Tuesday, July 7, 2026

கேபோ வெர்டேவிற்கு அன்பும் நன்றியும் ♥️



Round 32 ஆரம்பித்ததிலிருந்தே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தொடக்கப் போட்டிகளில் சிறப்பாக ஆடிய கேபோ வெர்டே ( Cabo Verde) -கும் எப்போதும் சிறப்பாக விளையாடும் அர்ஜென்டினா (Argentina )-விற்கும்  நடக்கும் போட்டி தான் அது. மற்ற போட்டிகளையோ அல்லது Highlights களையோ தொடர்ந்து பார்த்து வந்தாலும் இந்தப் போட்டியின் மீதான ஆர்வம் குறையவில்லை. சொல்லப் போனால் கேபோ வெர்டே தான் இந்த உலக்கோப்பையை பார்க்கத் தூண்டியது. தொடக்க சுற்று போட்டிகள் எதையும் பார்க்கவில்லை. Josimar José Évora Dias எனும் இயற்பெயருடைய  வொசின்ஹா (Vozinha ) என செல்லமாக அழைக்கப்படும் கேபோ வெர்டேயின் கோல் கீப்பரால் தான் இந்த உலக்கோப்பை தொடரை Round 32 முதல் பார்க்கத் தொடங்கினேன். 


அந்த எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கேபோ வெர்டே. Very Disciplined Game .கேபோ வெர்டே அணி வீரர்களின் ஆட்டத்தில் ஒரு ஒழுங்கு இருந்தது. அதிலும் பின்கள வீரர்கள் 4 பேர்  களத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் விளையாடினர். திரையில் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது. கால்பந்து விளையாட்டைப்  பார்ப்பது அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. இந்தியாவிலும் தொடர்ந்து கால்பந்து ஒளிபரப்பில்  முக்கியத்துவம் கொடுத்தால் கிரிக்கெட் மீதான ஆர்வம் சற்றே குறைய வாய்ப்பிருக்கிறது. 


எவ்வளவு திறமையான வீரர்களை கொண்ட அணியாக இருந்தாலும் சூழ்நிலை கைக்கொடுக்கவில்லை என்றால் அன்றைய நாள் அவர்களுடைய நாளாக இருக்காது. ஒரு சிறிய தவறு கூட போட்டியின் முடிவை மாற்றி விடுகிறது. அதே போல வேகம் மிக முக்கியமாக இருக்கிறது. பந்தைக் கடத்துவதிலும் கோல் அடிப்பதிலும் வேகத்தைக் காட்டுபவர்களே வெற்றியாளர்களாக இருக்க முடிகிறது. பொதுவாகவே கோல் கீப்பர்கள் கோலைத் தடுக்க கையாளும்  முறைகள் மேன்மையடைந்து இருக்கிறது. கோல் கீப்பர் வேகம் மட்டுமல்ல விவேகத்தையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமிருக்கிறது. 


நிறைய போட்டிகளில் எதிரணி முதல் கோல் போட்டாலே துவண்டு விட்டனர். ஆனால் கேபோ வெர்டே துளியும் துவளவில்லை அர்ஜென்டினா முதல் கோல் போட்டு முன்னிலை பெற்றால் இவர்களும் முதல் கோல் போட்டு ஆட்டத்தை சமநிலைக்கு வந்தனர். அர்ஜென்டினா இரண்டாவது கோல் அடித்து முன்னிலை பெற்றால் மீண்டும் கேபோ வெர்டே ஒரு கோல் போட்டு மீண்டும் ஆட்டத்தை சமப்படுத்தியது. அர்ஜென்டினாவின் இரண்டாவது கோல் சிறப்பானது. அதை விட சிறப்பானது கேப் வெர்டேவின் இரண்டாவது கோல் ( S. Lopes Cabral ) .அற்புதமான ஒன்று. 


மெஸ்ஸியின் கார்னர் கிக் உதவியுடன் அர்ஜென்டினா போட்ட மூன்றாவது கோலும் அதிர்ஷ்டத்தால் கிடைத்தது தான். கேபோ வெர்டே வீரர்களின் மீது பட்டுத்தான் உள்ளே விழுந்தது. அதன் பிறகும் கேபோ வெர்டே சளைக்காமல் போராடியது. நேரம் குறைவாக இருந்ததால் லாங் சாட்களை அடித்தது. அவை கோலாக மாறவில்லை . ஆட்ட இறுதியில் கோல் கம்பத்தின் அருகிலும் ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டது. கேபோ வெர்டே மீண்டும் ஒரு கோலடித்து ஆட்டம் மீண்டும் சமநிலைக்கு வந்து பெனால்டி ஷூட் அவுட் வரை போட்டி சென்றிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். மொத்தத்தில் சிறப்பான ஆட்டம். 


கேபோ வெர்டேவிற்கு அன்பும் நன்றியும் வாழ்த்துக்களும் 🎉

மேலும் படிக்க :


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms