விகடன் தடம் -ல் வெளியாகியிருக்கும் அக்கமகாதேவியைப் பற்றிய பெருந்தேவியின் கட்டுரை கவனிக்க வேண்டிய ஒன்றாகும். பெண்களை அடிமையாகவே நடத்தும் இந்து சமய மரபில் இப்படி ஒரு பெண் வெளிப்பட பசவண்ணரின் இயக்கம் தான் முக்கியமான காரணமாக இருந்திருக்கிறது. உண்மைக்கு நெருக்கமில்லாத எதுவும் வீண் தான்.வசனங்களால் வளர்க்கப்பட்ட பசவண்ணரின் இயக்கம் உண்மைக்கு நெருக்கமானதாக நடைமுறைக்கு பொருத்தமில்லாததை புறந்தள்ளும் இயக்கமாக இருந்திருக்கிறது. தூமைத் தீட்டு , சாவுத் தீட்டு , குழந்தைப் பேறுத் தீட்டு , சாதித் தீட்டு, வைதவ்யம் எனப்படும் கைம்பெண் கோலம் போன்ற ஐந்து தீட்டுகள் பசவண்ணரின் இயக்கத்தினரால் (சரணர்கள் ) புறந்தள்ளப்பட்ட தீட்டுகள் ஆகும். இந்த இயக்கம் 12ம் நூற்றாண்டில் உருவானதாகச் சொல்லப்படுகிறது. 12ம் நூற்றாண்டிலேயே இந்த அளவிற்கு தெளிவு இருந்திருக்கிறது. இந்த தீட்டுகள் இன்றும் தொடர்வது வெட்கக்கேடு. இன்றைக்கும் இந்த ஐந்து தீட்டுகளும் இந்து சமயத்தில் தீவிரமாக பின்பற்றப்படும் தீட்டுகளாகவே உள்ளன. இந்த ஐந்து தீட்டுகளை ஒதுக்கிவிட்டாலே நிறைய மாற்றங்கள் நிகழும்.
முள்ளை முள்ளால் எடுப்பது போல ஆன்மீகத்தை , ஆன்மீகத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை பசவண்ணரின் இயக்கம் நமக்கு கொடுக்கிறது. ஒவ்வொரு மதத்திலும் பின்பற்றப்படும் நடைமுறைக்கு ஒவ்வாத அயோக்கியத்தனங்களை வேரறுக்க இன்னொரு ஆன்மீக இயக்கம் தோன்ற வேண்டும். பகுத்தறிவுவாதிகளும் ஆசிரமங்கள் தொடங்க வேண்டும்.
அக்கமகாதேவியை பெருந்தேவி அணுகியிருக்கும் விதம் தனித்துவமானது. ஆண்டாளைப் போல அக்கமகாதேவியும் சென்னமல்லிகார்ச்சுனன் மீது மையல் கொண்டிருந்தார் என்றாலும் அவரது வாழ்க்கை பெரும் கலாச்சார உடைப்பு. அவரை ஒரு பெண்ணியவாதியாகவே பெருந்தேவி அணுகுகிறார். ஆடை களைதல் என்ற ஒன்றின் மூலமே நிறைய உடைப்புகளைச் செய்திருக்கிறார். இவ்வளவு வலிமை வாய்ந்த, எந்தவித நிர்பந்தத்திற்கும் கட்டுப்படாத, பாலினம் கடந்த சுதந்திரமான பெண் இன்றும் சாத்தியமா ? என்று தெரியவில்லை என்கிறார், பெருந்தேவி. இன்றும் பெண்களுக்கான பொதுவெளி என்பது ஆண்களுக்கான பொதுவெளி போல இல்லை. பெரும்பான்மையோருக்கு பொதுவெளியே இல்லை என்பது தான் உண்மை.
இந்த மாதிரியான வரலாற்று நிகழ்வுகள் கவனம் பெரும் போது நிகழ்கால வாழ்வில் நிறைய திறப்புகள் நிகழ சாத்தியமிருக்கிறது.
(10-07-2018 அன்று முகநூலில் எழுதிய பதிவு )
மேலும் படிக்க :
0 comments:
Post a Comment