"இசையாலே வசமாக இதயம் எது " என்பது போல இசைக்கு மயங்காதவர் என்று ஏறக்குறைய எவரும் இல்லை. மனிதனின் தனிமை மிகக்கொடியது . அந்த தனிமையை மறக்க வைப்பது இசை. இன்றைய இயந்திர உலகில் தனிமை என்பது பல நேரங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது . படிப்பு காரணமாக , வேலை காரணமாக , வேறு ஊர்களில் ,வேறு நாடுகளில், தனியாக வாழ்ந்து தான் ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். எல்லா இடத்திலும், நம் தோழனாய் , ஆசானாய் , கவலை நீக்கியாக , தனிமை நீக்கியாக , நம் உற்சாகத்தை குறைய விடாமல் பார்த்து கொள்வதில் இசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
முதன் முதலில் மனிதன் கேட்ட இசை (இசை என்பதை விட சத்தம் எனலாம் ) எதுவாக இருக்கும் ? காற்று காரணமாக தாவரங்கள் எழுப்பும் சத்தம், பறவைகளின் கீச்சுக் குரல்கள் , பல்வேறு வகையான விலங்குகளின் உறுமல்கள் , மழை பெய்யும் போது உருவாகும் சத்தம் , அருவியின் ஓசை என்று ஏதாவது ஒன்றாக இருக்கலாம் . ஒரு வகையில் இசையும் இயற்கையின் வடிவம் தான் . பிறகு , கையில் கிடைக்கும் பொருள்களை வைத்து ஏதாவது ஒரு சத்தத்தை உருவாக்க முற்பட்டு இருப்பான். பரிணாம வளர்ச்சியின் காரணமாக , பின்பு ,இசைக்கருவிகள் உருவாக்கப்பட்டு இருக்கலாம் . எப்படி இருந்தாலும் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவே இசையை பயன்படுத்தி வந்திருக்கிறோம். இன்று கூட நம் வீடுகளில் கல்யாணம் , காதுகுத்து போன்ற நிகழ்வுகளின்போது , கோவில் விழாக்களின் போது , விளையாட்டுப் போட்டிகளின் போது என்று நம் உற்சாகத்தை , கொண்டாட்டத்தை வெளிப்படுத்தவே இசையை பெரிதும் பயன்படுத்துகிறோம்.
அரசாட்சி காலத்தில் அரசர்கள் மட்டுமே அதிகம் இசை கேட்பவராகவும் , இசையை வளர்ப்பவராகவும் இருந்து உள்ளனர் .பின்பு , தெருக்கூத்துகளிலும் , நாடகங்களிலும் பயன்படுத்தி வந்த இசையை பாடல்கள் வடிவில் எல்லோருக்கும் சென்றடையும்படி செய்ததில் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. தற்பொழுது பாடல் தான் இசையின் வடிவமாக உள்ளது . அந்தந்த நாட்டுக்கும் , கலாச்சாரத்திற்க்கும் ஏற்ற வகையில் பல்வேறு வகையான பாடல்கள் கேட்கப்படுகின்றன. இந்தியாவை பொருத்தவரையில் திரைப்பாடல்கள் தான் அதிகம் கேட்கப்படுகின்றன.
இசைக்கு மொழி தேவை இல்லை . உயிரோட்டமுள்ள இசை கண்டங்களை கடந்து பயணிக்கும் . ஆனால் , தாய்மொழியில் உருவான பாடல்களை கேட்கும்போது பாடல்வரிகளையும் சேர்த்தே கவனிக்கிறோம், நல்லவரிகள் இல்லாத பாடல்களை கேட்க மனம் இடம் தருவதில்லை அந்தப்பாடலில் நல்ல இசை இருந்தாலும் கூட. வேறு மொழிப்பாடல்களைக் கேட்கும்போது நாம் பாடல்வரிகளைக் கருத்தில் கொள்வதில்லை. அந்தப்பாடல் நமக்கு ஏற்ப்படுத்திய தாக்கம் மட்டுமே நம்மால் உணரப்படும் . நாடககலையில் இருந்து தமிழ்சினிமா தோன்றியதால் ஆரம்பகால தமிழ் பாடல்களில் நாடகத்தனம் சற்று அதிகமாகவே இருக்கும். பின்பு , நாடகத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. நான் பழைய பாடல்களை விரும்பியதற்கு ஒரே காரணம் "பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நெருப்பு போன்ற பாடல்வரிகள் ".
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் , எனது சிறுவயதில் அதிகளவு MGR பாடல்களைக் கேட்டு வளர்ந்தேன். ரேடியோ , டேப் ரெக்கார்டர் போன்றவை மட்டுமே பயன்பாட்டில் இருந்தன . அதுவும் வசதியான வீடுகளில் மட்டுமே இருக்கும் . அப்பொழுதெல்லாம் கல்யாணம் , காதுகுத்து போன்ற குடும்ப நிகழ்வுகள் , கோவில் திருவிழாக்களில் மட்டுமே அதிகளவு பாடல்களைக் கேட்க முடிந்தது. அப்பொழுது கேட்ட பாடல்களின் நினைவுகள் இன்றும் உள்ளன. நாங்கள், பெரும்பாலும் MGR பாடல்களைக் கேட்கக்கூடிய வாய்ப்புதான் அதிகம். ஒரு சில பாடல்களின் வரிகள் மிகவும் நன்றாக இருக்கும் . அந்த பாடல் வரிகளை யார் எழுதியது என்று பார்த்தால் அது பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலாகத்தான் இருக்கும் . வயது கூட கூட பட்டுகோட்டையார் பாடல்களைத் தேடித் தேடி கேட்க ஆரம்பித்தேன் . இன்றும் தேடல் தொடர்கிறது .
அந்த தேடலில் எனக்குத் தென்பட்டவர்கள்தான் , கண்ணதாசன் ,வாலி, C .S .ஜெயராமன் ,A .M .ராஜா ,K.V.மகாதேவன்,திருச்சி லோகநாதன் , P .B .ஸ்ரீநிவாஸ் , T.R.மகாலிங்கம் , K.B.சுந்தராம்பாள் ,S.வரலட்சுமி ,T.M.சௌந்தரராஜன் , S .ஜானகி , சங்கர் -கணேஷ் , மலேசியா வாசுதேவன், சொர்ணலதா போன்றவர்கள் . இவர்களது பாடல்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். முதலில் பாடல்கள் கேட்கும்போது அது அந்த படத்தின் நாயகன் பாடியதாகவே நினைத்துக்கொள்வேன் , பிறகு தான் தெரிந்தது , பாடுவது வேறு ஒருவர் , நாயகன் வாய் மட்டுமே அசைக்கிறார் என்று . இவ்வாறு இருந்த எனது தேடலில் கடந்த இரண்டு மாதமாக ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அது இசை விமர்சகர் திரு. ஷாஜியின் அறிமுகம் . நான் பாடல்கள் கேட்க்கும் விதமே தற்பொழுது மாறிவிட்டது. அந்த பாதிப்பை நீங்களும் உணர இந்த blog இல் http://www.musicshaji.blogspot.com இசை தொடர்பான கட்டுரைகளைப் படியுங்கள் . மலேசியா வாசுதேவன் பற்றிய கட்டுரை இப்பொழுதும் என்னுள் அதிர்வுகளை ஏற்ப்படுத்திக்கொண்டே இருக்கின்றது .
வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சோதனைகள் ,கவலைகள் , கஷ்டங்கள் , துன்பங்கள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதிலிருந்து மீள உதவுவது இசையும் , புத்தகமும்தான் . நான் தனிமையில் இருக்கும் போதெல்லாம் எனது தனிமையை மறக்க வைப்பது இசைதான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை உள்ளது .ஆனால் , ஏறக்குறைய எல்லா வயது மனிதர்களும் பாடல்கள் கேட்பதில் ஆர்வம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர் . சென்னையில் பெரும்பாலனோர் காதுகளில் Head Phone தவறாமல் இருக்கிறது. செல்போன் நிறுவனங்களின் குறிப்பிட்ட வருவாய் பாடல்களை நம்பியே உள்ளது . எப்படி இருந்தாலும், உயிரோட்டமுள்ள பாடல்கள் மட்டுமே காலங்களைக் கடந்து வாழ்கின்றன . நல்ல இசை, நல்ல பாடும் திறமை ஒரு பாடலுக்கு உயிர் கொடுக்கின்றன சில நேரங்களில் பாடல் வரிகளும் முக்கியத்துவம் பெருகின்றன.
இசை ஒரு கடல் , மூழ்க மூழ்கவே முத்துக்கள் கிடைக்கும் . நல்ல தேடல் நமக்குப் பல்வேறு விதமான அனுபவங்களைத் தருகின்றன. நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற எல்லா விதமான பாடல்களையும் கேட்ப்போம் .
வாழ்க்கையை அனுபவிப்போம்.. !
உயிரின் ஓசை பூமியெங்கும் கேட்கட்டும் ...!
..........................................................