Pages

Sunday, September 1, 2024

போர்களை நிறுத்துங்கள் !


19ம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை போரின் வதைகளையும், வாதைகளையும், வலிகளையும் அதிகமாக அனுபவித்த இனம் யூத இனம். இன்று அதே யூத இனம் அடுத்த இனத்தை வதைக்கிறது. ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. யாராக இருந்தாலும் அதிகாரம் கைகளுக்கு வந்தவுடன் ஆதிக்க உணர்வு தோளில் ஏறி அமர்ந்து கொள்கிறது. இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்க வேண்டுமானால் நாம் பாலஸ்தீன மக்களின் பக்கமே நிற்க வேண்டும். 


எந்தவிதமான ஆதிக்கமாக இருந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது பெண்களும் , குழந்தைகளும் தான். நாம் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் இன்றைய சூழலிலும் உலகின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போர்கள் நடந்து வருவது மனித இனத்திற்கே அவமானம் . அன்றைய போர்களில் போரிற்கு தொடர்பில்லாத எளிய மக்கள் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை. ஆனால் இன்றைய போர்களில் எளிய மக்களே அதிகமும் கொல்லப்படுகின்றனர். 


எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் எந்த நேரத்தில் எங்கே குண்டு விழும் என்று தெரியாத அந்தப் போர்ச் சூழலை நினைக்கும் போதே அச்சமாகவும், பதைபதைப்பாகவும் இருக்கிறது. இரு தரப்பிலும் அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐநா சபைக்கென்று கொஞ்சமாவது அதிகாரமும் மரியாதையும் இருந்தன. தற்போது எல்லாம் நீர்த்து போய் முதலாளித்துவத்தின் கண்துடைப்பு அமைப்பாக மாறிவிட்டது. அதே போல முன்பு உலகில் எங்கு போர் தொடங்கினாலும் முதல் குரலாக ஒலிப்பது அமைதி உடன்படிக்கைக்கு இரு தரப்பும் முன் வர வேண்டும் என்பது தான்‌. அதற்கு சம்மதிக்க மறுத்து போரைத் தொடரும் நாடுகள் மீது உடனடியாக பொருளாதார தடை விதிக்கப்படும். இப்போதெல்லாம் இப்படியான எந்தக் குரலும் ஒலிப்பதில்லை. அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்தும் யாருக்கும் எந்தக் கவலையும் இல்லை.


போர்க் குற்றம் புரியும் நாடுகளை வெளிப்படையாக ஆதரிக்கும் குரல்கள் மட்டுமே தற்போது கேட்கின்றன. மனித உயிர்களுக்கு எந்தவிதமான மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. இது தான் கூட்டுக்களவாணி முதலாளித்துவம். தற்போதைய சூழலில் உலகெங்கிலும் வலதுசாரிகளின் ஆதிக்கமே அதிகமாக இருக்கிறது . இது பூமிக்கும் மனித இனத்திற்கும் நல்லதல்ல. "எல்லோருக்கும் எல்லாம் " என்பதை எப்போதும் வலதுசாரிகள் ஏற்கமாட்டார்கள். வன்முறை யார் மீதும் எப்போது வேண்டுமானாலும் எந்த வடிவத்திலும், எந்தப் பெயரிலும் நிகழ்த்தப்படலாம் என்பதே கள நிலவரமாக உள்ளது. "அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி" என்கிறார் சாமுவேல் ஜான்சன். தேசபக்தி என்ற பெயரில் தான் நாடுகள் மற்ற நாட்டு மக்கள் மீது வன்முறையை ஏவி விடுகின்றன. எதற்கெடுத்தாலும் தேசபக்தியைத் தூக்கிப் பிடிப்பவர்களிடம் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட மனிதமே பெரியது.அனைத்திலும் மனிதமே முன்நிறுத்தப்பட வேண்டும். 


தற்போதைக்கு உடனடியாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரும் ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரும் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். ஆதிக்க உணர்வு தான் அனைத்திற்கும் காரணமாக இருக்கிறது. மனிதர்களுக்கு ஆதிக்க உணர்வு மட்டும் இல்லையென்றால் பூமியெங்கும் அமைதி மட்டுமே நிலவும். உலகெங்கும் போர்ச்சூழலிருக்கும் மக்கள் விடுவிக்கப்பட்டு அமைதியாக வாழ வழிவகை செய்யப்பட வேண்டும். பூமியில் மனிதர்கள் சமநிலையை உருவாக்கத் தவறினால் இயற்கை தனது பாணியில் சமநிலையை நிச்சயம் உருவாகும்

மேலும் படிக்க :

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

வடகிழக்கு மாநிலங்களை காப்போம் !


No comments:

Post a Comment