Saturday, January 17, 2026

பொங்கல் - ஒரே அர்த்தமுள்ள பண்டிகை !


" இந்திய நாட்டு விவசாயம் என்பது வெறும் மண் மட்டும் சார்ந்ததல்ல. மண் , மனிதர், மாடு இந்த மூன்றும் சேர்ந்தது தான் நம் நாட்டு விவசாயம் " 

- ஜே.சி.குமரப்பா 

இந்திய நாட்டு விவசாயத்திலிருந்து மாட்டைப் பிரிக்கவே முடியாது. இன்றைய விவசாயத்தில் பாரம்பரிய மாடுகள் அழிந்து கலப்பின மாடுகள் ஆக்கிரமித்திருந்தாலும் கூட மாடுகளை விவசாயத்திலிருந்து நீக்க முடியாது. பாரம்பரிய மாடுகள் நாளெல்லாம் உழைத்தன. "மாடாய் உழைத்தும் என்னத்தை கண்டோம் " என்ற அங்காலாய்ப்பும் இருந்தது. இன்றைய கலப்பின மாடுகளுக்கு எந்தவித உழைப்பும் இல்லை. இன்று "மாடாய் உழைக்கிறேன்" என்று சொன்னால் எந்த வேலையும் செய்யாமல் இருப்பது என்ற பொருளாகிவிடும். டிராக்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது ஜே.சி.குமரப்பாவால் சொல்லப்பட்டது தான் மேலே உள்ள வாசகம். இதனுடன் இன்னொன்றும் சொன்னார். அது, " டிராக்டர் சாணி போடுமா ?" என்பது தான். இதை சாதாரண கேள்வியாக கடந்து போய்விட முடியாது. பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்று சொல்லப்பட்டவை ஏற்கனவே இருந்த உற்பத்திமுறை பாரம்பரியத்தை அழித்து மனிதர்களுக்கு தீங்குகளை மட்டுமே கொடுத்திருக்கிறது. மண்ணை அழித்தது பசுமைப்புரட்சி, மாடுகளை அழித்தது வெண்மைப்புரட்சி. எத்தனையோ விதமான கருவிகள் அறிமுகம் ஆன பிறகும் விவசாயமும், விவசாயப் பரப்பும் அதிகரிக்கவில்லை; மக்களின் ஆரோக்கியமும் மேம்பட வில்லை. இந்த புரட்சிகள் அனைத்தும் மக்களின் ஆரோக்கியத்தை அழிக்க வந்த எமன்கள். 


இப்போதும் விவசாயத்தை மீட்டெடுக்க ஒரே வழி தான் இருக்கிறது. அதுவும் ஜே.சி.குமரப்பா சொன்னது தான். உணவுப் பயிர்களுக்கு முன்னுரிமை தரும் தன்னிறைவு வேளாண்மைக்கு முன்னுரிமை தருவது தான் அது. இதில் நெல்லையும்,கரும்பையும் சேர்க்க முடியாது. இவை இரண்டும் ஆலைப்பயிர்கள். அதுவும் இல்லாமல் இவற்றை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரும் அதிகம் தேவை. அப்படியே உற்பத்தி செய்தாலும் அரசின் உதவியுடன் ஆலை முதலாளிகள் நிர்ணயிப்பது தான் விலை. இது ஒரு அடிமை விவசாயம் என்றே சொல்லலாம். நெல்லையும், கரும்பையும் விட நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தைத் தரும் எத்தனையோ பயிர்கள் இருக்கின்றன.அவற்றை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. பொதுவாகவே விவசாயம் என்பது பணப்பயிர்களை உற்பத்தி செய்வதுதான் என்ற நிலை உருவாகிவிட்டது. பணப்பயிர்களை உற்பத்தி செய்யும் போது உரிய விலை கிடைக்காத போது பெரிய இழப்பு ஏற்படுகிறது. இவை எல்லாவற்றுக்கும் தனது விரிவான ஆய்வுகள் மூலம் சரியான தீர்வுகளை அப்போதே சொல்லிவிட்டு போயிருக்கிறார், ஜே.சி.குமரப்பா. உண்மையிலேயே ஜே.சி.குமரப்பா ஒரு தீர்க்கதரிசி தான்.


விவசாயத்திலிருந்து கிடைக்கும் அனைத்தும் மனிதர்களும், மாடுகளும் எடுத்தது போக மீதி மண்ணுக்கே கொடுக்கப்படுகிறது.நாம் கொண்டாடும் பண்டிகைகளில் பொங்கல் மட்டும் தான் உண்மையிலேயே ஒரே அர்த்தமுள்ள பண்டிகை.பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் பொங்கல் ஒரு அறுவடைத் திருவிழா. பெரும்பாலும் பொங்கல் மண்ணிலேயே வைக்கப்படுகிறது. பூமியில் இருக்கும் சக்திகளில் சூரிய சக்தியே முதன்மையானது. பூமியில் புதியது என்ற ஒன்று உண்டென்றால் அது தினமும் பூமியின் மீது விழும் சூரிய கதிர்கள் மட்டுமே. மற்றவை அனைத்தும் பூமியில் ஏற்கனவே இருப்பவை தான். ஏற்கனவே பூமியில் இருப்பதிலிருந்து ஏதோ ஒன்றை உருவாக்கி நம் மன திருப்திக்காக புதியது என அழைத்துக் கொள்கிறோம். அப்படிப்பட்ட பேராற்றல் உள்ள சூரியனுக்கு நன்றி சொல்கிறோம். இன்றும் விவசாயத்தைக் காப்பாற்றி வருவது மாடுகள் போன்ற கால்நடை வளர்ப்பு வருமானம் தான். அப்படிப்பட்ட மாடுகள் ,ஆடுகளுக்கு பொங்கல் வைத்து நன்றி செலுத்துகிறோம். 


பொங்கலில் சாதி , மதங்களுக்கு துளியும் இடமில்லை. அதுமட்டுமில்லாமல் பொங்கல் ஒரு சூழியல் பண்டிகை. திபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற மற்ற பண்டிகைகள் போல சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் பொங்கல் பண்டிகையால் உருவாவதில்லை. தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவதற்கு எல்லாவித சிறப்புகளும், நியாயமான காரணங்களும் பொங்கல் பண்டிகைக்கு இருக்கிறது. ஒரு வேளை தற்போதைய அரசு பொங்கல் பண்டிகையை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவிக்குமானால் முன்பை விட பெரும்பாலானோர் தற்போது ஆதரிப்பார்கள். தமிழ் சமூகத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை வேரறுத்தாலே போதும் எல்லாம் சரியாகி விடும். 

தமிழர் என்றொரு இனமுண்டு. தனியே அதற்கோர் குணமுண்டு !

பொங்கல் தமிழர்களின் அடையாளம் !

தமிழ்நாடு வாழ்க !

மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms