Saturday, June 4, 2016

பெண் எனும் உருமாறும் சக்தி !


இயற்கைக்கு அளவிடமுடியாத சக்தி இருப்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம்.ஆனால் அதே அளவு சக்தி பெண்ணுக்கு இருப்பதை நாம் உணர்வதில்லை. அந்த சக்தி பெண்ணாலேயே மறைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆணுடன் ஒப்பிடுவது முரணாகவே உள்ளது. எப்போதும் பெண் ஆணுக்குச் சமமில்லை; ஆணை விட ஒரு படி மேல். பெண்ணை இயற்கையுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இயற்கையை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதோ அதே போலவே பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி இயற்கையிடமும் இருக்கிறது; பெண்ணிடமும் இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக அவதானித்து கொண்டாடுபவர்கள் , பெண்களையும் கொண்டாடுகிறார்கள். எப்படி இயற்கை இல்லாத பூமியைக் கற்பனை கூட செய்ய முடியாதோ அது போலவே பெண்கள் இல்லாத உலகையும் கற்பனை கூட செய்யமுடியாது.பூமியில் கிடந்து உருளும் ஏறக்குறைய எல்லா உயிரினங்களும் பெண்ணுயிரிகளின் துணையுடன் உருவானவை தான். உயிருள்ளதாக நாம் நம்பும் ஒவ்வொரு இயற்கை வடிவத்திலும் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்ணின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இயற்கையுடன் பொருந்திப் பார்க்க முடியும் .
பூக்களை எப்படி ரசிக்கிறோமோ அது போலவே பெண்களையும் ரசிக்கிறோம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பெண்களை கவனிக்கவும் ரசிக்கவும் செய்கிறார்கள்பூக்களுக்கு வாசம் இருப்பது போலவே பெண்ணுக்கென்றும் தனி வாசம் இருக்கிறது. இரண்டுமே மனித ஆணை கிறங்கச் செய்கிறது

பெண்களின் மாதவிடாய் காலத்தை ஒரு செடியிலிருந்து ஒரு பூ உதிர்வதுடன் ஒப்பிட முடியும் .வளர்ச்சியடைந்த செடியிலிருந்து அந்த பூ உதிராமல் இருந்திருந்தால் காயாகி,கனியாகி,விதையாகி மீண்டும் செடியாகியிருக்கும். அது போல வளர்ச்சியடைந்த கருமுட்டை உடைந்து மாதவிடாய் ஆகாமல் இருந்தால் உள்ளே ஒரு உயிர் உருவாகி ,பெண்ணாகி அல்லது ஆணாகி பிறக்கும். பூ மலர்ந்து உதிர்வது செடிக்கு எவ்வளவு வலியைத் தரும் என்று தெரியவில்லை. ஆனால் பெண்ணுக்கு கருமுட்டை வளர்ந்து உடைந்து மாதவிடாய் என்னும் பூ உதிர்வது வலி நிரம்பியது . எல்லாச் செடிகளும் வருடம் முழுவதும் பூக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் மனிதப் பெண்ணில் இந்த வலி தரும் பூ மலர்ந்து உதிர்வது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நிகழ்கிறது. பாறையின் அல்லது கட்டிட இடிபாட்டுக்குள் தனது இருப்பை நிலை நிறுத்த முளைக்கும் செடியைப் போல பெண் தனக்கு கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வாள். இப்படி இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நாம் பெண்ணுடன் பொருத்திப் பார்க்க முடியும்.மனித ஆண் வேட்டை சமூகமாக இருந்தவரை பெண்களையும் மதித்தான்; இயற்கையையும் மதித்தான். நாகரிக மனிதனாக மாற மாற பெண்களையும் அடிமை படுத்தினான் ; இயற்கையையும் அழித்தான்.

மன உளவியல் நிபுணர், ஷாலினி அவர்கள் எழுதிய ‘ பெண்ணின் மறுபக்கம்’ புத்தகத்திலிருந்து சில பகுதிகள் சுருக்கமாக :
  
மனித வரலாறு முழுக்க, சமீப காலம் வரை மனிதர்கள் தாய்வழிச் சமூகத்தினராக பெண்ணைப் பின்பற்றி வாழ்ந்ததற்கான தடயங்கள் குவிந்து கிடக்கின்றன. மனித இனம் தோன்றிய நாள் முதல் பெண்தான் ஆளும் இனமாக இருந்திருக்கிறாள். காரணம், பெண்களால் மட்டும் தான் ஆண்களால் செய்ய முடியாத எத்தனையோ விசித்திர சாகசங்களைச் செய்ய முடிந்தது. அவளுடைய அதிசய சக்திகளைப் பார்த்து அசந்துபோய் அவளை ஆராதித்தான். பெண்ணை இறை உருவமாக வணங்கினான்.உலகெங்கிலும் அதிகமான பெண் தெய்வங்கள் இருப்பதற்கு இது தான் காரணம். வேட்டை, விலங்குகளுடன் போராட்டம் என்று அடிபடும் ஆபத்தை எப்போதும் சந்தித்த ஆண்களைப் பொறுத்தவரை ரத்தம் சிந்தினால் ஆள் காலி.ஆனால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப்போக்கால் பெண்ணுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாததை கண்டு ஆண்கள் வியந்தனர். மனித ஆணைவிட பெண்ணுக்கு புலனுணர்வு துல்லியம் அதிகம் .பெண்தான் குழந்தையைச் சுமந்து பாதுகாப்பாக வளர்க்க தகவமைக்கப்பட்டவள்.அதனால் கூடுதல் புலனுணர்வு தேவையாய் இருக்கிறது .

குழந்தையைப் பெற்றெடுப்பது மட்டும் தான் தனது ஒரே பிறவிப்பயன் என்றிருந்த ஆதிப்பெண்கள், ‘என் வாழ்க்கைக்கு என்ன தான் அர்த்தம்என்று தேடவில்லை. இப்படி எந்த அர்த்தமும் இல்லாமல் பிறக்கும் ஆண்கள்நான் ஏன் பிறந்தேன் ?’ என்ற கேள்விக்கு இன்றும் கூட பதில் தேடி அலைகிறார்கள்.இந்த தேடலை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளும் ஆண்கள் கலை, இசை, எழுத்து, அறிவியல், தொழிற்நுட்பம் என்று மனிதக் கலாச்சாரத்தின் மேன்மையான அம்சங்களை உருவாக்குகிறார்கள். இதே தேடலை அழிவுப்பூர்வமாக மேற்கொள்ளும் ஆண்களோ சபலம், வக்கிரம், போதை, வன்முறை என்கிற தீமைகளை விளைவிக்கிறார்கள். ஆண்கள் எதை எதையோ படைத்த பிறகும் வெறுமையாகவே உணர்கிறார்கள். இன்றும் கூட எவ்வளவோ புகழ் பெற்ற பிறகும் ,எவ்வளவோ செல்வங்கள் சேர்த்த பிறகும் கூட வெறுமையை உணர்ந்து மீண்டும் புகழ் பெற , மீண்டும் செல்வங்கள் சேர்க்க ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் அல்லது ஆன்மீகம் என்ற பெயரில் அமைதியைத் தேட ஓடுகிறார்கள்.

பெண்களின் மூளை வடிவமைப்பால் ஒரே சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முடிகிறது. ஒரே நேரத்தில் சம்பந்தமில்லாத வெவ்வேறு விசயங்களை இணைந்து யோசிக்க முடிந்தது.இந்தத் திறனால் பல பொருட்களை உருவாக்கினார்கள்ஒரு ஆணை உருவாக்கவும் உடைத்தெறியவும் வல்லதாக இருந்தன , பெண்களின் வார்த்தைகள். வெளித்தோற்றத்திற்கு ஆண்கள் பலமானவர்களாக இருந்தாலும் மிக மென்மையான மனதைக் கொண்டவர்கள். ஒரு சாதாரண வார்த்தை கூட ஆணை பலவீனப்படுத்தி முடக்கிப்போட்டுவிடும். ஆனால், பெண் அப்படியல்ல. உடலில் பெரிய வலிமை இல்லாவிட்டாலும் உள்ளம் வலிமையானது. இப்போதும் கூட குடும்பத்தில் ஆண் துணை இல்லாத போது அல்லது செயலிழக்கும் போது தங்களின் உள்ளத்தின் வலிமையால் உழைத்து குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவருகின்றனர். ஆண்களால் இது முடியாது.பெண்களின் மூளையில் ஆண்களைவிடப் பெரிய மொழிவளப் பகுதி உள்ளது. இதனால், பெண் பிறப்பிலேயே பெரிய வாயாடி. இன்றும் கூட ஆண் குழந்தைகளைவிட பெண் குழந்தைகள் விரைவாக அதிகம் பேசுவதை கவனிக்க முடியும். வளர்ந்தப் பெண்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சொற்போரில் பெண்களை வெல்லவே முடியாது. இந்த சொல் திறமையால் ஆதிஆண் பெண்களைக் கண்டு கொஞ்சம் அஞ்சினான்.   

அன்றைய ஆண்கள், பெண்களின் உழைப்பைக் கண்டு பிரமித்துப்போனார்கள்; இன்றும் பிரமித்துப் போகிறோம்.அன்றும் இன்றும் பெண்கள், பொழுது விடிந்து பொழுது சாயும்வரை தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆண்களுக்கு பெரிய வலிய தசைகள் இருந்ததால் விரைவாகவே களைப்படைந்து போனார்கள். ஆணின் உடலில் 40% தசை, 15% கொழுப்பு என்றிருப்பது பெண்ணின் உடலில் 23% தசை, 27% கொழுப்பு என்றிருக்கிறது. பெண்களுக்கு தசையின் அளவு குறைவாகவும் கொழுப்பு அதிகமாகவும் இருப்பதால் அவர்களால் தொடர்ந்து இயங்க முடிகிறது. மூச்சு விடுவதற்குக் கூட ஆண்கள் பெண்களைவிட அதிக எரிபொருளைப் பயன்படுத்துகிறார்கள். அன்று எல்லாவிசயங்களிலும் பெரும் உழைப்பு தேவைப்பட்டது. பெண்களின் இந்த நீடித்த உழைப்பைப் பார்ந்த ஆண்கள் , பெண்களைச் சார்ந்து வாழப்பழகிக் கொண்டார்கள். அதனால் தான் இன்றும் கூட பெண் துணையில்லாமல் ஆண்களால் வாழமுடிவதில்லை.

வேட்டை சமூகமாக இருந்தவரை ஆண்கள் , பெண்களால் அடிமைகள் போலவே நடத்தப்பட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து வேட்டையாடி உணவு சேகரிப்பதிலேயே அவர்களின் காலம் கடந்தது. இந்த காலகட்டதில் ஆண்கள் தங்களைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமே இருந்ததில்லை. நாகரீக வளர்ச்சியில் ஒரே இடத்தில் பெண்களுடன் தங்கும் சூழல் உருவான போது சிந்திக்கத் தொடங்கினர். அந்தக் காலப் பெண்களின் வாழ்க்கைத் தரம் ஆண்களைக் காட்டிலும் உயர்வாகவே இருந்தது.ஆண்கள் இரண்டாம் தர வேலைகளை மட்டுமே செய்து வந்தார்கள். இன்று ஆண்கள், சுதந்திரமாக எல்லா விசயங்களிலும் சுற்றித் திரிவதைப் பார்த்து பெண்கள் பொறாமைப்படுவது போல அன்று பெண்களைப் பார்த்து ஆண்கள் பொறாமைப்பட்டுள்ளனர். அன்றைய பெண்கள் தங்களுக்கு பிடித்தமான ஆண்களை தேர்ந்தெடுத்து கலவி கொண்டார்கள். அந்த ஆண் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவனா இல்லையா என்றெல்லாம் பார்க்கவில்லை. கல்விக்கு இவள் தேர்ந்தெடுத்த ஆண் எங்கிருந்தோ வந்தவனாக இருக்கும் போது இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் , “நாம உயிரைக் கொடுத்து வேட்டையாடுகிறோம்,இவுங்களுக்கு காவல் காக்கிறோம் .இவுங்க உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு நம்மை அடக்குவதோடு மட்டுமல்லாமல் எங்கிருந்தோ வந்தவனோடெல்லாம் உறவு கொண்டு பிள்ளை பெத்துப் போடுவாங்களாம்.அதுகளுக்கும் சேர்த்து நாம உணவு கொண்டு வரனுமாம்என்று பொங்க ஆரம்பித்தனர். பொதுவாகவே உயிரினங்களின் பிறவிப்பயன் என்பது இனப்பெருக்கம் மூலம் மரபணுக்களைப் பரப்புவது தான் . இதுக்கே ஆபத்து வந்த போது அடிமைகள் போலிருந்த ஆண்கள் பெண்களுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தனர்.

பெண்களை அவ்வளவு எளிதில் வழிக்கு கொண்டுவர ஆண்களால் முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகவே பெண்களை அடிமைப்படுத்தினர். வெளிஆண்களை அண்ட விடாமல் இனப்பெருக்கம் செய்து தனது மரபணுக்களைப் பரப்ப , பெண்களைக் கவர பலவிதமான வழிமுறைகளை ஆண்கள் கையாண்டனர். கலவியின் போது அவளைப் போதிய அளவு மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் அவள் வேறு ஆணைத் திரும்பிப் பார்க்க மாட்டாள் என்ற எண்ணம், பெண்ணை மகிழ்ச்சிப்படுத்தியே தீரணும் என்ற உந்துதலை ஆணிடம் ஏற்படுத்தியது. விதவிதமான முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தனக்கு அவனால் கிடைக்கும் சுகத்தை வைத்து ஆணைத் தேர்ந்தெடுத்தார்கள், பெண்கள். ஆனாலும் இதற்கு நிரந்தர தீர்வு காண ஆதிஆண் தனது மூளையைப் பயன்படுத்தத் தொடங்கினான்.

கூட்டத்தில் ஒருவன், தேர்ந்தெடுத்த பெண்ணை மற்ற ஆண்கள் நெருங்கக்கூடாது என்ற விதியை முதலில் தீர்மானித்தார்கள் .இதன் மூலம் எளிதாக தனது மரபணுவை அடுத்த தலைமுறைக்கு கடத்த இயலும் என நம்பினான். இதிலும் சிக்கல்கள் உருவாகின.அப்படியானால் ஒரே பெண்ணை பல பேர் தேர்ந்தெடுத்தால் என்னாவது ? யாருக்கு வாய்ப்பு கொடுப்பது ? தேர்ந்தெடுத்த பெண் ஒத்துழைக்க மறுத்தால் ? இப்படி பல கேள்விகள் பிறந்ததால் தீர்மானித்த விதியை திருத்த வேண்டிய தேவை உருவானது. " பல ஆண்கள் ஒரே பெண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் , அந்தப்பெண் அவர்களில் ஒருவனை ஆதரித்து , தம்பதிகளாகக்கூடி உறவு ஏற்படுத்திய பிறகு, மற்ற ஆண் அவளை அடைய முயல்வது தண்டனைக்குரிய பெரும் குற்றமாகும். அதே போல, தேர்ந்தெடுத்த ஆணைத் தவிர பிற ஆணுடன் அந்தப் பெண் உறவு கொள்வதும் பெரும் குற்றமாகும் " என்று திருத்தப்பட்ட விதியை உருவாக்கினார்கள். இந்த விதி ஆண்களின் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியதால் இந்த விதியேற்பு வைபவத்தைதிருமணம்என்றொரு பெரிய விழாவாக கொண்டாடினார்கள்; இன்றும் கொண்டாடுகிறார்கள். இதனால் தான் எல்லாவித சமுதாயங்களிலும் நகரம், கிராமம், முன்னேறியவை ,பின்தங்கியவை , படிப்பறிவுள்ளவை, படிப்பறிவற்றவை என்று எந்தப்பாகுபாடும் இல்லாமல் இந்த விதி ஏற்பு விழாவை முன்னின்று பிரமாண்டமாக நடத்துவது ஆணாக மட்டும்தான் இருக்கிறது.அந்த விதியில் இணையும் பெண் மூலம் பிற ஆண்களின் மரபணுக்கள் பரவுவதை தடுத்து தனது மரபணுவை மட்டும் பரப்பி மரபணுப் போட்டியில் வெற்றி பெற முயன்றான்.

திருமணம் என்பதுஇவனும் இவளும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் ; இனி வேறு யாருடனும் இவர்கள் கலவி கொள்ளக்கூடாதுஎன்று பிரகடனப்படுத்தும் பெரும் பணியைச் செய்கிறது. ஆனாலும் பெண் இந்த விதிக்கெல்லாம் பயப்படவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தப் பெண்ணும் ,அட மனிதப் பெண்ணை விடுங்கள்,எல்லா உயிரினங்களிலும் பெண்ணிணம் உயிர் வீரிய வளம் கொண்ட ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் . காரணம், சிறந்த மரபணுக்களை மட்டும் தேர்ந்தெடுத்துக் கூடித் தலைசிறந்த பிள்ளைகளை உருவாக்க வேண்டும் என்ற உந்துதல் எல்லாப் பெண் இனத்திற்கும் இயற்கையாக அமைந்த ஓர் அடிப்படை குணாதிசயம்.
அந்தக்கால முறைப்படி ஆணும் பெண்ணும் தங்களுக்குப் பிடித்திருக்கும் வரை ஒன்றாக வாழ்வார்கள். பிள்ளை பெற்றுக் கொள்வார்கள். பிடிக்காவிட்டால் பிரிந்து விடுவார்கள். ஒன்றாக இருக்கும் காலத்தில் இவனுக்குப் பிறந்தது , அவளுக்குப் பிறந்தது , இருவருக்கும் பிறந்தது என்று எல்லாக் குழந்தைகளுக்கும் தீனி தேடித்தருவது ஆண்,பெண் இருவருக்கும் கடமையானது. ஆண்கள் வேட்டையின் மூலமும், பெண்கள் தங்களின் இருப்பிடத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் உணவு தேடிக் கொண்டுவருவார்கள். ஓகோ, இதைத் தான் இப்போதுலிவிங்க் டுகெதெர்வாழ்க்கை முறை என்று சொல்கிறோமோ !

ஆண்கள் வெளி வேலை ,பெண்கள் வீட்டு வேலை என்று  போய்க் கொண்டிருந்த போது குடும்பத்திற்காக உழைக்காமல் சோம்பேறியாய் சுற்றித் திரிந்த ஆண்களால் பிரச்சனை வந்தது. மற்ற ஆண்கள் குடும்பத்திற்காக நாயாய் உழைத்து தங்களது மரபணுவை பரப்ப முயல இந்த சோம்பேறி ஆண்கள் , வீட்டில் தனியே இருக்கும் பெண் எவளையாவது பிடித்து வலுக்கட்டாயமாக இனம் சேர்வதன் மூலம் தங்களின் மரபணுக்களைப் எளிதாகப் பரப்பினார்கள். பெண்களுக்கு இந்தக் கட்டயாக் கலவி கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதுவுமில்லாமல் தகுந்த ஆணைத் தேடி கூடி வலுவான மரபணுவைப் பரப்பும் பெண்ணினத்தின் வேலையும் தடைபட்டது. மரபணுக்களைப் பரப்புவதற்காக கடுமையாக உழைத்த ஆண்களும், கட்டாயக் கலவியை வெறுத்த பெண்களும் இந்த ஓசியில் வாரிசை உருவாக்கும் சோம்பேறிகளுக்கு ஒரு முடிவு கட்ட விரும்பினர். இப்படி இலவசமாக இனம் பெருக்கிக் கொள்வது எல்லா மனித சமுதாயங்களிலும் மிகக் கேவலமான செயலாகப் பார்க்கப்பட்டது. இந்தச் செயலை சட்டவிரோதக் குற்றமாக அறிவித்து இதற்குபாலியல் பலாத்காரம்என்று பெயரிட்டனர். இந்தக் குற்றத்தைச் செய்பவர்களுக்கு ஊரை விட்டு ஒதுக்குதல், மரணம், ஆண்மை அகற்றல் என்று கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன. இதன் நீட்சியை இன்றும் உலகெங்கும் காணமுடிகிறது. ஆனாலும் பாலியல் பலாத்காரம் தொடரத்தான் செய்தது ; செய்கிறது. இந்த ஆண்களை அடக்கவே முடியவில்லை.பெண் என்ற ஒருத்தி இருப்பதால் தானே அங்கே பலாத்காரம் நடக்கிறது. இதனால் ஒட்டு மொத்த ஆண்களும் சேர்ந்து குற்றத்திற்கான பழியை பெண்கள் மீதே போட்டனர்; இன்றும் பழி போடுகின்றனர்.

ஆண்கள் மட்டும் இந்தக் களவுறவில் ஈடுபட்டனர் என்று சொல்லமுடியாது. பெண்களும் இந்தக் களவுறவிற்கு ஒத்துழைத்த உதாரணங்கள் எவ்வளவோ உள்ளன. திருமணம் என்ற மெல்லிய உறவை மேலும் பலவீனமாக்கும் இன்னொரு சந்தர்ப்பம்கள்ளத் தொடர்பு ‘ . இந்தக் கள்ளத் தொடர்பு எப்போதும் பெண்ணின் முழு சம்மதத்துடன் நடந்தது. பெரும்பாலும் இந்த சம்மதம் வெளிப்படையாக இருக்காது .ஒரு கள்ளப்பார்வை ,ஒரு தினுசான கள்ளச் சிரிப்பு என்று மறைமுகமாகவே தங்களின் விருப்பத்தைப் பெண்கள் வெளிப்படுத்தினர். இந்தச் சின்னச்சின்ன சமிக்கைகளைக் கொண்டு ஆணின் மோகத்தைத் தூண்டி இப்படி ஆண்,பெண் சம்மதத்துடன் கள்ளத் தொடர்புகள் ஏற்பட்டன. மரபணுக்களைப் பொறுத்தவரை கள்ளத் தொடர்பு என்பது உயர் ரக மரபணுக்களைச் சேகரிக்கவும் பரப்பவும் உதவும் ஒரு மாற்று ஏற்பாடு. ஆனால், இந்தக் கள்ளத் தொடர்பை, இந்தத் துரோகத்தை ஆண்களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. கள்ளத் தொடர்பில் ஈடுபடும் ஆண்களை அடக்கும் முயற்சிகள் பெரிதாக பலனளிக்கவில்லை.அதனால், இது  ஆண்களின் மோகத்தைத் தூண்டி கள்ள உறவில் ஈடுபட வைத்த பெண்களின் குற்றம் என்று மீண்டும் பழி பெண்கள் மீதே சுமத்தப்பட்டது.

ஆண்களைப் பொறுத்தவரை ஒரு பெண் ஆணை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத குற்றம். புதிது புதிதாக பல வழிமுறைகளை பயன்படுத்திய பிறகும் கூட ஆண்களால் பெண்களின் இந்த செயல்பாட்டை நிறுத்தமுடியவில்லை. பெண்கள் படி தாண்டி பாரபட்சமாக நடந்து கொண்டதால் போட்டிகள், பொறாமைகள் , சண்டைகள் , போர்கள் என்று மனித இனம் பெருத்த சேதத்தைச் சந்தித்தது. அதனால்,பெண்ணின் பாலியல் ஒழுக்கம் தான் அமைதியான சமூக வாழ்க்கையின் முக்கியமான அஸ்திவாரம் என்றானது. பெண்களின் மூளையைத் தொடர்ந்து பதப்படுத்தி ஆணுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை போதித்தார்கள். பெண்கள் எல்லோரும் தங்கள் பாலுணர்வை அடக்கி ஒருவனுக்கு மட்டும் வாழ்நாள் முழுக்க உண்மையாக இருக்கும் பாடம் கற்பிக்கப்பட்டது.அதற்குகற்புஎனும் பெயரிட்டனர்.இந்தக் கற்பித்தல் மற்ற பகுதிகளை விட இந்தியாவில் வலுவாக வேரூன்றியுள்ளது. பிறந்ததிலிருந்து இந்தியப் பெண்ணுக்குப் பாலியல் ஒழுக்கம் கற்பிக்கப்படுகிறது. அவளது பெண்மை ,பாலுணர்வு, மகப்பேறு சக்தி என எல்லாமே அவள் கணவனுக்கு மட்டும் பயன்படவேண்டும் என்று அவள் நம்ப வைக்கப்படுகிறாள்.

முந்தைய காலத்தில் ஆண்கள் எல்லாம் சதா வேட்டையிலேயே இருந்ததால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் பெண்களே செய்தார்கள். வேட்டை சமூகம் நதிக்கரை நாகரிகங்களாக மாறிய போது ஆண்கள் பெண்களுக்கு உதவ ஆரம்பித்தனர். பெண் எல்லா வேலைகளையும் தனி ஒருத்தியாகச் செய்து முடித்திருப்பாள்.ஆனால், ஆணுக்கிருப்பதோ ஒற்றையிலக்கு மூளை என்பதால் ஒரே நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்ய முடிந்தது. பெண்கள் செய்த வேலைகளில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதை ரொம்பவும் செம்மையாகவும் , இன்னும் நுணுக்கமாகவும் செய்து பெண் செய்ததைக் காட்டிலும் சிறப்பாகச் செய்து முடித்தான். ஆண்கள் இவ்வாறு தேர்ந்தெடுத்து தனது வேட்டைக்கார மூளையால் செம்மைப்படுத்திய வேலையை மீண்டும் பெண்களால் செய்ய முடியவில்லை. இப்படி முன்பு எளிதாக இருந்த வேலைகள் ஆண்களின் தலையீடுக்குப் பிறகு பெண்களால் செய்ய முடியாத கடினமான வேலைகளாக மாறிப் போயின.

பெண் தான் செய்யும் எல்லா வேலைகளையுமே சுமாராக செய்தால் போதும் என்று திருப்திப்படுவாள் . ஆண்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகலையும் செய்யும் திறமை இருந்தாலும் பெண்ணால் எந்தத் துறையிலும் உச்சத்தை அடையமுடியவில்லை. பெண் மூளை அகலமாகச் சிந்திக்கிறது ; ஆழமாக அல்ல. ஒரு குறிப்பிட்ட விசயத்தில் ஆழமாகச் சிந்திப்பது ஆணுக்கு மட்டுமே சாத்தியம். இப்படி ஒரு விசயத்தில் உச்சத்தை அடையும் ஆண் மற்ற எல்லா விசயங்களிலும் சுத்த மக்காக இருப்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. “ ஒரு ஆம்பளைக்கு இது கூட தெரியாதா ? “ என்று இன்றும் ஆண்கள், தங்களின் மனைவிமார்களிடம் வசவு வாங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

மற்ற உயிரினங்களைப் போல மனித பெண்களும் புத்திசாலி ஆண்களை மட்டுமே தேர்வு செய்து , தலைமுறை தலைமுறையாக இனம் சேர்ந்து வந்ததால், மனிதக் குழந்தைகளின் புத்திசாலித்தனமும் பெருகிக்கொண்டே போய் , வேறு வழியில்லாமல் மூளையும் பெரிதாகியது.பெண்களைக் கவர்வதற்கு , எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும்பிற ஆண்களை விட தான் பெரியவன்என்று காட்டிக்கொண்டே ஆகவேண்டும் என்ற உத்வேகம் ஆண்களுக்குத் தேவையாய் இருந்தது. அதனால் , எந்நேரமும் தங்களின் அறிவை வளர்த்து அதைப் பெண்களுக்கு விளம்பரப்படுத்திக் காட்டவேண்டிய அவசியம் ஆண்களுக்கு ஏற்பட்டது. ஆண்கள் தங்களின் மூளையைக் குடைந்து குடைந்து முன்பு பெண்கள் செய்த எல்லா வேலைகளையும் ஊதிப் பெரிதாக்கி விரிவுபடுத்திவிட்டதால் அதன் ஆழம் பெண்களுக்குப் புரிபடாமல் போனது. ஆணின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பெண்கள் பழைய காலத்திலேயே பின்தங்கிப் போனார்கள். பெண்களின் புராதான அறிவெல்லாம் ஆணின் புது அறிவிற்கு முன்னால் பயனற்றுப்போக , அவளது ஆளுமையும் அடிபட்டுப்போனது . அவள் யாருக்கும் சளைக்காத சகலகலாவல்லியாக இருந்த காலம் மலையேறி , அறியாமை அவளை இரண்டாந்தரப் பிரஜை நிலைக்குத் தள்ளியது.

வம்சத்தை வளர்ப்பதுதான் பிரதானம் என்று பெண்கள் குழந்தை பெறுவதற்கு முதலிடம் கொடுத்து மற்றதை ஆண்களிடம் விட்டுவிட்டார்கள். ஒரு மனிதனின்  சமூக அந்தஸ்து அவன் செய்யும் வேலையையும், அதில் அவனுக்கு இருந்த திறமையையும் பொறுத்திருந்ததால் , ஓர் ஆண் தன் காலத்திற்குப் பிறகும் தன் சமூக அந்தஸ்தை நிலைநாட்டிக்கொள்ள வேண்டுமானால் தன்னைவிட பெரிய ஆளாகத் தன் மகனை ஆக்கவேண்டியிருந்தது. அதனாலேயே ஆண் குழந்தையைப் பெற்று, அவனுக்குத் தனது ரகசியங்களைச் சொல்லிக் கொடுத்து வாலிபப் பிராயம் வரை வளர்த்தாலே போதும் அந்த ஒருவனே எல்லா மகள்களையும்விட மிக அதிகமான வம்சத்தைப் பரப்பி,வாரிசுகளை உற்பத்தி செய்து விடுவான். ஆண் குழந்தை என்பவன் தன் தந்தையின் மரபணுக்கள் , அறிவு, சமூக அந்தஸ்து ஆகிய மூன்று முக்கிய சொத்துக்களைக் கட்டிக்காக்கக் கூடியவன். இவ்வளவு முக்கியத்துவம் இருந்ததால் ஆண் குழந்தைகளின் மவுசு கூடியது .இப்படி உருவான வலிமையான புத்திசாலி ஆண்களால் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம் கிடைத்தது. அதனாலேயே ஆண்களைவிட பெண்களே ஆண் குழந்தைகளைப் பெரிதும் விரும்பினார்கள்.

ஆண்கள் மொத்தமாக சேர்ந்து பெண்களின் மூளையை கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கடித்தனர் . “பெண்களுக்கு ஆண்களைவிட அறிவு கம்மி; அவர்களுக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச அறிவை வைத்து அவள் குடும்பம் மட்டும்தான் நடத்தமுடியும்; அதை விட்டுவிட்டுப் படிப்பு ,பாடம் என்று முயற்சித்தால் அவளுக்குப் புத்தி தடுமாற்றம் ஏற்பட்டுவிடும்என்று அறிவியல் துறை ஆண்களும், மதத்துறை ஆண்களும் பெண்களை மட்டம்  தட்டினார்கள்
பெண்களின் அறிவை நீக்கி அவர்களை தங்களின் அடிமைகளாக
 மாற்றினார்கள். ஆண் கலைஞர்களும் வெகுளிப் பெண்களைப் போற்றுவதும், துணிச்சலான விவரமான பெண்களைத் தூற்றுவதுமாக இருந்தார்கள்; இருக்கிறார்கள் ( இங்கே ஆண் எழுத்தாளர்கள் அவ்வப்போது பெண் எழுத்தாளர்களைத் தூற்றுவது இந்தக் காரணத்தால் தானோ ! ).


இயற்கை என்னதான் மனிதர்களுக்கு சில அடிப்படை குணாதிசியங்களைக் கொடுத்திருந்தாலும் ,பயிற்சி மூலமும், தொடர்ந்த பழக்கம் மூலமும் இயல்புகளை மாற்றிப் புதிய வழக்கங்களைப் பயில முடியும்தானே . இப்படி ஒட்டு மொத்த சமூகமும் புதுப் பழக்கவழக்கதுக்கு மாறுவதைத் தான் நாம்  ‘சமூகமயமாக்கல்என்கிறோம்.ஆணே முக்கியமானவன் , மேலானவன், பெண் வெறும் பண்டம் , ஆணின் வாரிசுகளைச் சுமபதற்கென்றே பிறந்த ஜென்மம் என்று இருபாலினருக்கும் தொடர்ந்து போதிக்கப்பட்டது .சமூகமயமாக்கல் ஆணைப் பல திருமணங்கள் செய்து கொள்ள அனுமதித்தது . அதிகப் பெண்களை ஜெயித்தவனை ஆண்மை நிறைந்தவன் என்று பாராட்டி ஊக்குவித்தது.

பெண்ணை இப்படி பொருளாக நடத்தியதால் இன்னொரு சிக்கல் கிரேக்கத்தில் உருவானது. ஆணுக்கு அறிவு இருந்தது; பெண்ணுக்குக் கிடையாதுஇந்தப் பெரிய வித்தியாசமே மனித ஆணும் பெண்ணும் வெவ்வேறு விதமான ஜீவராசிகள் என்ற நிலைமையை உருவாக்கியது. இயற்கையில் இருவேறு ஜீவராசிகள் புணரமுடியாது, புணர்ந்தாலும் வாரிசுகள் உருவாகாது. ஆண்களுக்கு , அறிவில்லாமல் ஆக்கப்பட்ட பெண்ணோடு புணர்வது அழகான வேற்றின மிருகத்தோடு புணரும் தரக்குறைவான செயலாகத் தோன்றியது. அதனால், அறிவுள்ள ஆண்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு ஆசையும், பாசமும் , கவர்ச்சியும் ,காதலும் பெருகி காமமும் தோன்றி ஆணும் ஆணும் புணரும்  ‘ ஓரினச்சேர்க்கைஉருவானது . கிரேக்கத்தில் சாக்ரடீஸ் ,ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில் போன்ற தத்துவவாதிகளும், மன்னர்களும்,சாமானியர்களும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார்கள். ஆண்கள் எல்லோரும் தங்களுக்குள்ளேயே கூடி வாழ ஆரம்பித்தார்கள். வாரிசு வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்காக மட்டுமே பெண்களுடன் உடலுறவு கொண்டார்கள். அதிலும் அரிஸ்டாட்டில் , ‘ காதலுக்காக ஆண், கருவுருதலுக்காகப் பெண்என்று போதித்தார்.

கிரேக்கத்தில் நிலைமை இப்படி இருக்க மற்ற பகுதிகளில் சில பெண்கள் ஆண்களின் கலைகளாக மாறியிருந்த ஆடல்,பாடல்,தர்க்கம்,ஓவியம் என்று நிறைய கலைகளை மறைமுகமாகக் கற்றார்கள் . மற்ற பெண்களை விட இவர்கள் புத்திசாலிகளாக இருக்க ஆண்கள் இவர்களை மணக்க முன்வரவில்லை. ஆனால் இவர்களுடன் பொழுதைக் கழி(ளி )க்க  ஆண்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. வீட்டில்  இருக்கும் அறிவில்லா குலப்பெண்களை பார்த்தே பழக்கப்பட்ட ஆண்கள் இந்த விவரம் தெரிந்த பெண்ணை விலை கொடுத்தாவது சற்று நேரம் துணையாக்கிக் கொள்ள ஆசைப்பட்டார்கள் . ஆசை நாயகி , விலை மாது , பரத்தை என்றெல்லாம் இந்தப் பெண்களை சமுதாயம் கொச்சைப்படுத்தினாலும் இந்தப் பெண்களுடன் பொழுதைப் போக்குவதே மிக சுவாரசியமாக தோன்ற,  ஆண்களெல்லாம் இந்த விலை மதுகளின்  வீடே கதியென்று கிடந்தார்கள்.  குலப்பெண்களுக்கு இல்லாத அறிவும் , கலை உணர்வும் , சாகசமும் விலை மகளிடமே இருந்தது. கோவலன் ஆடலரசியான மாதவியைத் தேடிப்போனது போல பல நூற்றாண்டு களாக ஆண்கள் விலை மாதுகளை தேடிப் போய்க்கொண்டே இருக்கிறார்கள்.  

என்னதான்  மனித ஆண் அவள் அறிவை அகற்ற அரும்பாடு பட்டலும் பெண்கள்  மறைமுகமாக எதிர்வினையாற்றவே செய்தார்கள்.   பெண்கள் தங்களது உடல் உறுப்புகளையே நேர்த்தியாக்கி கவரச்சியால் ஆண்களை தங்களின் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றார்கள். ஆண்களுக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டு அவர்களை தாஜா செய்தார்கள்.அடுத்ததாக ஒன்றுமே தெரியாத பேதை போல அதாவது   'நாணச் சிரிப்பு, ஓரக்கண் பார்வை , வெட்கச் சிரிப்பு, தொட்டால் சிணுங்கும் பயிர்ப்பு , நேருக்குநேர் பார்த்துப் பேசக் கூச்சம் , குழந்தைத்தனம் மாறாத பால்வடியும் முகம் , மழலை மாறாத கொஞ்சும் மொழி, பணிவு ,கீழ்ப்படிதல் , பயந்த சுபாவம் , வெகுளித்தனம் , எனக்கு ஒன்றுமே தெரியாதே என்ற மிரட்சியான தோற்றம். ' என்று தன்னை பேதையாக பெண் வெளிப்படுத்த இந்த பெண்நடத்தையை கலைஞர்கள் புகழ்ந்துதள்ளிவிட்டார்கள் . ஒன்று கவர்ச்சி இல்லையேல் பேதை நடத்தையை கையிலெடுக்க இதனால் ஆண்களெல்லாம் அறிவிற்காகத் தேர்ந்தெடுத்த இனப்பெருக்கத்திற்கு  உதவாத ஓரினச் சேரக்கை , பரத்தையுடன் சேரக்கை என்பதை விட்டுவிட்டு எதிர் பாலின சேரக்கையும் , குலப்பெண் சேரக்கையும் அவர்களது அபிமான உடலுறவு முறையானது. ஆனால் பெண்களின் இந்தத் தந்திரங்களால் பக்கவிளைவுகளும் உருவாகின. தன் இன அடையாளக் குறிகளை அவள் மிகைப்படுத்தி வெளிப்படுத்தியதால் அவளை வெறும் ஒரு  'கலவியல் கருவி ' தான் என்கிற கீழ்நிலைக்குத் தள்ளியது. இது மட்டுமல்லாமல்  பேதை போல நடந்து கொண்டதால் அவளை அடிமுட்டாளாகக் காட்டியது. நாம் தான் அவளைப் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்ச்சியை ஆண்களிடம் ஏற்படுத்தியது.

ஆண்களைக் கவர தனது அழகையும் , பேதை போன்ற நடத்தையும் பயன்படுத்திய பெண்கள் அதற்கு விலையாக கொடுத்தது சுய இயக்கத்தை . அவளால் தனித்து இயங்க முடியாது , நினைத்தையெல்லாம் வெளிப்படுத்த முடியாது , ஆணுக்குச் சரிநிகர் சமானமாக வாழமுடியாது . உலகில் அநேக இடங்களில் பெண்கள் இந்த விலையைக் கொடுத்து ஆண்களின் கட்டுப்பாட்டில் வாழ ஆரம்பித்தார்கள்.  ஆண்களும் தங்கள் பங்குக்கு பெண்களுக்காகப் பாடுபட்டார்கள் ; பாடுபடுகிறார்கள். உணவு , உறைவிடம், பாதுகாப்பு , பிள்ளைப்பேறு என்று பல தேவைகளைப் பூர்த்தி செய்தார்கள். ஆனால் பெண்களைப் பண்டங்களாகவே   நடத்தினார்கள்.

ஆணை ஆட்டுவிக்கும் விசைகள் மொத்தம் இரண்டு.ஒன்று கலவி மோகம் - கவர்ச்சியான, காம உணர்வைக் கிளறிவிடும் பெண் உருவை , பெண்ணாக இல்லாவிட்டாலும் கிட்டத்தட்ட பெண் மாதிரியான ஓர் உருவைப் பார்த்தாலே ஆணுக்கு மோகம் உண்டாகி விடுகிறது ( ! இதனால தான் ஜவுளிகடை மொம்மையைக் கூட நம்மாளுக வச்ச கண்ணு வாங்காம பாக்குறாங்களோ !) . மற்றொன்று ' நான் தான் எல்லோரையும் விட உசத்தி ' என்ற உணர்வு. தன் உயர்ந்த நிலையைப் பிறருக்குப் பறைசாற்றிக் கொண்டே இருக்கும் இந்த உந்துதல் ஆணினத்தின் இயற்கை சுபாவம் . இதனால் தான் ஆண்கள் அதிகமாக தற்பெருமை பேசுகிறார்களோ ! ஆணை பலவீனப்படுத்தும் விசயங்கள் இரண்டு .ஒன்று இல்லற துரோகம் மற்றொன்று தாழ்வு மனப்பான்மை. ஆண்களின் பலம், பலவீனங்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு  நடந்து கொண்டனர். ஆணாத்திக்க சமூகமாக இருந்தாலும் , பெண் அடிமையாக நடத்தப்பட்டாலும் மறைமுகமாக ஆட்சி நடத்துவது பெண்கள்தான். அரசாங்கம் பெண்களின் ஆதரவில்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஒரு பொருளை விற்பனை செய்ய  அது ஆண் பயன்படுத்தும் பொருளாக இருந்தாலும் பெண் தேவை. குடும்பத்தலைவர் தங்களின் மனைவியுடன் கலந்து பேசாமல் எந்த முடிவும் எடுப்பதில்லை. எந்தவிதமான விசயங்களும் பெண்களின் ஆதரவில்லாமல் வெற்றி பெற முடிவதில்லை.

பெரும் போராட்டத்திற்கு பிறகு பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்தாரகள். ஆண்கள் தடம் பதித்த எல்லாத்துறைகளிலும் நுழைந்தார்கள்.      ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைகளாக இருந்த பெண்கள் கல்வி கற்க ஆரம்பித்த அரை நூற்றாண்டிலேயே ஆண்களை விட அந்தஸ்தில் உயர்ந்து காட்டியதிலிருந்தே பெண்களின் சக்தியை அறிய முடியும். கல்வியினால் கிடைத்த பொருளாதார சுதந்திரம் அவர்களை மேலும் வலுவாக்கியது. ஒரு காலத்தில் பெண்களிடம் அறிவு எனும் ஆயுதம் இல்லாத போது , ஆண்கள் தங்களுக்குள்ளேயே காதல் கொண்டு வாழ்ந்ததைப் போல, ஆண்களிடம் எதிர்பார்த்த அன்பு எனும் மனித குணம் அவனிடம் இல்லாத போது தற்காலத்து பெண்கள் சிலர் தமக்குள்ளேயே ‘ ஓரினச்சேர்க்கை ‘ புரிய ஆரம்பித்தார்கள். ‘ ஆண் என்றால் ஆதிக்கம் செய்தாக வேண்டும் ’ என்ற நிலைப்பாட்டிலேயே பின்தங்கிப்போன கட்டுப்பெட்டித்தனமான கணவர்களை இனியும் பொறுத்துப் போகவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்த பெண்கள் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு தனியாகவே வாழ முடிவு செய்தார்கள்.இதனால், எல்லா நாடுகளிலும் விவாகரத்து விகிதங்களும் , தனி தாய்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்தன.

திருமணம் , ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கோட்பாடுகள் நமத்துப்போக ஆரம்பித்தன. திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வது பிரபலமாக ஆரம்பித்தது. முந்தைய காலத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரோன் சுரந்த ஆண்களை  மட்டுமே தேர்ந்தெடுத்து உறவு கொண்டிருந்தாள் . அதிகபட்ச டெஸ்டோஸ்டிரோனின் பக்க விளைவாகவே மனித ஆண் , உலகையே ஆதிக்கம் செய்ய முற்பட்டான். ஆனால், இவனது ஆதிக்கச் சிந்தனைக்கு பெண்ணே நேரடி இரையானது மட்டுமின்றி , ஒட்டு மொத்த உலகமே பேரழிவுக்கு உள்ளானது. எல்லா வளத்தையும் தன்னுடையதாக்கிக் கொண்டு, தான் எவ்வளவு சக்திவாய்ந்த ஆண் என்று காட்டிக்கொள்ளும் போக்கினால், காடுகளை அழித்து , தேவைக்கு அதிகமான அநாவசிய ஆடம்பரங்களுக்காக , உலகையே மொட்டை அடித்தான் மனித ஆண். மனித ஆணின் வேட்டை, வேடிக்கை, பொழுதுபோக்கு, ஆராய்ச்சி ஆகிய வேட்கையினால், பல கோடிக்கணக்கான உயிரினங்கள் அழிந்தே போயின. அதனால் ஆண்களில் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்க பெண்களையே ஆயுதமாக ப்யன்படுத்தத் தொடங்கியது, இயற்கை. 

சுயசார்பை அடைந்துவிட்ட இந்தக் காலத்தில் மனிதப் பெண் ஆணிடம் எதிர்பார்ப்பது பாதுகாப்போ, வீரமோ, உணவு கொணரும் திறனோ, அவன் மூலமாகக் கிடைக்கும் அந்தஸ்து உயர்வோ அல்ல. தன்னை ஒரு சக மனிஷியாக நடத்தி, அன்பு செய்யும் திறனை மட்டுமே.இதற்கு குறைந்த அளவு டெஸ்டோஸ்டிரோன் ஆண்களிடம் சுரந்தாலே போதும் . கடந்த 50 ஆண்டுகளாக இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு உலகெங்கும் குறைந்து வருகிறது. இதனால், ஆண்களின் சராசரி உயரம் குறைய ஆரம்பித்துள்ளது. ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட ஒரே உயரமாக இருக்கும் உயிரியல் மாற்றங்கள் நேர ஆரம்பித்துள்ளன. ஆண்கள் கடந்த நூற்றாண்டைப் போல பெரிய தாடி, மீசை, நெஞ்சு நிறைய முடி, அதிகார தோரணை, நான் தான் பெரிய கொம்பன் என்று தன் வீரியத்தை விளம்பரப்படுத்துவதை நிறுத்தியிருக்கிறார்கள். தாடி, மீசையை ஒட்ட மழித்துவிட்டு , முடிந்தால் நெஞ்சின் ரோமங்களையும் நீக்குவதே அதிநவீன ஆணின் அடையாளமாகி வருகிறது.
    
இயற்கை பெண்களை அதிக வல்லமையுடன் படைக்கிறது. இந்த வல்லமையை மற்ற மிருகப் பெண்கள் பகிரங்கமாக வெளிப் படுத்துகின்றன. ஆனால் , மனிதப் பெண்களோ சந்தர்ப்பம் சூழ்நிலைக்கு ஏற்ப தம் வெளிப்பாடுகளை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களோடு அதிக பரிச்சயம் ஏற்படும்போதுதான் தெரியவே வருகிறது ; மனிதப் பெண் லேசுப்பட்டவளே இல்லை.யாரும் யூகிக்க முடியாது ரகசியமான மறுபக்கம் ஒன்று அவளுக்கு உண்டு என்பது.இயற்கையின் மற்ற சக்திகளைப் போலவே அவள் எதற்கும் பணியாமல் பயணித்துக் கொண்டே இருக்கிறாள்.
மனித வரலாறை திருப்பிப் பார்ப்பது எப்போதுமே சுவாரசியமாகவும் ,  ஆச்சரியமாகவும் ,அதிர்ச்சியாகவும் இருக்கும். அது போலவே இந்த பெண்ணின் சக்தி பற்றிய வரலாறும் இருக்கிறது. மொத்ததில் மரபணுக்கள் , ஹார்மோன்களின் உதவியால் ஆண் மற்றும் பெண்ணை கருவிகளாக பயன்படுத்தி விளையாடும் விளையாட்டு தான் இவை எல்லாம்.
ஆண் ,பெண் குறித்து ஆழமாகத் தெரிந்துகொள்ள ,விவாதிக்க  ‘ பெண்ணின் மறுபக்கம் ’ நூலை தயவு செய்து ஒரு முறையாவது படியுங்கள். இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.


மேலும் படிக்க :

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை! 

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms