Showing posts with label குறி சிற்றிதழ். Show all posts
Showing posts with label குறி சிற்றிதழ். Show all posts

Saturday, September 17, 2022

தெய்வம் என்பதோர்... - தொ.பரமசிவன் !



" ஆளும் வர்க்கம், மக்களின் மனோபாவங்களை மாற்றி, சிந்தனைகளை மழுங்கடித்து அவர்களை ஆளும் அனுமதியைப் பெற்று விடுகிறது. ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது"

- அண்டோனியோ கிராம்ஷி

உலகெங்கிலும் வாழும் பல்வேறு விதமான மனித இனக்குழுக்கள் பல்வேறு விதமான பண்பாடுகளைக் கடைப்பிடிக்கின்றன. உலகவணிகமயமாக்கல் உலகெங்கும் கால்பதிக்கத் தொடங்கிய பிறகு ஒவ்வொரு இனக்குழுவும் கடைபிடித்து வந்த, தனித்த அடையாளங்களை உடைய பண்பாடுகளில் மாற்றங்கள் நிகழ ஆரம்பித்தன. உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் பெருமளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நமது சூழலுக்கு பொருந்தாத பலவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். இப்படியான மாற்றங்களில் அதிகம் பயனடைவது பெருமுதலாளிகள்தான்.

நியாயப்படி பார்த்தால் உலகமயமாக்கல் மூலம் எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. ஏழைக்கும் பணக்காரருக்கும் இருக்கும் இடைவெளி முன்பை விட மிகவும் அதிகரித்திருக்கிறது. 'இலாபம்' என்ற ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு செயல்படும் அடிப்படை அறமற்ற நிறுவனங்களை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கிறோம். அவ்வளவு எளிதில் மீண்டும் உருவாக்க முடியாத இயற்கை வளங்களை போகிற போக்கில் அழித்து பணமாக்கி வருகிறார்கள். இயற்கைக்கு தெரிந்ததெல்லாம் ஒன்றுதான், அது 'சமநிலை'யை நிலைநிறுத்துவது. தனது சமநிலையை ஏதோ ஒரு விதத்தில் இயற்கை தக்கவைத்துக் கொள்ளும். ஆனால் அந்த இயற்கையின் சமநிலைப்படுத்துதல் என்பது மனித இனத்தின் மீதான தாக்குதலாகவே இருக்கும். இதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

எந்த இனக்குழு கடைபிடிக்கும் பண்பாடாக இருந்தாலும் அங்கே கடவுள் வழிபாடு என்பது நிச்சயம் இருக்கும். நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் உருவான பிறகு மற்றைய வழிபாட்டு முறைகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. ஒவ்வொரு நிறுவன மதமும் சிறிய அளவிலான வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கும் இனக்குழுக்களை ஓட ஓட விரட்டுகின்றன. அவர்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. மதப் பிரிவினைவாதத்தை உருவாக்கி உலக மக்களைப் பிரிப்பதில் நிறுவன மதங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. ஒரு நாட்டில் வாழும் மக்களை பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று பிரிப்பது என்பது பெரும்பாலும் மதத்தை மையப்படுத்தியே அமைக்கிறது. ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மதம், இன்னொரு நாட்டில் சிறுபான்மையாக இருக்கிறது. ஆனால் சொல்லி வைத்தார்போல் ஒவ்வொரு நாட்டிலும் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் மீது வெறுப்புகளைக் கக்கி அவர்களை நசுக்குகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதம் என்பது பெரும்பான்மை மதமாக இருக்கிறது.ஆனால் 'இந்து' என்ற சொல்லே ஆய்விற்கு உரியதாக இருக்கிறது.

' வங்காளத்தில் நீதித்துறையை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் சர்.வில்லியம் ஜோன்ஸ் ஈடுபட்டார்.உள்நாட்டு நீதிமுறைகளை அவர் தொகுத்துத் திரட்டி அதற்கு இந்துச் சட்டம் ( Hindu Law) எனப் பெயரிட்டார். கிறித்தவரல்லாத, இசுலாமியரல்லாத பெருந்திரளான மக்களைக் குறிக்க ஐரோப்பியர் வழங்கிய ' இந்து' என்னும் சொல் முதன்முதலாக அதிகார அங்கீகாரம் பெற்றது '

1800களின் தொடக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. அதன் பிறகு இந்தச் சொல்லைக் கெட்டியாக பிடித்துக்கொண்ட ஸ்மார்த்த பார்ப்பனர்கள், இன்று ' இந்தியா இந்துக்களுக்கேச் சொந்தம் ' என்று கூவுகின்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள். உண்மையில் இந்து மதம் என்பது பல்வேறு விதமான சமயங்களையும், பண்பாடுகளையும் அழித்து அவற்றையெல்லாம் உள்வாங்கி, தனதாக்கிய மதம் என்றுதான் வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இன்றும் இந்து மதம் என்ற போர்வையில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக ஸ்மார்த்த பார்ப்பனர்களே இருக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் பார்ப்பனியத்தை ஆரம்ப காலம் முதலே எதிர்த்த நிலமாக தமிழ் நிலம் இருந்திருக்கிறது.

'1921இல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று, அறநிலையப் பாதுகாப்பிற்கான சட்டமுன்வரைவு 1924இல் வெளிவந்தது. இந்தச் சட்டமுன்வரைவில் இருந்த 'இந்து' என்ற சொல்லைத் தமிழ்நாட்டுச் சைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். 1924ஆம் ஆண்டு டிசம்பர் 'செந்தமிழ்ச் செல்வி' இதழில் பின்னிணைப்பாக இந்தச் சட்ட முன்வரைவு விமர்சனம் செய்யப்படுள்ளது. 'இந்து' என்ற சொல் எந்தவொரு சமயத்தையும் குறிப்பதாகாது. இந்து என்று சொல்லப்படும் பிரிவில் சைவம், வைணவம், லிங்காதயம், ஸ்மார்த்தம் என்று பல பிரிவுகள் உள்ளன. எனவே இந்த முன்வரைவு ஒவ்வொரு சமயத்தைப் பற்றியும் தனித்தனியாகக் கணக்கிட வேண்டும். இந்து என்ற சொல் ஸ்மார்த்தர்களுடையது என்பதே அந்த விமர்சனத்தின் சாரம்'.

எதிர்ப்புகளுக்கு இடையிலும் ' இந்து அறநிலையம் ' என்ற சொல்லே சட்டச் சொல்லாகியிருக்கிறது. அதுவே இன்றுவரை தொடர்கிறது.

நீண்ட வரலாறுடைய தமிழ்ப் பண்பாட்டிலும் கடவுள் வழிபாடு என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஏற்கனவே இங்கே இருந்த வழிபாட்டு முறைகளை, வழிபட்ட தெய்வங்களை இந்து மதம் தனக்குள் சேர்ந்துக் கொண்டாலும் கூட நாட்டார் தெய்வ வழிபாட்டிற்கும், நிறுவன தெய்வ வழிபாட்டிற்கும் இடையே மிகப் பெரிய அளவில் வித்தியாசங்கள் இருப்பதை தனது ஆய்வுகள் மூலம் தொ.ப. விளக்குகிறார். 'பண்பாடு குறித்த ஆய்வுத்துறையில் தமிழ்நாடு இன்னும் தொடக்க நிலையிலேயே உள்ளது' என்றுதான் இந்த கட்டுரை நூலையே தொ.ப. தொடங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிகளவில் பண்பாட்டாய்வுகள் செய்யப்பட வேண்டிய கட்டாயமும் தற்போது உருவாகியிருக்கிறது.

மற்ற தொன்மையான பண்பாடுகளைப் போல தமிழ்ப் பண்பாட்டிலும், முதன்மையான வழிபாடான 'தாய்த் தெய்வ வழிபாடு' எவ்வாறு இருந்தது; இருக்கிறது என்பதை ஒரு நீண்ட கட்டுரை மூலம் விளக்குகிறார். தெய்வ வழிபாட்டின் போது நாம் கவனிக்க மறந்த விசயங்களை ஆய்வுகள் மூலம் விளக்குகிறார். வியப்பூட்டும் நிறைய விசயங்கள் 'தாய்த் தெய்வம்' என்ற கட்டுரையில் இடம்பெற்றிருக்கின்றன.

' பழந்தமிழர்களின் தாய்த் தெய்வக் கோயில்களான அம்மன் கோயில்கள் 99 விழுக்காடு வடக்கு நோக்கியே அமைந்துள்ளன என்பதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் முப்புறமும் கடல் சூழ்ந்த நாடாகவே ( அதாவது இன்றைய கேரளத்தை உள்ளிட்டு) தமிழகம் இருந்துள்ளது. எனவே பகைப்படை வடதிசையிலிருந்து மட்டுமே வரமுடியும். தெய்வம் வடக்குத் திசை நோக்கித் தன் மக்களைக் காக்க ஆயுதம் ஏந்தி நிற்கின்றது என்பதே தொல் வரலாற்று உண்மையாகும்'.

இப்படி நிறைய தகவல்கள் இக்கட்டுரையின் வாயிலாக நமக்குக் கிடைக்கின்றன. பெருந்தெய்வ கோயில்களில் ஆண் தெய்வத்திற்கு அருகிலிருக்கும் பெண் தெய்வங்கள் கைகளில் மலர்களை ஏந்தியிருக்கும் என்றும், ஆனால் தாய்த் தெய்வங்களோ பெரும்பாலும் சிங்கத்தின் மீது அமர்ந்து கைகளில் ஆயுதங்களுடன் போருக்கு ஆயத்தமான நிலையில் இருக்கும் என்றும், இவை இரத்தப்பலி பெறுகின்ற தெய்வங்கள் என்றும் தொ.ப.குறிப்பிடுகிறார். சங்க இலக்கியத்திலிருந்தும் , கல்வெட்டுகள் மூலமாகவும் , சடங்குகள் மூலமாகவும் தமிழகத்தில் இருக்கும் தாய்த் தெய்வ வழிபாடு பற்றி தெளிவாக விளக்குகிறார்.

' தாங்கள் வணங்குகின்ற பகவதியம்மன் ஒரு சமணத் தெய்வமென்பதும் முனீஸ்வரர் என்ற பெயரால் அறியப்படும் தீர்த்தங்கரர் சமண மதத்தவர் என்பதும் வழிபடுகின்ற "இந்து" மக்களுக்குத் தெரியவே தெரியாது' என்கிறார், தொ.ப.

' உலக வரலாறு நெடுகிலும் ஒரு பிரிவின் வழிபாட்டுத்தலத்தை மற்றவர் இடிப்பதும் அழிப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. அரசியல் என்பது மத அடிப்படைவாத அரசியலாக மாறிக்கொண்டிருக்கும் காலமிது. அடுத்தவர் வழிபாட்டிடத்தை இடிப்பதும் அழிப்பதும் அரசர்களும் அமைச்சர்களும் அதிகாரிகளும் செய்கின்ற வேலை என்பதே அன்றும் இன்றும் வரலாறு ஆகும். சனநாயக உணர்வுள்ள எளிய மக்கள் அதனை ஒருபோதும் செய்ய மாட்டார்கள்.'

வள்ளலார் பற்றிய கட்டுரையில் எப்படியான சூழலில் வள்ளலார் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார் என்பதை சான்றுகளுடன் விளக்குகிறார். சமய வழிபாட்டு முறைகளில் இருந்த மூடநம்பிக்கைகளை எதிர்த்ததுடன் , அங்கே கடைபிடிக்கப்பட்டு வந்த சாதிய பாகுபாடுகளையும் கடுமையாக எதிர்த்திருக்கிறார். 'அடியவருக்கு உணவளித்தல் என்ற கோயில் நடைமுறையினையும் சாதி, மதம் கடந்து ஏழை, எளியவர்களுக்கு உணவளித்தல் என்ற நடைமுறையாக மாற்றிக் காட்டினார்,வள்ளலார் ' என்கிறார், தொ.ப.

'ஆழ்வார் பாடல்களும் கண்ணன் பாட்டும்' கட்டுரையில் இராம, கிருஷ்ண அவதாரங்களில் தமிழ்நாட்டு வைணவம் கிருஷ்ண அவதாரத்தையே பெரிதும் கொண்டாடியது. கிருஷ்ணன் என்னும் கண்ணனுக்கு மகிழிணையாக வடநாட்டு இலக்கிய மரபுகள் ராதையைக் கொண்டாடியது போலத் தமிழிலக்கியங்கள் நப்பினையைக் கொண்டாடின, என்று தொ.ப. கூறுகிறார்.

கம்பராமாயணம் இங்கு செல்வாக்கு பெற்றிருந்தாலும் கூட ராமன் செல்வாக்கு பெறவில்லை. கம்பரின் கவித்திறமையை வெளிப்படுத்துவதாகவே கம்பராமாயணம் இங்கே பார்க்கப்படுகிறது. ஒரு வேளை இங்கே கண்ணனுக்கு பதில் ராமன் செல்வாக்கு அடைந்திருந்தால் தற்போது ஆளும் பாஜக அரசிற்கு அது வசதியாகப் போயிருக்கும்.

