Showing posts with label இணையத்தொடர். Show all posts
Showing posts with label இணையத்தொடர். Show all posts

Tuesday, July 1, 2025

மனோரதங்கள் (Manorathangal ) ❤️


மனதிற்கு நெருக்கமான ஆர்ப்பாட்டமில்லாத தொடர். எழுத்தை திரையில் கொண்டு வருவதென்பது  எப்போதுமே சவாலானது. முதலில் இப்படி ஒரு முயற்சி எடுத்ததே பெரிய விசயம். M.T. வாசுதேவன் அவர்களின் மகளான அஸ்வதி M.T.வாசுதேவனின் 9 கதைகளை தேர்ந்த்தெடுத்து அதில் ஒரு கதையை இயக்கியும் இந்த ஒரு நல்ல தொடரை கொடுத்திருக்கிறார். முதலில் 20 கதைகள் படமாக்குவதாக இருந்து பிறகு 10 ஆக குறைந்து அப்புறம் 9பதில் முடிந்திருக்கிறது. 


M.T.வாசுதேவன் அவர்களின் எழுத்துகளை இதுவரை வாசித்ததில்லை. அவரின் கதைகள் இந்த ' மனோரதங்கள்' மூலமே அறிமுகம். இந்தத் தொடரில் இடம்பெற்ற அவரின் கதைகளை வாசிக்காததால் தானோ என்னவோ இந்தத் தொடரில் எந்தக் குறைகளும் தெரியவில்லை. இதே கதைகளை முன்பே வாசித்தவர்களுக்கு போதாமைகளும், ஏமாற்றங்களும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இம்மாதிரியான முயற்சிகளுக்கு நாம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.


ஏறக்குறைய மலையாள திரையுலகே நடித்தது போல அத்தனை முக்கிய நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். தலைப்பிற்கு ஏற்றார் போல மனித மனங்களே ஒவ்வொரு கதையையும் நகர்த்திச் செல்கின்றன. வெவ்வேறு இசையமைப்பாளர்கள் பங்கெடுத்திருந்தாலும் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இசையை வெகுவாக ரசிக்க முடிந்தது. இந்தத் தொடர் மனதிற்கு நெருக்கமாக அமைந்ததற்கு பின்னணி இசையும் ஒரு காரணம். ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது. சிறிய பகுதியோ பெரிய பகுதியோ கதை நடக்கும் கால கட்டத்தை அப்படியே திரையில் கொண்டுவர நிறைய உழைத்திருப்பது நன்றாகவே தெரிந்தது. கலை குழுவினருக்கு வாழ்த்துகள். 


மொத்தத்தில் அமைதியாக ஒரு தொடரை காண விரும்புபவர்கள் இத்தொடரைக் காணலாம். தமிழில் இருந்தாலும் மலையாளத்தில் நீங்கள் பார்த்தால்தான் இன்னும் நெருக்கமாக உணர முடியும்.


இயற்கைக்கு அடுத்து கலை மட்டுமே நமக்கு எல்லாமுமாக இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில் நம் மனதை அமைதிப்படுத்துவது ஏதோ ஒரு வடிவத்தில் உள்ள கலை தான். அது எழுத்தாக இருக்கலாம் , இசையாக இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம், சினிமாவாக இருக்கலாம் 'மனோரதங்கள்' - ஆகவும் இருக்கலாம்.


அஸ்வதி மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


Z5 - OTT தளத்தில் காணக் கிடைக்கிறது !


மேலும் படிக்க :

ONE HUNDRED YEARS OF SOLITUDE - FANTASTIC EXPERIENCE ❤️

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !

Saturday, January 18, 2025

One Hundred Years of Solitude - Fantastic experience ❤️


தற்போதைய தொடுதிரை வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து நம்மை விடுவித்து சில மணி நேரங்களாவது நம்மதியாக தூங்க வைப்பது மட்டும் கலையல்ல. நம்மைத் தூங்க விடாமல் செய்வதும் கலை தான். அப்படியாக இந்தத் தொடரின் முதல் தொகுதியின் 8 பகுதிகளும் பார்த்து முடிக்கும் வரை நிம்மதியாக தூங்க முடியவில்லை. விழித்திருக்கும் நேரம், தூங்கும் நேரம் என அனைத்திலும் இந்த 'One Hundred Years of Solitude' தான் நிரம்பியிருந்தது. உண்மையிலேயே இது புது அனுபவம்.


லத்தின் அமெரிக்க எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் எழுதிய நாவலான இந்த 'One Hundred Years of Solitude' பற்றி முன்பே நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் இதுவரை வாசிக்கவில்லை. மாய யதார்த்தம் (Magical Realism) என்பதற்கு உதாரணமாக இந்த நாவலே முதன்மையாக முன்நிறுத்தப்படுகிறது. கிளாசிக் தன்மையுள்ள இந்த நாவலை மிகக் கவனமாக படமாக்கி இருக்கிறார்கள். நாவலை வாசித்தவர்கள் இன்னும் நெருக்கமாக உணர்வார்களாக இருக்கும். நாவல் வாசிப்பது போலவே கதாப்பாத்திரங்கள் அறிமுகம், அந்த கதாப்பாத்திரங்களின் பெயர்களை மீண்டும் மீண்டும் உச்சரித்து பதிய வைப்பது என நாவலை வாசித்த உணர்வையே இந்தத் தொடர் கொடுத்தது.


வெறும் அழகியல் மட்டுமே கலையாகாது. அழகியலுடன் அரசியலும் சேரும் போது தான் கலை முழுமையடைகிறது. அப்படியாக இந்த ' One Hundred Years of Solitude ' ஒரு முழுமையான கலைப்படைப்பு. அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே 'அரசு' என்ற அதிகாரத்தை மட்டுமே முன்வைக்கும் அமைப்பு உள் நுழைந்தவுடன் உருவாகும் சிக்கல்களை மிகத் தெளிவாக முன் வைத்திருக்கிறார், மார்க்கேஸ். இடதுசாரியாக இருந்தாலும் அதிகாரம் கைக்கு வந்தவுடன் எப்படி மாறிப் போகிறார்கள் என்பதையும் காட்டத் தவறவில்லை. 


இசையும், ஒளிப்பதிவும் அற்புதம். நாமும் அந்தச் சூழலில் வாழ்வது போலவே தோன்றுகிறது. அடுத்த தொகுதி (Season-2) எப்போது வரும் என்ற ஆவல் அதிகரித்திருக்கிறது. அடுத்ததாக இந்த நாவலை வாங்கி வாசிக்க வேண்டும். வாசிக்கவில்லை என்றால் கூட இந்த நாவல் நம் வீட்டில் இருக்க வேண்டும் என்ற மனநிலை உருவாக்கியிருக்கிறது. தற்போது தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் நாமும் மக்கோன்டோ(Macondo)-வின் குடிமகனாகவும் உணர வைக்கிறது இந்த  One Hundred Years of Solitude. இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉


2006 ஆம் ஆண்டு, மார்க்கேஸ் பிறந்த ஊரான Aracataca- வை Macondo என‌ பெயர் மாற்ற ஓட்டெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. போதிய நபர்கள் ஆதரவாக வாக்களிக்காததால் பெயர் மாற்றம் சாத்தியமாகவில்லை. அதனாலென்ன இந்த நாவலை வாசித்தவர்கள், இந்தத் தொடரை பார்த்தவர்கள் மனங்களில் மக்கோன்டோ (Macondo) என்ற பெயர் எப்போதும் நிறைந்திருக்கும். 


One Hundred Years of Solitude is a  Eternal art ❤️

மேலும் படிக்க:

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !  

Sunday, September 1, 2024

Modern Love Chennai !


தமிழ் சினிமாவையும் காதலையும் பிரிக்கவே முடியாது. இன்று வரை மிகவும் அரிதாகவே காதல் இயல்பான ஒன்று என்று முன்வைத்த திரைப்படங்கள் வந்திருக்கின்றன. வெற்றுக் கூச்சல்களும் , மிகைப்படுத்தல்களும், Stalking-களும், நாயக துதிபாடல்களுமே இங்கு காதல் திரைப்படங்களில் முன்வைக்கப்பட்டன. இப்படியான சூழலில் இயல்பான காதல்களை வெளிப்படுத்தும் Anthology யாக 

வெளிவந்திருக்கும் ' Modern Love Chennai ' முக்கியத்துவம் பெறுகிறது. 


இந்த Anthology-ல் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் என்றாலும் நிறைய பழைய  கிளிஷேக்கள் கிழித்து எறியப்பட்டிருக்கின்றன. இந்தத் தொடரின் வெற்றி என்பது கூட்டுழைப்பின் வெற்றி. ஒவ்வொரு பகுதிக்கும் திரைக்கதை தயார் செய்த பிறகு இயக்குநர்களை தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல. இசை, ஒளிப்பதிவு, வசனங்கள், கதைகள் நடைபெறும் இடங்கள் என அனைத்தும் சிறப்பு.மொத்தத்தில் நல்லதொரு உருவாக்கம். தியாகராஜன் குமாரராஜா குழுவினருக்கு வாழ்த்துகள்.


இந்த Anthology முழுக்கவே  பெண் கதாப்பாத்திரங்களுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வெகுஜன சினிமாவில் இது சாத்தியமில்லை. வெவ்வேறு விதமான பெண்களின் மன உணர்வுகள் திரையில் காட்சிகளாக விரிகின்றன.  


இந்த ' Modern Love Chennai ', யாரையும் காதலிக்காமல் இருப்பவர்களை காதலிக்கத் தூண்டும், காதலித்துக் கொண்டிருப்பவர்களை மேலும் நெருக்கமாக்கும். Feel Good Anthology.


The New York Times நாளிதழில் 'Modern Love ' பகுதியில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருப்பதால்தான் மனதிற்கு இவ்வளவு நெருக்கமாக இருக்கிறதோ ! 


முதலில் 'Modern Love' என்ற பெயரில் ஆங்கிலத்தில் 2019ல் வெளியாகியிருக்கிறது. பிறகு 'Modern Love Mumbai ' மற்றும்  ' Modern Love Hyderabad ' ஆகியவை 2022ல் வெளியாகி இருக்கின்றன. இப்போது 2023ல் 'Modern Love Chennai ' . இனி அடுத்து மற்ற நகரங்களின் பெயர்களிலும் வரலாம். காதலுக்கு எல்லைக்கோடுகள் கிடையாது தானே ' Modern Love' க்கும் ❤️.


மேலும் படிக்க :

அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !

EXTRAORDINARY ATTORNEY WOO - FEEL GOOD SERIES !



அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !


" ஆளும் வர்க்கத்தின் பலம் அரசு இயந்திரங்களான நிர்வாகம், சட்டம், அதிகாரம் முதலிய அரசு இயந்திரங்களை இயக்குவதில் மட்டும் அல்ல பண்பாட்டுத் தளத்திலும் பத்திரமாக இருக்கிறது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டியவர்கள் பண்பாட்டுத் தளத்திலும் போராட வேண்டியிருக்கிறது" - கிராம்சி.

பண்பாட்டு தளத்தில் மாற்றம் நிகழாமல் சமூகத்தில் மாற்றம் நிகழாது. ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான சமூக மாற்றத்தையும் தடுக்கும் காரணிகளில் ஒன்றாக பண்பாட்டு கூறுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. பண்பாட்டு கூறுகளுக்கும் ஆணாதிக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. அதனாலேயே பண்பாட்டு கூறுகளில் நிகழும் மாற்றங்களைக் கண்டு ஆண்கள் அஞ்சுகின்றனர். பண்பாட்டு கூறுகளிலும் காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை என வலுவாகவே பேசுகிறது 'அயலி'. பண்பாட்டில் கலந்திருக்கும் மூட நம்பிக்கைகளை பகுத்தறிவு கொண்டு களைய முன் வர வேண்டும். பண்பாடு என்பதும் மாறிக்கொண்டே இருப்பதுதான். மாற்றத்தை ஏற்காத பண்பாடு அழிந்து போய்விடும். பண்பாட்டிற்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது. 

" 'கலை கலைக்காகவே 'ன்னு சில பேர் கரடி விடுவானுங்க .அதை நீங்க நம்பாதீங்க .அப்படியிருந்தா அது எப்போவோ செத்துப் போயிருக்கும் . கலை வாழ்க்கைக்காகத்தான்; வாழ்க்கையும் கலையும் சேரும் போதுதான் அதுக்கு உயிரே வருது..."- எம்.ஆர்.ராதா. 

கலை எந்த வடிவத்தில் இருந்தாலும் அது எப்போதும் மக்களுக்கானது. 'அயலி' இந்த மண்ணை பற்றியும் , இந்த மண்ணின் மக்களைப் பற்றியும் பேசுகிறது. தமிழ் நிலம் சார்ந்த குறியீடுகள் இத்தொடர் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டு ஆய்வாளர், தொ.பரமசிவன் எழுத்தை வாசித்தவர்களுக்கு இந்தத் தொடர் இன்னும் நெருக்கமானதாக இருக்கக்கூடும். நாட்டார் தெய்வங்கள், பிடிமண் கோயில், கொலை செய்யப்பட்டவரையே தெய்வமாக வழிபடுவது, சடங்குகள், பழக்கவழக்கங்கள் என தொ.ப.வின் தாக்கம் நிறைய இருந்தது. 

பரபரப்பில்லாத , திடீர் திருப்பங்கள் இல்லாத, வன்முறை இல்லாத அடுத்தடுத்து இரண்டு தொடர்கள் பார்க்கப்பட்டுவிட்டது. முதலில் பார்த்தது ' Extraordinary Attorney Woo'. இப்போது 'அயலி'. மிகவும் சிறப்பான உருவாக்கம். கதையை தேர்ந்தெடுப்பதில் , திரைக்கதை அமைப்பதில், கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில், ஒளிப்பதிவில், இசையில், கலை அமைப்பில் என தொழில்நுட்ப ரீதியாக சமீப கால மாற்று சினிமா படைப்புகள் நிறைவை அளிக்கின்றன. இத்தொடரும் அப்படியே.

