Thursday, July 4, 2013

உதிரிப்பூக்கள் !


வாழ்க்கை நமக்குத்தரும் அனுபவங்கள் அற்புதமானவை . உறவுகள் , இயற்கை, காலம் , சமூகம்  ஆகியவை தரும் அனுபவங்களை விட ஒரு திரைப்படம் தரும் அனுபவம் அலாதியானது . நீண்ட நாட்களாக காத்திருந்து பார்த்த திரைப்படம் " உதிரிப்பூக்கள்" . ஒரே திரைப்படத்தில் இவ்வளவு அனுபவங்கள் கிடைப்பது அபூர்வம் . கலாச்சார கோட்பாடுகளுக்கு உட்பட்டு ,காலச்சாரத்தை விசாரணை செய்யும் வகையில் இத்திரைப்படம் கட்டமைக்கப்பட்டுள்ளது .இந்த ஒரே திரைப்படத்திற்காக இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமா பெருமைப்பட்டுக்கொள்ளலாம் .

1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத்திரைப்படம் இன்றுவரை ஈர்ப்புக் குறையாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், உயிரோட்டமான திரைக்கதை தான் .புதுமைப்பித்தன் எழுதிய " சிற்றன்னை " என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது .பொதுவாகவே மகேந்திரனின் திரைப்படங்களில் வசனங்கள் கூர்மையாக இருக்கும் ;இந்தப்படத்திலும் அப்படியே . ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஏதோ ஒரு இடத்தில் ஒரு அழுத்தமான வசனத்தை பேசிவிடுகிறது .கதாப்பாத்திரங்களின் தேர்வும் ,இந்தத் திரைக்கதையில் அந்தக் கதாப்பாத்திரங்கள் கோர்க்கப்பட்டிருக்கும் விதமும் அவ்வளவு அழகு.

தொடர்ந்து கதாநாயகன் துதி பாடும் படங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் முற்றிலும் கதையை நம்பிப் படமெடுத்து அதை வெற்றி பெறவும் செய்த பெருமை மகேந்திரனுடையது . தமிழ்சினிமா வரலாற்றில் இந்தப்படம் ஒரு திருப்புமுனை .அதுவரை வெற்றி விதிகள் என்று சொல்லப்பட்ட அத்தனையையும் இந்தப்படம் மீறியது. எப்படிப்பார்த்தாலும் கதையை நம்பி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் தான் காலம் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகின்றன . 

விஜயன் ,சுந்தரவடிவேலுவாக நடித்திருக்கிறார். அவரது முகம் வெளிப்படுத்தும் பாவங்கள் சிறப்பானது .எவ்வளவு நடந்தாலும் எதைப்பற்றியும் கவலையில்லாமல் தன் போக்கிலே கடைசிவரை இருக்கும் வகையில் இவரது கதாப்பாத்திரம் அமைந்துள்ளது . இந்தப் படத்திற்கு பிறகு விஜயன் எத்தனையோ படங்களில் நடித்தாலும் இந்த சுந்தரவடிவேலு கதாப்பாத்திரம் தான் நம் கண் முன்னே வந்து போகிறது .

லஷ்மியாக அஷ்வினி வாழ்ந்துள்ளார். திரைப்படத்தில் இரண்டு இடங்களில் கதை சொல்லும் பாணியில் புதுமையை புகுத்தியுள்ளார் . சுந்தரவடிவேலுவின் அம்மா முறை உள்ளவர், அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது இவர் பதில் சொல்வதற்குப் பதிலாக இவரது மகன் பதில் சொல்வதுபோல காட்சியும் , லஷ்மி தன் கணவனான சுந்தரவடிவேலுவிடம் கேட்க நினைத்த கேள்வியாக (எனக்கு இன்னொரு புருசன் வேணும்னு நான் கேட்டா நீங்க சரீனு சொல்வீங்களா இப்படி சத்தம் போட்டு கேட்க எந்த பொண்ணுக்கும் வழி இல்லையே ) காட்டப்படும் காட்சியும் நிச்சயம் புதுமை தான் . சுந்தரவடிவேலுவிடம் அஸ்வினி மற்றும் சரத்பாபு அடிவாங்கிய காட்சிகளை நேரடியாக காட்டாமல் தவிர்த்தது அழகு . 

சாருஹாசன் பேசும் ஒவ்வொரு வசனமும் அர்த்தம் பொதிந்ததாகவும் ,முதிர்ச்சியாகவும் இருக்கிறது . அட என்னடா நம்ம ஊரல எல்லாம் பஞ்சாயத்து ராத்திரில நடக்கும் , நிறையப் படத்துல பகல்ல நடக்கற மாதிரியே காமிக்கிறாங்களேனு   நீண்ட காலம எனக்கு ஒரு வருத்தம் இருந்தது .இந்தப் படம் பார்த்த பிறகு அந்த வருத்தம் போய்விட்டது .எங்க ஊர்ல பஞ்சாயத்து ராத்திரில தான் நடக்கும் ; வாய்சண்டை அதிகம் ,கைச்சண்டை குறைவு . 

ஒரு கலாச்சார அமைப்பில் ஒருவன், மற்றவர்களின் விருப்பதிற்கு மாறாக வரம்பு மீறீ நடப்பதால் ஏற்படும் சிக்கல்களை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் ,இயக்குனர் மகேந்திரன் . நான் இதுவரை பார்த்த திரைப்படங்களில் ஒரு திரைப்படத்தின் தலைப்பு , திரைப்படத்திற்கு இவ்வளவு பொருத்தமாக அமைந்தது இந்தத் திரைப்படத்திற்குத்தான் .இளையராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கிறது . இந்தப்படத்தில் பாடியதற்காக எஸ்.ஜானகி தமிழக அரசின் சிறந்த பின்னணிப்பாடகி விருதை வென்றார் . இந்தப்படம் ,எடிட்டர் லெனின் அவர்களின் முதல் திரைப்படம்.

மகேந்திரன் , தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் . இவரது திரைமொழியும் ,வசனங்களும் வீரியம் மிக்கவை .குறைவான படங்களே இயக்கியிருந்தாலும் தனித்துவமானவர் .இவரது எழுத்தும் வசீகரமானவை .விகடன் பொக்கிசத்தில் வந்த இவரது பேட்டி அருமை . நிஜ வாழ்விலும் தனித்துவமானவர் என்பதை அவரது பேட்டி உணர்த்தியது . இந்த நேரத்தில் நாம் ஒருவருக்கு நன்றி சொல்ல வெண்டும் ,அவர் MGR . ஆம் திரைத்துறையை விட்டு மூன்று முறை விலகிச்சென்ற மகேந்திரனை மீண்டும் திரைத்துறைக்கு கொண்டு வந்து சேர்த்தவர் . மணிரத்னம் உதவியாளராக சேர விரும்பிய ஒரே இயக்குனர் மகேந்திரன் மட்டும் தான்.
மகேந்திரனின் மற்ற படங்கள் முள்ளும் மலரும், பூட்டாத பூட்டுகள், ஜானி,நெஞ்சத்தை கிள்ளாதே ,நண்டு,மெட்டி,அழகிய கண்ணே,கை கொடுக்கும் கை,கண்ணுக்கு மை அழகு,ஊர் பஞ்சாயத்து,சாசனம் . நல்ல அனுபவத்திற்கு அவரது மற்ற படங்ளையும் பார்க்க வெண்டும் .


உதிரிப்பூக்கள் :


மேலும் படிக்க :

அவள் அப்படித்தான் !

..................................................................................................................................................................

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எத்தனை முறை பார்த்தேன் என்று ஞாபகமில்லை... உங்கள் பார்வையில் நல்ல விமர்சனம்...

காரிகன் said...

தமிழில் வந்த தலை சிறந்த படங்களில் ஒன்றான உதிரிப்பூக்கள் படம் பற்றி உங்கள் பதிவு அருமை.படம் முடிந்தும் அந்த இரண்டு குழந்தைகள் நம் மனதை விட்டு அகலாமல் இருப்பதே இந்தப் படத்தின் வெற்றி.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms