Wednesday, October 23, 2013

சினிமா - கிரிக்கெட் - இந்தியா !

 
இந்தியாவில் ,உங்களின் பொழுதுபோக்கு என்ன ? என்ற கேள்வியைக் கேட்டால் பெருவாரியான இளைஞர்களின் பதில் ஒன்று கிரிக்கெட் அல்லது சினிமாவாகத்தான் இருக்கும் .கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே இவை மாறிவிட்டன .அதிலும் சினிமாவின் தாக்கம் மிகவும் அதிகம் .டேப் ரெக்கார்டர் ,தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் பரவாத சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை சினிமாவின் தாக்கம் நம் வாழ்வியல் சூழலுடன் கலந்துள்ளது .டேப் ரெக்கார்டர் ,
தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் போன்றவை
 மற்ற நாடுகளில் எதற்காக அதிகம் பயன்படுகிறதோ தெரியாது ,இந்தியாவில் இவை சினிமா சார்ந்தே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன .

டேப் ரெக்கார்டர் மூலம் மற்ற நாட்டுக்காரர்கள் , ஆல்பமாக வெளியிடப்படும் பாப் பாடல்களைக் கேட்டார்கள் . நாம் சினிமாப் பாடல்களைக் கேட்டோம் .அதோடு நில்லாமல் பாடியவர்,இசையமைத்தவர் மற்றும் எழுதியவரைப் புகழாமல் வாயசைத்த நடிகர்களை தலைவனாக கொண்டாடினோம் .டேப் ரெக்கார்டரின் பயன்பாடு முடிவுக்கு வந்துவிட்டது .ஆனால் , நடிகர்களை தலைவனாக கொண்டாடுவது இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை .மற்றவர்களின் பெரும் உழைப்பிற்கு வடிவம் கொடுப்பவர்கள் தான் நடிகர்கள் . ஒரு படத்தின் வெற்றிக்கு நடிகர் மட்டுமே காரணமல்ல . அதே சமயம் நன்றாக நடிப்பவர்களை ஊக்குவித்து பாராட்ட வேண்டும் ;துதி பாடக்கூடாது .ஒரு பாடல் வெற்றி பெற எத்தனையோ பேர்  உழைத்திருந்தாலும் அந்தப்புகழ் வாயசைத்த நடிகரை மையமாக வைத்து இது எம்.ஜி.யார்.பாட்டு ,இது கமல் பாட்டு ,இது விமல் பாட்டு என்று சொல்வது எவ்வளவு அபத்தம் .சமீப காலமாக இந்த நிலை கொஞ்சம் மாறி வருகிறது .தற்போது ஒரு பாடல் வெற்றி பெறும்போது  பாடகர்கள் ,இசையமைப்பாளர்கள் ,பாடலாசிரியர்கள் குறித்து சிறிதேனும் தெரிந்து கொள்கிறோம் .அதே போல இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிபெறும் போது  கதாநாயகன் தாண்டியும் மற்ற காரணங்கள் விவாதிக்கப்படுகின்றன . தங்களைத்  துதி பாட விரும்புபவர்களையும்  , துதிபாடிகளையும் கடந்த   இந்த ஆரோக்கியமான நிலை தொடர வேண்டும் .
 
தமிழ்ச் சூழலில் சின்னத்திரை என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி சினிமாவையும் ,சினிமாக்காரர்களையும்  பெரிதும் சார்ந்துள்ளது . திரைப்படங்கள்,பாடல்கள் , நகைச்சுவைக் காட்சிகள் என்று சினிமாவை நம்பியே  தமிழ்த்  தொலைக்காட்சிகள்  உலா வருகின்றன . சினிமா தொடர்பான  நிகழ்ச்சியை ஒளிபரப்பாத தமிழ்த் தொலைக்காட்சியே இல்லை எனலாம் . மற்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளுக்கே தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது .
அதுவும் பண்டிகை காலங்களில் சொல்லவே வேண்டாம் .காலை முதல் மாலை வரை சினிமா நடிக நடிகர்களின் பேட்டிகள் இடம்பெறும் ;சினிமாவில் சாதித்தவர்கள் பேட்டிகள் இடம் பெறாது .விதவிதமான விளம்பரங்கள் மூலம்  மக்களைப்  பொருள் சார்ந்த வாழ்க்கை வாழப் பழக்கிய பெரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் நம் தொலைக்காட்சிக்காரர்கள் .
 
தொலைக்காட்சி ,கணிப்பொறி , செல்போன் ,இணையம் போன்றவை சினிமா சார்ந்த விசயங்களுக்காகவே மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன . அதிலும் தற்போது இலவசமாக கொடுக்கப்பட்ட மடிக்கணினி பாடல்கள் கேட்கவும் ,படம் பார்க்கவும் மட்டுமே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன .
இருந்தாலும் கணினி மீதிருந்த பெரும் மதிப்பை தவிடு பொடியாக்கிய பெருமை ,இலவச மடிக்கணினிகளையே சேரும் .நம் வரிப்பணத்தை நாமே நேரடியாக நம் வீட்டில்வைத்து பயன்படுத்துவதில் ஒரு ஆனந்தம் இருக்கவே செய்கிறது . முன்பு,  மிதிவண்டி , தொலைக்காட்சி , தற்போது ஆடு ,மாடு,
மின்விசிறி ,மிக்சி ,கிரைன்டர் மற்றும் மடிக்கணினி . அதிகாரத்தை எல்லோரும் அடைய வேண்டும் என்று விரும்புவது போல, பொருள்களை அடையும் உரிமையும் எல்லோருக்கும் உண்டு . அதற்கு நம் வரிப்பணம் உதவுகிறது அவ்வளவுதான் .
 
சினிமாவின் தாக்கம் நம் சூழலில் மிகவும் அதிகம் . சினிமாவின் பிரதிபளிப்பு வேண்டுமானால் சமூகத்தில் இருக்கலாம் . ஆனால்,சமுகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்று சொல்லமுடியாது . சமுகத்தில் 70 சதவீத மக்கள் விவசாயத்தையும் ,விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்கின்றனர் .சமுகத்தின் பிரதிபளிப்பு தான் சினிமா என்றால் திரைக்கு வரும் படங்களில் 70 சதவீதம் விவசாயிகளின் வாழ்க்கை பற்றியும்  , விவசாயத்தைச்  சார்ந்து இருப்பவர்களின் வாழ்க்கை பற்றியும் மட்டுமே இருக்க வேண்டும் .ஆனால் ,நிலைமை அப்படி இல்லை . திரைப்படங்களில் காட்டப்படும் காட்சிகளின் வாயிலாக சமுகத்தில் நிறைய பழக்கங்கள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகின்றன . பெண்கள் குறித்த தவறான புரிதல்களை சமூகத்தில் பரவவிடும் சாதனையை சினிமா தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது.நல்ல வாசிப்பு உள்ளவர்கள் இயக்குநர்களாக மாறும் போது இந்த நிலை மாறக்கூடும் .இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காதல் ,காதல் என்று ரக ரகமான காதல் காட்சிகளையும் ,அபத்தமான நகைச்சுவைக் காட்சிகளையும் ,விதவிதமான பாடல் காட்சிகளையும் திரைப்படங்களில் அங்கங்கே சொருகி கதையைப் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல், திரைக்கதையையும் சொதப்பி நம் உயிரை வாங்குவார்களோ ? ஆங்கிலப் படங்கள் பெரும் வெற்றி பெறுவதற்கு அவர்களின் அசத்தலான திரைக்கதை தான் காரணமாக இருக்கிறது .அங்கே ,இரண்டு ,மூன்று பேர் சேர்ந்து ஒரு படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார்கள் .எப்படிப்பார்த்தாலும் எல்லோருக்குமான பெரிய பொழுதுபோக்கு சினிமா தான் இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.இனி மாற்றம் நிகழவேண்டியது சினிமா முன்னிறுத்தும் குறியீடுகளில் தான் .


இரண்டாவது பொழுதுபோக்கு கிரிக்கெட் என்னும் மட்டைப்பந்தாட்டம் தான் .இந்தியா மிகவும் மோசமாக விளையாடிய காலகட்டத்திலேயே வெறி கொண்டு கிரிக்கெட் பார்த்தவர்கள் நாம் .தோனியின் காலமான தற்போது கேட்கவா வேண்டும் . தோனியின் வரவு, முன்பு கிரிக்கெட் வெறியர்களாக இருந்து இந்திய அணியின் மோசமான ஆட்டத்தால் கிரிக்கெட் பார்ப்பதை விட்டவர்களை மீண்டும் கிரிக்கெட் வெறியர்களாக மாற்றியது . 22 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை கோடிக்கணக்கான முட்டாள்கள் பார்க்கிறார்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டாலும் இந்தியா போன்ற நாடுகளில் நாளுக்கு நாள் கிரிக்கெட் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே தான் போகிறது .  இன்றைய இயந்திர வாழ்க்கை நம்மை பெரும் நெருக்கடியை நோக்கி தினமும் தள்ளுகிறது . இதிலிருந்து விடுபட ஏதாவது ஒரு வடிகால் தேவைப்படுகிறது .பெரும்பாலானோருக்கு அந்த வடிகாலாக கிரிக்கெட் இருக்கிறது .ஒரு சிலருக்கு அரசியல் சார்ந்த விசயங்கள் வடிகாலாக இருக்கிறது .

கிரிக்கெட் ஒரு தியானம் போல நம் தினசரி நெருக்கடிகளை மறக்கச் செய்து ஒரு ஆனந்தத்தை நம்முள் பரவச்செய்கிறது . பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆனந்தத்திற்கு அடிமை . அதுவும் கிரிக்கெட் நடைபெறும் நேரங்களில் அணியின் நிலவரத்தை (ஸ்கோர் )தெரிந்துகொள்ள நம் ஆட்கள் படும்பாடு இருக்கிறதே அட அட .. . தொலைக்காட்சி ,தொலைக்காட்சி விற்பனையகங்கள் , செல்போன் , பண்பலை ,இணையம் ,தேநீர் விடுதி இவையனைத்தும் ஸ்கோரை தெரிந்து கொள்ள மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது போல கொண்டாடுவார்கள் . கிரிக்கெட் நடைபெறும் நேரங்களில் நம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாக இருக்கும் .

தொலைக்காட்சிகளில்  நாடகங்கள் ஒளிபரப்பாகும் நேரங்களில் கிரிக்கெட்டும் ஒளிபரப்பப்பட்டால் வீட்டிலுள்ள ஆண்கள் படும்பாடு இருக்கிறதே ,அதனால் தான் முடிந்தவரை கிரிக்கெட் பார்க்க வீட்டைத் தவிர மற்ற இடங்களையே ஆண்கள் பெரிதும் தேர்வு செய்கிறார்கள் .விளையாட்டு தொலைக்காட்சிகளில் மீண்டும் ஒளிபரப்பப்படும் பழைய போட்டிகளையும் வெறிகொண்டு பார்க்கும் ஆட்கள் நிறையவே நம்மிடம் இருக்கிறார்கள். எங்கள் பகுதியில் ஒரு மருத்துவர் இருக்கிறார்,நாம் எப்போது போனாலும்  அவரது அறையில் இருக்கும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் மட்டுமே எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சத்தமில்லாமல் . செய்தித்தாளை எடுத்தவுடன் பெரும்பாலான ஆண்கள் படிப்பது விளையாட்டு பகுதியில் இருக்கும் கிரிக்கெட் செய்திகளைத் தான் . அதுவும் தேநீர் விடுதிகளில் காலை நேரங்களில் கிரிக்கெட்  செய்தி உள்ள செய்திதாளுக்கு பெரும் போட்டி இருக்கும் ,காத்திருந்துதான் படிக்க முடியும் . மற்ற நாட்களில்  என்னப்பா கிரிக்கெட் செய்தியே போடல என்று அரசியலையும் ,சினிமாவையும் ஒரு மேய் மேய்ந்துவிட்டு இடத்தை காலி செய்வார்கள் .

கிரிக்கெட் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல , அது ஒற்றுமையின் அடையாளம் . நாடு ,ஜாதி , மதம் , மொழி , கட்சி , பணக்காரன் ,ஏழை என்ற வேறுபாடுகள் களைந்து எல்லோரும் ஒன்றுபடுவது இந்த விசயத்தில் தான் . அதனால் கிரிக்கெட்டை ஒதுக்க வேண்டிய அவசியமில்லை . எத்தனையோ நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்பவர்களுக்கான இளைப்பாறுதலும் , உற்சாகமும் ,மகிழ்ச்சியும் தருவது கிரிக்கெட் தான் . அதனால் கிரிக்கெட்டைக் கொண்டாடுவதில் தவறில்லை . வாழ்க்கையே ஒரு கொண்டாட்டம் தானே .
 
 சினிமாக்காரர்களும் கிரிக்கெட் வீரர்களும் மட்டுமே அதிக விளம்பரங்களில் தோன்றுகின்றனர் .கோடிக்கணக்கான மக்களை தங்கள் பிடியில் வைத்திருக்கும் சினிமாவும் கிரிக்கெட்டும் வணிகம் சார்ந்தவையாக இருப்பதில் எந்தவித  ஆச்சரியமும் இல்லை .யாருக்காகவும் கொடி பிடிக்காமல் ,துதி பாடாமல் ,தோரணம் கட்டாமல் நல்ல சினிமாவை தவறு தவறு  ,நல்ல சினிமா ,கெட்ட சினிமா என்று எதுவும் இல்லை , நமக்குப்பிடித்த சினிமாவையும்  , நேரம் கிடைக்கையில் பார்க்கும் கிரிக்கெட்டையும் பார்த்து ரசித்து பேரானந்தம் கொள்வோமாக !

மேலும் படிக்க :

தோனி வாங்கிய சச்சின் உலககோப்பை !

ஆஸ்திரேலியாவின் 16 ஆண்டு கால ஆதிக்கத்தை நொறுக்கியது இந்தியா !

....................................................................................................................................................................

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல்...

இரண்டிலும் அதிக நேரம் செலவழிப்பதில்லை...

Anonymous said...

எல்லா கோணங்களிலும் அலசி இருக்கிறீர்கள்..குறை மட்டுமே கூறாமல் நிறைகளையும் எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்...நன்றி..

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms