நடையின் ஊடாக வெக்கையான நிலப்பரப்பையும் , அங்கு வாழும் அசலான மனிதர்களையும் , அவர்களின் வாழ்வியலையும் முன்வைக்கும் ஒரு மண் மணக்கும் படைப்பு. திரைப்படம் ஒரு காட்சி ஊடகம் என்பதை உணர்ந்து நிறைய விசயங்களை அழகிய திரைமொழியுடன் குறிப்பால் உணர்த்துவது சிறப்பு. தமிழ்த் திரைப்படங்கள் தொடர்ந்து தவறவிடும் விசயமிது.
எந்தப் படைப்பாக இருந்தாலும் பார்வையாளர்களும் அதில் பங்கெடுத்து ஒரு உரையாடலை அந்தப் படைப்புடன் நிகழ்த்த வேண்டும். இந்தத் திரைப்படத்தில் பார்வையாளர்கள் தாங்களே யூகித்துக் கொள்ளும் வகையில் பல காட்சிகள் அமைந்திருக்கின்றன. காட்சி ஊடகமான திரைப்படத்தில் எல்லாவற்றையும் நீட்டித்து விளாவாரியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள், குறிப்பாக வன்முறையை நீட்டித்து காட்டுவதே தங்களின் கடமை என இருக்கும் இயக்குநர்கள் இதை உணர வேண்டும்.
ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திரைப்படத்தை மேலும் நெருக்கமாக உணர வைக்கின்றன. அவை எந்த இடத்திலும் திரைப்படத்தை இடையூறு செய்யவில்லை. சண்டையின் போது பேசப்படும் கெட்ட வார்த்தைகள் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அதுவும் திரைப்படத்திற்கு கூடுதல் யதார்த்த தன்மையைக் கொடுத்திருக்கிறது.
குழந்தைதன்மையுடன் குழந்தையை திரையில் பார்ப்பது அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது.
கருப்பு வெள்ளை காலத்திற்கு பிறகு தமிழ்த் திரைப்படங்கள் குழந்தைகளை குழந்தைகளாக காட்டாமல் பெரியவர்கள் போலவே காட்டி வருகின்றன. நிறைய படங்களில் குழந்தைகளைக் காட்டுவதேயில்லை , அப்படியே காட்டினாலும் நகைச்சுவை காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப்படியான சூழலில் இந்த 'கூழாங்கல்' திரைப்படத்தில் முக்கியப் கதாப்பாத்திரமாக ஒரு சிறுவனை குழந்தைத்தன்மை சிதையாமல் காட்சிப்படுத்தியிருப்பது மிகவும் பாராட்டிற்குரியது.
மொத்தத்தில் நம்மையும் அந்த வெக்கையான நிலப்பரப்பில் நடக்க வைத்த இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.
1.15 மணி நேரம் மட்டுமே ஓடக்கூடிய சிறிய திரைப்படம் தான் . வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பாக பாருங்கள்.
மேலும் படிக்க:
அயலி - அசலான தமிழ்மண்ணின் படைப்பு !
0 comments:
Post a Comment