தங்கவேலுவின் நலினமான பேச்சுத் திறமை வேறு எவருக்கும் வாய்க்கவில்லை . அவர் பேசுவதை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்;பார்க்கக் கூட வேண்டியதில்லை;சலிக்கவே சலிக்காது .உடல்மொழியில் சிரிக்க வைக்க பலர் இருந்தாலும் ,குரல் மொழியில் சிரிக்க வைக்க இவர் மட்டுமே இருந்தார்;இருக்கிறார் ;இருப்பார் .தங்கவேலு பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் என்னைச் சிரிக்கவைத்துவிடும் . இவருக்கு அடுத்ததாக குரல் மொழியில் சிரிக்க வைத்தவர் ,வி.கே.ராமசமி .
23-01-1983 , ஆனந்த விகடன் பேட்டியில் தங்கவேலு , " ஆரம்ப காலத்துலே சினிமாவிலே நடிக்க சான்ஸ் கேட்டு கம்பெனி கம்பெனியா படியேறி இறங்கினவன் நான் . ' பாடத் தெரியுமா ?'னு கேட்பாங்க ;'நீஞ்சத் தெரியுமா ?'னு கேட்பாங்க . சிமென்ட் தரையிலே நெஞ்சு தேய நீஞ்சிக் காட்டியிருக்கேன் . எனக்குப் பொன்னாடை போர்த்த யாரையும் நான் அனுமதிக்கறதில்லே. வேணுமானா துப்பட்டியைக் கையிலே கொடுத்துடுங்கன்னு சொல்லி வாங்கிக்கிடுவேன் . ஏன்னா , ஒருத்தருக்குப் பொன்னாடை போர்த்தறாங்கன்னு சொன்னா , அந்த ஆள் அவுட்னு அர்த்தம் ! பாலையா அண்ணே கடைசி வரைக்கும் பொன்னாடை போர்த்திக்கலையே...!" என்று சொல்லியிருக்கிறார் .
பாலையா ஒரு பேட்டியில் " நான் பார்த்த அளவில் என்.எஸ்.கிருஷ்ணனுகுப் பிறகு சிறந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு தான் " என்று சொல்லியிருகிறார்.
எந்த வருடம் பிறந்தார் என்றும் தெரியவில்லை .இறந்த நாள் 28-செப்டம்பர் -1994 என்று விக்கிப்பீடியா சொல்கிறது . மொத்தம் எத்தனை படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை .தனது கடைசி காலம் வரை நாடகம் நடத்தியிருக்கிறார் .எந்தக் கலைஞனையும் வாழும் காலத்தில் தமிழகம் கொண்டாடியதில்லை .அதற்கு இவரும் விதிவிலக்கில்லை .இவரையும் கடைசி காலத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.
1971-ல் ஆனந்த விகடனில் வந்த பேட்டி
கேள்வி- " நீங்கள் இருவரும் இப்போதெல்லாம் படங்களில் ஏன் நடிப்பதில்லை ? நீங்களாக ஒதுங்கிவிட்டீர்களா? அல்லது திரையுலகம் உங்களை ஒதுக்கி விட்டதா?"
பதில் - " ரொம்பச் சங்கடமான கேள்வியைக் கேட்டுட்டீங்களே.." என்று தனக்கே உரித்தான ஒரு குரலுடன் நம்மைப் பார்த்துப் புன்னகைத்தார் தங்கவேலு .
" நானாகவும் ஒதுங்கலை;அவங்களாவும் ஒதுக்கிடலை.என்னமோ தெரியலே ,ஒரு 'பிரேக்' வந்துடுச்சி . இந்த 'பிரேக்' வந்து பத்து வருசம் ஆகப்போவுது . நான் நடிச்சுக்கிட்டிருந்த போது ஒரு கணிசமான தொகையை வாங்கிக்கிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு சில பேர் வந்து குறைந்த தொகையை வாங்கிக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. 'குறைந்த தொகை'யை மனசிலே வச்சுக்கிட்டு எல்லோரும் அந்தப் பக்கம் போயிட்டங்க .நானும் சரோஜாவும் மட்டும் இந்தப் பக்கம் தனியா நின்னுட்டோம். அவ்வளவுதாங்க விசயம்..."
கேள்வி - "இப்போ உங்க வாழ்க்கை வசதி எல்லாம் எப்படி?"
பதில் - " கலைவாணர் ஆசியாலே நான் அப்போ இருந்த மாதிரியே இப்போதும் ஸ்டெடியா,செளக்கியமா இருந்துக்கிட்டு வர்றேன். அதுலே பாருங்க, ஒரு விசேஷம்... நாங்க வெளியூருக்கு நாடகம் நடத்தப் போனா, அங்கே பார்க்கிறவங்க எல்லாம் நான் கல்யாண பரிசிலே சொன்ன டயலாகையே திருப்பி என்னைப் பார்த்துச் சொல்றாங்க. ' தங்கவேலு அண்ணாச்சி, உங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சி ! ' அப்படீன்னு கேட்கிறாங்க . இதுக்கு என்னங்க சொல்றது...!" என்று சிரிக்கிறார் தங்கவேலு .
தங்கவேலுவைப் பற்றி யாராவது புத்தகம் எழுதியிருக்கிறார்களா ? தெரியவில்லை .அவரைப் பற்றிய புத்தகம் கண்ணில் பட்டால் எனக்குச் சொல்லுங்கள் . இவரை வைத்து ஒரு டாகுமென்ட்ரி படமே எடுக்கலாம் .
கைதி கண்ணாயிரம் படத்தில் மனோகர் ,தங்கவேலுவைப் பார்த்துக் கேட்பார்
"சிங்காரம் (தங்கவேலு )செத்தவனைக் கூட நீ சிரிக்க வச்சுருவியேப்பா ". உண்மை தான். யாரையும் நோக வைக்காமல் எல்லொரையும் சிரிக்க வைத்தவருக்குக் கிடைத்த அங்கிகாரம் இந்த வசனம் .
இந்தக் கலைஞனுக்கு நன்றி சொல்வோம் !
இந்தக் கலைஞனைக் கொண்டாடுவோம் !
நன்றி : ஆனந்த விகடன் ,விக்கிப்பீடியா.
மேலும் படிக்க :
நம்மைச் சிரிக்க வைத்தவர்களுக்கு நன்றி !
ஜம்புலிங்கமே ஜடாதரா ...!
எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?
..................................................................................................................................................................