கலை என்ன செய்யும் ?
இப்படியான திரைப்படத்தை எடுக்கும். நமக்கு மாற்றுப் பார்வைகளை வழங்கும். மனங்களை விசாலமாக்கும். அரசதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்தும். கற்பனைக்கு சிறகுகள் கொடுத்து பறக்கவிடும்.
சிறுகதை, நாவலில் மட்டுமல்ல திரைப்படத்திலும் ஜாலங்கள் செய்ய முடியும் என இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் உணர்த்தியிருக்கிறார். இவரின் மற்ற திரைப்படங்களையும் காண வேண்டும்.
டொவினோ தாமஸ் தனது உடல் மொழியில் பழைய சாயல் இல்லாமல் தனித்துத் தெரிய நிறைய உழைத்திருக்கிறார். எந்த இடத்திலும் இந்த உடல்மொழி மாறவேயில்லை. தன்னால் இப்படியான திரைப்படங்களிலும், இப்படியான கதாப்பாத்திரத்திலும் நடிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிமிஷா சாஜயன் கதாப்பாத்திரம் கொஞ்சம் நாயகித்தன்மையுடன் இருந்தாலும் ரசிக்க முடிகிறது. எப்போதும் போல ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரையிலுமே நிமிஷாவிற்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு அவர் நியாயம் செய்திருக்கிறார். எந்தக் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறார்.இதுவே இவரது தனித்தன்மை.
டொவினோ, நிமிஷா இருவரின் கதாப்பாத்திரங்களும் அடையாளமற்றவர்களாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. இவர்களைக் காணும் போது நாமும் அடையாளமற்றவர்களாக இருந்தால் எப்படி இருக்கும் என்றே நினைக்கத் தோன்றுகிறது.
அழகியல் மட்டும் கலையாகாது. அழகியலுடன் அரசியலும் சேரும் போதுதான் கலை முழுமையடைகிறது. அந்த வகையில் இந்தத் திரைப்படம், முழுமையான கலைப்படைப்பாக மாறிவிடுகிறது. இதற்கு ஒளிப்பதிவும் இசையும் துணை நிற்கின்றன. பல இடங்களில் வசனங்கள் சிறப்பாக இருக்கின்றன. போர் எதிர்ப்பு, சுற்றுச்சூழல், இயற்கை, அதிகார அரசியல், எளிய மனிதர்களின் குரல்கள் , புத்தகங்கள் , இசை, சம கால பிரச்சனைகள் எனப் பலவற்றை பேசியிருக்கும் இத்திரைப்படம் டொவினோவின் நடிப்பையும் மீறி இயக்குநரின் திரைப்படமாகவே மிளிர்கிறது.
இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉.
மசாலா திரைப்பட பிரியர்களுக்கு இத்திரைப்படம் பிடிக்காது. நம்மைச் சுற்றி என்ன நடந்தாலும் அதை கலையின் மூலம் எதிர்கொள்ளலாம் என கலை மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் , மலையாளத் திரைப்பட பிரியர்களுக்கும் இத்திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.
மேலும் படிக்க:
No comments:
Post a Comment