1978 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத திரைப்படமான 'அவள் அப்படித்தான்' திரைப்படத்துடன் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்த திரைப்படம் தான் ' மனிதரில் இத்தனை நிறங்களா !' . 'அவள் அப்படித்தான் ' திரைப்படமே கடந்த சில ஆண்டுகளாகத்தான் கொண்டாடப்படுகிறது. இதுவரை 'அவள் அப்படித்தான் ' பார்க்காதவர்கள் பார்த்து விடுங்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு காலை வேளையில் கே டிவியில் 'மனிதரில் இத்தனை நிறங்களா! ' திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இது வரை பார்க்காத திரைப்படமாக இருக்கிறதே என்று நானும் இணையரும் வேலைக்கு கிளம்பிக்கொண்டே பாரத்துக்கொண்டிருந்தோம். திரைப்படத்தின் இறுதிக்காட்சியையும் விடுபட்ட காட்சிகளையும் இரவு வீடு வந்த பிறகு யுடியூப்பில் தேடிப் பாரத்தாச்சு. ரசிக்கும்படியாகவே இருந்தது.
'அவள் அப்படித்தான்' போல இந்தத் திரைப்படமும் பெண் கதாப்பாத்திரத்தைப் , பெண்ணுடலை மையப்படுத்திய திரைப்படம்தான். அதில் ஸ்ரீபிரியா, இதில் ஸ்ரீதேவி. கமலின் ரசிகனல்ல. கமலின் திரைப்படங்கள் பிடிக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் கமலைப் பிடித்திருக்கிறது. அதிலும் இத்திரைப்படத்தில் அவர் பாடியிருக்கும் ' மாமா மனசு இன்னைக்கு நல்லாலே...' என்ற பாடலும் அருமை. கேட்க நன்றாக இருக்கிறது. பல முறை கேட்டாச்சு. கமலின் குரலும் பிடித்துப் போனதே என ஆச்சரியமாகத்தான் இருந்தது. இத்திரைப்படம் போல கமலை அடக்கி வாசிக்க வைக்கும் திரைப்படங்கள் அமைந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அவரும் நாயகத்துதிபாடலுக்கு பலியாகிவிட்டார். அவர் திரைப்படங்களில் பேசிய அரசியலும் ஏற்புடையதல்ல.
இந்தத் திரைப்படத்தில் கமல், ஸ்ரீதேவியின் உடன்பிறவா அண்ணனாக நடித்திருக்கிறார். நமக்கெல்லாம் இது புதிது. ஸ்ரீதேவிக்கு ஜோடி, தெலுங்கு நடிகர் முரளி மோகன். கமலின் ஜோடி, சத்யப்ரியா. இந்த இருவருக்கும் இடையிலான காட்சிகள் அவ்வளவு அந்நியோன்யமாக இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல்கள் இனிமை. ஸ்ரீதேவி எப்போதும் போல அவரது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீதேவியின் குரல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்த குரலுக்காகவே ஸ்ரீதேவி நடித்த மற்ற திரைப்படங்களையும் பார்க்க வேண்டும் போலவே.
மனோரமா, அட்டகாசமான நடிப்பு. 'She Ruled the Screen' என்று சொல்லலாம். இவர் வரும் காட்சிகளில் நாம் இவரை மட்டுமே கவனிப்போம். அந்த அளவிற்கு தனது நடிப்பால் திரையை ஆக்கிரமித்து இருக்கிறார். கே.ஏ.தங்கவேலு, மிகவும் பிடித்த நகைச்சுவை நடிகர். பேசுகின்ற பேச்சிலேயே நம்மை சிரிக்க வைப்பவர். தனித்துவமான கலைஞர். இவருடன் சுருளி ராஜன். சுருளிராஜனின் டைமிங் வசனங்கள் அட்டகாசம். கே.ஏ.தங்கவேலுவும், சுருளிராஜனும் வரும் காட்சிகள் அவ்வளவு ரகளை.
திரைப்படத்தின் இசை நன்றாக இருக்கிறதே என்று தேடி பார்த்தால், ஷியாம் அவர்களின் இசை. மலையாளத்தில் பெரு வெற்றி பெற்ற தமிழ் இசையமைப்பாளர். இந்த திரைப்படம் வேண்டுமானால் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்தப் பாடலை நம்மில் பெரும்பாலானோர் பார்த்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். அந்தப்பாடல் 'மழை தருமோ என் மேகம்...'. இந்தப்பாடலை தொலைக்காட்சியில் பார்க்கும் போதெல்லாம் "ஸ்ரீதேவி இருக்காங்க, ஆனால் இந்த நடிகரை பார்த்ததில்லையே" என்று தோன்றும். பாடலை ரசித்துவிட்டு இதுவும் இளையராஜா பாட்டுதான் போல என்று கடந்து போயிருப்போம். ஆனால் இந்தப் பாடலைக் கொடுத்தவர், ஷியாம். குறிப்பிடத்தக்க மற்றொரு பாடல் எஸ்.ஜானகி பாடிய ' பொன்னே பூமியடி...' . கமல் பாடிய பாடலிலும் பின்னணி இசை அருமை.
கிராம பஞ்சாயத்தை டேமேஜ் செய்யும் ஒரு காட்சியும் இருக்கிறது. நியாய குரலை முதலில் யார் எழுப்புவது என்பதுதான் இங்கு பிரச்சனை. முதல் குரல் ஒலித்தால் அதற்கு ஆதரவாக பல பக்கங்களிலிருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். விதவை மறுமணத்தை ஆதரிக்கும் காட்சி இடம்பெறுகிறது. அறிஞர் அண்ணா, திரைக்கதை எழுதி வெளியான 'காதல் ஜோதி' என்ற திரைப்படத்திலும் விதவை மறுமணம் குறித்த காட்சியுண்டு. ' உன் மேல கொண்ட ஆச...' என்ற பிரபல பாடலும் உண்டு.திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியான இந்நிகழ்வு 80களுக்குப் பிறகு மாறிவிடுகிறது.
குறிப்பாக எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் நிறைய பிற்போக்குத்தனங்கள் மீண்டும் திரையை நிறைக்க ஆரம்பித்தன என நினைக்கிறேன். இது தானாக நடந்ததா ? அல்லது திமுகவை எதிர்ப்பது என்பது திராவிட பெரியாரிய கருத்துகளை எதிர்ப்பதாக மாறிப்போனதா? என்று தெரியவில்லை. பண்ணையார்கள் வில்லன்களாக சித்தரித்த காலம் போய் கதாநாயகர்களே பண்ணையாய்களாக மாறியதும் ஆண்டான்- அடிமை மனநிலையை மீண்டும் நிலைநிறுத்தியதும் இந்த காலகட்டம் தான்.
திராவிட இயக்கத்தின் பாதிப்பு தொடர்ந்து தமிழ் சினிமாவில் இருந்துகொண்டேதான் இருக்கிறது. முன்பு மிகவும் அழுத்தமான பாடல்கள் மூலமாக சமத்துவ கருத்துகள் பரப்பப்பட்டன. பின்பு ஒரு சில காட்சிகள் , ஒரு சில வசனங்கள் என சுருங்கிப்போய்விட்டது. முழுநீள திராவிட சினிமா என்பது மிகவும் குறைவு. சமீப ஆண்டுகளில் பல்வேறு கோணங்களிலிருந்து சமத்துவத்தை முன்வைக்கும் திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல விசயம்.
'மனிதரில் இத்தனை நிறங்களா!' திரைப்படம் முழுவதும் கூர்மையான வசனங்கள் நிரம்பியிருக்கின்றன. இத்திரைப்படம் தமிழ் சினிமா மீதான பார்வையை மாற்றியிருக்கிறது. திரைப்படத்தின் படத்தொகுப்பில் ஏதும் பிரச்சனையா ? என்று தெரியவில்லை. ஒரு சில காட்சிகள் தொடர்ச்சியாக இல்லை.
கோவி.இளங்கோவன் அவர்கள் எழுதிய ' அக்னி ரோஜா ' என்ற நாவலைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆர்.சி.சக்தி இயக்கிய இத்திரைப்படத்தை யுடியூபில் காணலாம்.
மேலும் படிக்க :