நமது இந்த
தொடுதிரை வாழ்வில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத இடத்தைப் பெருகின்றன.முந்தைய
அறிவியல் கண்டுபிடிப்புகளை விட மிக விரைவாக பெருவாரியான மக்களை சென்று
சேர்ந்திருப்பது தொடுதிரை கைப்பேசி. தலைகுனிந்து வாழ்ந்த மனித இனம் தலை நிமிர்ந்து
நடக்க ஆரம்பித்ததை பெரிய சாதனை என்று சொன்னார்கள். ஆனால், அந்த பரிணாம வளர்ச்சி திரும்பி நடப்பது போல
எல்லோரும் திரையைப் பார்த்துக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறோம், நடக்கிறோம்,
மற்ற வேலைகளையும் செய்கிறோம். “நான் இதுவரை எதற்கும் தலை குனிந்ததில்லை” என்ற மனித
இனத்தின் பெருமையெல்லாம் காற்றில் பறக்கிறது. அடுத்த தலைமுறை பிறக்கும் போதே கூன்
விழுந்தே பிறந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கைப்பேசியே
ஆச்சரியம் ஏற்படுத்திய சூழலில் தொடக்க காலத்தில் தொடுதிரை கைப்பேசிகள் கவனம்
ஈர்க்கவில்லை. சாதாரண கைப்பேசிகளைப் போல தொடுதிரை கைப்பேசிகள் உழைக்காது என்ற
அச்சம் முதலில் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் தொடுதிரையின் வசீகரம் மற்றும்
வசதிகள் எல்லோரையும் சாதாரண கைப்பேசிகளை துறக்கச் செய்தன. தொடுதிரை கைப்பேசிகள்,
சாதாரண கைப்பேசிகள் அளவிற்கு உழைப்பதில்லை அல்லது அவ்வளவு உழைக்க
அனுமதிக்கப்படுவதில்லை. எல்லோரும் மாற்றிக்கொண்டே இருக்கிறோம். நாம் சம்பாதிக்கும்
பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை தொடுதிரை கைப்பேசிகளுக்காக தொடர்ந்து ஒதுக்க
வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. தொடுதிரை கைப்பேசியின் விலைக்கு அடுத்ததாக செலவு
வைப்பது இணைய கட்டணம்.
குடும்ப உறவுகள்
மற்றும் சமூக உறவுகளுக்குள் பெரும் பிளவை ஏற்படுத்திய சாதனையை செய்த முதல் சாதனம்,
தொலைக்காட்சி. தொ(ல்)லைக்காட்சியின் வரவிற்கு முன்புவரை குடும்ப உறுப்பினர்களுடன்
பங்கிட்டு கொள்வதற்கும் , தான் சார்ந்திருக்கும் பகுதியில் வாழும் மனிதர்களுடன்
நேரடியாக நெருங்கிப் பழகுவதற்கும் நிறைய நேரம் இருந்தது. தொ(ல்)லைக்காட்சியின்
வரவு இவற்றை சிதைத்ததுடன் நமது வாழ்க்கை முறைக்கு சற்றும் தொடர்பில்லாத பொருட்களை
நமது வீடுகளில் இன்று வரை குவித்துக்கொண்டே இருக்கின்றது. மனித உறவுகளை நோக்கி
ஓடுவதற்கு பதிலாக பணத்தை நோக்கி முன்பை விட வேகமாக நம்மை ஓட வைத்து அழகு
பார்க்கிறது. எப்படி பார்த்தாலும் தொ(ல்)லைக்காட்சியால் நாம் பெற்றதை விட இழந்தவை
அதிகம்.
தொ(ல்)லைக்காட்சிக்கு
அடுத்ததாக நம்மை பாதிப்படைய செய்வது தொடுதிரை கைப்பேசிகள். தொ(ல்)லைக்காட்சிக்கு
அடுத்த சாதனமான கணினி நமது வாழ்வை இந்த அளவிற்கு பாதிக்கவில்லை. நம் வாழ்வை
மேம்படுத்தவே உதவியது. கணினியுடன் இணையம் இணைந்த பிறகு சில பாதிப்புகள் உருவாகின.
ஆனால் தொடுதிரை கைப்பேசிகள் மனித இனத்தின் வாழ்வையே பாதிப்படைய செய்து
கொண்டிருக்கின்றன. தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்முடன் தொடுதிரை கைப்பேசிகள்
இருந்தே ஆக வேண்டும் என்ற அளவிற்கு எல்லோரும் மனநோயாளிகளாகி விட்டோம். நாம்
வாழ்வதற்கான நேரத்தை நேரடியாக தொடுதிரை கைப்பெசிகள் எடுத்துக் கொள்கின்றன. நம்மில்
எத்தனை பேர் தினமும் ஒரு முறையாவது வானத்தைப் பார்க்கிறோம்.நிலவை, சூரிய உதயத்தை ,
சூரிய மறைவை அந்த செவ்வான அழகை ரசிக்க எத்தனை பேர் நேரம் ஒதுக்குகிறோம். தொடுதிரை
கைப்பேசிகள் வழியாக நாம் எவ்வளவு விசயங்களை தெரிந்து கொண்டாலும், பகிர்ந்து
கொண்டாலும் நேரடியாக கிடைக்கும் ஒரு அனுபவத்திற்கு ஈடாகாது.
காலம் பொன்
போன்றது என்று சொல்லியே வளர்க்கப்படுகிறோம். ஆனால் அந்த பொன்னான நேரத்தை சமூக
ஊடகங்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறோம். முந்தைய தலைமுறை காலை 4 மணிக்கு எழுந்து
தினசரி வேலைகளை பார்க்க ஆரம்பித்தது. அடுத்து தலைமுறை காலை 5 மணிக்கு எழுந்தது.
தற்போதைய தலைமுறை காலை 6 லிருந்து 7 மணிக்குள் எழுந்திருக்கிறது. தூங்குவதற்கு
முன்பும் , எழுந்த பிறகும் செய்யும் முதல் வேலை சமூக ஊடகங்களைப் பார்வையிடுவது
தான். புத்தகங்கள் வாசிப்பதற்கும், விளையாடுவதற்கும் மற்ற பொழுதுபோக்குகளுக்கும்
ஒதுக்கப்படும் நேரத்தை தொடுதிரை கைப்பேசிகள் எடுத்துக்கொள்கின்றன. பல்வேறுவிதமான
செயலிகள் உலகையே உள்ளங்கையில் சுருக்கிவிட்டன. பல செயலிகள் பயன்தரும் வகையில்
இருந்தாலும் ஒரு சில செயலிகள் நம்மை அடிமையாக்கிவிடுகின்றன. பெரியவர்கள்
மட்டுமின்றி சிறியவர்களின் நேரத்தையும் இந்த தொடுதிரை கைப்பேசிகள்
எடுத்துக்கொள்கின்றன. ஏற்கனவே தொ(ல்)லைக்காட்சியால் குழந்தைகளின் நேரம்
பறிக்கப்பட்ட சூழலில் தொடுதிரை கைப்பேசிகள் அவர்களின் மீதி நேரத்தையும் எடுத்துக்
கொள்கின்றன.
தொடுதிரை கைப்பேசிகள்
வாங்கியவுடன் நாம் செய்யும் முதல் காரியம் சமூக வலைத்தளங்களில் நம்மை இணைத்துக்
கொள்வது தான். புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வம் செலுத்துகிறோம்.
சரியோ சரியில்லையோ நமக்குப்பிடித்த மற்றவர்களின் பதிவுகளை பகிர்ந்து கொள்கிறோம்.
அந்தப்பதிவின் நம்பகத்தன்மை குறித்தோ மற்றவர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்றோ
நினைத்துப் பார்ப்பதில்லை. தற்புகழ்ச்சியை செழிப்பாக வளர்த்தெடுப்பது தான் சமூக
ஊடகங்களின் முதல் வேலையாக இருக்கிறது. நாம் பகிர்ந்துகொள்ளும் பதிவுகளில்
சுயவிளம்பரம் தான் அதிகமாக இருக்கிறது. மற்றவர்களுக்கு பயனுள்ள நமது அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. ஆனால் நாம் பகிர்ந்து கொள்வதில் பல, மற்றவர்களுக்கு
பயனற்றதாகவே இருக்கிறது. நமது பதிவுகளுக்கு விழும் லைக் -குகள், அந்த பதிவிற்கு
கிடைத்தவையாக எடுத்துக்கொள்ள முடியாது. நாம் பதிவிட்டதற்காக விழும் லைக் –குகளே
அதிகம். நமது பதிவை விட நமது முகம் தான் முன்னுக்கு நிற்கிறது. அதனால் தான் மற்ற பதிவுகளை விட நமது புகைப்பட
பதிவுகளுக்கு அதிக லைக்-குகள் கிடைக்கின்றன.
சமூக ஊடகங்களால்
படைப்புத்திறன் குறைகிறது. ஒரு புத்தகம் வாசிக்கும் போது கிடைக்கும் அனுபவத்தில்
சிறிதளவைக் கூட சமூக ஊடக பதிவுகள் உருவாக்குவதில்லை.பதிவுகளைப் படிக்கிறோம்,
பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம், அத்துடன் மறந்து
விடுகிறோம். நாம் எழுதியது குறித்தோ, நமக்குப்பிடித்த ஆளுமைகள் குறித்தோ , நாம்
பின்பற்றும் கோட்பாடு குறித்தோ யாராவது எதிர்மறையாக எழுதினால் உடனே அவர்களுடன்
மல்லுக்கு நிற்கிறோம். நம் மீது தவறே இருந்தாலும் நாம் ஒருபோதும்
ஏற்றுக்கொள்வதில்லை. நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றே இறுதிவரை
வாதிடுகிறோம். ஆனால் நிஜத்தில் நாம் அப்படி நடந்து கொள்வதில்லை. ஒரு மாய உலகையே
சமூக ஊடகங்கள் முன்வைக்கின்றன. சமூக ஊடகங்களில் தீவிரமாக எழுதுவதாலோ,
சண்டையிடுவதாலோ சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. பெண்ணியம் குறித்து
தீவிரமாக எழுதப்பட்ட பதிவை ஆர்வமாக படித்துவிட்டு லைக்-போட்டுவிட்டு, கமெண்ட்
எழுதிவிட்டு, சேர் பண்ணிவிட்டு நிஜ உலகத்தில் பிரவேசிக்கும் ஆண்கள் எந்த மாற்றமும்
இல்லாமல் பெண்களை அடக்குகிறார்கள்; ஏசுகிறார்கள்.
வெகுஜன
ஊடகங்களில் பணிபுரிபவர்கள் கூட ஆணாதிக்க மனநிலையுடன் நடந்து கொள்வதை பார்க்க
முடிகிறது. சமூகத்தில் யாருக்கு எந்தப் பாதிப்பு
நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்கவேண்டியது பொது சமூகத்தின் கடமை. ஆனால்,
சமூகத்தில் பெண்ணுக்கு ஏதோ ஒரு பாதிப்பு நிகழ்ந்தால் அந்த பாதிப்பிற்கு
அப்பெண்ணையே பொது சமூகம் குற்றம் சாட்டுகிறது. அந்த பெண்ணிற்காக நியாயம் கேட்டுப்
போராட மகளிர் அமைப்புகள் தான் முன்வர வேண்டும் என்றும் பொதுப்புத்தி யோசிக்கிறது.
ஆணாதிக்க ஊடக நடுநிலையாளர்கள், “ ஜீன்ஸ் பேன்ட் அணிவதற்காக போராடிய
பெண்ணியவாதிகளும், மகளிர் அமைப்புகளும் ஏன் சுவாதி கொலைக்காக போராட முன்வரவில்லை?
“ என்ற மிக மட்டமான கேள்வியை முகநூலில் முன்வைக்கிறார்கள். இதற்கு ஆயிரக்கணக்கில்
லைக்-கள் விழுகின்றன. எவ்வளவு மோசமான மனநிலையிது. தினமும் ஆண் ஓட்டுனர்களால்
ஆயிரக்கணக்கில் விபத்துகள் நிகழ்கின்றன. இந்த விபத்தில் ஆண் ஓட்டுனரை மட்டும் குறை
சொல்லாமல் மற்ற காரணிகளான வாகன பழுது, மோசமான சாலை, வானிலை மாற்றம் ஆகியவையும்
கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் அதே சமயம் ஒரு விபத்து பெண் ஓட்டுனரால்
நிகழும் போது “ என்னைக்கு பொம்பளைக வண்டியோட்ட ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கு
ஆரம்பிச்சது எல்லாம். வண்டிய எடுத்தவுடனே முருக்கிகிட்டு போறாளுக” என்கிறார்கள்.
என்னவிதமான மனிதர்கள் நாம். பெண்களை குற்றவாளியாக்கி வேடிக்கை பார்க்க ஒட்டுமொத்த
சமூகமும் எப்போதும் தயாராகவே இருக்கிறது. சமூக ஊடகங்களால் இந்நிலை துளியும்
மாறவில்லை.
கல்விச்சான்றிதழ்களில்
, குடும்ப அட்டைகளில் பெயருடன் சாதிபெயர் இல்லாமல் இருப்பவர்கள், சமூக ஊடகங்களில் சாதிப்பெயருடன்
இருக்கிறார்கள். முன்பை விட இப்போது தான் அதிகம் சாதி பார்க்கிறார்கள். தங்களது வாகனங்களில்
வெளிப்படையாக சாதிப்பெயரையும் ,சாதித்தலைவர்களையும் வெளிப்படுத்துகிறார்கள். சாதிய
அரசியல்வாதிகள் தங்களது சுயலாபத்திற்காக மக்களை பிரிவுபடுத்துகின்றனர். உலகம்
முழுக்கவே பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போதைய
சூழலில் காந்தி, லிங்கன், குவேரா போன்ற பிரிவினைகளைக் கடந்து ஒட்டுமொத்த
மக்களுக்காகப் பாடுபடும் உலகளாவிய தலைவர்கள் இல்லாதது தான் காரணம். ஜெர்மன்
பிரதமர் ஏஞ்சலோ மெர்கில், விக்கிலீக்கிஸ் ஜூலியன் அஜாஞ்சே , அமெரிக்க எட்வர்ட்
ஸ்னோடோன் போன்றவர்களைத் தான் உலகளாவிய மனிதர்களாக ஏற்றுக்கொள்ள முடிகிறது. கடந்த
இருபதாம் நூற்றாண்டில் இதே காலகட்டத்தில்( 1914 - 1918 ) நடந்த முதல் உலகப்போரில்
லட்சகணக்காணவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நூற்றாண்டிலும் பிரிவினைவாதிகளால் உலகெங்கிலும்
மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்த பிரிவினைவாததை சமூக ஊடகங்கள் தடுத்து
நிறுத்தவில்லை, மாறாக பிரிவினைவாதத்தை வளர்க்கவே துணை நிற்கிறது.
எந்தவொரு
கோட்பாடும் இயக்கமாக உருவாகமல் சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழாது. உலக
வணிகமயமாக்கலால் கம்யூனிச கோட்பாடுகள் வலுவிழந்து வரும் சூழலில் புதிய
கோட்பாடுகளுக்கான, இயக்கங்களுக்கான தேவைகள் உருவாகியிருக்கின்றன. முன்பை விட
பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இயற்கை வளங்கள்
பெருமளவு பணமாக்கப்படுவதுடன் மற்ற இயற்கை வளங்களையும் அந்த பணமாக்கும் முறை சிதைக்கிறது.
உலக வணிகமயமாக்கலின் பலத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய இயக்கம் அமைய
வேண்டும். இந்த சூழலில் சமூக ஊடகங்களால் பெரிய அளவிலான ஆக்கப்பூர்வமான இயக்கங்களை
உருவாக்க முடியவில்லை. அரசியல்வாதிகளையும் , பணக்காரர்களையும் அதிகாரத்தில்
இருப்பவர்களையும் ஒன்றும் செய்யாத சட்டதிட்டங்களை கேலி செய்வதுடன் எல்லாம்
முடிந்து விடுகிறது. ஆனால் நிகழ்கால பிரச்சனைகளை மையப்படுத்திய மீம்ஸ்கள்
ரசிக்கும்படியாக உருவாக்கப்படுகின்றன.
திரைப்படங்கள், இசை, புத்தகங்கள் மற்றும் கலை குறித்தான பதிவுகள் காட்சி
ஊடகங்களாலும், அச்சு ஊடகங்களாலும் புறகணிக்கப்பட்ட சூழலில் சமூக ஊடகங்கள் அதற்கான
இடத்தை தருகின்றன. ஆனால் நாம், தொடுதிரை கைப்பேசிகள் வழியாகவும் , சமூக ஊடகங்கள்
வழியாகவும் உளவு பார்க்கப்படுகிறோம். சுதந்திரமாக எதையும் செய்ய முடிவதில்லை.
மனிதர்கள்
தங்களது மனக்கசடுகளையும், போதாமையையும் , குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கும்
இடமாகவே சமூக ஊடகங்கள் இருக்கின்றன. நமது வாழ்வில் பங்குபெற்ற நண்பர்களுடன்
தொடர்பில் இருப்பதற்கும் ,புதிய நண்பர்களைக் கண்டைவதற்கும் சமூக ஊடகங்கள்
உதவுகின்றன. ஆனால் சமூக ஊடகங்கள் நம் சமூகத்தில் எந்த பயனுள்ள மாற்றத்தையும்
நிகழ்த்தவில்லை. ஒரு பொழுதுபோக்கு சாதனமாகவே அவற்றை எடுத்துக்கொள்ள முடிகிறது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல சமூக ஊடகங்களின் கூப்பாடு
நாட்டுக்குள் கேட்பதில்லை. எந்த சாதனமும் நமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
அந்த சாதனத்தின் கட்டுப்பாடில் நாம் இருக்கக்கூடாது. எல்லா விசயங்களுக்கும் ஒரு
எல்லை இருக்கிறது. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக நம்மை நாமே
சுயபரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தொடுதிரையைத்
தாண்டியும் உலகம் இயங்குகிறது. அங்கே ரத்தமும் சதையும் உள்ள எளிய அன்புக்கும்,
சிறிய பாராட்டுக்கும் ஏங்கித் தவிக்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஒன்றே ஒன்று
தான். நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விடவும் வாழ்க்கை மிகவும் பெரியது.
குறி எனும் சிற்றிதழில் வெளிவந்த கட்டுரை இது.
தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
கச்சேரி பள்ளி எதிரில் ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .
சந்தாதாரர் ஆக:
தொடர்புக்கு :
குறி சிற்றிதழ் ,
கச்சேரி பள்ளி எதிரில் ,
சந்தை சாலை ,
வேடசந்தூர் -624710,
திண்டுக்கல் மாவட்டம் .
சந்தாதாரர் ஆக:
குறி தனி இதழ் ரூபாய் .20
பத்து இதழ் சந்தா ரூபாய்.200
சந்தா SBI வங்கி மூலம் செலுத்தலாம்
P.MANIKANDAN
A/C NO. 30677840505.
VEDASANDUR
IFS CODE : SBIN0011941
இதழாசிரியர் மணிகண்டன் - 9976122445.
இதழ் குறித்த உங்களின் பின்னூட்டங்கள் மற்றும் படைப்புகளை
kurimagazine@gmail.com
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் .
மேலும் படிக்க :
எக்காலத்திற்குமான கலைஞன் !
வலுத்தது நிலைக்கும் !
...................................................................................................................................................................
0 comments:
Post a Comment