Thursday, March 31, 2011

தொட்டுவிடும் தூரத்தில் உலகக் கோப்பை !



"தெண்டுல்கரை சதம் அடிக்க விட மாட்டோம் , யுவராஜை விரைவாக ஆட்டமிழக்கச் செய்வோம் " என்றெல்லாம் சபதம் விட்ட அப்ரிடி இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம் என்று சொல்ல மறந்து விட்டார் .  தெண்டுல்கரை சதம் அடிக்க விடவில்லை , யுவராஜையும் ஒரே பந்தில் ஆட்டம் இழக்கச் செய்து விட்டனர் , ஆனால் , இந்தியா வெற்றி பெற்று விட்டது . கடந்த போட்டி முடிந்த பிறகு பாண்டிங் ," இதற்கு முன்பு இந்தியா இப்படி இணைந்து விளையாடி நான் பார்த்ததில்லை " என்று குறிப்பிட்டார் . இந்த தொடரில் இந்தியா பெற்ற அனைத்து வெற்றியும் எந்தத்  தனி வீரரையும் சார்ந்து இல்லை , எல்லா வெற்றியும் அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி . பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த வெற்றியும் அப்படிப்பட்டதே .

இந்த உலககொப்பைத் தொடரில் பங்களாதேஷ் உடனான போட்டியைத் தவிர இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளும் பரபரப்பான போட்டிகளாகவே இருந்தன .  நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து எதிரான போட்டிகள் கூட சவாலானதாகவே இருந்தன .ஒவ்வொரு போட்டியிலும் இந்தியாவின் பலம் அதிகரித்துக்கொண்டே வந்தது . அதனால் தான் , 260 ரன்கள் மட்டுமே அடித்திருந்தும்  பாகிஸ்தானை திறமையாக வெற்றிகொள்ள முடிந்தது .

கடந்த போட்டிக்கும் , இந்த போட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு . அது என்னவென்றால் , கடந்த போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா இதே 260 ரன்களைத் தான் எடுத்தது . அதில் ஆஸ்திரேலியா நம்முடன் தோற்று விட்டது .ஆனால்,இந்தப் போட்டியில் நாம் அதே 260 ரன்களை வைத்து பாகிஸ்தானை வென்று விட்டோம் . அது தான் இந்தியாவின் பலம் .

சேவாகின் சரவெடியுடன் போட்டி தொடங்கியது . நன்றாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடி எல்லோரிடமும் இருந்தது . அதனால் தான் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர் . சேவாக் ஆட்டமிழந்த பிறகு போட்டி , பாகிஸ்தான் வசமே இருந்தது . ஒரு அற்புதமான பந்தில் யுவராஜ் ஆட்டமிழந்தார் . 30 ஓவரிலிருந்து 40 ஓவர் வரை இந்தியா 30 ரன்களை மட்டுமே எடுத்தது . இந்த போட்டியிலும் ஆபத்பாந்தவனாக வந்தவர் ரெய்னா தான் . ரெய்னாவின் பொறுப்பான ஆட்டம் தான் இந்தியா 260 ரன்கள் எடுக்க காரணம் .

பந்துவீச்சில் இந்தியா அசத்தி விட்டது . மூன்று வேகப் பந்து வீச்சாளர்களை களம் இறக்கிய தோனியின் அணுகுமுறை சிறந்த வெற்றியைக் கொடுத்தது .முதல் இரண்டு பேர் வேகப் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். பின்பு , அடுத்தடுத்து இரண்டு பேரை ஆட்டமிழக்கச் செய்தார் யுவராஜ் . உமர் அக்மல் எல்லோருக்கும் பயத்தை உருவாக்கினார் .அவர் மட்டும் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் . தனது சிறப்பான பந்து வீச்சால் அவரை ஆட்டம் இழக்கச் செய்தார் ஹர்பஜன் . பிறகு அப்ரிடியையும் வீழ்த்தினார் . மிஸ்பா கடைசி கட்டத்தில் கொஞ்சம் போராடினார் . மொத்தத்தில் இந்தியாவின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது .  நீண்ட நாட்களுக்கு அப்புறம் 5 பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 ஓவர்களையும் வீசியுள்ளனர் . பந்து வீசிய அனைவருக்கும் ஆளுக்கு 2 விக்கெட்கள்  கிடைத்தன . இது அபூர்வமாக நிகழக்கூடியது .  

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கம் ( 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி ) தொடர்கிறது . பாகிஸ்தான் உடனான நட்பை புதுப்பிக்கவும் இந்த போட்டி உதவியது . விளையாட்டின் சிறப்பே இது தான் .இன்னும் ஒரே ஒரு வெற்றியை மட்டும் பெற்றுவிட்டால் போதும் 1983 மற்றும் 2007 ன் நினைவுகள் பல்வேறு சிறப்புகளுடன் மீண்டும் கிடைக்கும் . 

தொட்டுவிடும் தூரத்தில் உலகக் கோப்பை !

மேலும் படிக்க :


முகப்பு பக்கம்
.......................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms