Friday, December 31, 2010

பரிமளா திரையரங்கம்

திரைப்படங்கள் நம்முடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு. ஒவ்வொரு
புதுப்படத்தையும் ஒரு திருவிழாவாக கொண்டாடியவர்கள் தான் நாம்.
திரையரங்கம் ஒவ்வொரு முறையும் பிரமாண்டமாக அலங்கரிக்கப்படும். இன்று விளம்பரத்தட்டிகள் மட்டுமே இடத்தை அடைக்கின்றன. காலமாற்றத்தால் சிறு நகரங்களில் இருக்கும் திரையரங்கங்கள் பழைய பொலிவை இழந்து விட்டன ,பெரும்பாலான திரையரங்கங்கள் காணாமல் போய்விட்டன.இந்த சூழலிலும் சிறு நகரத்தில் ஒரு திரையரங்கம் தப்பி வாழ்ந்து வருகிறது . அது "ஸ்ரீ தங்கராஜா திரையரங்கம்", வேடசந்தூர் , திண்டுக்கல் மாவட்டம். கடந்த இரண்டு மாதமாக அதன் பெயர், "பரிமளா திரையரங்கம்" , காரணம் சினிமா படப்பிடிப்பு .

               
              இந்தத் திரையரங்கம் 1965 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழமையான திரையரங்கமாகும் . முன்பு இந்த திரையரங்கத்தின் பெயர் நடராஜா திரையரங்கம் . பின்பு, ஸ்ரீ தங்கராஜா திரையரங்கம் என்று ஆனது . 1980 களில் சில சினிமா படங்களை (நீங்கள் கேட்டவை ,துடிக்கும் கரங்கள் ...(உண்மையா என்று தெரியவில்லை ))தயாரித்தும் உள்ளனர். எங்கள் பகுதியின் ஒரே ஒரு பொழுதுபோக்காக இந்த திரையரங்கம் இருந்தது . மாலை நேர காட்சியும், இரவு நேரக்காட்சியும் எப்பொழுதும் நிறைந்தே காணப்படும். உழைக்கும் வர்க்கத்தின் ஒரே கொண்டாட்டமாக திரைப்படங்கள் விளங்கின. திரையரங்கத்துக்கும் ரசிகனுக்கும் இடையே ஒரு சொல்லப்படாத உறவு இருந்துகொண்டே இருந்தது.

              
               நான் பள்ளிக்கூடம் போன காலங்களில் 4 மணிக்கு பிறகு இந்த திரையரங்கத்தில் நடக்கும் காட்சிகளைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன். என் நண்பனின் அப்பா அங்கு வேலை செய்ததால். என்ன படம் என்றும் தெரியாது , யார் நடிகர் என்றும் தெரியாது , ஆனால் அப்படி பார்க்கும்போது ஒரு உற்சாகம் கிடைக்கும். எனக்கு விவரம் தெரிந்து நான் பார்த்த முதல் திரைப்படம் "சின்ன தாயி ". அதன் பிறகு ஏராளமான படங்களை இந்த திரையரங்கத்தில் பார்த்தேன். இதில் Anagonda , Deep Blue Sea , Tomb Raider போன்ற ஆங்கிலப் படங்களும் அடங்கும். Jurassic Park படத்தை எங்கள் ஊரிலிருந்த இன்னொரு திரையரங்கத்தில் (சாந்தி ) பார்த்தேன். அந்த திரையரங்கம் கல்யாண மண்டபமாக மாறி தற்பொழுது வீடுகளாக மாறி விட்டது. தங்கராஜா திரையரங்கம் இன்றும் இயங்கி வருகிறது.


             தங்கராஜா திரையரங்கம் என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது
ஒரு குள்ளமான மீசைக்கார மனிதர். எனக்கு தெரிந்து இருபது ஆண்டுகளாக இந்த திரையரங்கத்துடனே வாழ்ந்து வருகிறார். இன்றைய சூழலிலும் அவர் இந்த திரையரங்கத்திலேயே இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது . இவரைப்போன்ற மனிதர்கள் தான் வாழ்க்கையை சுவாரசியம் ஆனதாக மாற்றுகின்றனர் ."தினசரி 4 காட்சிகள் ","தினசரி 4 காட்சிகள் ", " இன்று இப்படம் கடைசி " , "நாளை முதல் ".. போன்றவை புகழ்பெற்ற திரையரங்க வாசகங்கள். தொ(ல்)லைக்காட்சியின் பரவல் இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட ஆரம்பித்தது . மக்கள் திரையரங்கங்களை மறக்க ஆரம்பித்தனர் . DVD மற்றும் Internet இன் பரவல் திரையரங்கத்தை ஒட்டு மொத்தமாக மறக்க வைத்து விட்டது. "சமுதாயத்தின் சீர்கேடுகளுக்கு தொ(ல்)லைக்காட்சி முக்கிய காரணம் " என்று சொன்னது ஒரு நீதிபதி.


             வலுத்தது நிலைக்கும் (Survival of Fittest ) என்பது போல இயங்கி வந்த தங்கராஜா திரையரங்கத்தில் கடந்த மாதம் ஒரு மாறுதல். திரையரங்கத்தின் பெயர். "பரிமளா திரையரங்கம்"என்று மாறி இருந்தது.தோரணங்களும் பல்வேறு விதமான திரைப்படங்களின்
விளம்பர தட்டிகளும் திரையரங்கத்தை அலங்கரித்தன. முதலில் பார்த்தவுடன் யாரோ ஒருவர் இந்த திரையரங்கத்தை வாங்கிவிட்டார் என்று தான் நினைத்தேன் . பிறகு தான் தெரிந்தது , "பரிமளா திரையரங்கம்" என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு என்று. கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்கத்திற்கு மீண்டும் ஒரு பொலிவு வந்து விட்டது. தினமும் ஏராளமானோர் வந்து பார்த்து சென்றனர். எங்கள் பகுதி திண்டுக்கல் மாவட்டத்தின் வறண்ட பகுதியாகும் . அப்படிப்பட்ட எங்கள் பகுதிக்கு படப்பிடிப்பை கொண்டு வந்த பெருமை எங்கள் திரையரங்கத்தையும் அதை விடா முயற்சியுடன் அதை இயக்கி வந்த உரிமையாளரையும் சேரும். நடிகர் ஆரியா வந்த போதும் , விவேக் வந்த போதும் ஒட்டு மொத்த ஊரே அங்கு தான் இருந்தது.


               இந்தச் சூழலிலும் படப்பிடிப்பை ஒரு நிமிடம் கூட பார்க்காத சுவாரசியமான மனிதர்களும் வாழ்ந்து வருகின்றனர். தற்பொழுது படிப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்காலிகமாக கட்டப்பட்ட சுற்று சுவர் நீக்கப்பட்டது . இதைப்பார்த்த போது என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு இனம் புரியாத வலி வந்தது. அந்த வலி தான் இதை எழுத வைத்தது . எங்கள் திரையரங்கம் மீண்டும் பொலிவை இழந்து விட்டது. மீண்டும் "ஸ்ரீ தங்கராஜா " என்று மாறிவிட்டது. இனி தனது பணியைத் தொடங்கிவிடும்..


               திரையரங்கங்கள் வாழ்வதும் , காணாமல் போவதும் நம் கையில் தான் உள்ளது. திருட்டு DVD இல் படம் பார்ப்பதும் ,இணையத்தில் டவுன்லோட் செய்து படம் பார்ப்பதும் ஒரு வகையில் திருட்டு தான். திருட்டு DVD இல் ,இன்டர்நெட்டில்  படம் பார்க்கும் அனைவரும் திருடர்கள். இவர்கள், நம் ஊர் ஊழல்அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.
புதுப்படங்களைத் திரையரங்கத்தில் மட்டும் பாருங்கள்.
தரமில்லாத திருட்டு DVD வாங்கும் 30ரூபாய்க்கு தரமான பழைய
திரைப்படங்கள் மூன்று அடங்கிய DVD வாங்கலாம் (Eg . Moser Baer), படக்காட்சிகளும் துல்லியமாக இருக்கும் . தெளிவில்லாத திருட்டு DVDயை
யாரும்மறுபடியும் பயன்படுத்துவதில்லை. அது பூமிக்கு பாரமாக குப்பையாக
மாறுகிறது. இதைத் தவிர்த்து  தரமான DVD வாங்கிப் பார்த்து பாதுகாக்கலாம். ஒருவர் திருந்துவதால் எல்லாம் மாறிவிடவா போகிறது என்று
 நினைக்காதீர்கள். உங்களுக்கு நீங்கள் நேர்மையாக இருங்கள். மீண்டும்
திருட்டு தொழில் செய்து திருட்டுப்பழிசுமக்காதீர்கள்.
திரையரங்கங்களை வாழ விடுங்கள்...

வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் கொண்டாடுவோம்...!

வாழ்க்கை கொண்டடுவதற்கே...!
...........................................

Friday, December 3, 2010

நந்தலாலா - உயிரோட்டமான பயணம்

 இந்த வருடம் (2010 ) , நிறைய நல்ல தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளோம் . அந்த வகையில்  நந்தலாலா திரைப்படமும் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது . இந்தப்படத்தின் கதைக்களம் இதற்குமுன் நாம் அறியாதது . கால மாற்றத்தாலும் , உலகமயமாக்கலினாலும் நாம் பெரிதும் இழந்த ஒரு விசயம் ,"அன்பு ". அன்பைக் கொடுக்கவும், பெறவும் மறந்து கொண்டே போகிறோம் . அன்பால் எதுவும் சாத்தியம்.  அன்பில்லாமல் போனால் எதுவும் சாத்தியம் இல்லை . அன்பின் பிறப்பிடம், தாய் . அந்தத்  தாயைத் தேடி, ஆதரவற்ற இரு ஜீவன்கள் செய்யும் பயணம் தான் கதை . அன்பின் முக்கியத்துவம் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது .

                   பயணத்தை மையமாக வைத்து தமிழில் அதிக திரைப்படங்கள் எடுக்கப்படவில்லை . இது முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படம் . பயணத்தின் போது பல்வேறு விதமான மனிதர்களின் வாழ்க்கையும் பதியப்படுகிறது . பக்கம் பக்கமான வசனங்கள் தேவைப்படும் இடங்கள் ,வசனமேயில்லாமல்  அழகாக நகர்கின்றன . கலைக்கு எந்த மொழியும் தேவையில்லை . இந்தக்காட்சிகளைப் பார்க்கும்போது வசனமே இல்லாமல் ஒரு திரைப்படம் எடுத்தால் என்ன ?  என்று தோன்றுகிறது . இயற்கையான சூழலில் , இயற்கையான ஒளியில் முழுப்படமும் எடுக்கப்பட்டுள்ளது . இயற்கையான சூழல் என்றால் எதார்த்தத்தை மீறாத சூழல் . படத்தில்  நடித்த அனைவரும் நடித்தது போல் தெரியவில்லை , வாழ்ந்தது போல்தான் தெரிகிறது . 

                 இசையும் , ஒளிப்பதிவும் படத்தின் மிகப்பெரிய பலம் . படத்திற்கு உயிர் கொடுத்து , படம் முழுவதும் நம்மை உயிர்ப்புடன் வைத்து , உயிரோட்டமான மனிதர்களின் வாழ்க்கையை உணர வைக்கிறது ,  இசை .   இளையராஜா , இளையராஜா தான் . படம் முழுமைக்கும் ஆதிக்கம் செலுத்துகிறது அவரது இசை . சின்ன சின்ன காட்சிகளைக் கூட மிக அழகாக படம்பிடித்துள்ளார் , ஒளிப்பதிவாளர் . வாழ்க்கையில் , சின்ன சின்ன விஷயங்கள் எப்பொழுதுமே அழகானவை .  இயற்கையான ஒளியை வைத்தே அதிகபட்ச காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன . இயற்கை , இல்லாமல் இயங்க முடியாது . அன்பு ,  இல்லாமல் வாழ முடியாது .  

                  இதற்கு முன் திரைப்படங்களில் ,சொல்லப்படாத நிறைய விஷயங்கள் இந்தப்படத்தில் சொல்லப்பட்டுள்ளன . படம் முடியும் முன் வரும் ஆலமரக்காட்சியில் ஒரு சின்ன படத்தொகுப்பு பிழை உள்ளது .  மொத்தத்தில் ஒரு உயிரோட்டமான கதையை , உயிரோட்டமான முறையில் நடித்து , உயிரோட்டமான முறையில் நமக்கு படம்பிடித்துக்  காட்டியுள்ளார் , திரு . மிஷ்கின் அவர்கள் . எங்களுக்கு சித்திரம் பேசுதடி , அஞ்சாதே போன்ற படங்கள் வேண்டாம் . நந்தலாலா போன்ற வெவ்வேறு விதமான  கதையமைப்புள்ள ,  இன்னும் வித்தியாசமான நிறைய திரைப்படங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் ..

அனைவரும் கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் ..

இந்த படத்திற்கு நாம் கொடுக்கும் ஆதரவைப் பொருத்தே எதிர்காலத்தில் இது போன்ற நல்ல திரைப்படங்கள் பார்க்கக்கூடிய வாய்ப்பைப் பெறமுடியும் ..

ஒரு நல்ல அனுபவத்திற்கு வாழ்த்துகிறேன் ...


மேலும் படிக்க :

................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms