Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Monday, September 2, 2024

பாலியல் சுரண்டல்கள் ஒழியட்டும் !


கேரள திரையுலகில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எல்லா மாநிலத் திரையுலகிலும் ஏன் உலகத்தில் உள்ள எல்லா திரையுலகிலும் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறலும் , பாலியல் சுரண்டலும் இருக்கிறது. இதை உலகில் உள்ள எந்தத் திரையுலகும் மறுக்க முடியாது என்பது தான் யதார்த்தம். 


மூடி மறைக்க முயற்சிப்பதை விட்டுவிட்டு முதலில் திரையுலகில் இருப்பவர்களே இதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் மேலும் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் மனநிலை ஒழியாமல் எந்த மாற்றமும் நிகழாது.


இந்தியாவைப் பொறுத்தவரை பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் காவலர்களாக இருந்தாலும், வழக்கறிஞர்களாக இருந்தாலும் கூட பாலியல் ரீதியான அத்துமீறல்களும், வன்கொடுமைகளும் பணியிடங்களில் நிகழ்கின்றன. 

இவை எல்லாவற்றுக்கும் ஆணாதிக்க மனநிலை தான் காரணமாக இருக்கிறது. ஆணாதிக்க மனநிலை ஒழியாமல் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது எங்கும் கிடைக்காது. 


இயல்பாகவே ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் மாற்று பாலினத்தவராக இருந்தாலும் இன்னொரு மனிதர் மீது ஈர்ப்பு வருவது இயல்பு. இதில் எந்தத் தவறும் இல்லை.பெண்ணோ, ஆணோ 'Mutual Consent ' இல்லாமல் நடக்கும் எதுவும் தவறு தான்; குற்றம் தான். 


வாழ்க்கைச் சூழல் காரணமாக வெவ்வேறு விதமான பணிகளுக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில் அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். 


ஆணாதிக்க மனநிலையை வளர்ப்பதில் தமிழ்த் திரைப்படங்களும், சின்னத்திரையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாயக்துதிபாடலை வளர்ப்பதுடன் , அதீத வன்முறையையும், பெண்களை கவர்ச்சி பொருளாகவும் முன்வைக்கின்றன. பள்ளி மாணவர்களின் மோதல்கள் கூட மரணம் வரை செல்வதற்கு யார் காரணம்? 


இயற்கையைப் போலத்தான் பெண்களும் எத்தனை விதமான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டாலும் அவர்கள் தொடர்ந்து இயங்குவதை யாராலும் தடுக்க முடியாது. 


ஆணாதிக்க மனநிலை ஒழியட்டும் !


எல்லோருக்கும் நல்வாழ்வு அமையட்டும் !


மேலும் படிக்க:

பெண் எனும் உருமாறும் சக்தி !


Saturday, July 27, 2024

சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் - ஆ.சிவசுப்பிரமணியன் !


கேள்வி - சாதி ஒழிப்பிற்கான சாத்தியமான வழிகள் என எவற்றைச் சொல்வீர்கள் ? 

பண்பாட்டு ஆய்வாளர், ஆ.சிவசுப்பிரமணியன்  : " அடிப்படையில் இதற்கான முன்னெடுப்புகள் அரசிடமிருந்துதான் தொடங்க வேண்டும். ஏனென்றால், சமூகப் பாதுகாப்பு என்ற ஒன்று இன்றைக்குச் சமூகத்தில் கேள்விக்குரியதாக இருக்கிறது. அது, சாதிய அடிப்படையில்தான் நிகழ்கிறது. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், எல்லோருமாகச் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் அல்லது அரசு பார்த்து உதவி செய்ய வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில், நீங்கள் உங்கள் சமூகத்து ஆள்களிடம்தான் அல்லது அமைப்பிடம்தான் போய் நிற்க வேண்டும். எல்லோருக்கும் பாதுகாப்புத் தர வேண்டிய அரசாங்கம், ஓட்டு அரசியலில் சாதியம் சார்ந்ததாக இன்றைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. காவல்நிலையத்தில் உயர்சாதி அதிகாரி ஒருவரிடம் , ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் , புகார் அளித்து சரியான அணுகுமுறையைப் பெற முடியுமா ? அதே நேரத்தில், அந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் ஓர் அமைப்போடு அங்கு சென்றால், சரியான விதத்தில் அணுகப்படுவார். இதுதான் யதார்த்தம். இங்கே அரசு அமைப்பே சாதியமாக உள்ளது. அடுத்ததாகக் கல்வி நிறுவனங்கள். அவை, நியாயமான முறையில் இன்னும் ஜனநாயகப்படுத்தப்படவில்லை. அனைத்து சமூகத்தவருக்கும் அவரவர் திறமைக்கு உரிய வகையில் மேலே படிக்க வாய்ப்பு வழங்கப்படுவதில்லை.குறிப்பாக, உயர்கல்வியில் வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. ஆகவே, அவர்கள் குறிப்பிடும்படியான வேலைவாய்ப்பும் பெற வழியின்றி போய்விடுகிறது". 

கேள்வி - அப்படியானால், அம்பேத்கர் முன்மொழியும் அகமணமுறை ஒழிப்பில் உங்களுக்கு...

பண்பாட்டு ஆய்வாளர், ஆ.சிவசுப்பிரமணியன் : " நம்பிக்கை இருக்கிறது. ஆனால், அதற்கு ஆதாரமே இவைதான்.அகமண முறை ஒழிப்பிற்கான சூழல் எப்படி உருவாகும் ? முறையான கல்வி பெற்று , வேலைவாய்ப்பு பெற்று, ஒன்றாகப் பணியாற்றுகிற சூழலில் தானே காதல் மலர மூடியும். இணைந்து பயில்வது, இணைந்து பணியாற்றுவது , இணைந்து உண்பது எனச் சூழல் உருவானால், தானாக சாதிமறுப்பு திருமணங்கள் நடக்கும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும்". 

ஜூலை 2018, விகடன் தடம் மாதயிதழில் வெளிவந்த பண்பாட்டு ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் நேர்காணலிலிருந்து...

அதிகமாக சாதி புழங்கும் இடமாக , சாதியவாதிகளுக்கு பக்கபலமாக இருப்பவை காவல் நிலையங்கள் தான். சாதி சார்ந்து ஒவ்வொரு குற்றத்திலும் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகே குற்றமே பதிவு செய்யப்படுகிறது. அப்படியே பதிவு செய்தாலும் முதலில் மேம்போக்காகவே பதிவு செய்யப்படுகிறது. அதற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்ட பிறகே சரியான பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்கு பதியப்படுகிறது. காவல் துறையிலேயே சாதிய ஒடுக்குமுறைகள் நிறைய இருப்பதாக சொல்லப்படுகிறது. சாதிய பாகுபாடுகளை வளர்ப்பதில் காவல் நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காவல் நிலையங்கள் மக்களை சமத்துவத்துடன் நடத்த ஆரம்பித்தாலே போதும் நிறைய நல்ல மாற்றங்கள் நிகழ ஆரம்பிக்கும்.

மேலும் படிக்க :



மனிதம் பரவட்டும் !


மனிதர்களின் மனங்களில் மனிதம் வளர்வதற்கு பதிலாக வன்மமே அதிகம் வளர்ந்து வருகிறது. ஏதேனும் ஒரு செய்தித்தாளை எடுத்து புரட்டிப் பாருங்கள், உண்மை புரியும்.மனிதர்கள் எப்படி இவ்வளவு வன்மம் நிறைந்தவர்களாக மாறிப் போனார்கள். அவர்களிடம் வன்மம் உருவானதற்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் அவை மிகமிகச் சிறியவையாகவே இருக்கின்றன, இருந்தும் அவை வன்மத்தை உருவாக்கி அழிவைத் தந்திருக்கின்றன. 

குற்றங்கள் எல்லா காலங்களிலும் இருப்பவை தான். ஆனால் தற்போது நடக்கும் மனிதர்களுக்கு இடையிலான  குற்றங்களில் வன்மமே பெரும் பங்கு வகிக்கிறது. எல்லாவிதமான குற்றங்களாலும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள் தான். 

மனித மனங்கள் நாளுக்குநாள் சுருங்கிக் கொண்டேதான் போகின்றன. மனங்கள் விசாலமடையாமல் எல்லோருக்கும் நன்மை நடக்காது. " மனிதர்களின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு, மனிதர்களை வெறுக்காதே " -ஷேக்ஸ்பியர். இந்த வரிகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். 

இன்னொரு மனிதர் மீது வன்மம் கொள்வதற்கு முன்பாக இந்த வரிகளை ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். 

வன்மம் வீழட்டும்

மனிதம் பரவட்டும் ❤️

மேலும் படிக்க :

ஆதிக்க உணர்வு அழிந்து போகட்டும்!

ஆதிக்கமும் அதிகாரமும் !


Friday, November 20, 2020

ஆதிக்க உணர்வு அழிந்து போகட்டும்!

நாளுக்குநாள் நமது மனங்கள் மரத்துப் போய்க்கொண்டே இருக்கின்றன. பொதுவாக வன்முறை, கொலை, பாலியல் வன்கொடுமைகள் பற்றி தெரிய வரும்போது கண்டும் காணாமல் கடந்து விடுகிறோம். அதே நேரத்தில் கொடூர வன்முறை, கொடூர கொலை, கொடூர பாலியல் வன்கொடுமை என்றால்தான் கொஞ்சமாவது கவனிக்கிறோம். அந்தளவிற்கு நமது மனங்கள் சிதைவடைந்துள்ளன. 


லாக்கப் கொலைகளை சாதாரணமாக கடந்து போனோம். சாத்தான்குளம் லாக்கப் கொலைகள் கொடூரமாக நிகழ்த்தப்படத்தால்தான் அதிக கவனம் பெற்றன. தீவிர மதவாதியான யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேச முதல்வரான பிறகு உத்திரபிரதேச மாநில மக்கள் பல்வேறு விதமான கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். இன்றைய இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உத்திரபிரதேசத்தில்தான் அதிகம். சாதிய ,மதவாத கொடுமைகளும் அங்குதான் அதிகம். மற்ற சாதிய வன்கொடுமைகளோ, பாலியல் வன்கொடுமைகளோ செய்திகளாக கடந்துபோன நிலையில் மனிஷா வால்மீகி மனிதத்தன்மையற்ற முறையில், கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது கண்டு கொதித்து போகிறோம். மன அமைதியின்றி தவிக்கிறோம்.அடுத்து இந்த நிலைமைதானே மற்ற இந்திய பெண்களுக்கும் என்று பதைபதைக்கிறோம்.

அரசோ, ஊடகங்களோ, மக்களோ அந்த நேரத்து உணர்ச்சிவசப்பட்ட நிலையைக் கடந்து இதே மாதிரியான குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறைகள் பற்றி விவாதிப்பதேயில்லை. அந்த குறிப்பிட்ட குற்றத்திற்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்ற குரல் மட்டுமே சத்தமாக கேட்கிறது. கடுமையான குற்றத்திற்கு மிக கடுமையான தண்டனை என்பது அவசியம்தான். அதே நேரத்தில் அந்த குற்றம் செய்யத்தூண்டும் ஆதிக்க மனநிலை கேள்விக்கு உட்படுத்தப்படுவதேயில்லை. பல்வேறு விதமான அதிகாரங்களும், ஆதிக்க உணர்வுமே பெரும்பான்மையான குற்றங்களுக்கு காரணமாக இருக்கின்றன.

அதிகார போதையும், ஆதிக்க உணர்வும் இல்லாத மனிதரால் இன்னொரு மனிதருக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது.

அதிகாரமும், ஆதிக்க உணர்வும் அழிந்து போகட்டும். இதை அழிப்பதில் பெரும் பங்கு காவல்துறைக்கே உள்ளது. காவல்துறையே அதிகாரத்தை தேவையில்லாத போதும் மக்கள் மீது செலுத்தும் அமைப்புதான் என்றாலும் மற்றவர்களின் அதிகார மனநிலைக்கும், ஆதிக்க மனநிலைக்கும் துணை நிற்பது இந்த அமைப்புதான். அரசியல் ரீதியான அழுத்தங்கள் இல்லையென்றாலும் கூட மற்ற அதிகாரங்களுக்கும், பணத்திற்கும் அடிபணியும் அமைப்பாகவே காவல்துறை இருக்கிறது. சாதி ரீதியான, மத ரீதியான, ஆதிக்க உணர்வு எல்லா இடங்களிலும் இருப்பது போல காவல்துறையிலும் இருக்கிறது. ஆணாதிக்க உணர்வும் காவல்துறையில் மேலோங்கியே உள்ளது. மற்ற பணியிடங்களைப் போலவே காவல்துறையிலும் பெண்கள் பல்வேறு விதமான இன்னல்களைச் சந்திக்கிறார்கள்.

சமூகத்தின் ஒரு அலகுதான் காவல்துறை, சமூகத்தைப் போலவேதான் காவல்துறை இருக்கும் என்றாலும் சமூகத்தில் நிகழும், மீறல்களுக்கு, குற்றங்களுக்கு முதலில் மக்களாகிய நாம் காவல்துறையைத்தானே அணுகுகிறோம். முதலில் அணுகும் ஒரு அமைப்பே அதிகாரத்திற்கும், ஆதிக்கத்திற்கும் துணை போவதுடன் அதே அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் மக்கள் மீது செலுத்துவதை எப்படி ஏற்க முடியும். அதிகாரத்தாலும், ஆதிக்கத்தாலும் நிகழும் குற்றங்கள் குறைய வேண்டுமெனில் காவல்துறைதான் பெரும் பங்காற்ற வேண்டியிருக்கிறது. வெறும் தண்டனைகள் மற்றும் குற்றங்களைக் குறைத்துவிடாது. என்று காவல்துறை குற்றத்தை குற்றமாக மட்டுமே பார்க்கிறதோ அன்றிலிருந்துதான் மாற்றங்கள் நிகழும். குற்றம் யார் செய்தது? என்பதைப் பொறுத்தே காவல்துறை செயல்படும் எனில் எந்த மாற்றமும் நிகழாது.

சாதி ரீதியான வன்கொடுமைகள், மத ரீதியான வன்கொடுமைகள் , பெண்கள் மீதான வன்கொடுமைகள் இத்தனையையும் செய்து கொண்டே இருக்கும் நிலத்திலேயே ராமர் கோவிலையும் கட்டுகிறார்கள். இத்தனை கொடுமைகளும் ராமர் கோவில் கட்டுவதால் மறைந்துவிடும் என்றால் அந்நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு விடிவு காலமே கிடையாது. கஷ்மீர் போல உத்திரபிரதேசமும் இந்தியாவின் இருண்ட பூமியாகிவிட்டது. உத்திரபிரதேச மாநிலத்தை பாஜகவின் கையிலிருந்து பிடுங்குவதன் மூலமே இந்தியாவை பாஜகவிடமிருந்து பிடுங்குவது தோடங்கும். அதுவரை நம்மை கொந்தளிப்பான மனநிலையிலேயேதான் வைத்திருப்பார்கள். அவநம்பிக்கையுடன் வாழ்வது கொடிதிலும் கொடிது. அதைத்தான் பாஜக அரசு இந்திய மக்களுக்கு பரிசாக கொடுத்திருக்கிறது. 

மேலும் படிக்க :


ஆதிக்கமும் அதிகாரமும் !

அதிகாரமும், ஆதிக்கமும் தான் அனைத்துவிதமான வன்முறைகளுக்கும், தீங்குகளுக்கும் காரணங்களாக இருக்கின்றன. அரசு அதிகாரம், சாதி அதிகாரம், பண அதிகாரம், கட்சி அதிகாரம் என பலவிதமான அதிகாரங்கள் மக்களைப் பாதிப்புகளுக்கு உள்ளாக்குகின்றன. மனிதர்கள் அதிகாரம் கையில் இருக்கும் போது ஒரு மாதிரியும், அதிகாரம் கையில் இல்லாத போது வேறு மாதிரியும் நடந்து கொள்கிறார்கள். சிறிய அளவிலான மிரட்டலிலிருந்து பெரிய அளவிலான வன்கொடுமைகள் வரை நடப்பதற்கு இந்த அதிகார மனநிலைதான் காரணமாக இருக்கிறது. வெகுஜன மக்கள் அதிகாரங்களுக்கு அடங்கிப் போகவே பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான நேரங்களில் அதிகாரங்கள் கேள்விக்கு உட்படுத்தப்படுவதேயில்லை. ஆனால் அவை கண்டிப்பாக கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். 


ஆண் ஆதிக்கம், இன ஆதிக்கம் , மொழி ஆதிக்கம், சாதி ஆதிக்கம், மத ஆதிக்கம் போன்ற பலவிதமான ஆதிக்கங்கள் மனிதர்களுக்கு தொடர்ந்து ஆதிக்க உணர்வை அளித்து வருகின்றன. ஆதிக்க மனநிலை மட்டும் இல்லையென்றால் இந்த பூமி ஒரே நாளில் அமைதிப் பூங்காவாக மாறிவிடும். ஒவ்வொரு நாடும் கோடிக்கணக்கான பணத்தை தினமும் மிச்சப்படுத்த முடியும். மனிதர்களாகிய நாம் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறோம். ஆதிக்க மனநிலையால் ஒரு குற்றம் நிகழ்த்தப்படும் போது அந்த குற்றத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் மிகவும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். குற்றவாளிகள் நிச்சயம் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே சமயம் அந்த குற்றத்தை நிகழ்த்தத் தூண்டிய மனநிலையை நாம் கேள்விக்கு உட்படுத்துவதேயில்லை. அந்த ஆதிக்க மனநிலையை நாம் தொடர்ச்சியாக கேள்விக்கு உட்படுத்துவதன் மூலமே அதே குற்றங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க முடியும். 

அதிகார மனநிலையையும், ஆதிக்க மனநிலையையும் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்தெறிவதன் மூலமே ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைக்க முடியும்.

அதிகார மனநிலையையும், ஆதிக்க மனநிலையையும் அழிந்து போகட்டும் !

மேலும் படிக்க:
 

Tuesday, October 29, 2019

நாமெல்லாம் கொலைகாரர்களே !

படம் - ரவி பேலட்

வளர்ந்தவர்களை மலக்குழியில் தள்ளி கொல்கிறோம். வளராதவர்களை ஆழ்துளை கிணற்றில் தள்ளி கொல்கிறோம். எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் கடந்து போகவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். மலக்குழி மரணங்கள் இன்று வரை விவாதப் பொருளாக ஆனதேயில்லை. ஆழ்துளை கிணறு மரணங்கள் விவாதப் பொருளாக மாறுவதற்கு இரண்டு வயது பிஞ்சுவின் மரணம் தேவையாய் இருக்கிறது. இரண்டுக்குமே முறையான இயந்திரங்களோ, பாதுகாப்பு வசதிகளோ இல்லை.

முதலில் இந்தியாவில் குழந்தைகள், குழந்தைகளாக நடத்தப்படுவதேயில்லை. குடும்பம், சமூகம், அரசு என மூன்றுமே குழந்தைகளின் மனநிலைகளையும், அவர்களைக் காத்து சரியாக வழி நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்ததேயில்லை. இன்றைய குழந்தைகள் தானே நாளைய எதிர்காலம் என்ற உணர்வு இந்திய நாட்டில் யாருக்கும் இல்லை. இந்தியாவில் கலை, இலக்கியம் கூட குழந்தைகளை கைவிட்டு விட்டன. அரிதாகவே கலையும், இலக்கியமும் குழந்தைகளை பதிவு செய்கிறது.

பேரிடர் மேலண்மை என்பது தமிழகத்தில் சுத்தமாக இல்லை. பேரிடர் மேலாண்மை குறித்த படிப்பும் குறிப்பிடும்படியாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் இல்லை. பேரிடர் மேலண்மையில் முக்கியமாக தேவைப்படுவது சூழியல் அறிவு. இதுவரை நடந்த பேரிடர்களின் போது இவர்கள் செயல்பட்ட விதத்தைப் பார்க்கும் போது சூழியல் அறிவு என்பது யாருக்கும் இல்லை என தெளிவாகத் தெரிகிறது. கடலில் எண்ணெய் கொட்டினால் வாளியில் அள்ளுவது, திடீர் வெள்ளம் வந்தால் எப்படி எதிர் கொள்வது என்று தெரியாமல் முழிப்பது, நில அமைப்பு எப்படி இருக்கிறது என்ற புரிதல் இல்லாமல் இருப்பது, ஒக்கி புயலின் போதும், கஜா புயலின் போதும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது என சொல்லிக்கொண்டே போக முடியும். ஒக்கிப் புயலின் போது மீனவர்களை சாகவிட்டு வேடிக்கை பார்த்தவர்கள் தானே நாம்.  சூழியல் அறிவா ? அப்படியென்றால் என்ன ? என்று கேட்கும் நிலையே அரசிடம் இருக்கிறது. ஆவியாவதை தடுக்க தெர்மாகோல் அட்டையை விரித்தவர்கள் தானே அவர்கள்.

கல்பாக்கம், கூடங்குளம் என ஒன்றுக்கு இரண்டு அணுமின் நிலையங்கள் இருக்கின்றன. சிறு விபத்து ஏற்பட்டாலும் பேச கூட நேரம் இருக்காது. செத்து மடிந்து விடுவோம். நினைக்கவே அச்சமாக இருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் எண்ணை எடுக்கும் குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டால் ? பேரிடர்களை சமாளிக்கும் தகுதியே இல்லாமல் கார்பரேட்காரர்களுக்காக நாசகார திட்டங்களை தமிழகத்தில் எதற்காக அனுமதிக்கிறீர்கள் ? இரண்டு அரசுகளும் சேர்ந்து தான் அவ்வளவு எதிர்ப்புகளுக்கு இடையிலும் கூடங்குளம் அணுமின்நிலையத்தை அமைத்தன. இப்போது நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கத் துடிக்கிறார்கள், கொலைகாரர்கள்.

அறிவியல் , வளர்ச்சி என்பதெல்லாம் யாருக்கானது ? எல்லாமே மக்களுக்கானது. இதை பெரும்பாலான அரசுகள் உணரவேயில்லை. அரசு என்பது மக்களால், மக்களின் வரிப்பணத்தில் தான் நடக்கிறது என்பதே அரசு எப்போதும் நினைவில் வைப்பதேயில்லை.அரசுக்குத் துணையாக மக்களும் இதை மறந்துவிடுகிறார்கள். மக்களை கொத்து கொத்தாக கொல்வதற்கு, இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஓராயிரம் கருவிகள் இருக்கின்றன. கழிவுகளின் அடைப்பை சரிசெய்யவோ, ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறு உயிரைக் காப்பாற்றவோ நம்மிடம் முறையான கருவிகள் இல்லை. நிலவிற்கு ராக்கெட் அனுப்பியதற்கு பெருமிதம் அடைந்தவர்களே உங்கள் முகத்தில் நீங்களே காறி உமிழ்ந்து கொள்ளுங்கள்.

பெரிய அளவிலான உளவியல் பாதிப்புகளை நமக்கு ஏற்படுத்தி இருக்கிறது இந்நிகழ்வு. இரண்டு, மூன்று வயது குழந்தைகளை பார்க்கும் போது இவர்களைப் போற்றவன் தானே சுஜித்தும் என்ற எண்ணம் தான் முதலில் வருகிறது. யாராலும் இயல்பாக தங்களின் அன்றாட வேலைகளை கவனிக்க முடியவில்லை. '5 அடி, 10 அடி ' என எங்காவது வாசிக்க நேர்ந்தால் கூட சுஜித் தான் முதலில் நினைவிற்கு வருகிறான். என்ன செய்தும் , நம்மை நோக்கி கையசைந்த அந்த பிஞ்சை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வை ஒருபோதும் நம்மால் நீக்கிவிட முடியாது. நம்மை நம்பிய அந்த உயிரை குழிக்குள் வைத்தே கொன்று விட்டோம். நாமெல்லாம் கொலைகாரர்களே.

கடைசி நாளில் என்ன அயோக்கியத்தனம் செய்ய வேண்டுமோ அதை பிசக்காமல் செய்து முடித்திருக்கிறார்கள்.குழந்தையின் கைகளில் அசைவில்லை, குழந்தை மீது ஒரு அடி வரை மண் விழுந்துவிட்டது, உள்ளிருந்து துர்நாற்றம் வீசுகிறது, குழந்தை இறந்துவிட்டது என்று படிப்படியாக சொல்லி குழந்தையை அழுகிய நிலையில் மீட்டோம் என்று சொல்லி முடிவிற்கு கொண்டு வந்து விட்டார்கள். மீட்டது உண்மையிலேயே சுஜித் உடல் தானா ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது. போஸ்ட்மார்ட்டம் அறிக்கை என்று எதை காண்பிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முழுமையான விளக்கம் தேவை. அரசு இயந்திரத்திற்கு மனசாட்சி , குற்றவுணர்ச்சி என்றெல்லாம் எதுவும் இல்லை என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இயற்கையின் மீது கைவைக்கும் போது கவனமாக செயல்பட வேண்டும் என்று பல முறை நமக்கு படிப்பினைகளை இயற்கை கொடுத்திருக்கிறது. ஆனாலும் நமது செயல்பாடுகளில் துளியும் மாற்றமில்லை. தனிப்பட்ட முறையிலும்,அரசு மற்றும் கார்பரேட் நிறுவனங்களாலும் இயற்கை வளங்கள் பெருமளவு பாதிப்புகளைச் சந்திக்கின்றன. இதற்கெல்லாம் சேர்த்து இயற்கை பதிலடி தரும் போது நம்மால் எதிர்கொள்ள முடிவதில்லை. இயற்கைக்கு கருணையே கிடையாதா ? ஆம், இயற்கைக்கு கருணை என்பது எப்போதும் இல்லை. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நிமிடமும் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டே தான் இருக்கும். ஏற்கனவே இருப்பது அழிவது பற்றியோ, புதிதாக உருவாவது பற்றியோ எப்போதும் கவலைப்படாது. சமநிலை, சமநிலை அது மட்டுமே இலக்கு.

மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் இயற்கையின் சமநிலையை பாதிப்பது இல்லை. இயற்கையுடன் இணைந்த வாழ்வையே அமைத்துக் கொள்கின்றன. மனித இனம் தான் இயற்கையின் சமநிலையை ஒவ்வொரு நிமிடமும் சிதைக்கிறது. அதற்கான பலனை அனுபவித்தாலும் திருந்தவேயில்லை. இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை மட்டுமே நம்மை மீட்கும்.

Wednesday, May 1, 2019

தொழிற்சங்கங்கள் எங்கே?


அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் (  https://clc.gov.in/clc/node/606 )கூட இன்னமும் தொழிலாளர்களுக்கு சென்றடையவில்லை. சமூகநீதி காக்கும் மண் என்று சொல்லிக்கொள்ளும் தமிழகத்தில் கூட இது தான் நிலைமை. 1990 வரை வலுவாக இயங்கி வந்த தொழிற்சங்கங்கள் அதன் பிறகு வலுவிழக்கத் தொடங்கி விட்டன. காரணம், 1990க்கு பிறகு தான் கார்பரேட் வணிகம் விரிவடைய ஆரம்பித்தது தான். கார்பரேட்களுக்காக தொழிலாளர் சட்டங்களும் திருத்தப்படுகின்றன, தொழிற்சங்கங்களும் அழிக்கப்படுகின்றன.

இன்றைய சூழலில் அரசு ஊழியர்களின் சங்கங்கள் மட்டுமே ஓரளவு வலுவுடன் இருக்கின்றன. அப்படி இருந்தும் கூட மத்திய,மாநில அரசுகளை தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற  நிர்பந்திக்க முடியவில்லை. இந்நிலையில் பெரும்பாலான தனியார் ஊழியர்களுக்கு தொழிற்சங்கங்கள் இல்லை. ஏற்கனவே இருக்கும் தொழிற்சங்கங்களும் வலுவுடன் இல்லை. புதிதாக தொழிற்சங்கங்கள் உருவாகவும் முதலாளி வர்க்கம் அனுமதிப்பதில்லை. தொழிற்சங்கங்கள் இல்லாத சூழலில் தகுந்த காரணமில்லாமல் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவது என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது. நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் நலச்சட்டங்களை மட்டுமே நம்ப வேண்டிய சூழலில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.

தொழிலாளர்கள் நலனில் அக்கறையுள்ள மாநிலமாக கேரளமே இருக்கிறது. ஓரளவிற்கு அனைத்து தொழிலாளர்களையும் அமைப்பிற்குள் கொண்டு வர பெருமுயற்சி எடுத்து வருகிறார்கள். வீட்டு வேலை செய்பவர்களுக்கென்று தனியாக அமைப்பை நிறுவி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள். கம்யூனிசம் என்ன செய்தது என்பவர்களுக்கு கேரளமே உதாரணம்.

உள்ளூர் தொழிலாளர்களை விட மிகவும் குறைந்தபட்ச கூலிக்கு வட இந்திய தொழிலாளர்கள் ,குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகளவு பணியில் அமர்த்தப்படுகிறார்கள். முதலில் அனைத்து விதமான தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களுக்குள் கொண்டுவர வேண்டும். அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம், பணிப்பாதுகாப்பு உள்ளிட்ட தொழிலாளர்கள் நலன்கள் காக்கப்பட வேண்டும்.

தேவை ! தேவை !
தொழிற்சங்கங்கள் தேவை !

#மேதினம்
#MayDay

மேலும் படிக்க:

தற்கொலைகளும் , மதுப்பழக்கமும் !

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 8 !

Saturday, February 9, 2019

தற்கொலைகளும், மதுப்பழக்கமும் !

தற்கொலைகள், குடிப்பழக்கம் இந்த இரண்டு விசயங்கள் தான் 2018 முழுவதுமே தொந்தரவு செய்து கொண்டே இருந்தன. இவற்றை பற்றிய செய்திகளை சாதாரணமாக கடந்து போக முடியவில்லை. இதற்கு முன்பும் தற்கொலைகளும், குடிப்பழக்கமும் இருந்தது தான் என்றாலும் 2018ல் இவை மிகவும் அதிகரித்து உள்ளன. மிகவும் சாதாரண காரணங்களுக்காகக் கூட தற்கொலைகள் நிகழ்வது நல்ல அறிகுறி அல்ல. அம்மா இறந்த துக்கத்தால் மகனும் மருமகளும் தற்கொலை, அம்மா- அப்பா சண்டை போடுவதை நிறுத்தாததால் மகள் தற்கொலை, உறவுகள் வெளியூரில் வேலை செய்வதால் தந்தை இறந்த பிறகு தனியாக வாழ நேர்ந்ததால் பதினொன்றாம் வகுப்பு மாணவன் தற்கொலை என தற்கொலைகள் மிகவும் விரைவான வேகத்தில் அதிகரித்து வருகின்றன.

எந்த காரணத்திற்காகவும் தற்கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்கொலை எண்ணம் என்பது எப்போதும் எல்லோருக்குள்ளும் இருந்து வரும் ஒன்று தான். அந்த எண்ணம் தலைதூக்கும் போது அதை ஏதோ ஒரு விதத்தில் மட்டுப்படுத்த வேண்டும். நவீன வாழ்க்கை தனிமனிதர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. எவ்வளவு சாதித்தாலும், புகழடைந்தாலும் கூட தற்கொலை எண்ணம் என்பது ஓடி விடாது. சக மனிதர்களுக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளிப்பது நம் கடமை. நவீன இணைய சாதனங்களும், தொழிற்நுட்பமும் நம்மையெல்லாம் இணைத்து விட்டதாக நம்மை நம்ப வைத்தாலும் உண்மையில் ஒவ்வொருவரையும் பந்தயக் குதிரை போல ஓடவே தயார் செய்கிறது. இன்று நாம் எதற்கு முக்கியத்தும் கொடுக்கிறோம் என்பதிலிருந்தே இந்த சாதனங்களின் ஆக்கிரமிப்பை உணரலாம். நாம் ஒவ்வொருவரும் திட்டமிட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறோம். இதிலிருந்து நாம் வெளியே வந்தே ஆக வேண்டும். தற்கொலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டே ஆக வேண்டும்.

' மயக்கமா கலக்கமா ... மனதிலே குழப்பமா ?' என்ற கண்ணதாசனின் பாடல் நிறைய உயிர்களைக் காப்பாற்றி வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்திருப்பதாகச் சொல்கிறார்கள். மனம் சோர்வடையும் போது மனதிற்கு பிடித்த ஏதோ ஒன்றை பாடல் கேட்பது, வாசிப்பது ,எழுதுவது, விளையாடுவது ,வெளியில் செல்வது என ஏதாவது ஒன்றைச் செய்து அந்தச் சூழலைக் கடக்க வேண்டும். சக மனிதர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவதும் அதிகரிக்கும் தற்கொலைகளுக்கு ஒரு காரணம். மனதை எப்போதும் சமநிலையில் வைத்திருப்பது மிகவும் சவாலான காரியம். அதனாலேயே தினசரி வாழ்வு தரும் அழுத்தத்திலிருந்து வெளியேற ஏதேனும் ஒரு கலைச் செயல்பாட்டை மேற்கொள்வது அவசியமாகிறது. சாதாரண செய்தியாக கடந்து போகாமல் அரசு, தற்கொலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தற்கொலைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளுடன் தனிமனிதர்களும் இணைந்து செயல்படுவதன் மூலமே தற்கொலைகளை குறைக்க முடியும்.

குடிப்பழக்கம் என்பது தமிழகத்தில் நாளுக்குநாள் மிகவும் அதிகரித்து வருகிறது. எப்போதாவது குடித்தவர்கள் கூட தினமும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். தினமும் குடித்துக் கொண்டிருந்தவர்கள் குடிநோயாளிகளாக மாறிவிட்டனர். புதிதாக குடிக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அச்சமளிக்கும் வகையில் கூடியுள்ளது. ஆனால் இதை பற்றிய எந்த கவனமும் இல்லாமல் நமது வாழ்க்கை சக்கரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு மனிதரை பாதிக்காத எதுவும் தவறில்லை. அது குடிப்பழக்கத்திற்கும் பொருந்தும். அப்படியான அளவான குடிப்பழக்கம் என்பது மிகவும் குறைந்துவிட்டது. இந்த வாழ்வு தரும் நெருக்கடிகள் அதிகம் என்றாலும் கூட குடியை நியாயப்படுத்த முடியாது.

மது என்பது கொண்டாட்டதிற்கான பானம். மனித சமூகத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே மது கூடவே தான் வருகிறது. இப்போதும் கொண்டாட்ட மனநிலையில் அளவான மதுவைச் சுவைப்பது தவறில்லை தான். ஆனால் தமிழகத்தில் விற்கப்படுவது மதுவே அல்ல என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக இருக்கிறது. மது கூட இங்கு தரமானதாக இல்லை. வெறும் எரி சாராயம் தான் இருப்பதாக சொல்கிறார்கள். அதை தொடர்ந்து குடித்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் உருவாகவே செய்யும். இந்த பாதிப்புகள் தனிமனித பாதிப்புகளுடன் நின்று விடுவதில்லை. முதலில் குடும்பம் பெரிய அளவிலான பாதிப்புகளைச் சந்திக்கிறது, பிறகு சமூகம். சமூகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள் மது தரும் போதையின் துணையுடன் தான் நடக்கின்றன. இப்படி ' மது பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு தருவதாகவே ' இருக்கிறது.

ஆண்கள் சந்தித்தால் டீ குடிக்க போவது என்பது குறைந்து மது குடிக்கப் போவது அதிகரித்து இருக்கிறது. நெடுஞ்சாலை ஓரங்களில் மூடப்பட்ட அனைத்து மதுபானக்கடைகளும் திறக்கப்பட்டது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. பல ஊர்களில் மதிய நேரங்களில் உணவு கிடைப்பது கூட தட்டுப்பாடாக இருக்கிறது. ஆனால் மதுவிற்கு தட்டுப்பாடே எப்போதும் இருப்பதில்லை. மது இல்லாமல் ஆண்கள் சந்தித்துக் இளைபாறிச் செல்லும் வேறு கலை அல்லது விளையாட்டு சார்ந்த வெளிகள் உருவாக்கப்பட வேண்டும். உண்மையில் ஆண்கள் சந்தித்துக் கொள்ள இன்று வெளிகளே இல்லை. அந்த இடத்தைத் தான் மதுவும் , மதுபானக்கடைகளும் பிடித்துள்ளன. அதிகரித்து வரும் அதீத மதுப்பழக்கம் மிகவும் ஆபத்தான ஒன்று.

வருகின்ற 2019ம் ஆண்டாவது தற்கொலைகள் குறைந்த மதுப்பழக்கம் குறைந்த ஆண்டாக இருக்க வேண்டும்!

Saturday, December 23, 2017

முடிவிற்கு வந்த டீக்கடை!

கடை தொடங்குவதற்குத் தேவையான சாமான்கள் வாங்கக் கூட பணமில்லாமல் அப்பாவின் நண்பர்கள் உதவியுடன், அவர்களின் நிர்பந்தத்தால் தொடங்கப்பட்ட கடையிது. அப்புறம் கடையின் வருமானத்தின் மூலம் அந்த கடன் படிப்படியாக கட்டப்பட்டது. அதன் பிறகு இதை தங்களின் வாழ்க்கையாக நினைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டு தங்களின் அயராத உழைப்பால் மேலே வந்தது தான் எங்கள் குடும்பம். அம்மா , அப்பா ஆகிய இருவரின் உழைப்பைக் கண்டு இன்று வரை மிரண்டு தான் போகிறேன். ' sun-கு ஏது sunday ' என்பது போல இன்று வரை உழைத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களின் உழைப்பிற்கு சித்தப்பா துணை நிற்கிறார்.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள் என்று சொல்வார்கள். ஒரு எளிய தொழிலுக்கும் அது தான் வயதோ ? சரியான சரக்கு மாஸ்டர் அமையாதது தான் முதல் பின்னடைவாக இருந்தது. அம்மாவிற்கு எல்லாவிதமான பலகாரங்களும் சுடத் தெரியும். சித்தப்பாவின் உதவியுடன் சரக்குகள் தயார் செய்யப்பட்டு விற்கப்பட்டன. அடுத்து டீ மாஸ்டர் அமையவில்லை. அப்புறம் டீயும் எங்களாலேயே போடப்பட்டது. கடை NH- 7 ல் இருந்ததால் எங்களுக்கான பிரச்சனைகள் இருந்தாலும் கடை வருமானம் ஓரளவு வந்து கொண்டிருந்தது. அடுத்த பின்னடைவு தங்கநாற்கர சாலை. ஊரை ஒதுக்கி சாலைகள் அமைக்கப்பட்டன. தொடர்ச்சியாக கிடைத்து வந்த வருமானம் குறையத் தொடங்கியது. அப்போதே கடையை நிறுத்தலாம் என திட்டமிட்ட நிலையில் கடைக்கு அருகே புதிதாக அமைக்கப்பட்ட தேசிய வங்கி கிளையால் அப்போதைக்கு அந்த முடிவு கைவிடப்பட்டது.

அடுத்து அம்மாவிற்கு ஓய்வளிக்கும் விதமாக பலகாரங்கள் நாங்களே போடுவது நிறுத்தப்பட்டு வெளியே வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்தோம். ஆனாலும் அம்மா, ஓய்வைத் தேடவில்லை, வேறு வகையில் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார். இப்போது எங்கள் பகுதியில் டீக்கடைகள் அதிகரித்து விட்டதாலும் , சித்தப்பாவிற்கு ஓய்வளிக்கும் விதமாகவும் கடையை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. முன்பை விட தற்போது கடையை நடத்துவதிலும் செலவீனம் அதிகம். பால் , டீத்தூள் , கேஸ் எல்லாமே உயர்ந்த வண்ணமே இருக்கின்றன.

டீக்கடையை நிறுத்தும் முடிவால் வறுத்தமெல்லாம் இல்லை. அந்த கடைக்கு நாங்கள் உண்மையாக இருந்தோம். அதுவும் எங்களின் உழைப்பிற்கேற்ற பலனைக் கொடுத்திருக்கிறது. இப்போது நாங்கள் வாழும் இந்த வாழ்க்கை அந்த டீக்கடை கொடுத்தது தான். எழுதும் இந்த எழுத்தும் அந்த டீக்கடை கொடுத்தது தான். ஆம் , 'தினத்தந்தி ' வாசித்து தமிழ் கற்றவர்களில் நானும் ஒருவன். ' யார் ஆட்சியில் இருந்தாலும் , ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஜால்ரா போடுவது தான் தினத்தந்தி ' என்று தினத்தந்தி நாளிதழ் மீது பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்று வரை பிழையின்றி தமிழை அச்சிடுவதில் முதன்மையான நாளிதழது. வாசிக்கவும் , எழுதவும் தூண்டியது அந்த தினத்தந்தி தான். இப்படி பலவற்றை அந்தக் கடையிலிருந்து நான் தனிப்பட்ட முறையில் பெற்றிருக்கிறேன். இப்போதும் அந்த டீக்கடை வருமானத்திலிருந்து தொடங்கப்பட்ட மளிகை கடையில் இருந்து கொண்டுதான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

டீக்கடை, தமிழர்களின் வாழ்வில் ஒரு அங்கம். டீக்கடைகள் எப்படி தமிழகத்திற்குள் நுழைந்தன என்று தெரியவில்லை. ஆண்களுக்கான ஒரு கலாச்சார வெளியை டீக்கடைகள் உருவாக்குகின்றன. ஆடியோ கேசட்டுகள் புழக்கத்தில் இருந்த காலத்தில் டீக்கடைகள் தான் திரைக்கு வர இருக்கும் படங்களிலிருந்து பாடல்களை முதலில் ஒலிபரப்பும். பாடல்களை கேட்பதற்காகவே கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். நாங்களும் பள்ளி விட்டு வந்தவுடன் சில பாடல்களையாவது கேட்டுவிட்டு தான் கடையை விட்டு நகர்வோம்.

பல்வேறு படங்களிலிருந்து பாடல்களை ஆடியோ கேசட்டில் பதிந்து தர ஒவ்வொரு ஊரிலும் ' மியூசிக்கல்ஸ் ' என்ற பெயரில் பல கடைகள் இருந்தன. 60, 90 என்று கேசட்டுகள் பயன்பாட்டில் இருந்தன. 60 கேசட்டில் பக்கத்திற்கு 6 என 12 பாடல்களும் , 90 கேசட்டில் பக்கத்திற்கு 9 என 18 பாடல்களும் பதிவேற்ற முடியும். முதன் முதலில் கேசட் வாங்கி அதில் பிடித்த பாடல்களை பதிவேற்றிய அனுபவம் அவ்வளவு ஆனந்தம். Mp3 வந்த பிறகு ஆடியோ கேசட்களின் காலமும் , மியூசிக்கல்ஸ்களின் காலமும் முடிவிற்கு வந்தன.

காலை (தினத்தந்தி ) , மாலை (மாலை மலர் ) நேரங்களில் நாளிதழ் படிக்க மட்டும் ஒரு தனிக்கூட்டம் கூடிவிடும். அரசியல் விவாதங்கள் சூடு பறக்கும். அதிகமாக ஜெயலலிதா , கருணாநிதியை முன் வைத்தே விவாதங்கள் நடக்கும். இப்போதும் கருணாநிதி தான் முன்னிலையில் இருக்கிறார்.
வாடிக்கையாளர்களுக்கு பதில் சொல்வது தான் இப்போது மிகச்சிரமமான காரியமாக இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஒன்று , இப்போது இல்லை என்பதே அவர்களால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது எல்லா இடங்களிலும் நிகழக் கூடியது தான். இவை எல்லாவற்றையும் கடந்து தான் வாழ்க்கை இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது !

மேலும் படிக்க :

மண் பேசும் !

தமிழர்களின் மரபை மீட்போம் !

..................................................................................................................................................

Saturday, February 11, 2017

பணமதிப்பு நீக்கம் - மறைமுக தனியார்மயம் !



இந்தியர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக தேசிய செய்தி , மாநில செய்தி , மாவட்ட செய்தி , வட்ட செய்தி , கிராம செய்தி என எல்லாமே ஒரே செய்தி 500 மற்றும் 1000 மட்டும் தான். தமிழகத்தின் முதல்வர் இறந்தது பற்றிய செய்திகள் ஒரு நாளுடனும் , மாநிலத் தலைநகரான சென்னையைத் தாக்கிய வார்தா புயல் பற்றிய செய்திகள் இரண்டு நாட்களுடனும் முடிந்துவிட்டது. பணமதிப்பு நீக்கம் பற்றிய கூச்சல் ,குழப்பங்கள் இன்னும் முடியவில்லை. அடித்தட்டு மக்களும் ,நடுத்தர மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் ,தொழில், சேவை என நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் ஸ்தம்பித்து நிற்கிறது. 35 நாட்களுக்குப் பிறகும் எந்த மாற்றமும் நிகழாத நிலையில் 50 நாட்களில் எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி மீண்டும் மீண்டும் சொல்கிறார்.

பொதுவாகவே சேமிப்பு பழக்கம் அதிகமுள்ளவர்களாக நாம் இருக்கிறோம். சிறுவாடு காசு என்ற பெயரில் ஆயிரங்களிலிருந்து இலட்சங்கள் வரை நம் வீடுகளில் இருப்பது இயல்பு. அதை மாற்றுவது கூட எளிதாக இல்லைஎனக்குத் தெரிந்து தற்போதைய தலைமுறை தான் சேமிப்புப் பழக்கம் குறைவாகவோ அல்லது சேமிப்பு பழக்கம் இல்லாத தலைமுறையாகவோ இருக்கிறது. ஊழலுக்கு எதிராகவும் , பெரும் பணக்காரர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் குறித்தும் , பெரும் பணக்காரர்களுக்கு கொடுக்கப்படும் வரி சலுகைகள் குறித்தும், அரசு நிறுவனங்கள் சலுகை விலையில் விற்கப்படுவது குறித்தும் , முக்கிய துறைகளில் கூட அந்நிய முதலீட்டை அளவிற்கு அதிகமாக அதிகரிப்பது குறித்தும் கேள்விகள் கேட்கும் நடுத்தர வர்க்கம் தான் கட்டம் கட்டப்படுவதாகத் தெரிகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் சாதக ,பாதகங்களை ஆராயாமல் திடீரென ஒரு முடிவை அறிவிப்பது ஜனநாயாகத்திற்கு விரோதமானது. ஆள்பவர்களின் சர்வாதிகார மனநிலையையே இது வெளிப்படுத்துகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் உழைத்துச் சேர்த்தப் பணத்தைக் கூட வங்கிகளிலிருந்து எடுக்க முடியாமல் இன்று வரை பாமர மக்கள் தவிக்கின்றனர். வங்கிக் கிளைகளில் ,  ஏடிம் மையங்களில் மணிக்கணக்கில் , நாள்கணக்கில் காவல்காரர்களின் அடக்குமுறைகளையும் தாண்டி வரிசையில், வெயிலில் நின்றாலும் 2000 மோ, 2500 யோ தான் கிடைகிறது. இப்படி , மக்கள் இதுவரை வங்கிகளில் போட்ட பணத்தையே இன்னும் எடுக்க முடியவில்லை. இதில்  பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறச் சொல்லி நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆலைகள், கூலித் தொழிலாளர்களுக்கு அவசரம் அவசரமாக வங்கிக் கணக்குகளை தொடங்கி ஊதியத்தை அந்தக் கணக்குகளில் செலுத்தி அவர்களை வங்கிகளில் காத்திருக்க வைக்கின்றனர். இதே ஆலைகள், அரசு செல்லாது என அறிவித்த பிறகும் கடந்த நவம்பர் மாத ஊதியமாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளையே கொடுத்தார்கள். டிசம்பர் மாதமும் ஒரு சில ஆலைகள் செல்லாது என அறிவித்த நோட்டுகளை வழங்குகின்றன. மீதி ஆலைகள் வங்கிகளில் செலுத்துகின்றன. அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் நிலைமையே இப்படி என்றால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் நிலைமை இதைவிட மோசம்.

பணமில்லா பரிவர்த்தனைக்கு தேவையான கட்டுமானங்களை உருவாக்காமல் எல்லோரையும் பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறச் சொல்வது, முட்டாள்தனம். இந்த உயர் பணநீக்க நடவடிக்கைக்குப் பிறகு வெளிவந்து கொண்டிருக்கும் பணப் பரிவர்த்தனை தொடர்பான விளம்பரங்களை சாதாரணமாக கவனித்தாலே தெரியும். ஏறக்குறைய அனைத்துமே தனியார் விளம்பரங்கள் . அரசு வங்கி ஏடிம் மையங்களை விட , தனியார் வங்கி ஏடிம் மையங்களில் தொடர்ச்சியாக பணம் நிரப்பப்படுவதன் பின்னணி என்ன ? மோடி அரசின் இந்த நடவடிக்கைகளால் அதிகம் பயனடையப் போவது தனியார் நிறுவனங்கள் தான். இந்த நடவடிக்கைக்குப் பின்னால் பெரிய அளவிலான வணிக நோக்கம் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. அடுத்ததாக பணமில்லா பரிவர்த்தனையைத் தீவிரமாக அமல்படுத்துவதற்கு அதிக அளவிலான பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் தேவை . இன்னும் பல கோடி மக்களுக்கு வங்கிக் கணக்குகளே இல்லை. வங்கிக் கணக்கு இருந்தாலும் ஏடிம் கார்டு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகம். கிரடிட் கார்டுகள், ஏடிம் கார்டுகள் , பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்கள் இல்லாத நிலையில் எப்படி பணமில்லா பரிவர்த்தனைக்கு மாறுவது ?

தற்போதைய சூழலில் பழைய 500, 1000 நோட்டுகளைப் போலவே தயாரிக்கப்பட்ட கள்ளப்பணம் ஒழிந்துவிடும். ஆனால், புதிய 500,2000 நோட்டுகளை போலவே புதிதாக கள்ளப்பணம் தயாரிக்கப்பட்டுவிடும். கருப்புப்பணம் ஒழிந்த மாதிரியே தெரியவில்லை. பலவிதமான நூதன முறைகளில் பெரும்பான்மையான கருப்புப்பணம் மாற்றப்பட்டுவிட்டது. கள்ளப்பணம் , கருப்புப்பணம் இரண்டையும் கட்டுப்படுத்த பணமில்லா பரிவர்த்தனையே ஓரளவிற்கு சரியான தீர்வாக அமையும். ஆனால் அதை சரியான முறையில் அமல்படுத்த வேண்டும். இந்த பணமில்லா பரிவர்த்தனையால் எல்லோரையும் வருமான வரி உச்ச வரம்பிற்குள் கொண்டு வந்துவிட முடியும். இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் உடனடியாக எதையும் செயல்படுத்திவிட முடியாது. இது எதைப் பற்றியும் ஆட்சியில் இருப்பவர்கள் சிந்தித்த மாதிரியே தெரியவில்லை.

கருப்புப்பணத்தை ஒழிக்க ஒரே இரவில் 500 ,1000 செல்லாது என அறிவித்த மத்திய அரசால் ஒரே இரவில், மக்களின் வாழ்வாதாரத்தையே சூறையாடும் கல்விக் கொள்ளையையும் , மருத்துவக் கொள்ளையையும் முடிவிற்கு கொண்டு வந்திவிட முடியுமா ? அனைத்து கல்விக்கூடங்களையும் , அனைத்து மருத்துவமனைகளையும் அரசுடைமையாக்கி அனைத்து மக்களுக்கும் சேவையளிக்க முடியுமா ? பணமில்லாததால் ஒரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டிய கல்வி கிடைக்காமல் போகக்கூடாது. பணமில்லாததால் ஒரு இந்தியனுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதி கிடைக்காமல் போகக்கூடாது. அப்படி ஒரு நிலையை உருவாக்குங்கள். அதற்காக எவ்வளவு இன்னல்களையும் சந்திக்க இந்தியர்களான நாங்கள் தயாராக இருக்கிறோம். இது சாத்தியமா ?  அப்படி ஒரு நிலை வந்தால் எங்களுக்கு செல்வத்தைப் பணமாகவோ, நகையாகவோ, நிலமாகவோ சேர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்காது. சம்பாதிக்கும் பணத்தை அன்றாட செலவுகள் போக மீதியை அரசுக்கே செலுத்தி விடுகிறோம்.

எப்படிப் பார்த்தாலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையாலும், பணமில்லா பரிவர்த்தனை நெருக்கடியாலும் சாமானிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்விக்குறியாகியுள்ளது. பெருமளவில் வேலையிழப்புகள் உருவாகி வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் ஒரே ஒரு சாமானியனின் முகத்திலாவது புன்னகையை வரவழைக்க முடியுமா ?
வினை விதைத்தவன் வினை அறுப்பான் !   

குறி சிற்றிதழில் வெளிவந்த எளிய கட்டுரை .


தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
கச்சேரி  பள்ளி எதிரில்   ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :



...................................................................................................................................................................



Saturday, January 28, 2017

தமிழர்களின் மரபை மீட்போம் !

நாம் கொண்டாடும் பண்டிகைகளில் ஒரே அர்த்தமுள்ள பண்டிகை பொங்கல் மட்டுமே. இந்தியா முழுவதுமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை கூட ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து , ஒருவரை கொன்றதற்காக கொண்டாடப்படுகிறது. ஆனால் பொங்கல் அப்படியல்ல. எந்த மதத்தையும் முன்வைக்காமல் வாழ்வில் பங்கு பெறும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் ஒரு பண்டிகை தான் பொங்கல். இது , 'பழையன கழிதல் புதியன புகுதல் ' என்று நம் இல்லத்தை மட்டுமல்லாமல் நம் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகிறது.
உலக சக்திகளின் மையமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம். பொங்கல் செய்வதற்காக அதில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களிலும் ( பச்சரிசி , வெல்லம் , ஏலக்காய் , முந்திரி , திராட்சை , நெய் ) அர்த்தம் இருக்கிறது. ஒரு மாட்டோட அருமையைப் பற்றி ஒரு விவசாயியிடம் கேட்டுப் பாருங்கள் , தெரியும். மிச்சமிருக்கும் விவசாயிகளை காக்கும் பணியை மாடுகள் தான் செய்து வருகின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாயந்த மாடுகளுக்கு நன்றி சொல்கிறோம். இப்படி பொங்கல் பண்டிகையின் போது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தமிருக்கிறது.
தீபாவளியை விட பொங்கலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஏராளமான காரணங்கள் உள்ளன. தீபாவளி , விநாயகர் சதூர்த்தியைப் போல திணிக்கப்பட்ட பண்டிகையல்ல பொங்கல். நம் வாழ்வியலுடன் கலந்த பண்டிகை. இனி , முன்பைவிட அதிக உற்சாகத்துடன் பொங்கலைக் கொண்டாட வேண்டும். தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றால் பொங்கலும் வேண்டும்.
சமீப காலங்களில் இந்த வருடம் தான் பொங்கல் பண்டிகை அதிகம் கவனம் பெற்றுள்ளது . காரணம் ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டு தமிழர்களின் பெருமை தான். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஜல்லிக்கட்டு என்ற ஒன்று மட்டுமே தமிழர்களின் பெருமையல்ல. கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு தமிழர்களின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் சொல்லும் நிகழ்வல்லவா ! அப்படி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறு  நம் கண்முன்னேயே கண்டறியப்பட்டும் இன்று மண்மூடிக் கிடக்கிறது. தமிழுக்கென்று நீண்ட நெடிய வரலாறு இருப்பதாக தொடர்ந்து பெருமிதத்திலேயே உலவுகிறோம். அதைக் காக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை.
முதலில் செம்மொழியாம் தமிழ் மொழிக்கு என்ன மரியாதை இருக்கிறது தமிழகத்தில் ? இங்கு ஒரு பாடமாகக் கூட தமிழ் படிப்பது கட்டாயமில்லை. எந்தவித சங்கடமும் இல்லாமல் தமிழை பிழையாக பேசுகிறோம் , எழுகிறோம் . அரசு தரும் ரசீதுகளில் கூட தமிழ் மொழிக்கு இடமிருப்பதில்லை. "தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என்றார் , பாரதியார். இன்று அந்த உணவினை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் தற்கொலை மரணங்கள் கூட நம்மில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. உலகவணிகமயமாக்கலால் எந்தச் சூழலிலும் எந்தப் பொருளும் எங்கும் கிடைக்கும். பணம் மட்டும் இருந்தால் போதும். மற்ற எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.
 நாம் உண்ணும் ஒரு வாய் உணவில் எத்தனையோ முகம் தெரியா மனிதர்களின் உழைப்பு இருக்கிறது. இதில் முக்கியமானது இரவும் பகலும் ஓயாது உழைத்து உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் உழைப்பு என்பதை மறந்தே போகிறோம்.பொங்கல் என்பதை அறுவடைக்கு நன்றி சொல்லும் திருவிழா தானே. அறுவடைக்கு உதவி செய்யும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அறுவடைக்கு உதவி செய்யும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அந்த அறுவடையைச் செய்யும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். ஆனால் அந்த உழவர்களைக் காக்க எதையும் செய்யமாட்டோம்.
கேரளக்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் இந்திய மீனவர்கள் , குஜராத் கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் இந்திய மீனவர்கள் ஆனால் தமிழகக்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பவர்கள் மட்டும் இந்திய மீனவர்கள் என அழைக்கப்படுவதில்லை; மாறாக தமிழக மீனவர்கள் என்றே அழைக்கப்படுகிறார்கள் மத்திய அரசாலும் , தேசிய ஊடகங்களாலும். தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதியில்லையா ? தமிழகத்தில் வாழ்பவர்கள் இந்தியர்கள் இல்லையா ?
தமிழ் எங்களின் தாய்மொழி , நாங்கள் தமிழர்கள். ஆனால் இந்தியர்கள் என்று சொல்லிக் கொள்வதில் இன்றுவரை பெருமிதம் தான் அடைகிறோம். எங்களை இந்தியர்கள் என்று சொல்லிக்கொள்ள வெட்கப்பட வைத்துவிடாதீர்கள். மற்ற மாநிலங்களில் துரத்தப்படும் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்படுகின்றன. கல்பாக்கம் , கூடங்குளம் அணுமின் நிலையங்கள் ,நியூட்ரினோ ஆய்வுமையம் மற்றும் பல. இனிமேலும் எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்க்கப் போகிறோமா ?
தமிழர்களாக நாம் முதலில் செய்ய வேண்டியது பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயப்பாடமாக ஆக்குவது. தாய் மொழியின் பெயரிலேயே மாநிலத்தின் பெயரை வைத்திருக்கிறோம். ஆனால் இங்கு பள்ளிகளில் கூட தமிழ் படிப்பது கட்டாயமில்லை. நமக்கு மொழியுணர்வு வந்துவிட்டாலே போதும். நம் உரிமைகள் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். பெரியார் பிறந்த மண் இது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகம் , பெரியாரை மறந்து விட்டது. இந்தியா , காந்தியை மறந்து விட்டது.
நாம் வாழும் சூழலுக்கு ஏற்ற உணவு , உடை , இருப்பிடம் , உழவு , வாழ்வு, பண்டிகைகள்  என ஒவ்வொன்றிலும் தமிழர்களின் மரபு என்று ஒன்று இருக்கிறது. அதை அறிய நம் வரலாற்றை நாம் வாசிக்க வேண்டும். காலத்துக்கேற்ற மாற்றத்துடன் ஒவ்வொரு விசயத்திலும் நம் மரபைக் கடைபிடிப்பது தான் நமக்கு உண்மையான பெருமை.
நமது மரபை மீட்டெடுக்க உறுதியேற்போம் !

மேலும் படிக்க :

தொடுதிரை வாழ்வும் சமூக ஊடகங்களும் !

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

புகழேந்தி - மக்களின் மருத்துவர் !
..................................................................................................................................................................


Saturday, December 17, 2016

தொடுதிரை வாழ்வும் சமூக ஊடகங்களும் !


நமது இந்த தொடுதிரை வாழ்வில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெருகின்றன.முந்தைய அறிவியல் கண்டுபிடிப்புகளை விட மிக விரைவாக பெருவாரியான மக்களை சென்று சேர்ந்திருப்பது தொடுதிரை கைப்பேசி. தலைகுனிந்து வாழ்ந்த மனித இனம் தலை நிமிர்ந்து நடக்க ஆரம்பித்ததை பெரிய சாதனை என்று சொன்னார்கள். ஆனால், அந்த  பரிணாம வளர்ச்சி திரும்பி நடப்பது போல எல்லோரும் திரையைப் பார்த்துக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறோம், நடக்கிறோம், மற்ற வேலைகளையும் செய்கிறோம். “நான் இதுவரை எதற்கும் தலை குனிந்ததில்லை” என்ற மனித இனத்தின் பெருமையெல்லாம் காற்றில் பறக்கிறது. அடுத்த தலைமுறை பிறக்கும் போதே கூன் விழுந்தே பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 
      
கைப்பேசியே ஆச்சரியம் ஏற்படுத்திய சூழலில் தொடக்க காலத்தில் தொடுதிரை கைப்பேசிகள் கவனம் ஈர்க்கவில்லை. சாதாரண கைப்பேசிகளைப் போல தொடுதிரை கைப்பேசிகள் உழைக்காது என்ற அச்சம் முதலில் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் தொடுதிரையின் வசீகரம் மற்றும் வசதிகள் எல்லோரையும் சாதாரண கைப்பேசிகளை துறக்கச் செய்தன. தொடுதிரை கைப்பேசிகள், சாதாரண கைப்பேசிகள் அளவிற்கு உழைப்பதில்லை அல்லது அவ்வளவு உழைக்க அனுமதிக்கப்படுவதில்லை. எல்லோரும் மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடுதிரை கைப்பேசிகளுக்காக தொடர்ந்து ஒதுக்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. தொடுதிரை கைப்பேசியின் விலைக்கு அடுத்ததாக செலவு வைப்பது இணைய கட்டணம்.

குடும்ப உறவுகள் மற்றும் சமூக உறவுகளுக்குள் பெரும் பிளவை ஏற்படுத்திய சாதனையை செய்த முதல் சாதனம், தொலைக்காட்சி. தொ(ல்)லைக்காட்சியின் வரவிற்கு முன்புவரை குடும்ப உறுப்பினர்களுடன் பங்கிட்டு கொள்வதற்கும் , தான் சார்ந்திருக்கும் பகுதியில் வாழும் மனிதர்களுடன் நேரடியாக நெருங்கிப் பழகுவதற்கும் நிறைய நேரம் இருந்தது. தொ(ல்)லைக்காட்சியின் வரவு இவற்றை சிதைத்ததுடன் நமது வாழ்க்கை முறைக்கு சற்றும் தொடர்பில்லாத பொருட்களை நமது வீடுகளில் இன்று வரை குவித்துக்கொண்டே இருக்கின்றது. மனித உறவுகளை நோக்கி ஓடுவதற்கு பதிலாக பணத்தை நோக்கி முன்பை விட வேகமாக நம்மை ஓட வைத்து அழகு பார்க்கிறது. எப்படி பார்த்தாலும் தொ(ல்)லைக்காட்சியால் நாம் பெற்றதை விட இழந்தவை அதிகம்.

தொ(ல்)லைக்காட்சிக்கு அடுத்ததாக நம்மை பாதிப்படைய செய்வது தொடுதிரை கைப்பேசிகள். தொ(ல்)லைக்காட்சிக்கு அடுத்த சாதனமான கணினி நமது வாழ்வை இந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நம் வாழ்வை மேம்படுத்தவே உதவியது. கணினியுடன் இணையம் இணைந்த பிறகு சில பாதிப்புகள் உருவாகின. ஆனால் தொடுதிரை கைப்பேசிகள் மனித இனத்தின் வாழ்வையே பாதிப்படைய செய்து கொண்டிருக்கின்றன. தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்முடன் தொடுதிரை கைப்பேசிகள் இருந்தே ஆக வேண்டும் என்ற அளவிற்கு எல்லோரும் மனநோயாளிகளாகி விட்டோம். நாம் வாழ்வதற்கான நேரத்தை நேரடியாக தொடுதிரை கைப்பெசிகள் எடுத்துக் கொள்கின்றன. நம்மில் எத்தனை பேர் தினமும் ஒரு முறையாவது வானத்தைப் பார்க்கிறோம்.நிலவை, சூரிய உதயத்தை , சூரிய மறைவை அந்த செவ்வான அழகை ரசிக்க எத்தனை பேர் நேரம் ஒதுக்குகிறோம். தொடுதிரை கைப்பேசிகள் வழியாக நாம் எவ்வளவு விசயங்களை தெரிந்து கொண்டாலும், பகிர்ந்து கொண்டாலும் நேரடியாக கிடைக்கும் ஒரு அனுபவத்திற்கு ஈடாகாது.

காலம் பொன் போன்றது என்று சொல்லியே வளர்க்கப்படுகிறோம். ஆனால் அந்த பொன்னான நேரத்தை சமூக ஊடகங்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம். முந்தைய தலைமுறை காலை 4 மணிக்கு எழுந்து தினசரி வேலைகளை பார்க்க ஆரம்பித்தது. அடுத்து தலைமுறை காலை 5 மணிக்கு எழுந்தது. தற்போதைய தலைமுறை காலை 6 லிருந்து 7 மணிக்குள் எழுந்திருக்கிறது. தூங்குவதற்கு முன்பும் , எழுந்த பிறகும் செய்யும் முதல் வேலை சமூக ஊடகங்களைப் பார்வையிடுவது தான். புத்தகங்கள் வாசிப்பதற்கும், விளையாடுவதற்கும் மற்ற பொழுதுபோக்குகளுக்கும் ஒதுக்கப்படும் நேரத்தை தொடுதிரை கைப்பேசிகள் எடுத்துக்கொள்கின்றன. பல்வேறுவிதமான செயலிகள் உலகையே உள்ளங்கையில் சுருக்கிவிட்டன. பல செயலிகள் பயன்தரும் வகையில் இருந்தாலும் ஒரு சில செயலிகள் நம்மை அடிமையாக்கிவிடுகின்றன. பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களின் நேரத்தையும் இந்த தொடுதிரை கைப்பேசிகள் எடுத்துக்கொள்கின்றன. ஏற்கனவே தொ(ல்)லைக்காட்சியால் குழந்தைகளின் நேரம் பறிக்கப்பட்ட சூழலில் தொடுதிரை கைப்பேசிகள் அவர்களின் மீதி நேரத்தையும் எடுத்துக் கொள்கின்றன.  

தொடுதிரை கைப்பேசிகள் வாங்கியவுடன் நாம் செய்யும் முதல் காரியம் சமூக வலைத்தளங்களில் நம்மை இணைத்துக் கொள்வது தான். புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துகிறோம். சரியோ சரியில்லையோ நமக்குப்பிடித்த மற்றவர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்கிறோம். அந்தப்பதிவின் நம்பகத்தன்மை குறித்தோ மற்றவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்றோ நினைத்துப் பார்ப்பதில்லை. தற்புகழ்ச்சியை செழிப்பாக வளர்த்தெடுப்பது தான் சமூக ஊடகங்களின் முதல் வேலையாக இருக்கிறது. நாம் பகிர்ந்துகொள்ளும் பதிவுகளில் சுயவிளம்பரம் தான் அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு பயனுள்ள நமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் நாம் பகிர்ந்து கொள்வதில் பல, மற்றவர்களுக்கு பயனற்றதாகவே இருக்கிறது. நமது பதிவுகளுக்கு விழும் லைக் -குகள், அந்த பதிவிற்கு கிடைத்தவையாக எடுத்துக்கொள்ள முடியாது. நாம் பதிவிட்டதற்காக விழும் லைக் –குகளே அதிகம். நமது பதிவை விட நமது முகம் தான் முன்னுக்கு நிற்கிறது.  அதனால் தான் மற்ற பதிவுகளை விட நமது புகைப்பட பதிவுகளுக்கு அதிக லைக்-குகள் கிடைக்கின்றன. 

சமூக ஊடகங்களால் படைப்புத்திறன் குறைகிறது. ஒரு புத்தகம் வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவத்தில் சிறிதளவைக் கூட சமூக ஊடக பதிவுகள் உருவாக்குவதில்லை.பதிவுகளைப் படிக்கிறோம், பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், அத்துடன் மறந்து விடுகிறோம். நாம் எழுதியது குறித்தோ, நமக்குப்பிடித்த ஆளுமைகள் குறித்தோ , நாம் பின்பற்றும் கோட்பாடு குறித்தோ யாராவது எதிர்மறையாக எழுதினால் உடனே அவர்களுடன் மல்லுக்கு நிற்கிறோம். நம் மீது தவறே இருந்தாலும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே இறுதிவரை வாதிடுகிறோம். ஆனால் நிஜத்தில் நாம் அப்படி நடந்து கொள்வதில்லை. ஒரு மாய உலகையே சமூக ஊடகங்கள் முன்வைக்கின்றன. சமூக ஊடகங்களில் தீவிரமாக எழுதுவதாலோ, சண்டையிடுவதாலோ சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. பெண்ணியம் குறித்து தீவிரமாக எழுதப்பட்ட பதிவை ஆர்வமாக படித்துவிட்டு லைக்-போட்டுவிட்டு, கமெண்ட் எழுதிவிட்டு, சேர் பண்ணிவிட்டு நிஜ உலகத்தில் பிரவேசிக்கும் ஆண்கள் எந்த மாற்றமும் இல்லாமல் பெண்களை அடக்குகிறார்கள்; ஏசுகிறார்கள்.

வெகுஜன ஊடகங்களில் பணிபுரிபவர்கள் கூட ஆணாதிக்க மனநிலையுடன் நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது. சமூகத்தில் யாருக்கு எந்தப் பாதிப்பு  நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கவேண்டியது பொது சமூகத்தின் கடமை. ஆனால், சமூகத்தில் பெண்ணுக்கு ஏதோ ஒரு பாதிப்பு நிகழ்ந்தால் அந்த பாதிப்பிற்கு அப்பெண்ணையே பொது சமூகம் குற்றம் சாட்டுகிறது. அந்த பெண்ணிற்காக நியாயம் கேட்டுப் போராட மகளிர் அமைப்புகள் தான் முன்வர வேண்டும் என்றும் பொதுப்புத்தி யோசிக்கிறது. ஆணாதிக்க ஊடக நடுநிலையாளர்கள், “ ஜீன்ஸ் பேன்ட் அணிவதற்காக போராடிய பெண்ணியவாதிகளும், மகளிர் அமைப்புகளும் ஏன் சுவாதி கொலைக்காக போராட முன்வரவில்லை? “ என்ற மிக மட்டமான கேள்வியை முகநூலில் முன்வைக்கிறார்கள். இதற்கு ஆயிரக்கணக்கில் லைக்-கள் விழுகின்றன. எவ்வளவு மோசமான மனநிலையிது. தினமும் ஆண் ஓட்டுனர்களால் ஆயிரக்கணக்கில் விபத்துகள் நிகழ்கின்றன. இந்த விபத்தில் ஆண் ஓட்டுனரை மட்டும் குறை சொல்லாமல் மற்ற காரணிகளான வாகன பழுது, மோசமான சாலை, வானிலை மாற்றம் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் அதே சமயம் ஒரு விபத்து பெண் ஓட்டுனரால் நிகழும் போது “ என்னைக்கு பொம்பளைக வண்டியோட்ட ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கு ஆரம்பிச்சது எல்லாம். வண்டிய எடுத்தவுடனே முருக்கிகிட்டு போறாளுக” என்கிறார்கள். என்னவிதமான மனிதர்கள் நாம். பெண்களை குற்றவாளியாக்கி வேடிக்கை பார்க்க ஒட்டுமொத்த சமூகமும் எப்போதும் தயாராகவே இருக்கிறது. சமூக ஊடகங்களால் இந்நிலை துளியும் மாறவில்லை.

கல்விச்சான்றிதழ்களில் , குடும்ப அட்டைகளில் பெயருடன் சாதிபெயர் இல்லாமல் இருப்பவர்கள், சமூக ஊடகங்களில் சாதிப்பெயருடன் இருக்கிறார்கள். முன்பை விட இப்போது தான் அதிகம் சாதி பார்க்கிறார்கள். தங்களது வாகனங்களில் வெளிப்படையாக சாதிப்பெயரையும் ,சாதித்தலைவர்களையும் வெளிப்படுத்துகிறார்கள். சாதிய அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பிரிவுபடுத்துகின்றனர். உலகம் முழுக்கவே பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போதைய சூழலில் காந்தி, லிங்கன், குவேரா போன்ற பிரிவினைகளைக் கடந்து ஒட்டுமொத்த மக்களுக்காகப் பாடுபடும் உலகளாவிய தலைவர்கள் இல்லாதது தான் காரணம். ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலோ மெர்கில், விக்கிலீக்கிஸ் ஜூலியன் அஜாஞ்சே , அமெரிக்க எட்வர்ட் ஸ்னோடோன் போன்றவர்களைத் தான் உலகளாவிய மனிதர்களாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. கடந்த இருபதாம் நூற்றாண்டில் இதே காலகட்டத்தில்( 1914 - 1918 ) நடந்த முதல் உலகப்போரில் லட்சகணக்காணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நூற்றாண்டிலும் பிரிவினைவாதிகளால் உலகெங்கிலும் மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த பிரிவினைவாததை சமூக ஊடகங்கள் தடுத்து நிறுத்தவில்லை, மாறாக பிரிவினைவாதத்தை வளர்க்கவே துணை நிற்கிறது.

எந்தவொரு கோட்பாடும் இயக்கமாக உருவாகமல் சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழாது. உலக வணிகமயமாக்கலால் கம்யூனிச கோட்பாடுகள் வலுவிழந்து வரும் சூழலில் புதிய கோட்பாடுகளுக்கான, இயக்கங்களுக்கான தேவைகள் உருவாகியிருக்கின்றன. முன்பை விட பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இயற்கை வளங்கள் பெருமளவு பணமாக்கப்படுவதுடன் மற்ற இயற்கை வளங்களையும் அந்த பணமாக்கும் முறை சிதைக்கிறது. உலக வணிகமயமாக்கலின் பலத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய இயக்கம் அமைய வேண்டும். இந்த சூழலில் சமூக ஊடகங்களால் பெரிய அளவிலான ஆக்கப்பூர்வமான இயக்கங்களை உருவாக்க முடியவில்லை. அரசியல்வாதிகளையும் , பணக்காரர்களையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் ஒன்றும் செய்யாத சட்டதிட்டங்களை கேலி செய்வதுடன் எல்லாம் முடிந்து விடுகிறது. ஆனால் நிகழ்கால பிரச்சனைகளை மையப்படுத்திய மீம்ஸ்கள் ரசிக்கும்படியாக  உருவாக்கப்படுகின்றன. திரைப்படங்கள், இசை, புத்தகங்கள் மற்றும் கலை குறித்தான பதிவுகள் காட்சி ஊடகங்களாலும், அச்சு ஊடகங்களாலும் புறகணிக்கப்பட்ட சூழலில் சமூக ஊடகங்கள் அதற்கான இடத்தை தருகின்றன. ஆனால் நாம், தொடுதிரை கைப்பேசிகள் வழியாகவும் , சமூக ஊடகங்கள் வழியாகவும் உளவு பார்க்கப்படுகிறோம். சுதந்திரமாக எதையும் செய்ய முடிவதில்லை.

மனிதர்கள் தங்களது மனக்கசடுகளையும், போதாமையையும் , குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கும் இடமாகவே சமூக ஊடகங்கள் இருக்கின்றன. நமது வாழ்வில் பங்குபெற்ற நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கும் ,புதிய நண்பர்களைக் கண்டைவதற்கும் சமூக ஊடகங்கள் உதவுகின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் நம் சமூகத்தில் எந்த பயனுள்ள மாற்றத்தையும் நிகழ்த்தவில்லை. ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே அவற்றை எடுத்துக்கொள்ள முடிகிறது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல சமூக ஊடகங்களின் கூப்பாடு நாட்டுக்குள் கேட்பதில்லை. எந்த சாதனமும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அந்த சாதனத்தின் கட்டுப்பாடில் நாம் இருக்கக்கூடாது. எல்லா விசயங்களுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொடுதிரையைத் தாண்டியும் உலகம் இயங்குகிறது. அங்கே ரத்தமும் சதையும் உள்ள எளிய அன்புக்கும், சிறிய பாராட்டுக்கும் ஏங்கித் தவிக்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒன்றே ஒன்று தான். நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விடவும் வாழ்க்கை மிகவும் பெரியது.

குறி எனும் சிற்றிதழில் வெளிவந்த கட்டுரை இது.

தொடர்புக்கு :

குறி சிற்றிதழ் ,
கச்சேரி  பள்ளி எதிரில்   ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .

சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20 
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941

இதழாசிரியர்  மணிகண்டன் - 9976122445.

இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை

kurimagazine@gmail.com 

என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .

மேலும் படிக்க :

எக்காலத்திற்குமான கலைஞன் ! 

வலுத்தது நிலைக்கும் ! 
...................................................................................................................................................................


                            

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms