இந்திய கிரிக்கெட் அணி எப்போதுமே டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது . டெஸ்ட் போட்டிகளுக்கென்று தனிப்பட்ட திறமையாளர்கள் தொடந்து உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். 90 களுக்குப் பிறகு டிராவிட் , கும்ளே , லக்ஷ்மன் , ஹர்பஜன் , புஜாரா , அஸ்வின் என டெஸ்ட் போட்டிகளுக்கான தனித்த திறமையாளர்கள் தொடர்ந்து உருவாகிறார்கள். இவர்கள் , மற்ற வடிவ கிரிக்கெட் போட்டிகளில் பங்கெடுத்தாலும் டெஸ்ட் போட்டிகளாலேயே நினைவுகூறப்படுகிறார்கள். காரணம் , இவர்கள் , டெஸ்ட் போட்டிகளில் நீடித்த திறமையை வெளிபடுத்துவது தான். இவர்களுக்கு மற்ற வீரர்கள் ஓரளவிற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலே போதும் போட்டிகளில் எளிதாக வென்று விடலாம்.
ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு இங்கிலாந்து தொடர் தான் கடினமானது என நினைத்துக் கொண்டிருந்தோம் . இங்கிலாந்து தொடர் கடினமாக இருந்தாலும் தொடரை இந்திய அணி முழுமையாக கைபற்றியது. ஆஸ்திரேலிய தொடரின் ஆரம்பமே இந்திய அணிக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே நூத்திச் சொச்ச ரன்களுக்கு ஆட்டமிழந்து முதல் டெஸ்ட்ல் மோசமான தோல்வியைச் சந்தித்தது. சமீபத்திய தொடர்களில் முதன் முறையாக பேட்ஸ்மென்கள் , இரண்டு இன்னிங்ஸ்களிலும் சரியாக ஆடவில்லை. அதனாலேயே மோசமான தோல்வியைச் சந்தித்தது.
நம்பர் 1 அணியாக இருக்கும் இந்திய அணிக்கு இத்தொடர் கௌரவப் பிரச்சனையாக மாறியது. எப்படியாவது இந்த தொடரை வெனறால் மட்டுமே இதுவரை பெற்ற வெற்றிகளுக்கு பெருமை என்ற நிலை உருவாகியது. ஆஸ்திரேலியாவும் இந்த எதிர்பாராத வெற்றியின் மூலம் பெருமகிழ்ச்சி அடைந்தது. இந்தியாவில் தொடரை வெல்ல நல்ல வாய்ப்பாக இந்த தொடரை மாற்ற வேண்டும் என நினைத்தது. இதனால் இந்த தொடர் இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக மாறியது.
பொதுவாகவே ஒரு டெஸ்ட் தொடரில் 0-1 என பின்தங்கிய நிலையில் அடுத்த டெஸ்டில் விளையாடுவது சவாலானது. மனஉறுதிடன் விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். முதல் இன்னிங்ஸ்ல் நூறு ரன்களுக்கும் மேலாக பின்தங்கியிருந்து டெஸ்ட் போட்டியை வெல்வது எப்போதும் நிகழாது. இந்த தொடரின் முக்கிய திருப்புமுனை இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ்ல் நிகழ்ந்தது. புஜாரா - ரகானே இணைந்து சேர்த்த ரன்கள் முக்கியமானதாக மாறியது. 188 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதற்கு இந்திய அணியின் மனஉறுதியே காரணம். இரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையடைந்தது.
இந்நிலையில் தொடங்கிய மூன்றாவது டெஸ்டிலும் திருப்பங்கள் நிகழ்ந்தன. முதல் இன்னிங்ஸ்ல் ஸ்மித் , மேக்ஸ்வெல் சதங்களால் 450 ரன்களுக்கு மேல் எடுத்தது. மேக்ஸ்வெல் அதிக பந்துகளுக்கு தாக்குப்பிடித்த முதல் போட்டியாக இது அமைந்தது. அடுத்து ஆடிய இந்திய அணி புஜாரா -சகா இணைந்து சேர்த்த ரன்களின் உதவியுடன் 603 ரன்கள் எடுத்தது. புஜாரா இரட்டை சதமடித்தார். அடுத்து 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 63 /4 என தத்தளித்தது. ஷான் மார்ஷும் , கேன்ட்ஸ்கோம்ப் ம் ஆஸ்திரேலிய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினர். மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மூன்று போட்டிகள் முடிவிலும் தொடர் 1-1 என்றே தொடர்ந்தது.