' கண்ணனைக் குழந்தையாகவும் நாயகனாகவும் தெய்வமாகவும் மட்டுமே ஆழ்வார்கள் பார்க்க பாரதியோ, தாயாகவும் தோழனாகவும் சற்குருவாகவும் ஆண்டானாகவும் அடிமையாகவும் நாயகியாகவும் பார்க்கிறான்.'

' பாரதி முழுமையான விடுதலையினை யாசித்த ஒரு கவிஞர். ' வேண்டுமடி எப்போதும் விடுதலை' என்று மீண்டும் அடிமைத்தளையில் சிக்க மறுக்கின்ற கவிஞர். பாரதியின் விடுதலை உணர்வு அரசியல் தளத்தில் மட்டுமல்லாது கலைத் தளத்திலும் பரவிநிற்கின்றது. அதிகாரம் சார்ந்த எல்லா வகையான ஒழுங்கு முறைகளையும் மீற விரும்புவது கவிஞரின் மனமாகும்.'

வைணவக் குடும்பத்தில் பிறக்காத பாரதியார், வைணவ கடவுளாகப் பார்க்கப்படும் கண்ணனை முன் வைத்து எழுதிய 'கண்ணன் பாட்டு ' என்ற கலைப் படைப்பைக் கண்டு தொ.ப.வியக்கிறார்.

பன்னிரு ஆழ்வார்களில் ஆண்டாளும், பெரியாழ்வாரும் ( ஆண்டாளின் தந்தை ) பார்ப்பனரல்லாத மக்கள் திரளின் வாழ்வினையும், உணர்வுகளையும் உள்வாங்கி பாடியுள்ளார்கள் என்பதை தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் 'பண்பாட்டுக் கலப்பு ' எனும் கட்டுரையின் வாயிலாக விளக்குகிறார்.

' நாட்டார் தெய்வங்கள் எவையும் 'முன்னே வந்து' வரம் தரும் தெய்வங்கள் அல்ல; 'பின்னே நின்று' பாதுகாப்புத் தரக்கூடியன. அவை அழிக்கும் ஆற்றல் அற்றவை. மாறாக வயல் களத்திலும், அறுவடைக் காலத்திலும், கண்மாய்க் கரையிலும், ஊர் மந்தையிலும், ஊர் எல்லையிலும் தூங்காமல் நின்று காவல் காக்கக்கூடியன. '

'நாட்டார் தெய்வங்களில் 90%க்கு மேல் பெண் தெய்வங்கள் என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். நாட்டார் தெய்வக் கோயில்களில் மட்டுமே தெய்வத்தைத் தன்மேல் நிறுத்திச் சாமியாடவும் குறி (அருள்வாக்கு) சொல்லவும் அடியவர்களுக்குத் திருநீறு வழங்கி அருள் பாலிக்கவும் பெண்களுக்கு உரிமை இருக்கின்றது. இது மேல் சாதி மரபில் பெருந்தெய்வக் கோயில்களில் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. '

நாட்டார் தெய்வங்களை வழிபடும் எல்லா மனிதர்களையும் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுதலை செய்ய முடியாது. ஆனால் அவர்கள் மதம் என்ற அதிகார அமைப்பிற்குள் சிக்குவதை தடுக்க நாம் நாட்டார் தெய்வங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார் தொ.ப.

பக்தி இலக்கியங்கள் சார்ந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருப்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இத்தகைய ஆய்வுகளின் முக்கியத்துவத்தை கா.சிவத்தம்பியின் ஆய்வுகள் மூலமாக விளக்குகிறார்.

'வேதத்தை மட்டுமே கடவுளாகக் கொண்ட ஸ்மார்த்தர்கள், ஆகமங்களையும் கோயில் வழிபாட்டையும் முன்னிறுத்தும் சைவ வைணவர்கள், இந்த இரண்டு நெறிகளுக்குள்ளும் அடங்காத தொல்பழஞ் சமயக் கூறுகளையுடைய பெருவாரியான மக்கள் திரள் இவர்கள் அனைவரையும் 'இந்துக்கள்' என்ற கட்டுக்குள் அடக்க முயலுவதையே நாம் சமய ஆதிக்க உணர்வு என்கிறோம். இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 'இந்து' என்ற மேலைச் சொல்லாடலுக்கு நேரிடையான வரைவிலக்கணம் எதனையும் தரவில்லை என்பது இந்துத்துவவாதிகளுக்கு வசதியாகப் போய்விட்டது. அந்தச் சொல் பல்வேறு சமயங்களையும் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நெறிகளையும் குறிக்கும் சொல் என்பதால் வெவ்வேறு சமயங்களுக்குமான வரம்புகளை முறைப்படுத்திச் சட்டமாக்க வேண்டும் '

'இந்து' என்ற சொல்லுக்கான அரசியல் சட்ட வரைவிலக்கணம் உருவாக்கபட வேண்டும் என்பதே தொ.ப.வின் விருப்பமாகும்.

'தெய்வம் என்பதோர்...' என்ற தலைப்பு 'தெய்வமென்பதோர் சித்தமுண்டாகி' என்னும் திருவாசக அடியிலிருந்து பெறப்பட்டதாக தொ.ப. என மக்களால் அன்பாக அழைக்கப்படும் தொ.பரமசிவன் குறிப்பிடுகிறார். 'காலச்சுவடு' பதிப்பகம் இந்நூலைப் பதிப்பித்துள்ளது. உண்மையிலேயே தெய்வ வழிபாடு குறித்தான தட்டையான பார்வையை இப்புத்தகம் மாற்றியிருக்கிறது

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்

மேலும் படிக்க :


Thursday, March 4, 2021

நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்!

 


தமிழ்த் திரையுலக வரலாற்றை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. அப்படிப்பட்ட கலைவாணரின் வரலாற்றை கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கால இயந்திரத்தில் பயணம் செய்து நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார், அறந்தை நாராயணன். போகிற போக்கில் துதிபாடும் மனநிலையில் எழுதாமல் ஆய்வுப்பூர்வமாக தமிழக அரசியல்,கலை வரலாற்றுடன் சேர்த்தே கலைவாணரையும் எழுதி இருக்கிறார். தரவுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. 


'நகைச்சுவை அரசு' , 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ', 'கலைவாணர் ' என பல பட்டங்கள் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நூலாசிரியர் ஏன் 'நாகரீகக் கோமாளி ' எனும் பட்டத்தை நூலின் தலைப்பாக தேர்ந்தெடுத்தார் ? என்ற கேள்விக்கான பதில் நூலாசிரியரின் ' என்னுரை' யில் கொடுக்கப்பட்டிருக்கிறது. கலைவாணர் தனக்குத்தானே சூட்டிக்கொண்ட பட்டப்பெயர் ' நாகரீகக் கோமாளி ' என்பதாகும். அதனால் அதையே இப்புத்தகத்தின் தலைப்பாக வைத்ததாக அறந்தை நாராயணன் கூறியிருக்கிறார். 

குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலேயே நாடகத் துறைக்கு வந்து தங்களின் திறமைகளை மெருகேற்றி சினிமாவிலும் வெற்றி பெற்ற வரலாறு உலகெங்கிலுமே பலருக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட வரலாறு தான் கலைவாணருடையதும். நாடக நடிகர்களும், நாடக கம்பெனிகளும் தொடர்ந்து செல்வாக்காக எந்தக்காலத்திலும் இருந்ததில்லை என்பதையே தமிழக நாடக வரலாறு வெளிப்படுத்துகிறது.சினிமாவின் வரவு நாடக நடிகர்களுக்கு புது வாழ்வை அளித்ததையும் காண முடிகிறது. ஆனால் மக்கள், நாடகங்களையும் கொண்டாடியிருக்கிறார்கள், சினிமாவையும் கொண்டாடியிருக்கிறார்கள். 

சினிமாவின் ஆரம்ப காலங்களில் மற்றவர்கள் உருவாக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தவர், பின்னாட்களில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி அவரது காட்சிகளை அவரே உருவாக்கி நடிக்க ஆரம்பித்தார். உடுமலை நாராயணகவி போன்றவர்களுடன் சேர்ந்து இவர் பாட வேண்டிய பாடல்களையும் உருவாக்கினார். கலைவாணர்-மதுரம் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணியாகவே திரைவாழ்வின் கடைசி வரை இருந்திருக்கிறது. நிஜ வாழ்விலும் மதுரம் , கலைவாணரின் வாழ்வில் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார். லட்சுமிகாந்தன் கொலைவழக்கு காலங்களில் கலைவாணரை வெளியே கொண்டு வர படாதபாடு பட்டிருக்கிறார். பெரும் வள்ளலாக இருந்த போதிலும் கலைவாணர் சிறையில் இருந்த காலங்களில் வழக்குச் செலவிற்காக அலைந்து திரிந்தும் மதுரத்திற்கு போதிய பண உதவி கிடைக்கவில்லை. இது குறித்து வருத்தம் உண்டானாலும் கடைசி வரை தனது வள்ளல் குணத்தை கலைவாணர் மாற்றிக் கொள்ளவேயில்லை.

மற்ற துறைகளைப் போல நாடகத் துறையிலும் தீண்டாமை இருந்திருக்கிறது. பிராமண நடிகர்களுக்கு தனிச்சாப்பாடும், மற்றவர்களுக்கு தனிச்சாப்பாடும் என்றிருந்த முறையை 1934ல் தனது மதிநுட்பத்தால் மாற்றிக் காட்டியிருக்கிறார், கலைவாணர். மற்ற இடங்களில் எப்படியோ அவர் இருக்கும் இடங்களில் பாரபட்சம் இல்லாமல் இருப்பதேயே விரும்பியிருக்கிறார். கலைவாணர் நடத்திய நிகழ்வுகளில் பெரிய தலைவர்கள் பங்கெடுத்தாலும் சாப்பாடு என்பது ஒரே மாதிரியாகத்தான் போடப்பட்டுள்ளது. 

சமூக சீர்திருத்தக் கருத்துகளை ஆரம்ப கட்டங்களிலேயே தனது நடிப்பில் சேர்க்க ஆரம்பித்து விட்டார், கலைவாணர். இயக்குநர் யாராக இருந்தாலும் இவரது காட்சிகளை இவரே உருவாக்கிக் கொண்டதால் ஒரு தொடர்ச்சியை இவரது படங்களில் காண முடிகிறது. திரைப்படம், பக்திப்படமாக இருந்தாலும் அந்த பக்திக்குள் இருக்கும் மூடத்தனங்களை பகடி செய்வதாக கலைவாணரின் பாத்திர அமைப்பு இருக்கும். தமிழக நகைச்சுவை நடிகர்களுக்கு ஆரம்ப காலம் முதலே ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனே முதல் காரணம். அதே போல தமிழ் திரைப்பட வரலாற்றில் நகைச்சுவை, வெறும் நகைச்சுவையாக கடந்து போய்விடாமல் சமூகசீர்திருத்த கருத்துகள் இன்று வரை நகைச்சுவை காட்சிகளில் இடம்பெறுவதற்கும் கலைவாணரே முன்னோடி. 

கலைவாணர் தனது வாழ்நாளில் பலரை நல்வழிபடுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆருக்கும் இருமுறை அறிவுரை கூறியிருப்பது நமக்குத் தெரிய வருகிறது. அதில் ஒன்று, 1938ஆம் ஆண்டு படபிடிப்பிற்காக கல்கத்தா சென்றிருந்த போது ஒரு வாய்க்காலைத் தாண்டும் போது எம்.ஜி.ஆரின் செருப்பு ஒன்றின் வார் அறுந்துவிடுகிறது. அறுந்த செருப்பையும், மற்றொரு செருப்பையும் அங்கேயே விட்டுவிட்டுச் சென்று விடுகிறார். மறுநாள், கலைவாணரிடம் வந்து " வாங்க, செருப்பு வாங்க போகலாம் " என்று எம்.ஜி.ஆர். கூப்பிடுகிறார். " நாளைக்கு போகலாம் " என்று பதிலளிக்கிறார், கலைவாணர். மறுநாள் வந்த எம்.ஜி.ஆர்., " கடைக்கு போலாம்", என்று கலைவாணரைக் கூப்பிடுகிறார். 

" போகலாமா ? பணம் எடுத்துண்டையா ? இரு ! சட்டையை மாட்டிக்கிட்டு வர்றேன் !" என்று கூறிய , கிருஷ்ணன் உள்ளே போய், "ராமச்சந்திரா! " என்று குரல் கொடுக்கிறார்.

ராமச்சந்திரன் உள்ளே போகிறார்.

"அந்த நாற்காலியில் உட்கார்!" என்று கூறிய கிருஷ்ணன், கீழே கிடந்த ஒரு பொட்டலத்தைக் காட்டி , " இந்தச் செருப்பு உன் காலுக்குச் சரியா இருக்கா, பாரு!" என்கிறார் 

பொட்டலத்தைப் பிரித்ததும் எம்.ஜி.ராமச்சந்திரன் திகைத்தார். முதல் நாள் அவர் விசிறி எறிந்த அதே செருப்புக்கள் புதுப்பிக்கப்பட்டு , மெருகிடப்பட்டிருந்தன. ஏதோ பேச முயன்றார் எம்.ஜி.ராமச்சந்திரன். முந்திக் கொண்டார் கிருஷ்ணன்:

" உன்னுடைய பழைய செருப்புத்தான். நீ வீசி எறிந்துவிட்டுப் போனதை பின்னால் வந்து கொண்டிருந்த நான் பார்த்தேன். அப்பவே பத்திரமா எடுத்து வந்துவிட்டேன். ஆணி அடித்து, தைத்து சரி பண்ணிட்டேன் இப்போ இதுக்கு என்ன குறை ? இன்னும் ஆறுமாசம் வரும். உன்னையும் உன் அண்ணனையும் பிரிந்து அறியாத உங்கம்மா , நீங்க கல்கத்தா வருவதற்கு ஒத்துக் கொண்டது ஏன் ? நீங்க சினிமாவிலே நடிச்சு முன்னேறுவீங்க. நல்லா சம்பாதிப்பீங்க, பணம் அனுப்புவீங்கனு எதிர்பார்த்துத் தானே ? செருப்புதாதானே ? பழசென்ன, புதிசென்ன ? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்றார். 

இது ஏற்கனவே பலருக்கும் தெரிந்த செய்தி தான் என்றாலும் மீண்டும் குறிப்பிடக் காரணம், " பழசென்ன , புதிசென்ன? முடிஞ்சவரை எதையும் முழுசா பயன்படுத்திப் பழகணும் " என்ற கலைவாணரின் வார்த்தைகள் தான். உலகமயமாக்கல் விரிவடைய , விரிவடைய 'எதையும் முழுதாகப் பயன்படுத்த வேண்டும்' என்ற மனநிலை நம்மிடையே மறைந்து வருகிறது. தேவையில்லாமல், தேவையில்லாத பொருட்களை வாங்கி குவித்துக்கொண்டே இருக்கிறோம். இந்த மனநிலை மாற வேண்டும். முடிந்தவரை எதையும் முழுதாக பயன்படுத்த நாம் முன்வர வேண்டும். 

கலைவாணரின் அசோகா பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வருமானவரி செலுத்த அவரின் உதவியாளர், திருவேங்கடம் கணக்குகளை எடுத்துக் கொண்டு கோவையில் உள்ள வருமானவரி அலுவலகத்திற்குச் சென்றார். ஹனுமந்தராவ் என்பவர் அதிகாரியாக இருந்தார். கணக்கைப் பார்த்தார் ஹனுமந்தராவ். 

" தர்மம், தர்மம் என்று தான் கணக்கில் பெரும்பகுதி காணப்படுகிறது !இதெல்லாம் உண்மையா? உண்மையாக இருந்தாலும் வரி விலக்கு எப்படிக் கொடுக்க முடியும் ? " என்று கேட்கிறார், ஹனுமந்தராவ். 

உதவியாளர், திருவேங்கடம், " நீங்கள் வேணும்னா , ஆபீஸர் என்பதை மறந்து சென்டிரல் ஸ்டுடியோவுக்கு ஒரு சாதாரண மனிதர் போலப் போங்க ! என் மகளுக்குக் கல்யாணம், வரதட்சிணையின் காரணமாக நிற்கிறது என்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லிப் பாருங்க! அவர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் என்பதைப் பார்த்துவிட்டு வந்து இந்தக் கணக்குகளைச் சரி பாருங்க !" என்றார்.

திருவேங்கடம் ஒரு பேச்சுக்குத்தான் அப்படிச் சொன்னார். ஆனால், ஹனுமந்தராவ், உடனேயே சென்ட்ரல் ஸ்டுடியோவிற்கு சென்று என்.எஸ்.கிருஷ்ணனிடம் ,

" ஒரு பெண்ணைப் பெத்தவன் நான். ஆயிரம் ரூபாய் இல்லாததால் பெண்ணின் கல்யாணம் தடைபடும் போலிருக்கிறது " என்றார், ஹனுமந்தராவ்.

" ஆயிரம் ரூபாய்க்காக நல்ல காரியம் நிற்க வேண்டாம்.தயவு செய்து கொஞ்ச நேரம் இருங்கள். என்னுடைய ஆள் இன்கம்டாக்ஸ் ஆபிசுக்குப் போயிருக்கிறார். வந்தவுடன் நீங்கள் கேட்ட தொகையுடன், உங்களை எனது காரிலேயே அனுப்பி வைக்கிறேன்" என்றார் கிருஷ்ணன். 

அசந்து போனார், இன்கம்டாக்ஸ் ஆபீசர் ஹனுமந்தராவ். " உனக்கு கர்ணன் என்ற பெயரை வைத்திருக்கணும் .தவறாக, உன் அப்பா உனக்கு கிருஷ்ணன்னு பேர் வச்சிட்டார் ! அப்பா கிருஷ்ணா! நான் தான் இன்கம்டாக்ஸ் ஆபீசர்! உன்னுடைய ஆள் என்னிடம் வந்து உனது தர்ம குணத்தைக் கூறினார். நம்பாமல் நானே வந்தேன். இனி, நான் இருக்கும் வரை உனது தர்மச் செலவுத் தொகைக்கு வரி விலக்குத் தருகிறேன். ஆனால், நீ கொடுக்கும் தொகைக்கு வவுச்சர் மட்டும் வாங்கி வைத்துக் கொள் ! " என்று கூறிவிட்டு, ஹனுமந்தராவ் புறப்பட்டார்.

கலைவாணரின் வள்ளல் குணத்திற்கு இந்தச் சம்பவம் உதாரணமாகச் சொல்லப்படுகிறது.யாரென்றே தெரியாதவர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் தன் வாழ்நாள் முழுவதும் வாரி வாரி வழங்கியிருக்கிறார்.பல்வேறு அமைப்புகளுக்கு, தனிநபர்களுக்கு நிதியுதவி நாடகங்களை தொடர்ந்து நடத்திக் கொடுத்திருக்கிறார். வள்ளல்களாக நிறைய பேர் வாழ்ந்து மறைந்திருக்கலாம். ஆனால் என்.எஸ்.கிருஷ்ணன் போல நிபந்தனையற்ற வள்ளலாக இருந்திருப்பார்களா ? என்பது சந்தேகமே. 

"நியாயம் என்று தனக்குத் தெரிந்த எதையும் வெளியில் சொல்லாமலே அதற்காகப் போராடாமலே அவரால் இருக்க முடியாது; இருக்கவும் மாட்டார். இதுதான் கலைவாணரின் உள்ளம்." என்று எம்.ஜி.ஆர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். பார்ப்பன எதிர்ப்பை தனது திரைப்படங்களில் வலுவாகவே பதிவு செய்திருந்தாலும் எந்தக் கட்சியையும் சாராதவராகவே கடைசி வரை வாழ்ந்திருக்கிறார். முதன் முதலாக நடிகர்களுக்கென சங்கம் தொடங்கியவர். நடிகர்கள், கூத்தாடிகள் என அழைக்கப்பட்டதை மாற்றி கலைஞர்கள் என அழைக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்திருக்கிறார்.
இயக்குநர்கள் கையில் இருந்த தமிழ் சினிமா, கதாநாயகர்கள் கைக்கு மாறுவதை கண்டு வறுத்தம் அடைந்திருக்கிறார். 

1948 ஜனவரி 21ம் தேதி கம்யூனிச தலைவர் ப.ஜீவானந்தத்திற்கும், பத்மாவதிக்கும் காதல் திருமணம் எளிய முறையில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ,சொந்தக்காரர்களுக்கும்,நண்பர்களுக்கும் தெரிவிக்காமல் எளிதாக நடைபெற்ற செய்தி இரண்டு நாளுக்கு பிறகே கலைவாணருக்கு தெரிய வந்தது. " நாடறிந்த தலைவருக்கு , அதுவும் என் நாஞ்சில் நாட்டுத் தலைவருக்கு ரகசியக் கல்யாணமா ? இதை நான் அனுமதிக்க மாட்டேன் !" என்று சொன்ன கலைவாணர் " ஜீவா - பத்மா திருமணப் பாராட்டு விழா ! ஜனவரி 30-ம் நாள் மாலை " என்று பத்திரிகைகளில் விளம்பரம் செய்தார். திடீரென, ஜனவரி 30ம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் , கலைவாணர் விரும்பிய ஜீவா -பத்மா திருமண வரவேற்பு விழா நடைபெறவில்லை.

மதுவிலக்கு குறித்தான கருத்துகளைப் பரப்ப 'நல்லதம்பி ' திரைப்படத்தின் பெரும்பகுதியை ஒதுக்கினார், கலைவாணர். அவர், காந்தி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட போது கதறி அழுதிருக்கிறார். காந்திக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக அவரது மனதில் இருந்தது. அதற்கு செயல் வடிவம் கொடுக்க தனது சொந்த ஊரான நாகர்கோயிலில் உள்ள நகரப் பூங்காவில் யாரிடமும் பணம் பெறாமல் அன்றைய மதிப்பில் நாற்பதாயிரம் ரூபாய்க்கும் மேலாக செலவு செய்து 60 அடி உயர காந்தி நினைவுத் தூணை எழுப்பியிருக்கிறார். இன்றும் அந்த தூண் இருக்கிறதா என்று தெரியவில்லை? 

என்.எஸ்.கிருஷ்ணனை 'தமிழ்நாட்டின் சார்லி சாப்ளின் ' என்று குறிப்பிடதற்கு அவரது பதில்,
" சார்லி சாப்ளினை ஆயிரம் பங்கு போட்டு வர்ற ஒரு பங்குக்கு கூட நான் சமானம் இல்லே. என்னைவிடச் சிறந்த நடிகருங்க வட நாட்டிலே , மலையாளத்திலே, தெலுங்கு தேசத்திலே எத்தனையோ பேர் இருக்காங்க ! ஆனா, அவங்க யாரும் இந்த என்.எஸ்.கிருஷ்ணன் புகழப்படுவது போலப் புகழப்படுவதில்லை.அதற்குக் காரணம் அவர்களிடம் தமிழர்களைப் போல அவ்வளவு அதிகமான தாய்மொழிப் பற்று இல்லாமல் போனதுதான். தமிழர்களிடம் தமிழ் மொழி மேலே ரொம்பப் பற்று ! அதனாலே, இந்த என்.எஸ்.கிருஷ்ணனிடமும் பற்று ! அவ்வளவுதான் !".


" சேலத்திற்குச் சென்றிருந்த கலைவாணர் ஒரு தியேட்டரில் , 'மந்திரி குமாரி' படத்தைப் பார்த்தார்; வசனச் சிறப்பு கண்டு பிரமித்தார்; மறுநாள் , காலையில், சேலத்தில் தங்கியிருந்த, அப்படத்தின் கதை - வசன ஆசிரியர் மு.கருணாநிதியைச் சந்தித்தார்; வாழ்த்தினார்; பாராடாடினார். "நான் தயாரிக்கத் திட்டமிட்டுள்ள 'மணமகள்' படத்திற்கு நீங்கள் தான் திரைக்கதை- வசனம் எழுத வேண்டும் " - என்று கலைவாணர் வலியுறுத்தினார். 
எழுத்து ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் பேசி முடிக்கப்பட்டது. கலைவாணரின் கட்டாயத்தால் , மு.கருணாநிதியின் குடும்பம் சென்னையில் குடியேறியது. "
கலைஞர் மு.கருணாநிதி சென்னையில் குடியேறியதற்கு கலைவாணரும் ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்கிறார்.

"1956 நவம்பர் முதல் நாள் . கேரளத்தின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சியிலிருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு , செங்கோட்டை உள்ளிட்ட இரண்டாயிரம் சதுரமைல் பரப்பளவுள்ள தமிழ் மண் தாய்த் தமிழகத்தோடு இணைந்த நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. அந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்களில் பலருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்படவில்லை. ஒதுக்கப்பட்டவர்களில் ஒருவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 

1945ம் ஆண்டு தொடங்கிய திருவிதாங்கூர் தமிழரியக்கத்திற்கு ஏராளமாகப் பண உதவிகளைத் தாராளமாகச் செய்தவர் கலைவாணர், அவர் மாத்திரம் இல்லாதிருந்தால் , இயக்கம் தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் மாண்டு மடிந்து போயிருக்கும். அத்தகைய "கலைவாணருக்கு அழைப்பில்லையா ?" என்று நாகர்கோயில் திலகர் வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் கொதித்தனர். அதே நவம்பர் முதல் தேதி மாலையிலேயே பெரிய வீதியில் இணைப்பு விழாவைத் தங்கள் சொந்த முயற்சியில் திலகர் வாலிபர் சங்கத்தினர் நடத்தினர். " 

சமூக சீர்திருத்தம் என்பதையே முழுமூச்சாக கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை பயன்படுத்தி இருக்கிறார்,கலைவாணர். பெரியாரின் தாக்கத்தால், பார்ப்பன எதிர்ப்பு, சாதி மறுப்பு திருமணம் ,விதவை மறுமணம், ஆண் பெண் சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், கல்வியின் முக்கியத்துவம் என்று இன்று நாம் முற்போக்கு என்று சொல்லும் அனைத்தையும் அவரது படங்களில் அப்போதே வெளிப்படுத்தியுள்ளார். 

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், கலைக்காகவும், கலைஞர்களுக்காகவும் மட்டுமல்லாமல் மக்களுக்காகவும், மண்ணிற்காகவும் வாழ்ந்து மறைந்த மக்களின் கலைஞர்!

இந்தப் புத்தக உருவாக்கத்திற்கான அறந்தை நாராயணன் அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது !

தலைப்பு - 'நாகரீகக் கோமாளி என்.எஸ்.கிருஷ்ணன்', 
ஆசிரியர் - அறந்தை நாராயணன், வெளியீடு - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் .

அச்சு எழுத்துரு, மற்ற புத்தகங்களில் உள்ளதை விட சிறியதாக இருந்ததால் வாசிக்க சிரமமாக இருந்தது. பதிப்பகத்தார் அடுத்த பதிப்பின் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

இக்கட்டுரை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரிலிருந்து வெளிவரும் 'குறி' எனும் சிற்றிதழில் வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :


Friday, October 4, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 10 !



இந்தியாவில் பாலியல் சார்ந்த சிக்கல்கள் அதிகமாக இருப்பதற்கு 'பாலியல் வறட்சி' தான் காரணம் என்று தொடர்ந்து சொல்லப்படுகிறது. 'பாலியல் வறட்சி' மட்டுமே காரணமல்ல, 'பாலியல் வறட்சி'யும் ஒரு காரணம் என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. நாளுக்கு நாள் இந்திய சமூகம் அறிவியலை புறந்தள்ளுவது தான் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரு சில விசயங்களில் தொழிற்நுட்பங்களை மிக வேகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். மற்ற பல விசயங்களை அறிவியல் கண் கொண்டு பார்ப்பதும் இல்லை. எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துவதும் இல்லை. இந்த மனநிலையால் அதிகம் பயனடைவது மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டும் மத அடிப்படைவாதிகள் தான். மிகச் சாதாரண விசயங்களை கூட அறிவியல்படி பார்ப்பதில்லை. இதனாலேயே மற்ற நாடுகளைப் போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் இங்கே நிகழ்வது இல்லை. பாலியல் சார்ந்த விசயங்களையும் அறிவியல்படி பார்க்காதது தான் இந்திய சமூகம் தங்களுக்குள்ளே உருவாக்கிக்கொள்ளும் அதிகப்படியான பாலியல் சிக்கல்களுக்கும், பாலியல் வறட்சிக்கும் காரணம்.

பாலியல் குற்றங்கள் என்பது எல்லா நாடுகளிலும் நிகழ்கின்றன. ஆனால் அதிகப்படியான பாலியல் சிக்கல்கள் பெண்களை அடிமைகளாக நடத்தும் பின்தங்கிய நாடுகளிலேயே அதிகம் இருக்கின்றன. உதாரணமாக பெண்களின் உடை என்பது வளர்ந்த நாடுகளில் ஒரு பாலியல் சிக்கலாக இல்லை. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் பெண்களின் உடை தான் எல்லா பாலியல் குற்றங்களுக்கும் காரணம் என எண்ணும் மனப்போக்கு உள்ளது. இதே போல பிடித்தமான துணையை தேர்ந்தெடுப்பதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகப்படியான சிக்கல்கள் இருக்கின்றன. எவ்வளவு படித்தாலும் கூட பெரும்பாலான பெண்களின் மற்றும் ஆண்களின் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையும், சுதந்திரமும் அவர்களிடம் இல்லை. இருவருக்கும் விருப்பமிருந்தால் அதிக வயது ஆண், குறைந்த வயது பெண்ணையோ, அதிக வயது பெண், குறைந்த வயது ஆணையோ திருமணம் செய்து கொள்வதில் எந்தவிதமான மனத் தடையோ, சமூகத் தடையோ வளர்ந்த நாடுகளில் இல்லை. ஆனால் இன்றும் தமிழகத்தில் பெரியார், குறைந்த வயது பெண்ணை திருமணம் செய்ததை பெரிய குற்றமாக பார்க்கிறார்கள். வயது வித்தியாசம் அதிகம் உள்ள ஜோடிகளை சமூகம் இயல்பாக பார்ப்பதில்லை. இதை ஒரு குறையாக பார்க்கும் மனநிலையே அதிகம் இருக்கிறது. பிடித்தவர்கள் சேர்ந்து வாழ்வதில் எந்தக் குறையும் இல்லை என்பதை உணரப் போகிறோமோ ? தெரியவில்லை.

' ஒடுக்கப்படுவது எந்த இனமாக இருந்தாலும், அந்த இனத்தின் குரலாக இருப்பதே சிறப்பு ' என்பதன் அடிப்படையில் பாலியல் சிக்கல்கள் என்று வரும் போது பெண்களின் பார்வையிலிருந்து அணுகுவது தான் சரியாக இருக்கும். ஆனால் யதார்தத்தில்
'பெண்களுக்கு ஒன்றுமே தெரியாது, ஆண்களுக்கு எல்லாம் தெரியும், பெண் என்றால் முட்டாள், ஆண் புத்திசாலி ' என்ற மனநிலை தான் மேலோங்கி இருக்கிறது. கிராமம், நகரம், படித்தவர், படிக்காதவர் என வேறுபாடில்லாமல் இந்த ஆணாதிக்க மனநிலை வேரூன்றி இருக்கிறது. இந்த மனநிலை ஆண்களிடமும், பெண்களிடமும் நிறைய மனக்குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. பெண்களை சகமனிதர்களாக நினைக்க ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலான சிக்கல்கள் தீர்ந்து விடும். ஆனால் யதார்த்தம் அப்படியில்லை.

பெண்கள் தொடர்ந்து உடைமைகளாகவே பார்க்கப்படுவதற்கு , நடத்தப்படுவதற்கு பெரிய திரையான சினிமாவும், சின்னத்திரையான தொலைக்காட்சியும் தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மீண்டும் மீண்டும் போகப்பொருளாக, சிறியது முதல் பெரிய அளவிலான வன்முறைகளை ஏவும் உடலாக மட்டுமே பெண்கள், பெரிய திரையிலும், சின்னத்திரையிலும் சித்தரிக்கப்படுகிறார்கள். அதிலும் புதிய அறிமுகமாக 'கேம் ஷோ' என்ற பெயரில் பெண்களை உடலாகவே நிறுவும், அறுவெறுக்கத்தக்க ,கேவலமான வார்த்தைகளை பேசும் நிகழ்ச்சிகள் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் அதிகரித்து வருகின்றன. எந்தவித உறுத்தலும் இல்லாமல் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்புகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் இதில் பங்குபெறும் பெண்களுக்கே தங்களை கேவலமாக சித்தரிக்கிறார்கள் என்று தெரியாமல் இருப்பது தான். அதிலும் தற்போதைய தமிழ் தொலைக்காட்சி நெடுந்தொடர்கள் அனைத்தும் பிற்போக்குத்தனங்களின் கூடாரம்.ஒரு மனிதராக, ஒரு குடும்பமாக, ஒரு சமூகமாக எதையெல்லாம் உதறிவிட்டு மேலெழுந்து வர வேண்டுமோ , அதையெல்லாம் பிடித்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அறியாமையில் வைத்திருக்கவே சின்னத்திரைகள் உதவுகின்றன.

சினிமாவில் பெண்கள், சித்தரிக்கப்படும் விதத்தில் இன்றும் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழவில்லை. தமிழ் சினிமா, திரையில் காட்டும் எந்தப்பெண்ணும் நிஜத்தில் அப்படி இருக்கமாட்டார். நிஜத்தில் இருக்கும் பெண்ணையும் சித்தரிப்பதில்லை, பெண் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியும் சித்தரிப்பதில்லை. ஆண்களின் கதாப்பாத்திரங்களுக்கு அழகு சேர்க்கவும், ஆண்களின் வீர தீரங்களை வெளிப்படுத்தவும், ஆண்களை சார்ந்து இருக்கும் வகையிலேயே பெண்களின் கதாப்பாத்திரங்கள் மரியாதைக் குறைவாகவே வடிவமைக்கப்படுகின்றன. பெண்களை சுயமரியாதையோடு சித்தரித்த திரைப்படங்கள் ( 'அவள் அப்படித்தான் ' போல ) மிகவும் குறைவு. அதிலும் சமீப காலங்களில் மனித சமத்துவத்திற்கு எதிரான மதம் சார்ந்த விசயங்கள் இரண்டு திரைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்படுகின்றன. இதே போல நிஜமான சிறுவர்களின் உலகம் திரையில் வெளிப்படுத்தப்படுவதேயில்லை. சமீப காலங்களில் இரண்டு திரைகளிலும் சிறுவர்களை, குழந்தைகளை காட்டுவதையே மிகவும் குறைத்துவிட்டார்கள். இவர்களெல்லாம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் இல்லாத உலகத்தில் வாழ்வார்கள் போல.

எல்லாவிதமான ஊடகங்களும் மக்களுக்கு துணையாக இருப்பதற்கு பதிலாக , மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றன. பாலியல் சிக்கல்கள் குறித்து பெரிய அளவிலான விழிப்புணர்வை ஊடகங்களால் மக்களுக்கு ஏற்படுத்த முடியும். ஆனால் செய்யமாட்டார்கள். மக்களின் நலனிற்கு எதிராக செயல்படும் அரசுகளை மட்டுமல்லாமல் ஊடகங்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டிய தேவை மக்களுக்கு உருவாகியிருக்கிறது. அரசுகள், ஊடகங்கள் இவற்றுக்கு பின் இருப்பது கார்பரேட்கள். கார்பரேட் துணையில்லாமல் அரசோ, ஊடகமோ செயல்பட முடியாது என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். மக்களை தொடர்ச்சியான சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி பணம் பண்ணுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பது தான் கார்பரேட் வணிகம். இதற்கு அரசுகளும், ஊடகங்களும் துணை போகின்றன.

பாலியல் குற்றங்கள் மட்டுமல்ல மக்களின் பெரும்பாலான பிரச்சினைகளை, குற்றங்களை அரசாலும், ஊடகங்களாலும் தடுக்க இயலும். ஆனால் தடுப்பதற்கு பதிலாக மேலும் பிரச்சனைகளையே அரசும், ஊடகங்களும் உருவாக்குகின்றன. எந்தப் பிரச்சனையையும் அந்தப் பிரச்சனையாகவே சுருக்கி கடந்து போய்விடுகிறார்கள். அந்த குறிப்பிட்ட பிரச்சனை குறித்து தீர ஆராய்வதேயில்லை. அதே குற்றம் மீண்டும் நிகழாதவாறு தடுக்கும் பொறுப்பு அரசுக்கும் இருக்கிறது, ஊடகங்களுக்கும் இருக்கிறது.ஆனால் எளிதாக பொறுப்பைத் தட்டிக் கழித்து அடுத்த பிரச்சனையைத் தேடிப் போய்விடுகிறார்கள். மக்கள், தொடர்ந்து சுயசிந்தனை இல்லாதவர்களாக இருக்கவே அரசும், ஊடகங்களும் விரும்புகின்றன. அப்போது தான் கார்பரேட் அங்கே கால் பதிக்க முடியும். இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனையிலும் கார்பரேட்டின் பங்கு இருக்கிறது.
அதீத கார்பரேட் வணிகத்தில் அறம் என்ற வார்த்தைக்கு துளி கூட இடமில்லை. இனி வரும் காலம் என்பது கார்பரேட்களை எதிர்ப்பதில் தான் கழியப் போகிறது.

நாம் சந்திக்கும் அனைத்துவிதமான சிக்கல்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் இயற்கையிடம் மட்டுமே உள்ளன. கார்பரேட்களையும் இயற்கையின் துணை கொண்டு தான் எதிர்க்க வேண்டியிருக்கிறது. கார்பரேட்களுக்கு எதிரான வலிமையான ஆயுதம், இயற்கை. பாலியல் சார்ந்த சிக்கல்களுக்கும் இயற்கையே தான் தீர்வு. மற்ற விலங்கினங்களில் பாலியல் சார்ந்த சிக்கல்களும், பாலியல் சார்ந்த வன்முறைகளும் மிகவும் குறைவு அல்லது சுத்தமாக இல்லை என்றே கூறலாம். உலகிற்கே தான் ராஜா என நினைத்துக் கொண்டிருக்கும் மனித இனம் தான் பாலியல் சார்ந்த வன்முறைகளில் அதிகம் ஈடுபடுகிறது.

குழந்தைகளையும், சிறுவர்களையும் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் இருந்து காப்பாற்றுவது தான் சமூகத்தின் முதல் கடமையாக இருக்க வேண்டும். எந்தவித பாலியல் நோக்கமும் இல்லாமல் குழந்தைகளை குழந்தைகளாகவும், சிறுவர்களை சிறுவர்களாகவும் பார்க்கும் மனநிலை எல்லா மட்டத்திலும் உருவாவது அவசியமாகிறது. பெரும்பாலான குற்றங்களுக்கும் , பாலியல் குற்றங்களுக்கும் போதை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட மனிதரோ/ மனிதர்களோ போதையில் இல்லாமல் இருந்திருந்தால் அந்த குற்றம் அங்கே நிகழ்ந்திருக்காது. குற்றங்களை தடுக்க வேண்டுமானால் இந்த பார்வையும் முக்கியம்.

பிடித்த மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது என்பது இன்றும் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றாக இல்லை. புரிதல் இல்லாத உறவில் தொடர்வது கொடுமையானது. இந்த சூழலில் பிரிவதும் எளிதாக இல்லை, மறுதுணையை தேர்வு செய்வதும் எளிதாக இல்லை. அதிலும் பெண்கள் கல்யாணம் செய்வதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என்று இந்திய நாட்டின் பிரதமரே நினைக்கும் அளவிற்கு தான் இந்திய மனநிலை இருக்கிறது. இதில் மறுதுணை என்பது பெண்களுக்கு எளிதான ஒன்றாக இல்லை. முதல் திருமணத்தில் கிடைத்த கசப்பான விசயங்களால் பெண்கள் ,மறுமணம் குறித்து சிந்திப்பதும் குறைந்து வருகிறது. குழந்தைகள் இருந்தாலும் தனியாக வளர்த்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்.

கள்ளக்காதல் என சமூகம் வரையறுக்கும், சமூகத்தின் வரம்பு மீறிய காதல் என்பது காலங்காலமாக இருந்து வந்தாலும் அந்த காதலால் நிகழும் கொலைகள் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வெளிநாடுகளில் கள்ளக்காதல் கொலைகள் நடக்கின்றனவா என்று தெரியவில்லை. எந்த ஒன்றுக்கும் வன்முறை தீர்வு ஆகாது. இந்த கொலைகளால் அவர்களின் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பெற்றோரில் ஒருவர் கொல்லப்படுவதும், மற்றொருவர் ஜெயிலில் இருப்பதும் எந்த அளவிற்கு அந்த குழந்தையின் வாழ்க்கையை பாதிக்கும் என்பதையும் சமூகம் உணர வேண்டும்.

தமிழகம் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பதற்கு கல்வியில் அடைந்த முன்னேற்றமே முக்கிய காரணம். பகுத்தறிவு மண் என்று சொல்லிக்கொள்ளும் இதே தமிழகம் பாலியல் சார்ந்த விசயங்களை பகுத்தறிவுடன் ஆராய்வதில்லை. பாலியல் கல்வி தான் இன்றைய முதன்மையான தேவையாக இருக்கிறது. எங்கோ ஒரு மூளையில் யாரோ ஒருவர் பாலியல் சிக்கல்கள் பற்றி எழுதுவதாலோ, பேசுவதலோ ஒன்றும் நிகழ்ந்துவிடாது. முறையான பாலியல் கல்வியின் மூலமே சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும். பாலியல் சிக்கல்களை குறைப்பதற்கான முதல் ஆயுதம் பாலியல் கல்வி தான்.

சமூகத்தின் கருத்துப்படியே பார்த்தாலும் பாலியல் வறட்சியே இல்லாமல் செய்துவிட்டால் பாலியல் சிக்கல்கள் தீர்ந்துவிடும் தானே. இந்தியாவில் 'செக்ஸ் டாய்ஸ்' களுக்கு தடை இருப்பதாக சொல்கிறார்கள். இந்த தடையே நீக்கி விட்டாலே பாலியல் வறட்சி காணாமல் போய்விடும் தானே. இன்னொரு மனிதரை பாதிக்காத எதுவும் தவறில்லை . பல நாடுகள் 'செக்ஸ் டாய்ஸ்' குறித்தான விரிவான ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன. எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு செக்ஸ் டாய் இருக்கும் சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இருப்பது ஒரு வாழ்க்கை தானே வாழுங்கள். இதிலென்ன இருக்கு பேசுங்கள் !

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :










Monday, June 24, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 9 !


"பெண்ணை அனுமதியின்றி தொடுவது சட்டப்படி குற்றமாகும் 
Touching a Woman without Her Consent is a Punishable Crime”

இப்படியொரு Disclaimer-ஐ முதன் முறையாக 'தாதா 87' என்ற தமிழ்த் திரைப்படத்தில் சேர்த்திருக்கிறார்கள். முதலில் இந்த Disclaimer-ஐ சேர்க்க நினைத்ததற்கே படக்குழுவிற்கு நாம் வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவிக்க வேண்டும். இப்படி ஒரு Disclaimer போடுவதால் மட்டும் எல்லாம் மாறிவிடப் போவதில்லை தான். ஆனால் ஏதோ ஒரு விதத்தில் மனித மனங்களில் ஒரு சிறு அழுத்தத்தை இது உருவாக்கவே செய்யும். பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே வருவது சமூக நலனை பெருமளவு பாதிக்கிறது. இன்னொரு விதமான பார்வை இருப்பதையும் தவிர்க்க முடியாது. ஏற்கனவே நிகழ்ந்து வந்த பாலியல் குற்றங்கள் இப்போது தான் அதிக அளவில் வெளியே தெரிய ஆரம்பிப்பதால் தான் பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரித்து இருப்பது போல் தோன்றவும் வாய்ப்பிருக்கிறது.

பெண்ணை அனுமதியின்றி தொடுவதும், தொட நினைப்பதும் தவறு என்றே சமூகம் இன்னமும் உணரவில்லை. அனுமதியுடன் தொடுவதிலும் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. காமத்திற்காக, காதல் என்ற பெயரில் கல்யாணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பெண்களை பயன்படுத்திவிட்டு பின்பு தூக்கியெறிவது இன்றும் குறைந்தபாடில்லை. பதின்பருவத்து பெண்களே இந்த வகையில் அதிகம் ஏமாறுபவர்களாக இருக்கிறார்கள். 16 வயதைக் கடந்தவர்கள் விருப்பத்துடன் பாலுறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சட்டம் சொல்கிறது. அந்த விருப்பம் என்பது நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும் என்ற பக்குவத்தை பதின்பருவத்தினரிடம் நாம் உருவாக்கவில்லை. கல்யாணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உறவு கொள்வது சட்டப்படி குற்றம்.கல்யாணம் பற்றிய சிந்தனையில்லாமல் விருப்பத்துடன் நிகழ்ந்தாலும் கூட பாதுகாப்பு நடைமுறைகள் இன்றும் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை. நிகழும் பாலுறவு குழந்தை பெற்றுக் கொள்வதற்காக அல்ல எனும் போது பாதுகாப்பு சாதனங்களை (குறிப்பாக ஆணுறை) கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற புரிதல் அவசியமாகிறது.

நம்பி ஏமாறுவது என்பது மிகப்பெரிய சிக்கலாக இன்று மாறியிருக்கிறது. பொள்ளாச்சி பாலியல் குற்றங்களின் பின்னணி இது தான். இந்த குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்டவர்கள் தான். இதே போன்ற குற்றங்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடக்கின்றன. குற்றங்களின் எண்ணிக்கையில் தான் வித்தியாசம். ஆனால் குற்றம் ஒன்று தான். பாலுறவை வீடியோவாக படம் பிடிப்பது என்பதும் அதை வைத்து பிளாக்மெயில் செய்வது என்பதும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. பெரும்பாலும் பெண்களின் விருப்பம் இல்லாமலோ அல்லது அவர்களுக்கு தெரியாமலோ தான் வீடியோ எடுக்கப்படுகிறது.பெண்களுக்கு தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டது தெரிய வரும் போது பெண்களுக்கு அது பெரும் அதிர்ச்சியை உருவாக்குகிறது.தெரிந்தே கட்டாயப்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோவால் பெண்களுக்கு உண்டாகும் பாதிப்புகள் இன்னமும் அதிகம். ஒரு சில பெண்கள் தெரிந்தே விருப்பப்பட்டே வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள். எந்த உள்நோக்கமும் இல்லாத யாரும் பாலுறவை வீடியோ எடுக்க மாட்டார்கள் என்பதை பெண்கள் உணர வேண்டும். காமிரா லென்ஸ் குறித்த கவனம் எப்போதும் நமக்கு இருக்க வேண்டும்.

பாலியல் வீடியோ குறித்த புரிதல் பதின்பருவத்தினருக்கும் இல்லை, சமூகத்திற்கும் இல்லை. நாட்டில் இவ்வளவு அத்துமீறல்கள் நடந்த பிறகும் கூட பள்ளி, கல்லூரிகளில் 'பாலியல் கல்வி' கொண்டு வர யாரும் தொடர்ந்து குரல் கொடுக்கவில்லை. எது சரி , எது தவறு என்று எதையுமே வேறுபடுத்திக் காட்டாமல் எல்லாம் சரியாக நடக்க வேண்டும் என்றால் அது எப்படிச் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆண்களுக்கு பாலியல் விசயங்களில் தவறானதைப் போதிக்க சினிமாவும், சமூகமும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. வீடியோ தெரிந்து எடுத்ததோ, தெரியாமல் எடுக்கப்பட்டதோ அதை வைத்து பிளாக்மெயில் செய்யும் போது மீண்டும் பலியாகாமல் அதை எதிர் கொள்ளும் பக்குவத்தை பெண்களுக்கு உருவாக்க வேண்டும். அதற்கு முதலில் பெண்ணுடல் குறித்த புனிதத்தன்மை ஒழிய வேண்டும். பெண்ணுடலில் மட்டுமல்ல இந்த பூமியிலேயே புனிதம் என்று எதுவும் இல்லை, அதே போல தீட்டு என்றும் எதுவுமில்லை. இந்த இரண்டுமே பார்ப்பனியத்தின் கூறுகள்.

வீட்டிற்கு தெரியாமல் ஒரு பெண் இன்னொரு ஆணை சந்திப்பதற்கு யார் காரணம் ? மீண்டும் நாம் குடும்ப அமைப்பையே விமர்சனத்திற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. காதலை மட்டுமல்ல நட்பைக்கூட பல குடும்பங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.குடும்பங்களில் காதல் மீதான வெறுப்புணர்வு குறையாதவரை பெண்களின் மீதான அத்துமீறல்கள் தொடரவே செய்யும். யாருடன் பழகுகிறோம், பழகுபவர்களில் யாரைச் சந்திக்க எங்கு போகிறோம் என்பதை வீட்டிற்கு தெரிவித்துவிட்டு போகும் சூழல் உருவாவது தான் இம்மாதிரியான சிக்கல்களைக் குறைக்க உதவும். ஆண்களுக்கும் இது பொருந்தும் என்றாலும் கூட ஆண்களின் எந்தவிதமான நடவடிக்கையையும் பெரும்பாலான குடும்பங்கள் கண்டுகொள்வதில்லை. ஆண்கள் குறித்தும் குடும்பங்களில் வெளிப்படைத்தன்மையும், கண்காணிப்பும் உருவாக வேண்டும்.

பிழைத்திருப்பதற்கு இந்த வேலையே இவ்வளவு நேரம் செய்து தான் ஆக வேண்டும் என்றிருக்கும் உழைப்புச் சுரண்டலைப் போலவே பாலியல் சுரண்டலும் பெண்கள் மீது சில இடங்களில் திணிக்கப்படுகிறது. ஆண்களும் பாலியல் சுரண்டலால் பாதிக்கப்படுகிறார்கள் என்றாலும் பெண்களுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அதிகளவு பாலியல் சுரண்டல் குடும்பங்களிலும், பணியிடங்களிலும் இருப்பதாகச் சொல்கிறார்கள். குடும்பங்களில் சொத்துக்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் பெண்கள் மீது பாலியல் சுரண்டல் திணிக்கப்படுகிறது. அந்த காலத்தில் 'கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏற வேண்டும்' என்றிருந்த பழக்கத்திற்கு பெண்கள் உடன்பட்டதற்கு குடும்பங்களில் நிகழ்ந்த பாலியல் சுரண்டலும் ஒரு காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பணியிடங்களிலும் ( வேலையைக் காப்பாற்றிக் கொள்ள, பதவி உயர்வு பெற) பெண்கள் மீது பாலியல் சுரண்டல் திணிக்கப்படுகிறது. அரசின் அதிகார அமைப்புகளாலும் பெண்கள் பாலியல் கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். எல்லாப் பெண்களும் இதற்கு பலியாவதில்லை என்றாலும் பாலியல் சுரண்டல் என்பது இருக்கவே செய்கிறது.

பாலியல் வன்கொடுமை என்பது பெண் மீது நிகழ்த்தப்படும் பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. கூட்டுப்பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த மனிதத்தன்மையற்றவர்களிடமிருந்து குழந்தைகளைக் கூட காக்க முடியவில்லை என்பது தான் பெரும் துயரம். பெரும்பாலும் மதுபோதையில் இருப்பவர்கள் தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள்.இந்த இடத்தில் பாலியல் வன்கொடுமை நடப்பதற்கு மதுவும் ஒரு காரணமாகி விடுகிறது. மது குடிப்பது என்பது தனிமனித சுதந்திரம் என்றாலும் கூட அந்தக் குடியால் மற்ற மனிதர்களுக்கோ, சமூகத்திற்கோ எந்தப் பாதிப்பும் உருவாகாமல் இருப்பது முக்கியம். ஆனால் தமிழகத்தில் நிலைமை அப்படி இல்லை. தமிழக அரசின் மக்கள் விரோதக் கொள்கையால் மதுவிற்கு அடிமையான குடி நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இப்படியான குடி நோயாளிகளால் அவர்களது குடும்பமும் ,சமூகமும் பெரிய அளவில் கொடுமைகளை அனுபவிக்கிறது. குடி நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாவது மிகவும் ஆபத்தானது.

பள்ளி மாணவர்கள் கூட பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவதற்கு நவீன தொழிற்நுட்பங்களான தொடுதிரை தொலைபேசியும், இணைய வசதியும் காரணமாக இருக்கின்றன. இதை அவர்களே நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார்கள். இணையத்தில் கொட்டிக்கிடக்கும் கோடிக்கணக்கான பாலுறவு வீடியோக்களை இணைய வசதி இருந்தால் பார்க்க முடியும். பாலியல் வன்கொடுமை நிகழ்வதற்கு பாலுறவு வீடியோக்களும் ஒரு முக்கிய காரணமென்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தமிழகத்தில் திருமணம் ஒன்று தான் பாலுறவிற்கு ஒரே வழி என்ற சூழலில் சமூக, பொருளாதார காரணங்களால் திருமணம் தள்ளிப் போகும் போது பாலுறவு வீடியோக்களும், சுய இன்பமும் தான் வடிகால்களாக இருக்கின்றன. இன்னொரு மனிதரைப் பாதிக்காத வரை எதுவும் தவறில்லை என்பது பாலுறவு வீடியோக்களுக்கும் பொருந்தும்.

விதவிதமான பிளாக்மெயில்கள் மூலம் நிகழும் பாலியல் வன்கொடுமைகள், சுரண்டல்கள், குடும்பங்களில், பணியிடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள், குழந்தைகள், பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூர பாலியல் வன்கொடுமைகள், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், போரின் பெயரால் நிகழ்த்தப்படும் கூட்டுப்பாலியல் வன்கொடுமைகள் என சமூகத்தில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளை பட்டியலிட்டுக்கொண்டே போக முடியும். இவ்வளவு வன்கொடுமைகளாலும் பாதிக்கப்படுபவர்களாக பெண்களே இருக்கிறார்கள். ஆனால் பொதுசமூகம் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிறது. இது தான் ஆணாதிக்கத்தின் வெற்றி.

பாலுணர்வு என்பது பொதுவானது என்றாலும் கூட பெரும்பாலும் இது ஆணின் உடைமையாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களைப் போல தங்களின் பாலியல் இச்சைகளை வெளிப்படுத்தும் சுதந்திரம் பெண்களுக்கில்லை. பெண்கள் தங்களின் பாலியல் விருப்பங்களை வெளிப்படுத்துவதும் தரக்குறைவான செயலாகவே பார்க்கப்படுகிறது. பாலியல் குற்றங்களில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபடுகிறவர்களாக இருக்கிறார்கள். ஆண்களின் அனைத்துவிதமான தப்புகளையும் மூடி மறைக்கும் வேலையை குடும்பம் என்ற அமைப்பு தொடர்ந்து கச்சிதமாக செய்து வருகிறது. தப்பு யார் செய்தாலும், ஆண் செய்தாலும் தப்பு தான் என்ற மனநிலை குடும்பங்களில் உருவாக வேண்டும். ஆணாதிக்க சமூகம் தான். ஆண்களிடம் மட்டுமல்லாமல் பெண்களிடமும் 'ஆண் எது செய்தாலும் சரி' என்ற ஆணாதிக்க மனநிலை மேலோங்கி இருக்கிறது தான். ஆனாலும் இதை அப்படியே தொடர அனுமதிக்கக்கூடாது. முதலில் பெண்கள், ஆணாதிக்க மனநிலைக்கு துணை போவதை கைவிட வேண்டும். இது குறித்தான தொடர்ச்சியான உரையாடல்கள் மூலமே கொஞ்சமேனும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

ஆண்களை எதிரிகளாக பார்ப்பதைத் தவிர்த்து ஆணாதிக்க மனநிலையை எதிரியாக பார்க்கும் பார்வையே முக்கியமானது. ஆண்கள் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட இந்த ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. இந்த ஆணாதிக்க மனநிலையை தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமே குற்றங்களைக் குறைக்க முடியும். பெண் மீதான ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம், இன ஆதிக்கம், பொருளாதார ஆதிக்கம் என ஆதிக்க மனநிலையே இப்பூமியில் நிகழும் பெரும்பாலான குற்றங்களுக்கு காரணமாக இருக்கிறது. ஆதிக்கமும், ஆணாதிக்கமும் ஒழியுமானால் இந்தப் பூமியே அமைதிப் பூங்காவாக மாறிவிடும். 
பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .50
பத்து இதழ் சந்தா ரூபாய்.500
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :








Saturday, March 16, 2019

இதிலென்ன இருக்கு பேசுவோம் -8 !

பாலியல் ஒழுக்கம் என்பதை வரையறை செய்யவே முடியாது. அது இடத்துக்கு இடம் மாறுபடும் ஒன்றாகவே இருந்து வருகிறது. காலத்துக்கு ஏற்பவும் பாலியல் ஒழுக்கம் என்பதில் தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. 'ஒருவனுக்கு ஒருத்தி ' என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் கூட போன தலைமுறைக்கு முன்பு வரை பல தார மணங்களை இதே சமூகம் அனுமதித்து இருக்கிறது. இப்போதும் ஒரு சில சமூகங்களில் பல தார மணத்திற்கு தடையில்லை. முன்பு, இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக அந்த மனிதரின் மரியாதை குறையவில்லை . அந்த காலகட்டத்தில் பெண்கள் இரண்டு ஆண்களோடு திருமண பந்தத்தில் வாழவில்லையா , இருவருக்கும் பிள்ளைகள் பெற வில்லையா ? என்றால் வாழ்ந்தார்கள், பிள்ளைகள் பெற்றார்கள். ஆனால் முதல் பந்தத்தை உதறிவிட்டு தான் அதை செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த பெண்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. ஒரே நேரத்தில் இரண்டு ஆண்களோடு மண பந்தத்தை உருவாக்கி வாழும் உரிமை பெண்ணுக்கு அப்போது கிடைக்கவில்லை. இன்றும் கூட அது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. ஆணாதிக்க சமூகத்தில் ஆணுக்கு கொடுக்கப்படும் உரிமைகள் பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. 

கடந்த தலைமுறையிலிருந்து இருதார அல்லது பலதார மணம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. பெண்கள் படிப்பறிவு பெற்றது தான் முதல் காரணம். இன்றைய சூழலில் ஆணால் அவ்வளவு எளிதாக முதல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டே இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய முடியாது. அப்படி செய்வதும் மரியாதைக் குறைவான விசயமாக பாரக்கப்படுகிறது. இன்று இருதார மணம் என்பது இயல்பான ஒன்றாக பாரக்கப்படுவதில்லை. ஆனால் முன்பு அது இயல்பாக பார்க்கப்பட்டது. இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கான முதல் தேவையாக பாலியல் விருப்பம் அல்லது காமமே இருந்திருக்கிறது. பெரும்பாலும் மனிதர்களால் ஒரே ஆணுடன் அல்லது ஒரே பெண்ணுடன் திருப்தி அடையவே முடியாது. நிர்பந்தங்களால் மட்டுமே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ மனிதர்கள் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். எப்படியான மனிதராக இருந்தாலும் வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் திருமண பந்தத்தை மீறிய இன்னொரு மனிதர் மீதான ஈர்ப்பு நிச்சயம் உருவாகவே செய்யும். பெரும்பாலும் அந்த ஈர்ப்பை நிராகரிப்பது அல்லது வெளிப்படுத்தாமல் இருப்பது தான் தற்போதைய வாழ்க்கையை பாதிக்காமல் இருக்கும் என்பதால் கடந்து போய்விடுகிறார்கள். அந்த ஈர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

திருமணம் என்பது ஆணிற்கும் பெண்ணிற்கும் பொதுவானது என்றாலும் காலம் காலமாக பெண் மீது நிகழ்த்தபடும் ஒரு ஒடுக்குமுறையாகவே இருந்து வருகிறது. இன்றும் கூட பெரிய அளவில் மாற்றம் உருவாகிவிடவில்லை. சிற்றரசர்கள் ஆட்சி செய்த போது நிலையற்ற அரசியல் தன்மை நிலவியதால் அடிக்கடி நிகழ்ந்த போர்களால் பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். 'பெண் கொள்ளை' என்ற ஒன்று இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்த கொள்ளையிலிருந்து பெண்களைக் காப்பாற்றவே பெண்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க பழக்கப்படுத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதனாலேயே அதிகளவில் குழந்தைத் திருமணங்களும் நிகழ ஆரம்பித்தன என்கிறார்கள். தமிழக சூழலில் வரதட்சணை தான் பெண் குழந்தை, சுமையாக கருதப்பட்டதற்கு முதல் காரணமாக இருந்திருக்கிறது. வரதட்சணை கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் பரிமாணமடைந்து வரதட்சணை இன்றும் அப்படியே தான் இருக்கிறது. வரதட்சணை வாங்குவது கௌரவ குறைச்சல் என்பது மாறி வரதட்சணை கொடுப்பது கௌரவம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. இப்போதும் நேரடியாக வரதட்சணை கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வட இந்தியாவின் சில மாநிலங்களில் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து பெண்ணை மணமுடிக்கும் வழக்கம் இன்னமும் இருக்கிறது. அப்படி மணமுடிக்கப்படும் பெண்கள் அதீத கொடுமைகளுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.ஒரு சில இடங்களில் மணமுடிக்கப்படும் பெண் அந்த குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் உடைமையாக்கப்படுவது இன்றும் நின்ற பாடில்லை. இன்னும் பல மோசமான பழக்கவழக்கங்களால் வட இந்திய பெண்கள் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். கல்வியறிவு ஒன்று தான் அவர்களை இக்கொடுமைகளிலிருந்து வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நிலைமை அந்த அளவிற்கு மோசமில்லை என்றாலும் சுய சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தால் பெண் வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது என்பது தற்போது கணிசமாக அதிகரித்து வருகிறது. வரதட்சணையால் நின்று போன திருமணங்கள் நிறைய இருக்கின்றன. வரதட்சணை கம்மியாக கேட்கிறார்கள் என்பதற்காகவும், வசதியாக இருக்கிறார்கள் என்பதற்காகவும் பெண்ணை விட வயதில் பெரிய வித்தியாசம் உள்ளவர்களுக்கு அல்லது தெரிந்தே பொருத்தமில்லாதவர்களுக்கு மணமுடிப்பது என்பது முன்பிருந்தே நடந்து வருகிறது. இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இப்படியான திருமணங்கள் நடைபெறவே செய்கின்றன. ஏற்கனவே குடும்பம் என்ற அமைப்பு மோசமான முறையில் தான் மணப்பெண்ணையோ, மணமகனையோ தேர்ந்தெடுக்கிறது. அந்த தேர்வை மேலும் பலவீனப்படுத்துவதாக வரதட்சணை இருக்கிறது.

நினைத்து பார்க்கவே முடியாத விதத்தில் எல்லாம் திருமணங்கள் ஒரு சில சமூகங்களில் இன்றும் நடைபெறவே செய்கின்றன. மனைவி இறந்ததால் சொந்த பேத்தியையே திருமணம் செய்து கொண்டதாக ஒருவர் கூறியது அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்வதும் சில சமூகங்களில் வழக்கத்தில் இருக்கிறது. இதன் பின்னணியில் சொத்து மட்டுமே பிரதான காரணமாக இருக்கலாம். சம்மதமில்லாமல் நடக்கும் இப்படியான திருமணங்களால் திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை மிகவும் பாதிப்படைகிறது. அதிக வயது ஆண் , வயதிற்கு வந்த குறைந்த வயது பெண்ணை சம்மதத்துடன் மணமுடிக்க அனுமதிக்கும் சமூகம், அதிக வயது பெண், வயதிற்கு வந்த குறைந்த வயது ஆணை மணமுடிக்க அனுமதிப்பதில்லை. அப்படியே அவர்கள் திருமணம் செய்தாலும் அவர்களைப் பார்வையாலேயே கொல்கிறது. ஆண் - பெண் பாலியல் ஈர்ப்பு யாருக்கு , எப்படி, எங்கே தோன்றும் என்று உறுதியாக கூற முடியாது. எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் , யாருடனும் ஈர்ப்பு உருவாக வாய்ப்புகள் அதிகம்.

மனித வரலாற்றின் தொடக்க காலத்தில், இன்று இன்செஸ்ட் (incest) என்று சொல்லப்படும் உறவு முறைகள் இயல்பானவையாக இருந்திருக்கின்றன. தாய் - மகன், தந்தை -மகள், சகோதரர் - சகோதரி மற்றும் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் இவர்களுக்கு இடையில் பாலுறவுடன் கூடிய உறவு உருவாவதே இன்செஸ்ட் உறவு முறை எனப்படுகிறது. நாகரிக சமூகம் உருவாகாத வரை இந்த உறவு முறை பெரிய அளவில் இருந்திருக்கிறது. இந்த உறவு முறைகளால் உருவாகும் குழந்தைகள் வீரியமில்லாததாக இருந்ததாலும் இந்த உறவு முறை கைவிடபட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. பொருந்தாததை நீக்குவது என்பது தொடர்ந்து நடைபெற்று வரும் ஒன்றுதான். அது தான் நாகரிகம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆனால் உலகெங்குமே இந்த உறவு முறைகள் இன்று வரை தொடரத்தான் செய்கின்றன. இதிலுமே பரஸ்பர சம்மதத்துடன் நிகழும் உறவுகளால் எந்தச் சிக்கலும் இல்லை. சம்மதமில்லாமல் நடப்பவை பாலியல் துன்புறுத்தலாகவும், பாலியல் வன்கொடுமையாகவுமே பார்க்க வேண்டியிருக்கிறது . சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உறவு முறைகளில் உருவாகும் பாலியல் சிக்கல்களே பேசப்படாத போது , ஏற்கொள்ளப்படாத இன்செஸ்ட் உறவு முறைகளில் உருவாகும் சிக்கல்கள் மட்டுமல்ல உறவு முறையே வெளியே சொல்லப்படாததாகவே இருக்கிறது.

காலங்காலமாக கற்பித்து வந்த புனித பிம்பங்களைக் கடந்தே இன்செஸ்ட் உறவு முறைகள் நிகழ்கின்றன. அதிலும் அம்மா என்ற உறவு இங்கே மிகவும் அதிகமாக புனிதப்பட்ட ஒன்று. இப்படியான நிலையிலும் அம்மா-மகன் உறவென்பது இங்கு நிகழ்ந்து தான் வருகிறது. இயற்கையின் நியதிபடி பாலுறவிற்கு வயது வந்த இருவர் தான் தேவை , அந்த இருவர் யாராகவும் இருக்கலாம் என்பது இன்செஸ்ட் உறவுகளில் நிஜமாகிறது. காமம் குறித்து நிறைய பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளிடம் பேசாத சூழல் தான் இந்திய அளவிலேயே இருக்கிறது. ஆனாலும் ஒரு சில பெற்றோர்கள் பேசத்தான் செய்கிறார்கள். இயல்பாக நிகழும் இந்த உறவை அனுமதிக்கவும் செய்கிறார்கள். இப்படியான சூழலில் பரஸ்பர விருப்பத்துடன் நிகழும் அம்மா - மகன் உறவென்பது அல்லது இன்செஸ்ட் உறவென்பது ஆரோக்கியமானதா ? இல்லையா ? என்பதில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. ஆனால் இன்செஸ்ட் உறவில் இருப்பவர்கள் இந்த உறவு சரியென்றே வாதிடுகிறார்கள். " எனது பார்வையில் என்றால், போதுமான அளவு பாதுகாப்பான செக்ஸ் வீட்டிலேயே கிடைக்கிறது. செக்ஸில் நிறைய விசயங்களை பரிசோதனை செய்யவும் வாய்ப்பு கிடைக்கிறது. பிற்காலத்தில் வேறு பெண்களுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது திறம்பட செயல்பட முடியும். அம்மாவின் பார்வையில் என்றால், அவருக்கும் பாதுகாப்பான செக்ஸ் வீட்டிலேயே கிடைக்கிறது. கணவனிடமிருந்து போதிய செக்ஸ் கிடைக்கப் பெறாதவர்கள் வெளியே வேறு ஆண்களை தேடிப் போய் சிக்கலில் மாட்டுவதை விட வீட்டிலேயே கிடைப்பது எவ்வளவோ பாதுகாப்பு. அதுவும் இல்லாமல் குறைந்த வயது ஆண் அந்த பெண்ணை வயதில் இன்னும் குறைந்தவராகவே நடத்துவார். இதுவும் அப்பெண்ணுக்கு பிடித்த ஒன்றாக இருக்கிறது " அம்மா - மகன் உறவில் இருக்கும் ஒரு மகனின் வாதமிது. இப்படி சகோதரன் - சகோதரி , அப்பா - மகள் உறவில் இருப்பவர்கள் தங்களுக்கு இந்த உறவு பிடித்திருப்பதாகவும் , இதை தொடர விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.

ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் அல்லது பெண்களுடன் ஒரே நேரத்தில் கலவி கொள்ளும் விருப்பம் நிறைய மனங்களில் இருக்கவே செய்யும். அது இயல்பானதும் கூட. ஆனால் நடைமுறையில் பெரும்பாலும் இது சாத்தியமே இல்லை என்று தான் கூற முடியும். ஒரே ஆண் வெவ்வேறு காலகட்டங்களில் பல பெண்களுடன் கலவி கொள்வதும், ஒரே பெண் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல ஆண்களுடன் கலவி கொள்வதும் பலருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ஆனால் ஒரே நேரத்தில் என்பது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். காமத்தில் இது தான் சரி, இது தவறு என்று பிரிக்க முடியாத அளவிற்கு மனிதர்களை காமம் ஆட்டிவைக்கிறது. ஒரேவிதமான எண்ணங்கள் உடையவர்கள் கூட்டாக சேர்ந்து வாழும் வாழ்க்கை முறை இனி தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. இந்த இடத்தில் பழைய கற்பிதங்கள் அனைத்தும் உடைபட்டுபோய்விடும். இப்படியான மனநிலையில் தான் நாம் ( LGBT ) எனப்படும் பால் சிறுபான்மையினர் பற்றி பேச வேண்டியிருக்கிறது. உலகின் பல நாடுகளில் இன்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவர்களாகவே LGBT வகையினர் இருக்கின்றனர். இந்தியாவில் இப்போது தான் சட்ட அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பெண்ணும் பெண்ணும் (L ), ஆணும் ஆணும் (G) விருப்பம் கொள்வதும், சேர்ந்து வாழ நினைப்பதும் இயல்பான இயற்கையான ஒன்று என்றுதான் மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு சிலருக்கு ஆணையும் பிடிக்கும் , பெண்ணையும் பிடிக்கும் (B) இருவருடனும் உறவைத் தொடர விரும்புவார்கள்.திருநங்கை , திருநம்பியை (T) விரும்புபவர்களும் அவர்களுடன் சேர்ந்து வாழ்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சட்ட அங்கீகாரத்துடன், சமூக அங்கீகாரமும் கிடைத்தால் மட்டுமே பால் சிறுபான்மையினர்களால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ முடியும். எப்போதும் போல இதற்கும் தடையாக இருப்பது குடும்பம் என்ற அமைப்பு தான். எல்லோருக்கும் ஒரே மாதிரியான உணவு பிடிப்பதில்லை. ஒரே மாதிரியான உணவை உண்ண எல்லோருக்கும் உடலும் இடம் தராது, ஆனாலும் ஏதேனும் ஒரு உணவை உண்டு தான் ஆக வேண்டும், அதே தான் காமத்திலும். உணவும் காமமும் ஒன்றுதான்.

பசியுணர்வும், பாலுணர்வுமே நம்மை வழிநடத்துகின்றன. வாழ்கின்ற வாழ்க்கையே இவற்றை நிறைவு செய்யவே எனவும் கூறலாம். இவை இரண்டுமே இயற்கையான உணர்வுகள். இவற்றை தவிர்க்கவே முடியாது. இந்த உணர்வுகளின் மூலம் இயற்கையாக உருவான சிக்கல்கள் முன்பு தாமாகவே சரிசெய்யப்பட்டன. குடும்பம், அரசு போன்ற அதிகார அமைப்புகள் உருவான பின்பு இந்த இரண்டு உணர்வுகளும் மேலும் சிக்கலாகிவிட்டன. அதிலும் பாலுணர்வுதான் அதிக சிக்கல்களைச் சந்திக்கிறது. இந்த அமைப்புகள் சொல்வது தான் சட்டம், நீதி என்றாகிப் போனது. குடும்பம் என்ற அமைப்பு சிறிய அமைப்பு போல தோன்றினாலும் உண்மையில் அதிக அதிகாரமுள்ள அமைப்பு அது. அதிகாரம் கால் பதித்த எந்த இடத்திலும் இயற்கைக்கும் இடமில்லை, இயற்கையான உணர்வுகளுக்கும் இடமில்லை என்ற நிலை உருவாகி பல ஆண்டுகளாகிவிட்டன. பசியைப் போலவே பாலுணர்வும் மனிதருக்கு மனிதர் வேறுபடும். பட்டினி போடப்படும் மனிதர்கள் எதை தின்பார்கள் என்ற கணக்கெல்லாம் இல்லை என்று சொல்வார்கள். அதே தான் பாலியல் பட்டினிக்கும். திருமணம் தாண்டிய உறவுகள் உருவாக இந்த பட்டினியும் ஒரு காரணமாகிறது.

திருமணம் தாண்டிய உறவுகள் உருவாவதற்கு தற்போதைய திருமண முறையும் ஒரு காரணம். " காலாகாலத்துல ஒரு கல்யாணத்த பண்ணி வச்சா எல்லாம் சரியாக போய்விடும் " என நினைக்கும் குடும்ப அமைப்பு அந்த கல்யாணத்தை சரியான புரிதலுடன் செய்து வைப்பதில்லை. இந்திய சமூகத்தில் திருமணம் தாண்டிய உறவுகள் என்பவை தவிர்க்க முடியாதவையாகவே இருக்கின்றன. இந்த உறவுகள் பல்வேறு விதமான சிக்கல்களை உருவாக்கினாலும் எல்லா இடங்களிலும் தொடரவே செய்கின்றன. திருமணம் தாண்டிய உறவுகள் உருவாவதற்கு பல்வேறு விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன. கணவன், மனைவி தங்களுக்குள் மனம்விட்டு பேசாதிருப்பதும் ஒரு காரணம். மற்ற விசயங்கள் குறித்து விவாதிக்கவும், சண்டை போடவும் தயாராக இருப்பவர்கள் தங்களுக்கான பாலுணர்வுத் தேவைகள் குறித்து பேச முன்வருவதில்லை. அப்படி பேசுவதற்கான சூழலையும் உருவாக்கிக் கொள்வதில்லை. அதிலும் பெண்கள் தானாக முன்வந்து பேசுவதற்கான சுதந்திரமும் இங்கில்லை.

மொத்தம் 245 பாலுறவு நிலைகள் (Sex Positions) இருப்பதாக காமசூத்ரா சொல்கிறது. ஆனால் யதார்த்தத்தில் எத்தனை நிலைகள் பின்பற்றப்படும் என்று தெரியவில்லை. குடும்ப வாழ்க்கையில் எத்தனை கணவன்- மனைவிகள் இந்த பாலுறவு நிலைகள் பற்றி பேசவும் அதில் சிலவற்றையாவது நிகழ்த்திப் பார்க்கவும் விரும்புவார்கள் என்று தெரியவில்லை. இப்படியான வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான். ஆனால் பெரும்பாலும் மாறுபட்ட பாலுறவு ஆசைகள், விருப்பங்கள் திருமணம் தாண்டிய உறவின் மூலமே பூர்த்தியடைவதாக புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன. இதை போய் எப்படி கணவரிடம் அல்லது மனைவியிடம் கேட்பது என்ற தயக்கம் நிறைய பேரிடம் இருக்கிறதாம். ஆனால் இதையே திருமணம் தாண்டிய உறவுகளிடம் கேட்பதிலும் , நிகழ்த்துவதிலும் தயக்கம் ஏற்படுவதில்லையாம்.

ஒரு ஆண் திருமணம் தாண்டிய உறவைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலுறவுத் தேவை மட்டுமே முக்கிய காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு பெண் திருமணம் தாண்டிய உறவைத் தேர்ந்தெடுப்பதற்கு பாலுறவு தேவை மட்டும் முக்கிய காரணமாக இருப்பதில்லை. பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் புறக்கணிப்பிற்கான வடிகாலாகவே பெண்கள் இந்த உறவைப் பார்க்கிறார்கள். சில சமயங்களில் இந்த உறவைத் தொடர்வதற்காகவே பாலுறவிற்கும் சம்மதிக்கிறார்கள்.ஆண்களைப் போல பாலுறவிற்காக உறவைத் தேடும் பெண்களும் இருக்கிறார்கள்தான். ஆரம்ப காலத்திலிருந்தே ஆண்கள், பெண்கள் எங்கெல்லாம் சேர்ந்து வேலை செய்யும் அல்லது அடிக்கடி சந்தித்துக் கொள்ளும் சூழல் இருந்திருக்கிறதோ அங்கெல்லாம் திருமணம் தாண்டிய உறவுகள் இருந்திருக்கின்றன. இன்றும் பல இடங்களில் இது குற்றமாக பார்க்கப்படுவதில்லை, எதுவரை என்றால் குடும்பத்தை பாதிக்காத வரை. கணவன், மனைவிக்கு தெரிந்தே அனுமதிக்கப்படும் உறவுகளும் இருக்கின்றன.'மண்ணு திங்கற உடம்பு தான இது . யாரு தின்னா என்ன ? 'என்ற மனநிலையும் பரவலாக முன்பு இருந்தது. ரம்மி திரைப்படத்தில் இடம்பெற்ற "கூடை மேல கூடை வச்சு.." பாடலில் வந்த வரியைப் போல " எங்கே வேணா போயிக்க, என்னை விட்டு மட்டும் போயிடாம இருந்தாலே அது போதுமே" என்ற மனநிலை காரணமாக இருக்குமா ? தெரியவில்லை. இன்னொரு மனிதரைப் பாதிக்காத எந்த உறவும் தவறில்லை என்று தான் சொல்ல வேண்டி வருகிறது.

திருமணம் தாண்டி உறவு என்பது இருவரின் சம்மதத்துடன் தான் நிகழ்கிறது. 20 வயதுகளிலேயே திருமணம் செய்து கொள்பவர்கள், காதல் திருமணமாக இருந்தாலும் 30களில் திருமணம் தாண்டிய உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அந்த வயதிற்குரிய வாழ்க்கையை அப்போது வாழ முடியாததை இப்போது சேர்த்து வாழ நினைக்கிறார்கள். பொதுவாகவே பெண்களுக்கு 30 வயதிற்கு பிறகுதான் பாலியல் உணர்வுகள் அதிகரிப்பதாகச் சொல்கிறார்கள். காரணம், அப்போது தான் குழந்தைகள் ஓரளவு வளர்ந்து இருப்பார்கள், வேலைப்பளுவும் சற்று குறைந்திருக்கும். தன்னைப் பற்றி சிந்திக்கவும் சற்று இளைப்பாறவும் அப்போது தான் நேரமும் கிடைக்கிறது. அடுத்ததாக நிர்பந்தங்களால் ,குடும்ப அழுத்தத்தால் பொருத்தமில்லாதவர்களை மணமுடிக்க நேர்பவர்கள் , தங்களுக்கு பொருத்தமானவர்களைச் சந்திக்கும் போது அவர்களுடன் நட்பாக இருக்க விரும்புகிறார்கள். பின்பு அதுவுவே உறவாக மாறிவிடுகிறது. தனது குடும்பம் தரும் அழுத்தங்களிலிருந்து மற்றவர்களுடன் பேச ஆரம்பிப்பவர்கள் அந்த பந்தம் தரும் இளைபாறலில் புதிய உறவை ஏற்படுத்திக் கொள்கின்றனர். குழந்தைகள் பிறந்த பிறகு உருவாகும் இடைவெளி, உடல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகள், குழந்தை இல்லாமை, கணவன் மனைவிக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாதது, பொருளாதார நெருக்கடி போன்ற பலவும் திருமணம் தாண்டிய உறவுகள் ஏற்பட காரணமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் விட்டு பேசிக்கொள்வதில் தான் எல்லாமும் இருக்கிறது. வெளியே புதிய உறவு உருவானாலும் கூட அதைப் பற்றியும் கணவனும் மனைவியும் பேசிக்கொள்ளும் சூழல் தான் ஆரோக்கியமானதாக இருக்கும். பெண்களை உடைமையாகவும், புனிதப்பொருளாகவும், குடும்பத்தின் மானத்தைக் காப்பவர்களாகவும் பார்க்கும் ஆணாதிக்க பார்வை மாறாதவரை பெண் மனது புரிந்துகொள்ளவேபடாது.

திருமணம் தாண்டிய உறவைத் தொடர்வதிலும், பழைய உறவை விட்டு வெளியேறவும் தடையாக இருப்பவர்கள் குழந்தைகள் தான். அதனால் திருமணம் தாண்டிய உறவுகளால் குழந்தைகள் தான் அதிகமும் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே தற்போதைய குழந்தை வளர்ப்பு முறை என்பது ஆரோக்கியமாக இல்லாத சூழலில் இந்த உறவுகளைத் தொடர்பவர்களால் அது மேலும் பாதிப்படைகிறது. திருமணம் தாண்டிய உறவைத் தொடரும் போது குழந்தைகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. திருமணம் தாண்டிய உறவுகளால் நிகழும் குற்றங்கள் நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகின்றன. 'கள்ளக்காதல் கொலைகள்' என செய்தியாக்கப்பட்டாலும் முதலில் நேரடியாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். குழந்தைகள் நேரடியாக பாதிப்படைவதுடன் ஒரு சில இடங்களில் உறவைத் தொடர தடையாக இருப்பதால் சொந்தப் பெற்றோராலோ அல்லது புதிய துணையாலோ குழந்தைகள் கொல்லப்படுவது இன்னும் அதிர்ச்சியான ஒன்றாக இருக்கிறது. " காதலுக்கு நான்கு கண்கள்... கள்வனுக்கு இரண்டு கண்கள்... காமுகரின் உருவத்திலே கண்ணுமில்லை காதுமில்லை ..." என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் தான் நினைவிற்கு வருகிறது .கணவன் மனைவி என்றில்லை மனிதர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வதன் மூலம் எத்தனையோ விதமான வன்மங்கள், கோபங்கள், வெறுப்புகள் சரியாகியிருக்கின்றன. நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் குற்றங்களாக மாறாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. நடந்து முடிந்த குற்றங்களில் பலவும் சரியாக பேசப்பட்டிருந்தால் நிகழாமலே போயிருக்கும் வாய்ப்புகளும் அதிகம். குற்றத்தை நிகழ்த்தும் எண்ணம் வரும்போது குற்றம் புரிந்த பிறகான வாழ்க்கை எவ்வளவு கொடூரமாகவும், எவ்வளவு குற்றவுணர்ச்சியுடனும் இருக்கும் என்பதை உணர்ந்தால் நிச்சயம் யாரும் எந்தக் குற்றத்தையும் நிகழ்த்த முன்வரமாட்டார்கள்.

பாதுகாப்பான செக்ஸ் குறித்த புரிதல் இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலுமே கூட நல்ல நிலையில் இல்லை. ஆனாலும் இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவே புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவதில் போதிய தெளிவு இல்லாமையே தேவையற்ற கர்ப்பங்களுக்கு காரணமாகிவிடுகிறது. தேவையற்ற கர்ப்பங்களுக்கும், அதனால் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளுக்கும் ஆண்களின் பொறுப்பற்றதன்மை தான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஆண்கள் பயன்படுத்தும் கருத்தடை சாதனமாக ஆணுறையே இருக்கிறது. ஆண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட கருத்தடை மாத்திரைகள் வெற்றிபெறவில்லை. இதுவரை கண்டுப்பிடிக்கப்பட்ட மாத்திரைகளில் பக்கவிளைவுகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது தான் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் ஆராய்ச்சி அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. இவை சந்தைக்கு வர இன்னும் காலம் தேவைப்படும். பெண்களுக்கான கருத்தடை சாதனமாக மாத்திரைகளே இருக்கின்றன. இவை பக்கவிளைவுகளை உருவாக்கும் என்றாலும் தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் ஒரே வழியாக இருக்கிறது. பரவலாக இம்மாத்திரைகள் கிடைப்பதும் இல்லை. விரைவில் இம்மாத்திரைகள் தடை செய்யப்பட உள்ளதாகவும் கூறுகிறார்கள். அப்படியே மாத்திரைகள் கிடைத்தாலும் சரியான நேரத்தில் உண்டால் மட்டுமே பலனளிக்கும். பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணுறைகள் வெற்றிபெறவில்லை.

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் எளிய , வசதியான, பக்கவிளைவு இல்லாத, எங்கும் கிடைக்கக்கூடிய சாதனமாக ஆணுறையே இருக்கிறது. பொதுவாகவே ஆண்களுக்கு ஒரு நினைப்பு இருக்கிறது, ஆணுறை இல்லாமல் உறவில் ஈடுபடும்போது தான் சுகம் அதிகம் கிடைக்கும் என்பது தான் அது. இதில் மிகவும் குறைந்த அளவிலேயே உண்மை இருக்கிறது. மிகச்சிறிய அளவிலான சுக வேறுபாடு மட்டுமே ஆணுறை பயன்படுத்துவதற்கும், பயன்படுத்தாமல் இருப்பதற்கும் இடையில் உள்ளது. அந்த சின்ன சுகத்திற்காக பெண்களை கர்ப்பமாக்குவதையும், தேவையற்ற கருக்கலைப்பிற்கு கொண்டு செல்வதும் ஏற்க முடியாது ஒன்று. அப்படியே ஆணுறை பயன்படுத்த விருப்பமில்லை என்றாலும் கூட ஆண்கள் தங்களின் உச்சநிலையின் போது வெளியே எடுத்து விந்துவை வெளியேற்றுவது ஓரளவிற்கு வெற்றி தரும் என்றாலும் இதையும் ஆண்கள் செய்ய முன்வருவதில்லை. ஏற்கனவே பெண்கள் மீது ஏவப்படும் பல்வேறு விதமான ஒடுக்குமுறைகளில் ஒன்றாக இந்த தேவையற்ற கர்ப்பமும் சேர்ந்து விடுகிறது. பெண்களின் உடல் அளவிலும், மனதளவிலும் பல பாதிப்புகளை இந்த தேவையற்ற கர்ப்பம் உருவாக்கிவிடுகிறது. ஆண்களே , எந்தச் சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் தேவையற்ற கர்ப்பத்திற்கு காரணமாகி விடாதீர்கள். ஒரு ஆணும் , பெண்ணும் உடலுறவு கொள்வதற்கான வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம். அந்த உறவு சுகத்திற்காக மட்டுமென்றால் கண்டிப்பாக கருத்தடை சாதனம் பயன்படுத்த முன்வர வேண்டும். குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என்றால் கருத்தடை பற்றி சிந்திக்க வேண்டியதில்லை.

இன்று, குழந்தை பெற்றுக் கொள்வது என்பது தங்களது விருப்பம் என்பதை விட குடும்ப, சமூக அழுத்தமே முக்கிய காரணமாக இருக்கிறது. குடும்ப கௌரவமே வாரிசு உருவாவதில் தான் இருப்பதாக இன்றும் நம்பவைக்கப்படுகிறது. எல்லாதவிதமான குடும்பங்களும் இதனுள் அடங்கும். கல்யாணம் பண்ணி வைத்தே உடனேயே வாரிசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். எங்கெங்கோ பிறந்து வளர்ந்த கணவனும், மனைவியும் தங்களுக்குள் போதிய புரிதல் உருவாகும் முன்பே பெற்றோராகி விடுகின்றனர். குழந்தையின்மைக்கு கணவன், மனைவி இருவருமே காரணமாக இருக்க முடியும் என்றாலும் இன்றும் பெண் மீது தான் பழி விழுகிறது. ஆண் வாரிசு மீதான போதையும், கற்பிதங்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. ஆண் வாரிசுக்காக பெண்கள் மீண்டும் மீண்டும் கர்ப்பமடைவது இன்று வரை தொடரவே செய்கிறது. என்னென்ன குழந்தைகள் வேண்டும் என்பதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மட்டுமே கணவனும் மனைவியும் தீர்மானிக்கும் நிலை வர வேண்டும். பாலின சமத்துவம் என்பதை அடைய இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும் என்று தெரியவில்லை. அதுவுமில்லாமல் உங்களின் வாழ்க்கையில் என்ன நிகழ்ந்தாலும் உங்களால் உங்களின் வாழ்க்கையின் 14 வருடங்களை ஒதுக்க முடியும் என்றால் மட்டும் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் கூறுகிறார்கள். குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன்பு இதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

எல்லோருக்குமான காமம் குறித்து பேச வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. மணம் முடிக்காதவர்களின் காமம், மணம் முடித்தவர்களின் காமம், பல்வேறு சூழ்நிலைகளால் தனிமைக்கு தள்ளப்பட்டவர்களின் காமம், மாற்றுத் திறனாளிகளின் காமம், வயதானவர்களின் காமம் இப்படி பேசப்பட வேண்டிய காமம் நிறையவே இருக்கிறது.

பாலியல்  பேசுவோம்....  

தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,

9/3 , யூசுப் நகர் ,
மாரம்பாடி  சாலை,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .30
பத்து இதழ் சந்தா ரூபாய்.300
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :








Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms