களது பணி மிகப்பெரியது. நீங்கள் நினைத்தபடி எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் புஹாரி ராஜா அவர்களே ❤️


பிராபாகர் ஐயா அவர்களின் கலகலப்பான அறிமுக உரையுடன் விழா தொடங்கியது. ஐயா குறிப்பிட்டது போல 'இசை விமர்சகர் ஷாஜி ' என்ற அவதாரத்தை நாங்கள் ரொம்பவே மிஸ் பண்ணுகிறோம். " உங்களுக்காக என்ன வேணா செய்யுங்க எல்லாவற்றையும் ஆதரிக்கிறோம். ஆனால் அப்பப்போ எங்களுக்காக இசை குறித்தும் ஏதாவது எழுதுங்க" என்று ஷாஜி அவர்களை அவரின் இசை எழுத்தின் ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.


உண்மையிலேயே எதிர்பார்த்ததை விட அதிகம் பேர் கலந்து கொண்ட நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது. ஷாஜி அவர்களை தூக்கத்தில் எழுப்பி சலில் சௌதுரி குறித்து பேச சொன்னால் கூட மட மடவென பேச ஆரம்பித்து விடுவார் என நினைக்கிறேன். ஷாஜி பேசிய ஒவ்வொரு முறையும் உற்சாக மிகுதியிலேயே பேசினார். சலில் சௌதுரியின் இசை நுணுக்கங்கள் குறித்தும் அவரது வாழ்வு குறித்தும் இன்னும் நெருக்கமாக ஷாஜியின் பேச்சின் ஊடாக தெரிந்து கொள்ள முடிந்தது. 


சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற உஷா ராஜ் அவர்களும் மற்றும் சனில் ஜோசப் அவர்களும் சிறப்பாக பாடி சலில் சௌதுரியின் இசைக்கு பெருமை சேர்த்தனர். விழாக் குழுவில் இருந்த ரவி பேலட் அண்ணன், ஷாஜியின் நெருங்கிய நண்பராக இருந்தும் ஒன்றை மறந்து விட்டார். நிகழ்விற்கான அழைப்பிதழில் இசை விமர்சகர், எழுத்தாளர் & நடிகர் என்று மட்டும் போட்டுவிட்டு, ஷாஜி அவர்கள் பாடுவது போன்ற ஒரு ஒளிப்படத்தையும் போட்டுவிட்டு அவரின் புதிய அவதாரமான பாடகர் என்பதை சேர்க்க மறந்துவிட்டார். ஆம் இசை விமர்சகர் ஷாஜி அவர்களுக்கு பாடவும் தெரியும். சலில் சௌதுரிக்காக எந்த அவதாரத்தையும் எடுக்க ஷாஜி தயாராகவே இருக்கிறார். சலில் சௌதுரி குறித்தான அவரது ஆசைகள் அனைத்தும் நிறைவேறட்டும். 


கலைஞர் நூற்றாண்டு நூலக அரங்கமும் சிறப்பாக இருந்தது. நல்ல ஒலித்தரத்தில் நல்ல இசையைக் கேட்க முடிந்தது. உஷா ராஜ் அவர்கள், இசை மீது தீரா ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தான் பாடவில்லை என்றாலும் மற்றவர்கள் பாடும் பாடலையும் கூடவே சேர்ந்து வாயசைத்துக் கொண்டிருந்தார். சனில் ஜோசப் அவர்களின் குரலும் கேட்பதற்கு நன்றாக இருந்தது. தங்களது பணிகளுக்கு இடையிலும் ஷாஜிக்காகவும், சலில் சௌதுரிக்காகவும் மதுரை நிகழ்வில் கலந்து கொண்ட இந்த இருவருக்கும் பார்வையாளர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 


இசைக்கு எல்லைகள் கிடையாது என்பது இந்த AI காலத்திலும் தொடர்ந்து நிரூபனமாகி வருகிறது. இந்த நிகழ்வில் இதுவரை கேட்காத நிறைய சலில் சௌதுரி அவர்களின் பாடல்களைக் கேட்க முடிந்தது. ' ஓணப் பூவே.. பூவே.. ' என்ற மலையாள பாடல் பாடி முடிக்கப்பட்ட பிறகு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு சிறுவன் மீண்டும் அந்தப் பாடலை ' ஒணப் பூவே .. பூவே.. ' என பாடிக் கொண்டிருந்தான். அதைக் கேட்க மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. இந்த கால குழந்தைகள் காதை ஒரு 'வலி' பண்ணும் அனிருத் பாடல்கள் மட்டுமே கேட்பார்கள் என்ற பிம்பம் உடைந்தது. தவறு நம்மிடமும் இருப்பது போலவே தோன்றுகிறது. நமக்கு பிடித்த இசையை நாம் தொடர்ந்து கேட்கும் போது ஏதோ ஒரு தருணத்தில் அந்த இசையை குழந்தைகளும் கேட்க ஆரம்பிப்பார்கள் என நினைக்கிறேன்.  


ஷாஜி அவர்கள் மீண்டும் மீண்டும் சொன்னது போல சலில் சௌதுரியின் ஒரே டியூனாக இருந்தாலும், வெவ்வேறு இடங்களில் மீண்டும் பயன்படுத்தினாலும் அந்த பாடலும் வெற்றிப் பாடலாக அமைவது தான் சலில்தாவின் திறமைக்கு எடுத்துக்காட்டு. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருமே சலில் சௌதுரி குறித்து கூடுதலாக எதையாவது தெரிந்து கொண்டுதான் அரங்கத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள். குறைந்தபட்சம் இப்படி ஒரு இசையமைப்பாளர் இந்தியாவில் வாழ்ந்திருக்கிறார் என்றாவது அறிந்திருப்பார்கள். 


நிகழ்வு முடிந்த பிறகு தீவிரமான அரசியல் பேசும் ஓவியங்களை தொடர்ந்து வரையும் ரவி பேலட் அண்ணன் அவர்களையும் முதன் முதலாக நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. எங்களுக்காக அவர் ஓவியங்கள் வரைந்திருந்தாலும் நேரில் சந்தித்ததில்லை. மிகவும் அக்கறையுடன் விசாரித்தார். அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பே நிறைந்திருந்தது. மகிழ்வான தருணம். 


ஷாஜி அவர்களை இவ்வளவு உற்சாக மிகுதியில் இதற்கு முன்பு பார்த்ததில்லை. " தம்பி, நீயே இப்ப தான் இரண்டாவது தடவை நேரில் பார்க்கிறதா சொன்ன. இதுல பல தடவ நேரில் பார்த்த மாதிரி பேசுற" என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது. அவரிடம் பல முறை பேசியதிலிருந்து குறிப்பிடுகிறேன். நமது மனதிற்கு பிடித்தமானவர்களைப் பற்றி பேசும் போது தான் நம்மால் சலிப்பே இல்லாமல் மணிக்கணக்காக பேச முடியும். அப்படித்தான் சலில்தா பற்றி ஷாஜி பேசுகிறார் என நினைக்கிறேன். 


சலில் சௌதுரியின் இசையைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ' சொல்லில் அடங்காத இசை' என்ற ஷாஜி அவர்களின் முதல் புத்தகத் தலைப்பைத் தான் குறிப்பிட வேண்டியிருக்கும். அதனால் தான் சலில்தாவால் மொழிகள் கடந்தும் வெற்றிப்பாடல்களை கொடுக்க முடிந்திருக்கிறது.


" இன்னிசை மட்டும் இல்லையென்றால்... " நம் வாழ்வு இன்னும் சிக்கலாகவே இருக்கும். இசையுடன், கலையுடன் கூடவே இயற்கையுடன் இந்த வாழ்வை வாழ்ந்து முடிப்போமாக ! 


அந்த சனிக்கிழமை மாலையை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றி 🙏 


#SalilChowdhury 

#salilchowdhury100


மேலும் படிக்க :

மலேசியா வாசுதேவன் - உன்னத குரலோன் !

CHAT WITH CHEN - அலெக்ஸ் - நேர்காணல் ❤️



Wednesday, September 24, 2025

Stress Buster - மன அழுத்தத்திலிருந்து விடுபட !


நவீன வாழ்வு நாள்தோறும் நெருக்கடிகளைக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறது. நாம் சந்திக்க நேரும் நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்து விரைவாக வெளியேறலாம். எந்த நெருக்கடிக்கான தீர்வும் அந்த நெருக்கடிக்குள் இருப்பதில்லை. அந்த நெருக்கடிக்கு வெளியிலிருந்து அணுகுவதன் மூலமே அந்த நெருக்கடியைக் கடக்க முடியும். எந்த ஒன்று நெருக்கடியிலிருந்து நம்மை வெளியே கொண்டு வந்து அந்த நெருக்கடியை கடக்க உதவுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 


எல்லாவித நெருக்கடிகளையும் ஒரே மாதிரியாக நம்மால் கடக்க முடியாது. எதுவெல்லாம் நெருக்கடியிலிருந்து நம்மை வெளியேற உதவுகிறதோ அதுவே அதிகம் நினைவில் இருக்கும் ,அதுவே அதிகம் கொண்டாடப்படவும் செய்யும். இயற்கை ஒரு மாபெரும் ' Stress Buster ' ஆக இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக கவனிப்பதன் மூலமே இந்த வாழ்வு தரும் அழுத்தத்திலிருந்து வெளியேறலாம். நாம் செல்லும் பாதையின் ஊடாக கடந்து செல்லும் ஒரு பறவையின் நிழலுக்கு கூட நம் மனநிலையை மாற்றும் வல்லமை இருக்கிறது. இயற்கையின் ஒவ்வொரு செயல்பாடும் கவனிக்க வேண்டியதே. மழை ஒரு கொண்டாட்ட மனநிலையை எல்லோருக்கும் கொடுக்கிறது. மனதை சாந்தப்படுத்துகிறது. மழை பெய்யும் நேரத்தில் ஏதாவது செய்ய மிகவும் பிடிக்கிறது. மழைக்கு முந்தைய மனநிலையும் பிந்தைய மனநிலையும் வேறு வேறாகவே இருக்கின்றது. மழை மட்டுமல்ல , சூரியன் ,நிலவு , வானம் , மலை,மரம் ,செடி,கொடி,பூ ,காய் ,கனி , பறவைகள் ,விலங்குகள் என இயற்கையின் ஒவ்வொன்றுமே தனித்துவத்துடன் இயங்குகின்றன. இதை கவனிப்பதன் மூலமே நமக்கான சமாதானங்களைப் பெற முடியும்.


இயற்கைக்கு அடுத்ததாக கலை இருக்கிறது. பாடல்கள் கேட்டல் ,புத்தகம் வாசித்தல் ,எழுதுதல், திரைப்படங்கள், பயணங்கள் என ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் நமக்கான நெருக்கடிகளை விரட்ட முடியும். இதுவும் கடந்து போகும் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடியது தான். கடந்த போக எது துணை புரிகிறது என்று பார்க்க வேண்டும். இன்றைய சூழலில் இளையராஜாவும் ,வடிவேலுவும் இல்லையென்றால் நமக்கு பைத்தியமே பிடித்துவிடும். அந்த அளவிற்கு இந்த இருவரும் தமிழ் சமூகத்தை ஆக்கிரமித்துள்ளனர். தினசரி வாழ்க்கையின் ஊடாக நமக்கு பிடித்தமான ஒன்றைச் செய்யவும் நேரம் ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது. பொழுதுபோக்கு என வகைப்படுத்தினாலும் அதைச் செய்யும் போது நமக்கு மகிழ்ச்சி உண்டாக வேண்டும். அதானால் தான் ஆக்கப்பூர்வமான பொழுதுபோக்கை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது முக்கியமானதாகிறது. 


மனம் விட்டு பேசுவதன் மூலமும் நெருக்கடியை கடக்கலாம். இன்றைய சூழலில் சரியான புரிதல் இல்லாதவர்களிடம் மனம் விட்டு பேசுவது மேலும் நெருக்கடியையே உருவாக்குகிறது. இன்னொரு மனிதரின் மனக்குறைகளை கேட்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம். மிகவும் சிறிய காரணங்களுக்காக நிகழும் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. அதுவும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தாங்களும் சாவது என்பது அதிகரித்து வருகிறது. அவர்கள் வாழ்வதற்கான நம்பிக்கையை நாம் கொடுக்கவில்லை. சமூகம் என்ற அமைப்பில் நிகழும் தற்கொலைகளுக்கு நாமும் மறைமுக காரணம் தான்.எல்லா மனிதர்களும் வாழ்வதற்கான நம்பிக்கையை சமூகம் கொடுக்க வேண்டும். மனித மனம் விசித்திரமானது தான். எப்போது எப்படி நினைக்கும் என்று தெரியாது தான். தற்கொலைகள் எங்குமே தான் நிகழ்கின்றன. ஆனால் தற்கொலைக்கான காரணங்கள் ஆராயபட வேண்டியவை, விவாதிக்கப்பட வேண்டியவை. எந்தச் சூழலிலும் அந்த எண்ணம் வராத வாழ்க்கையை வழி நடத்துவது தான் முக்கியமானதாகிறது. மரணம் எல்லோருக்கும் பொதுவென்றாலும் அது தானாய் நிகழ வேண்டும். 


இயற்கையையும், கலையையும் கொண்டாடுவதன் மூலமே வாழ்க்கையையும் கொண்டாட முடியும் !


மேலும் படிக்க:

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !

மனிதம் பரவட்டும் !


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms