Pages

Sunday, September 1, 2024

மார்க் ஆண்டனி 🔥


திரைப்படம் ஆரம்பம் முதல் முடிவு வரை படுவேகமாக போவதால் நிறை குறை பற்றி யோசிக்கக் கூட நமக்கு நேரமில்லை. இடைவேளைக்கு கொஞ்ச நேரம் முன்பு" என்னங்க இன்னும் இடைவேளை விடலை. படம் பெரிய படமா?" என்று இணையர் கேட்டார். "படம் பெரியது அல்ல.‌ அந்த அளவிற்கு வேகமாக காட்சிகள் நகர்வதால் நமக்கு அப்படி தெரிகிறது " என்று பதிலளிக்க வேண்டியிருந்தது. இடைவேளையின் போது எங்களுக்கு முன்வரிசையில் இருந்த இளைஞர் தன் நண்பரிடம் " என்ன மாப்ள இப்பவே முழுப் படம் பார்த்த மாதிரி இருக்குது " என்றார். "எல்லோரும் நம்மைப் போலவேதான் உணர்ந்திருப்பார்கள் போல" என்று நினைத்துக் கொண்டே பாப்கார்ன் வாங்க நடக்க ஆரம்பித்தோம்.


ஒரு சிக்கலான கதையை சிக்கலில்லாமல் சொல்லி இருக்கிறார்கள். தமிழில் எப்படி இது சாத்தியம் என்று தேடும் போது தான் தெரிந்தது, திரைக்கதையை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் சேர்த்து அர்ஜுன் மற்றும் சவரிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியிருக்கின்றனர் என்று. எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும், தேர்ந்த நடிகர்கள் நடித்திருந்தாலும் திரைக்கதை சிறப்பாக அமையாவிட்டால் நல்ல அனுபவம் கிடைக்காது. உலகத் திரைப்படங்களிலும் இந்திய அளவில் கேரளத் திரைப்படங்களிலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர் சேர்ந்து எழுதும் போக்கு இருக்கிறது.‌இப்போது தமிழிலும் தொடங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழ்த் திரையுலகின் இயக்குநர்களே நீங்கள் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் திரைக்கதையை இரண்டு மூன்று பேர்களோடு சேர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் நாங்கள் தப்பிக்க முடியும். 


திரைப்படம் முழுக்கவே டைமிங் வசனங்கள் அனல் பறக்கின்றன. நிறைய விசயங்களையும், நிறைய திரைப்படங்களையும் Troll செய்திருக்கிறார்கள். அதனால் திரைப்படம் முழுக்கவே கலகலப்பு நிறைந்திருக்கிறது. அடுத்ததாக நம்மை படத்துடன் ஒன்ற வைப்பது பின்னணி இசை. யாருடா இது ? இவ்வளவு சிறப்பா பின்னணி இசையமைத்திருப்பது என்று தேடிப் பாரத்தால் ஜி.வி.பிரகாஷ்குமார். நடிப்பதை விட இவர் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தால் நாம் வெற்று இரைச்சலிலிருந்து தப்பிக்க முடியும். பின்னணி இசை படத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்ல உதவுகிறது. தேர்ந்தெடுத்த பழைய மூன்று பாடல்களும் ( பஞ்சு மிட்டாய் சேலை கட்டி..., அடியே மனம் நில்லுனா நிக்காதடி..., வருது வருது விலகு விலகு ஒரு வேங்கை வெளியே வருது...) நன்றாக பொருந்துகின்றன. மூன்று பாடல்களிலும் பெண் குரல், எஸ்.ஜானகி❤️. கடந்த ஒரு வாரமாக இந்த மூன்று பாடல்களும் தமிழகமெங்கும் தேடியெடுத்து கேட்கப்படுகின்றன. கடைசியாக தமிழில் சிறந்த பின்னணி இசையாக நினைவில் இருப்பது 'அசுரன்' . அந்தத் திரைப்படத்திற்கும் இசை ஜி.வி.பி.தான்.


ஜெயிலர் திரைப்படம் போல இந்தத் திரைப்படத்திலும் வன்முறை இருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் உறுத்தவில்லை. ஜெயிலர் திரைப்படமெல்லாம் குழந்தைகளுடன் பார்க்கத் தகுதியே இல்லாதது. குரூர மனம் படைத்தவர்களால்தான் இவ்வாறு வன்முறையை(ஜெயிலர்) திரையில் காண்பிக்க முடியும். மாவீரன், ஜெயிலர், மார்க் ஆண்டனி என மூன்று படங்களை தொடர்ந்து திரையரங்கில் பார்த்தோம். இதில் ஜெயிலர் தான் குப்பை(வன்முறை அதிகம், திரைக்கதை சொதப்பல்,லாஜிக் மீறல்கள் அதிகம்). வன்முறையை நியாப்படுத்துவதை தமிழ் சினிமா கைவிட வேண்டும். வன்முறையைத் திரையில் காண்பிக்கும் போது பொறுப்புணர்வு வேண்டும். 


'ஆண்டனி'யாக இருந்தாலும் அவரின் உடலிலும் கருப்பணசாமி இறங்கும் அதாம்லே தமிழ்நாடு. நாட்டார் தெய்வங்கள் பேதங்களுக்கு அப்பாற்பட்டவை. பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் காவல் தெய்வங்களாகவே இருக்கின்றன. 80's ,90's kids களை மட்டுமல்ல 2k kids களையும் திராவிட பேரழகியான சில்க் ஸ்மிதா ஈர்த்திருக்கிறார் என்பதை திரையரங்கில் காண முடிந்தது.


ஆண்டனி விஷாலின் தோற்றம் துல்கர் சல்மானையே நினைவுபடுத்தியது. ஒரு காட்சியில் கூட விஷாலாக தோன்றவில்லை. அப்புறம் எஸ்.ஜே.சூரியா ரசிகர்களின் Pulse அறிந்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் லாஜிக்,கருத்து, கத்திரிக்காய் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இது ஒரு Fantasy திரைப்படம் அவ்வளவு தான். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉

மேலும் படிக்க :

கர்ணன் - போராடடா ஒரு வாள் ஏந்தடா !

நட்சத்திரம் நகர்கிறது - மாற்றத்தின் முதல் அடி !

ஜெய்பீம் -அறத்தின் குரல் !


No comments:

Post a Comment