தமிழ்நாட்டில் நாம் பேசுகின்ற அரசியலுக்கும் 80களுக்கு பிறகான தமிழ் சினிமாவிற்கும் தொடர்பே இல்லாமல் இருந்து வந்தது. இதுவும் சமீப ஆண்டுகளில் தான் மாறியிருக்கிறது. அயலியும் நாம் வெளியே பேசுகின்ற அரசியலை திரையில் பேசியிருக்கிறது. முதலில் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்த இயக்குநர், முத்துக்குமார் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள்.

அயலியின் பேசுபொருள் நமது வீட்டிலும் , பொதுவெளியிலும் மாறியே ஆக வேண்டியது. புனிதம் என்றும் தீட்டு என்றும் இந்த பூமியில் எதுவும் இல்லை. இதை காரணம் காட்டி பாகுபாடு காண்பிப்பது முடிவிற்கு வர வேண்டும். கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தை பேசுகிறது, அயலி.

மிகவும் கச்சிதமான கதாப்பாத்திர தேர்வுகள் அயலியின் பெரும் பலம். ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் ஏற்று நடித்தவர்கள் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ்ச்செல்வியாக நடித்திருக்கும் அபி திரை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார். சின்ன சின்ன உணர்வுகளைக்கூட சிறப்பாக வெளிப்படுத்தி கவனத்தை இருக்கிறார். மொத்தத்தில் நல்ல தேர்வு. இவரின் அம்மா குருவம்மாவாக அனுமோளும் , அப்பா தவசியாக மதனும் நடித்திருக்கிறார்கள். முதல் 5 பகுதிகள் வரை அம்மாவிற்கும் மகளுக்கும் உள்ள நெருக்கம் விவரிக்கப்படுகிறது. அபிக்கும் அனுமோளுக்கும் இடையே நடிப்பில் நீயா நானா போட்டியே நடக்கிறது.

 தமிழ்ச்செல்வியின் தோழி மைதிலியாக லவ்லினும், அம்மாவாக காயத்ரி கிருஷ்ணனும் மற்றொரு தோழி கயல்விழியாக தாராவும் நடித்திருக்கிறார்கள். சேகராக நடித்திருக்கும் ஜென்சனும் கவனத்தை ஈர்க்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களும் சிறப்பாகவே உள்ளன. அபியின் குரல், தமிழும் மலையாளமும் கலந்த அனுமோளின் குரல் , மதனின் குரல், காயத்ரி கிருஷ்ணனின் குரல், ஜென்சனின் குரல் என கதாப்பாத்திரங்களின் விதவிதமான குரல்களும் வசீகரிக்கின்றன. 

நறுக்கு தெரித்தார் போல அமைந்த வசனங்கள் பட்டையைக் கிளப்புகின்றன. உலகத் திரைப்படங்களில், மற்ற இந்திய மொழி திரைப்படங்களில் சிறந்த திரைப்படங்கள் என கொண்டாடப்படும் திரைப்படங்களில் வசனங்கள் வலிமை மிக்கதாக இருக்கும். தமிழின் சிறந்த திரைப்படங்களில் வசனங்கள் அந்த அளவிற்கு வலிமை இல்லாமல் இருந்தது. அதையும் இந்த அயலி உடைத்திருக்கிறது. வசனங்களுக்காக மட்டுமே நாம் அயலியைக் கொண்டாடலாம். பல இடங்களில் வசனங்கள் சாட்டையடி கொடுக்கின்றன.பகுத்தறிவின் பாதையில் வசனம் எழுதிய சச்சின் அவர்களுக்கு வாழ்த்துகள். 

ரேவாவின் இசையும் ராம்ஜியின் ஒளிப்பதிவும் படைப்பை இன்னும் நெருக்கமாக அணுக உதவுகின்றன. சின்னச்சின்ன இடங்களிலும் இசை சேர்க்கப்பட்டிருப்பது அழகு. உதாரணமாக தமிழ்ச்செல்வி தனது அப்பாவிடம் போலியாக அழுவது போல பேசி பரீட்சை எழுத சம்மதம் வாங்கும் காட்சியில் சேரக்கப்பட்டிருக்கும் இசை. அதே போல சில இடங்களில் இசை சேர்க்காமல் விடப்பட்டிருப்பதும் அழகுதான். 

காதல் இல்லாமல் ஒரு படைப்பைக் கொடுத்தற்கே முதலில் இயக்குநருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு 'காதல்' என்ற ஒன்று தமிழ் சினிமாவை ஆட்டிப்படைக்கிறது. ஏதாவது ஒரு காதல் படத்தில் இருந்தே ஆக வேண்டும் என பெரும்பாலான இயக்குநர்கள் நினைக்கிறார்கள். சரிங்க அப்படித்தான் இவ்வளவு காதல்களைச் சொல்லி காதலை ஜனநாயகப்படுத்தியிருக்காங்களா ? என்றால் அதுவும் இல்லை. தொடர்ந்து காதலை புனிதப்படுத்தியே வைத்திருக்கிறார்கள். பெண்களை Stalking செய்வதை காதல் என நம்ப வைத்திருக்கிறார்கள். காதல் என்பது இயல்பானது என்றோ , யாருக்கும் யாருக்கும் இடையிலும் நிகழலாம் என்றோ, காதலித்தால் திருமணம் செய்துதான் ஆக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை என்றோ, வாழ்வில் எத்தனை காதல்கள் வேண்டுமானலும் வரலாம் என்றோ தமிழ் சினிமா பேசவேயில்லை.

அயலியின் இறுதிகட்ட பகுதிகள் தமிழ்ச்செல்வி மூலமாக நாயக பிம்பத்தை உருவாக்கினாலும் பெண்களின் எதிர்குரலாகவே பதிவாகிறது. அத்தனை பண்பாடுகளும், அத்தனை கட்டுப்பாடுகளும், அத்தனை சடங்குகளும், அத்தனை பழக்கழக்கங்களும், அத்தனை கௌரவங்களும் பெண்களைக் கட்டுப்படுத்தவே பயன்படுத்தப்படுவதை அயலி கேள்விக்கு உட்படுத்துகிறது. 

கொரோனா காலத்தில் தமிழகத்தில் மிக அதிக அளவில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் சூழலில் குழந்தை திருமணத்தால் உருவாகும் பாதிப்புகளை வெளிப்படுத்தி குழந்தை திருமணத்திற்கு எதிரான படைப்பாக, பெண் கல்வியை ஆதரிக்கும் படைப்பாக, காலத்திற்கு பொருந்தாத பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் படைப்பாக அயலி மிளிர்கிறது.

பெண் உடலில் இயற்கையாக நிகழும், மனித குழந்தை பிறப்பதற்கு துணைபுரியக்கூடிய 'மாதவிடாய்' மூலம் இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதில் படித்தவர்கள், படிக்காதவர்கள் , கிராமம், நகரம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. குறிப்பாக வழிபாடு தொடர்பான விசயங்களில் இன்றும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெண்களும் தாங்களாகவே கட்டுப்பாடுகள் விதித்துக்கொள்கின்றனர். மிக அரிதாகவே அந்த நாட்களில் வழிபாடு சார்ந்த விசயங்களில் பெண்கள் ஈடுபடுகின்றனர். 

மாதவிடாய் காலங்களில், பணிபுரியும் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பெண்களின் வலி நிறைந்த அந்த நாட்களின் பணிச்சுமையை உடனே குறைக்க முடியாவிட்டாலும், அவர்களை ஒதுக்கி வைத்து மனச்சுமை ஏற்றாமல் இருப்பது முக்கியம். தெய்வங்கள், மாதவிடாய் காலங்களில் பெண்கள் வழிபடுவதை தடுப்பதில்லை. அடிப்படைவாதிகளே தடுக்கிறார்கள். 

மொத்தத்தில் அயலி ஒரு பெண்களை மையப்படுத்திய தொடர். இது ஒரு தொடக்கம் தான். அயலி சொல்லாமல் விட்டதாக நினைக்கும் சாதி மறுப்பு திருமணங்கள், ஆணவ படுகொலைகள் , பாலின சமத்துவம் குறித்தான படைப்புகள் அடுத்தடுத்து வெளிவர வேண்டும். அயலியில் போதாமைகள் இருக்கலாம். ஆனால் இதை முற்றாக நிராகரிப்பதற்கான காரணங்கள் எதுவும் இல்லை. 

அடுத்தடுத்து பார்க்க வேண்டிய திரைப்படங்களின், தொடர்களின் வரிசை நீளமாக இருக்கும் நிலையிலும் ஒரு படைப்பு நம்மை மீண்டும் பார்க்கத் தூண்டுவது சாதாரண விசயம் அல்ல. அயலி மீண்டும் பார்க்கத் தூண்டியிருக்கிறது. மீண்டும் இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் ❤️

மேலும் படிக்க :

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் ! 


Extraordinary Attorney Woo - Feel Good Series !


வெற்றி பெற்ற பெரும்பாலான இணையத் தொடர்கள் பரபரப்புகளையும் , திடீர் திருப்பங்களையும் , அதீத வன்முறைகளையும் முன்வைத்த சூழலில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உள்ளங்களைக் கவர்ந்திருக்கும் இணையத்தொடர்தான், ' Extraordinary Attorney Woo '. 

Feel Good Series. சின்ன சின்ன விசயங்களைக் கூட பார்த்து பார்த்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சரி, தவறு என்பதைக் கடந்து அறத்தின் பக்கம் நிற்கிறது இத்தொடர். ' Social Justice ' என்ற வார்த்தை பல முறை வருகிறது. இத்தொடரின் பின்னணி இசை கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. நவீன இசைக்கருவிகளின் மூலமும் நல்லதொரு இசையைக் கொடுக்க முடியும் என்பதை இத்தொடரின் இசையமைப்பாளர் நிரூபித்து இருக்கிறார். ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது. நவீன தொழிற்நுட்பங்கள் உதவியுடன் அவ்வப்போது காற்றில் உலவ விடப்படும் விதவிதமான திமிங்கலங்கள் , டால்பின்கள் அழகாக இருக்கின்றன.

கொரியத் திரைப்படங்கள், கொரியத் தொடர்கள் இன்றைய இந்திய இளைஞர்களால் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகின்றன என்பதற்கான காரணமும் இத்தொடரைப் பார்க்கும் போது விளங்கியது. பழமையும் நவீனமும் கலந்த வாழ்வியல் முறையை கொரிய படைப்புகள் முன்வைக்கின்றன என நினைக்கிறேன். நவீனத்தை ஏற்பதில்தான் இந்தியர்களாகிய நாம் பின்தங்கி இருக்கிறோம். நவீன தொழிற்நுட்பங்களை விரைவாக ஏற்றுக் கொள்கிறோம்‌. வாழ்வியல் முறைகளில் நவீனத்தை நாம் அவ்வளவு எளிதாக ஏற்பதில்லை. அதனால் நவீன வாழ்வை விரும்பும் இந்திய இளைஞர்களை (2k Kids) கொரிய தொடர்கள் ஈர்க்கின்றன போலும்.

ஆட்டிசம் பாதித்த Attorney, Young Woo-வாக, தொடரின் நாயகியாக நடித்திருக்கும் 

Park Eun-bin பிரமிக்க வைக்கிறார். எந்த இடத்திலும் கதாப்பாத்திரத்தை விட்டு விலகவேயில்லை. நடையிலும், பாவனைகளிலும், பேச்சிலும் ஆட்டிசத்தின் பாதிப்புகளை வெளிப்படுத்துகிறார். திமிங்கலங்கள் பற்றிய விசயங்களை எப்போதும் எந்த இடத்திலும் சலிக்காமல் பேசுகிறார்‌. பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கிறார். அடுத்த முறை கண்ணாடி கதவைப் பயன்படுத்தும் போது இவர் போலவே கதவை லேசாக திறந்து 1..2..3.. சொன்ன பிறகுதான் உள்ளே நுழைவோம்‌ போல. அந்த அளவிற்கு நம்முள் பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறார். 'Extraordinary' Acting.

சம கால பிரச்சனைகள் பலவற்றை இத்தொடரின் 16 பகுதிகளும் விவாதிக்கின்றன. அவரவரின் நியாயங்கள் முன்வைக்கப்படுகின்றன. எது நியாயமானது என்பதையும் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார்கள். சமூக அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கம் தரமுடன் இருப்பதால் சர்வதேச அளவில் சந்தைப்படுத்த முடிந்திருக்கிறது.   

தொடரின் தலைப்பில் மட்டும் ' Extraordinary ' இல்லை. இந்தத் தொடரே ' Extraordinary ' -ஆக இருக்கிறது. நல்ல அனுபவம். 

மேலும் படிக்க :

ENNIO : THE MAESTRO (THE GLANCE OF MUSIC ) (2021) , DOCUMENTARY MOVIE !

SEX EDUCATION - NETFLIX SERIES !

Tuesday, September 13, 2022

Wild Wild Country - ஓஷோ !

 


Wild Wild Country ❤

- Documentary About OSHO !

மிகவும் சிறப்பான ஆவணப்படம்.ஆறு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கின்றன. சார்பு நிலைகள் இல்லாமல் உருவாக்கப்படுள்ளது. ஒஷோவோடு தொடர்பில் இருந்தவர்களின் குரல்களின் வாயிலாகவும், 1981 முதல் 1985வரை அமெரிக்காவில் ஒரு குட்டி நகரத்தையே எப்படி உருவாக்கினார்கள் என்பதும் காட்சிகளாக விரிகின்றன. 40 ,50 பேர்கள் மட்டுமே இருக்கும் ஆன்டலோப் எனும் சிறு நகரத்திற்கு பக்கத்தில் 'ரஜ்னீஷ்புரம் ' என்ற ஒன்றை உருவாக்குகிறார்கள். இந்த ஆவணப்படத்தின் மூலம் ஓஷோவை விட அதிகம் கவர்ந்தவர் , ஓஷோவின் உதவியாளர், மா ஆனந்த் ஷீலா. 


மொரார்ஜி தேசாய் அரசு , பூனாவில் இருந்த ஓஷோவின் ஆசிரமத்திற்கு அளித்து வந்த வரிச்சலுகையை ரத்து செய்கிறது. ஏற்கனவே பூனா ஆசிரமத்தை விட பெரியதாக இந்தியாவில் வேறு இடம் கிடைக்குமா என்று அவர்கள் தேடிக்கொண்டிருந்த சூழலில் வரிச்சலுகையும் ரத்து செய்யப்பட அமெரிக்காவிற்கு பயணமாகிறார்கள். ஓஷோவிற்கு பெற்றோர் வைத்த பெயர், சந்திர மோகன் ஜெயின். அதை 'ரஜ்னீஷ்' என்று மாற்றிக்கொள்கிறார். 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் ' என்றே அமெரிக்காவில் அழைக்கப்படுகிறார். 


மா ஆனந்த் ஷீலாவின் பெரும் உழைப்பால் 'ரஜ்னீஷ்புரம்' உருவாகிறது. ரஜ்னீஷ் மீது எல்லையற்ற அன்பும்,நம்பிக்கையும் வைத்திருந்தார், வைத்திருக்கிறார். சில அதிகார பிரச்சனைகளால் ஷீலா அமெரிக்காவை விட்டு வெளியேறினாலும் இன்று வயோதிகத்தை அடைந்திருந்தாலும் ரஜ்னீஷ் மீதான அன்பும், நம்பிக்கையும் குறையவேயில்லை. அவரது நினைவுகளில் இன்றும் ரஜ்னீஷே நிறைந்திருக்கிறார். 


இப்போதும் மிரட்சியாகவே இருக்கிறது. அமெரிக்கா மாதிரியான ஒரு நாட்டில் போய் எவ்வளவு வேலை பார்த்திருக்கானுக. சொந்தமாக விமானநிலையம், ஆயுதம் ஏந்திய போலீஸ், ஆயவுக்கூடம் என்று ஐந்து ஆண்டுகள் மிரட்டியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழிற்நுட்பத்தில் சிறந்தவர்கள் ரஜ்னீஷை பின்தொடர்பவர்களாக இருந்திருக்கிறார்கள். பணத்திற்கும் குறைவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த சாமியார்களை கையிலயே பிடிக்க முடியாது போல. அதிலும் நவீன சாமியார்கள் படித்தவர்களையும் எளிதில் உள்ளே இழுத்துவிடுகிறார்கள். 


காலம், காலமாக இருந்து வருவதை தங்களுக்கு தகுந்தவாறு உடைத்துவிட்டு கவர்ச்சிகரமான பத்து, இருபது வார்த்தைகளை சிதறவிட்டால் போதும் கூட்டம் தானாக சேர்ந்துவிடும் போல. ஆசிரமங்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து வந்த சூழலில் எங்கள் ஆசிரமத்தில் பிரம்மச்சரியம் இல்லை. விரும்புபவர்கள், விரும்புபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் ஏன் கூட்டம் சேராது ? ஓஷோவிய் ஆசிரமத்தில் சேர்ந்தது உலகம் முழுவதிலும் இருந்து. 


'ஆசையே துன்பத்திற்கு காரணம் ' என்றார் புத்தர். இதற்கு மாற்றாக ' அத்தனைக்கும் ஆசைப்படு ' என்று சொல்லியே ஜக்கி என்னும் விஷக்கிருமி காட்டை அழித்ததோடு, இன்று கோவை பகுதியின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஜக்கியின் ரோல் மாடல் ஓஷோதான். சொல்லி வைத்ததுபோல இருவரும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு பக்தி, ' Enlightenment ' என்பதெல்லாம் பணத்திற்கு பின்புதான். 


ஷீலா ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ரஜ்னீஷூம் , ரஜ்னீஷ்புரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். அப்புறம் அங்கிருக்கிருந்த மற்றவர்களும் வெளியேறிவிடுகிறார்கள். ஆன்டலோப் மக்கள், அன்றும் சரி, இன்றும் சரி இந்த ரஜ்னீஷ் கூட்டத்தை காமெடியாகவே அணுகியிருக்கிறார்கள். அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு 21 நாடுகள் ரஜ்னீஷை உள்ளே விட அனுமதிக்கவில்லை. கடைசியில் மீண்டும் பூனா ஆசிரமத்திற்கே வருகிறார். இறப்பதற்கு ஒரு வருடம் (1989) முன்புதான் 'ஜென் ' தாக்கத்தால் தனது பெயரை 'ஓஷோ' என்று மாற்றிக் கொள்கிறார். இப்போது அதுவே நிலைத்துவிட்டது. ஓஷோவை அமெரிக்கா விரட்டி அடித்தது போல , ஜக்கியை நாம் கோவையை விட்டு விரட்டியடிக்க வேண்டும். 


இன்றும் ஓஷோவை பின்தொடர்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகும் ஓஷோவை நம்புகிறார்கள். ஆனால்

எல்லா சாமியார்களும் போலிகள்தான். Osho also a Fake. 


Very admiring personality, Ma Anand Sheela ❤


நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். பெரிய அளவிலான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன ! 


மேலும் படிக்க :

Ennio : The Maestro (The Glance of Music ) (2021) , Documentary Movie


சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !


Thursday, July 7, 2022 Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !

Wednesday, December 22, 2021

Sex Education - Netflix Series !


இந்தியப் பொதுவெளியில் ' செக்ஸ் ' என்ற வார்த்தையே ஒருவித ஒவ்வாமையுடனும், அருவருப்புடனும்தான் பார்க்கப்படுகிறது. மாறாக தனிவெளியில் கிளுகிளுப்பு நிறைந்ததாக அணுகப்படுகிறது. செக்ஸ் என்பது இயல்பான ஒன்று என்பதை இந்திய சமூகம் ஏற்பதில்லை. மதங்களின் மூலமாக மிகவும் பிற்போக்கான, இயற்கைக்கு எதிரான விசயங்கள் மக்களிடம் பரப்பப்பட்டிருக்கின்றன. 

இங்கே எந்த வயதிலும் செக்ஸ் பற்றி பேசுவது தவறாகவே பார்க்கப்படுகிறது. செக்ஸ் எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும் பதின்பருவம் மிகவும் முக்கியமானது. உடல் குறித்தான நிறைய சந்தேகங்களும் ,குழப்பங்களும் எழும் பருவம். இந்தியச் சூழலில் பதின்பருவத்தினரின் பாலியல் குறித்தான சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்க்கப்படுவதேயில்லை. இதனால் வளர்ந்த பிறகும் , மணமான பிறகும் கூட பாலியல் சிக்கல்கள் தொடர்கின்றன. பாலியலையும் வயதையும் சேர்த்து குழப்பிக் கொள்வது இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறனவர்கள் என்பது போல அவர்களின் பாலியல் விருப்பமும் வெவ்வேறானவை.

அனைத்து வயதினருக்குமான ஆண் மற்றும் பெண் குறித்தான பாலியல் சிக்கல்களே இன்னும் இங்கே பேசப்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஆண்,பெண் மட்டுமல்ல LGBTQ+ பிரிவினரையும் அவர்களின் பாலியல் சிக்கல்களையும் சேர்த்தே இந்த 'SEX EDUCATION ' தொடர் பேசுகிறது. Netflix-ல் வெளியாகி மூன்று சீசன்களைக் கடந்திருக்கிறது இந்தத் தொடர். ஓட்டிஸ் மற்றும் மேவ் ஆகியோருக்கு இடையிலான காதல் கதைதான் பிரதானமானது என்றாலும் கூட அனைத்து வயதினருக்குமான பாலியல் சிக்கல்களை உள்ளடக்கிய நிறைய கிளைக்கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன. 

வயதுவந்த அனைவரும் வாய்ப்பிருந்தால் பாருங்கள். நமது சூழலில் இவ்வாறான தொடர் எடுப்பதற்கான தேவை இருக்கிறது. பாலியல் என்பதை அறிவியல்படி அணுகும் மனநிலை என்பது இங்கே குறைவாகவே இருக்கிறது அல்லது சுத்தமாக இல்லை. பெண்ணுடலை காமத்திற்கான வடிகாலாக சித்தரிப்பதுதான் இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. இந்த மாதிரியான சித்தரிப்புகளால் இந்தியப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மிக அதிகம். பெண்களை காட்சிப்படுத்துவதில் இந்திய இயக்குநர்களுக்கு இன்னுமும் பொறுப்புணர்ச்சி வரவில்லை. 

எப்படி பார்த்தாலும் பாலியல் சிக்கல்களைத் தீர்ப்பதில் நாம் கடக்க வேண்டிய தூரம் என்பது மிகவும் அதிகம் என்றாலும் முதல் அடியை இப்போதாவது எடுத்து வைக்க வேண்டும்!

மேலும் படிக்க :

சர்தார் உத்தம் - உலகத்தரம்!



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms