ஒரு படத்தை இரண்டு முறை பார்ப்பதெல்லாம் எப்போதும் நடக்காது. ஆனால் இந்த 'ஜமா' இரண்டு முறை பார்க்க வைத்துவிட்டது. அந்த அளவிற்கு இதில் பங்கு பெற்றவர்களின் உழைப்பு இருக்கிறது.ஒவ்வொரு பகுதியும் பார்த்து பார்த்து செதுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் முறை பார்ப்பதற்கு இளையராஜா இசை தான் முக்கிய காரணம் என்றாலும் முதல் முறை பார்த்த போது தவறவிட்ட சில விசயங்கள் தென்பட்டன. முதலாவது திரைக்கதை பாணி. முதல் பகுதி, இந்த சினிமா எதைப் பற்றி பேசப் போகிறது என்பதற்கான அறிமுகம். இரண்டாம் பகுதி, கூத்துக் கலையில் பெண் வேடமிடும் கல்யாணம் பற்றியும் அவருக்கு பெண் தேடும் படலத்தையும் பேசியது. மூன்றாம் பகுதி ஜகாவிற்கும் கல்யாணத்திற்கும் இடையிலான காதல் பற்றியது. நான்காம் பகுதி கல்யாணத்தின் இலக்கு பற்றியது. ஐந்தாம் பகுதி, முன்கதைச் சுருக்கம். இந்த இடத்தில் தான் கொஞ்சம் சறுக்கி இருக்கிறார்கள். ஏற்கனவே கதையில் சொன்ன பகுதிகள் மீண்டும் வருவதால் சுவாரசியத்தன்மை குறைந்து விடுகிறது. முன்கதைச் சுருக்கத்தை காட்சி மொழியில் வேறுபடுத்திக் காண்பிக்க மெனக்கெட்டவர்கள், இதிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். அடுத்து ஆறாம் பகுதி , இலக்கை அடைதல். இப்படி இந்தத் திரைப்படத்தை பிரித்துப் பார்க்க முடிந்தது.
அடுத்ததாக கண்ணில் பட்டது, படம் முழுக்கவே குறிப்பிட்ட காட்சியில் திரைக்கு வெளியே இருந்து பேசுபவர்களின் குரல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது காட்சியை இன்னும் நெருக்கமாக உணர வைக்கிறது. கூத்துக் கலை குறித்தான நிறைய தகவல்களைச் சேகரித்து, கூத்துக் கலையில் பங்கெடுத்தவர்களின் துணையுடன் இப்படைப்பு உருவாகியுள்ளதால் பார்வையாளர்களை எளிதில் உள்ளிழுத்து விடுகிறது.
சக கலைஞர்களுக்கு இடையில் இருக்கும் ஆதரவு, சகோதரத்துவம், போட்டி, பொறாமை, வஞ்சகம், சூழ்ச்சி, ஏமாற்று உள்ளிட்ட உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கலையின் முன் சமநிலைக்கு வருவதும் காட்டப்படுகிறது. உண்மையில் இலக்கியம் , இசை, ஓவியங்கள், திரைப்படங்கள், நாடகக்கலை, நாட்டார் கலை உள்ளிட்ட கலை வடிவங்கள் மனிதர்களின் கீழ்மையான எண்ணங்களிலிருந்தும், நிஜ வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்தும் விடபட உதவுகின்றன.
பொதுவாகவே இறுதிச்சடங்குகளில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சமீப காலங்களில் அரிதாகவே சடங்குகளில் பெண்கள் பங்கெடுக்கின்றனர். இதற்கு பின் பெரும் போராட்டம் இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகி இறுதிச்சடங்கில் இயல்பாக பங்கேற்பது போல காட்சியமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமானது. தொடர்ந்து இப்படி காட்சிப்படுத்தும் போது ஆண் வாரிசு என்ற பிம்பம் உடையும்.
இயக்குநராக முதல் திரைப்படம் என்பதே பெரும் சவால் என்ற சூழலில் , கூடவே நடிப்பையும் தேர்ந்தெடுத்ததுடன் மிகவும் சவாலான கதாப்பாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து அந்தக் கதாபாத்திரத்திரத்திற்கும் திருவண்ணாமலையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தெருக்கூத்து கலைக்கும் நியாயம் செய்திருக்கிறார், பாரி இளவழகன். சேத்தன், கல்யாணத்தின் அம்மா, அம்மு அபிராமி, அம்மு அபிராமியின் அம்மா மற்றும் கூத்துக் கலைஞர்களாக வருபவர்கள் என அனைவரும் தங்களின் பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். திருவண்ணாமலை வட்டார வழக்கு சிறப்பாக கையாளப்பட்டுள்ளது. தமிழ் மொழியை எந்த வட்டார வழக்கிலும் கேட்பது இனிமையே.
இளையராஜாவின் இசை படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை நம்மைக் கூட்டிச் செல்கிறது. படத்தின் கதையைச் சொல்வதும் இசை தான். ஒரு கதை சொல்லி போல ஏற்ற இறக்கங்களுடன் திரைக்குள் நம்மை கொண்டு செல்கிறது. இளையராஜாவின் இசைக்காக மீண்டும் பார்த்தது வீண் போகவில்லை. படத்தில் வரும் ஒரே ஒரு பாடலையும் இளையராஜாவே எழுதியிருக்கிறார். அதுவும் கேட்க நன்றாக இருக்கிறது. மீண்டும் கேட்கவும் தூண்டுகிறது. முன்கதை சுருக்கத்தைத் தவிர்த்துவிட்டு இன்னொரு முறை கூட இத்திரைப்படத்தைப் பார்க்கலாம். தவறில்லை.
பெரும்பாலும் இசை தான் ஒரு திரைப்படத்தை மறுமுறை பார்க்கத் தூண்டுகிறது. சமீபத்தில் அப்படி இசைக்காக இரண்டு முறை பார்த்த மற்றொரு திரைப்படம் ' Amar Singh Chamkila ', ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக.
மொத்தத்தில் 'ஜமா' பாரி இளவழகன் மற்றும் குழுவினரின் உழைப்பால் நல்ல படைப்பாக வந்திருக்கிறது. இப்படி ஒரு படைப்பைக் கொடுத்ததற்கு அவர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றி !
மேலும் படிக்க:
0 comments:
Post a Comment