சமீப காலங்களில் ஒரு டெஸ்ட் தொடர் இந்த அளவிற்கு கவனம் பெற்றது இந்த தொடரில் தான்.
ஒவ்வொரு நாளும் , ஒவ்வொரு செசனும் நீயா ? நானா ? என்றே தொடர்ந்தது. விராட் கோலியைச் சுற்றி சரச்சைகளும் தொடர்ந்தன. காயம் காரணமாக கோலி விலகிய நிலையில் ரகானே தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. தொடரின் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய நான்காவது டெஸ்டில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தது. இடது கை சைனா மேன் பந்துவீச்சாளராக களமிறங்கிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்கள் கைப்பற்றி ஆஸ்திரேலிய அணியின் ரன்குவிப்பைக் கட்டுப்படுத்தினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஜடேஜாவின் கடைசி நேர அதிரடியால் 30 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது. குறிப்பாக ஸிமிதை புவனேஸ்வர் குமார் போல்டாக்கியது திருப்புமுனையானது. ஸிமித் மட்டும் போல்டாகவில்லை. அந்த இடத்திலிருந்து ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய அணியே போல்டானது போல 137 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-1 என கைபற்றியது.
கடந்த தொடர்களில் பெருமளவு ரன்களைக் குவித்த கோலியின் பங்களிப்பு இல்லாமலேயே இந்த தொடரை இந்திய அணி வென்றிருப்பது தான் சாதனை. அதே நேரத்தில் ரன் குவிப்பிற்கு ஸிமிதை மட்டுமே ஆஸ்திரேலிய அணி நம்பியிருப்பதும் தெளிவாக தெரிந்தது. இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகளுக்கு காரணம் , வீரர்களின் கூட்டு முயற்சி தான். சுதந்திரமாக ஒருகிணைந்து விளையாடி வருவதன் மூலமே வீரர்களின் தனிப்பட்ட திறன்கள் வெளிப்படுகின்றன. ஒருவர் சரியாக விளையாடா விட்டாலும் மற்றொருவர் அதை சரிசெய்து அணியை சமநிலைக்கு கொண்டு வந்து விடுகிறார். அதனாலேயே நான்காவது டெஸ்ட்டில் அணித்தலைவராக ரகானேவால் சிறப்பாக செயல்பட முடிந்தது.
இந்த தொடரில் ராகுல் , புஜாரா , ஜடேஜா , உமேஷ் யாதவ் ஆகியோர் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டனர். அஸ்வின் , விஜய் , ரகானே , சகா ஆகியோர் அவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்டனர். அதிலும் ஜடேஜாவிடம் நல்ல முதிர்ச்சி தெரிந்தது. இந்த தொடருக்கு முன்பு வரை பேட்டிங்கில் அவ்வளவாக பங்களிப்பு செய்யாத ஜடேஜா இந்த தொடரில் முக்கியமான கட்டங்களில் சிறப்பான பங்களிப்பைச் செய்தார். அதுவுமில்லாமல் இந்த தொடரில் அதிக விக்கெட்களை கைபற்றியதும் அவர் தான். ராகுல், தொடக்க வீரராக தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடினார். புஜாரா, இரண்டு டெஸ்களில் பல பேர் வேலைகளை ஒற்றை ஆளாகச் செய்தார். இந்த தொடரில் வென்றதற்கு புஜாராவின் நேர்த்தியான ஆட்டம் முக்கிய காரணம்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு முன்பை விட சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. இந்த தொடர் முழுவதுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் உமேஷ் யாதவ் ன் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். இந்த தொடரில் உமேஷ் யாதவ் ன் பங்களிப்பும் முக்கியமானது. விக்கெட் கீப்பர் சகாவும் முக்கியமான கட்டங்களில் சிறப்பாக ஆடினார்.
மானப்பிரச்சனையாக மாறிப்போன இந்த தொடரில் வென்றதன் மூலம் உலகின் நம்பர் 1 அணி என்ற கௌரவத்தை தக்கவைத்துக் கொண்டது. கடந்த தொடர் வெற்றிகளை விட இந்த தொடர் வெற்றியே சவாலானது.
இந்த மாதிரியான தொடர்களே டெஸ்ட் போட்டிகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் !
0 comments:
Post a Comment