இந்தியப் பொதுவெளியில் ' செக்ஸ் ' என்ற வார்த்தையே ஒருவித ஒவ்வாமையுடனும், அருவருப்புடனும்தான் பார்க்கப்படுகிறது. மாறாக தனிவெளியில் கிளுகிளுப்பு நிறைந்ததாக அணுகப்படுகிறது. செக்ஸ் என்பது இயல்பான ஒன்று என்பதை இந்திய சமூகம் ஏற்பதில்லை. மதங்களின் மூலமாக மிகவும் பிற்போக்கான, இயற்கைக்கு எதிரான விசயங்கள் மக்களிடம் பரப்பப்பட்டிருக்கின்றன.
இங்கே எந்த வயதிலும் செக்ஸ் பற்றி பேசுவது தவறாகவே பார்க்கப்படுகிறது. செக்ஸ் எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்கும் பதின்பருவம் மிகவும் முக்கியமானது. உடல் குறித்தான நிறைய சந்தேகங்களும் ,குழப்பங்களும் எழும் பருவம். இந்தியச் சூழலில் பதின்பருவத்தினரின் பாலியல் குறித்தான சந்தேகங்களும், குழப்பங்களும் தீர்க்கப்படுவதேயில்லை. இதனால் வளர்ந்த பிறகும் , மணமான பிறகும் கூட பாலியல் சிக்கல்கள் தொடர்கின்றன. பாலியலையும் வயதையும் சேர்த்து குழப்பிக் கொள்வது இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. ஒவ்வொரு மனிதரும் வெவ்வேறனவர்கள் என்பது போல அவர்களின் பாலியல் விருப்பமும் வெவ்வேறானவை.
அனைத்து வயதினருக்குமான ஆண் மற்றும் பெண் குறித்தான பாலியல் சிக்கல்களே இன்னும் இங்கே பேசப்படவில்லை. இந்தச் சூழலில்தான் ஆண்,பெண் மட்டுமல்ல LGBTQ+ பிரிவினரையும் அவர்களின் பாலியல் சிக்கல்களையும் சேர்த்தே இந்த 'SEX EDUCATION ' தொடர் பேசுகிறது. Netflix-ல் வெளியாகி மூன்று சீசன்களைக் கடந்திருக்கிறது இந்தத் தொடர். ஓட்டிஸ் மற்றும் மேவ் ஆகியோருக்கு இடையிலான காதல் கதைதான் பிரதானமானது என்றாலும் கூட அனைத்து வயதினருக்குமான பாலியல் சிக்கல்களை உள்ளடக்கிய நிறைய கிளைக்கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன.
வயதுவந்த அனைவரும் வாய்ப்பிருந்தால் பாருங்கள். நமது சூழலில் இவ்வாறான தொடர் எடுப்பதற்கான தேவை இருக்கிறது. பாலியல் என்பதை அறிவியல்படி அணுகும் மனநிலை என்பது இங்கே குறைவாகவே இருக்கிறது அல்லது சுத்தமாக இல்லை. பெண்ணுடலை காமத்திற்கான வடிகாலாக சித்தரிப்பதுதான் இங்கே தொடர்ந்து நிகழ்கிறது. இந்த மாதிரியான சித்தரிப்புகளால் இந்தியப் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மிக அதிகம். பெண்களை காட்சிப்படுத்துவதில் இந்திய இயக்குநர்களுக்கு இன்னுமும் பொறுப்புணர்ச்சி வரவில்லை.
எப்படி பார்த்தாலும் பாலியல் சிக்கல்களைத் தீர்ப்பதில் நாம் கடக்க வேண்டிய தூரம் என்பது மிகவும் அதிகம் என்றாலும் முதல் அடியை இப்போதாவது எடுத்து வைக்க வேண்டும்!
மேலும் படிக்க :
0 comments:
Post a Comment