எண்ணிலடங்காத அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்தது தான் நம் வாழ்க்கை . ஒவ்வொரு நொடியும் அற்புதம் தான் . நம் வாழ்க்கை, மீண்டும் சந்திக்க முடியாத நிமிடங்களில் அடங்கியிருக்கிறது . ஆனால் , இதை எல்லா நேரங்களிலும் உணர முடியாத நிலையில் தான் நம் பயணம் இருக்கிறது . நம்மைச்சுற்றி தினமும் அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. சமீபத்திய ஆச்சரியம் பத்மநாபசாமி கோவில் .
அனந்த பத்மநாபசாமி கோவில் , கேரளாவில் புகழ்பெற்ற விஷ்ணு கோவில் .இது , விஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று . இதுவரை இந்தக் கோவிலைப்பற்றி தெரியாதவர்கள் கூட இப்போது தெரிந்து கொண்டிருப்பர் . புதையலைத் தேடி அலையும் பல கௌ-பாய் படங்கள் பார்த்திருப்போம் . அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இருக்கிறது இந்தக்கோவிலின் பாதாளப் புதையல் . அள்ள அள்ள தங்கம் . ஓரே வாரத்தில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி பாலாஜியின் சொத்து மதிப்பை மிஞ்சி விட்டார் இந்த பத்மநாபசாமி.
அந்தப் பாதாள அறையில் இறுதி 8 இடங்களுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது . இன்னும் எவ்வளவு அதிசயங்கள் வெளியே வருமோ ? தெரியாது .
இன்றும் தஞ்சை பெரிய கோவிலின் அதிசயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன . நம் முன்னோர்களின் திறமையைக் கண்டு ஒவ்வொரு நாளும் பெருமை கொள்கிறோம் . எந்தவிதமான தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலகட்டத்தில் அவர்களால் இவ்வளவையும் செய்ய முடிந்திருக்கிறது . வாழ்க்கையைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர் . அடுத்த வாரமே இன்னொரு கோவில் முதலிடத்தைப் பிடித்தாலும் பிடிக்கலாம் .
வரலாறு மிகவும் சுவாரசியமானது . நாம் இன்று பயன்படுத்தும் அநேக பொருட்கள் கடந்த 100 வருடங்களுக்குள் கண்டுபிடிக்கப் பட்டவையாக இருக்கும் . அடுத்த 100 வருடங்கள் கழித்து இவை கண்டிப்பாக இருக்காது . ஆனால் , ஒரு சில பொருட்கள் காலம் கடந்தும் தனக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ளும் . அந்தப் பொருட்களின் நீட்சி தான் வரலாறாக மாறுகிறதோ என்னவோ ! . மண்ணோடு மண்ணாக கலந்துவிட்ட பொருட்களுக்கு வரலாறு இல்லை .
நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கொண்டாடப்பட வேண்டியது . ஆனால் , நமக்கு அந்த கொண்டாட்ட மனநிலை தொடர்ந்து வாய்ப்பதில்லை . நம் நாகரீக வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டாட்ட மனநிலையில் இருப்பது மிகவும் கடினம் . நாகரீகம் தோன்றாத காலத்தில் இந்த கொண்டாட்ட மனநிலை அதிகமாக இருந்து இருக்கும் . நாகரீகம் தோன்றியவுடன் பிரிவினைகள் அதிகமாகி விட்டன . வலுத்தவன் மட்டுமே எல்லா நலன்களையும் பெற்றான் . மன்னர் ஆட்சிக்காலத்தில் மன்னர்களுக்கு மட்டுமே அதிகபட்ச சுதந்திரம் இருந்தது . ஜனநாயக ஆட்சியில் மக்களாகிய நமக்குத்தான் அதிக உரிமை இருக்க வேண்டும் . ஆனால் , உண்மையில் நிலைமை அப்படியில்லை . இன்றும் ஏறக்குறைய மன்னராட்சி போலவே இருக்கிறது நம் ஜனநாயகம் . ஒருவேளை இது மன்னராட்சியின் நீட்சியாக இருக்குமோ !
நம் வாழ்க்கை ஆச்சரியங்கள் நிறைந்தது . நம் சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் நமக்குப்பிடித்த விசயம் நிகழும் போது நம் மனம் துள்ளிக் குதிக்கிறது . உதாரணமாக, அசாதாரண சூழ்நிலையில் நமக்கு மிகவும் பிடித்த , நீண்ட நாட்களாக கேட்க வேண்டும் என்று எண்ணிய ஒரு பாடல் ஒலிக்கும் போது நம்மை அறியாமலேயே நாம் கொண்டாட்ட மனநிலைக்கு இடம் பெயர்ந்து விடுகிறோம் . வாழ்க்கை ஒரு முறை தான் . அதனால் , முடிந்த அளவுக்கு வாழ்க்கையைக் கொண்டாடுவோம்.
அடுத்த நொடி இந்த உலகம் தரப்போகின்ற அற்புதங்களும் ஆச்சரியங்களும் ஏராளம் !
மேலும் படிக்க :
..........................................
2 comments:
அச்சரியங்களும் அற்புதங்களும் இல்லையென்றால் வாழ்க்கை சலித்துவிடும்...
unmai thaan...ellaam aruputhankgal thaan.. vaalththukkal
Post a Comment