Monday, June 13, 2011

சென்னையில் மீண்டும் பறவைகளின் சங்கீதம் !

சென்னைக்கும் பறவைகளுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா ? சென்னை , கிராமங்களின் கூட்டமாக இருந்த காலத்தில் கேட்ட பறவைகளின் சங்கீதம் இப்போது மீண்டும் கேட்க ஆரம்பித்துவிட்டது . தினமும் இயந்திர ஒலிகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும் காதுகளுக்கு இந்த பறவைகளின் சங்கீதம் ஒரு ஆறுதல் . இயந்திர ஒலிகளை மட்டுமே விரும்பிக் கேட்கும் ஒரு சிலருக்கு இது எரிச்சலைக்கூட உருவாக்கலாம் . ஆனாலும் இது நம்  ஆரோக்கியத்தின் அடையாளம் .  

சென்னையில் மரம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் குயில் இருக்கிறது . காலை , மதியம் ,மாலை , இரவு என்ற பேதமில்லாமல் எல்லா நேரமும் கூவிக் கொண்டே இருக்கிறது . எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை குயிலின் சங்கீதம் . ஒரு சில இடங்களில் தனியாகவும் மற்ற இடங்களில் இயந்திர ஒலிகளுடன் இணைந்து தான் கேட்கிறது , குயிலின் சங்கீதம் . பிரித்து உணர்வது நம் திறமை . 

முன்பு காகங்களும் , கொஞ்சம் புறாக்களும் மட்டுமே பறந்த  சென்னை நகரத்தில் மைனாக்களும் ,  சிட்டுக்குருவிகளும் ( ஒலிகளை எழுப்பிக் கொண்டும் ) , தட்டாம் பூச்சிகளும் , பட்டாம்பூச்சிகளும் (ஒலிகளை எழுப்பாமலும் )  பறக்க ஆரம்பித்துவிட்டன . ஆனால் , எண்ணிக்கை மிகக் குறைவு . கடந்த சுதந்திர தினத்தின் போது சென்னை கோட்டையில் பச்சைக்கிளிகளைப் பார்க்க முடிந்தது . அதன் பிறகு இன்று வரை பச்சைக்கிளிகளைப் பார்க்க முடியவில்லை . 

பெரியார் ரோடு பேருந்து நிறுத்தத்திற்குப் பக்கத்தில் உள்ள பூங்காவில் மதிய நேரங்களில் மைனாக்களைப் பார்க்க முடியும் . சமீபத்தில் ஒருநாள் காலை 6 மணிக்கு மெரினா கடற்கரைக்குச்  சென்றபோது கடற்கரைப்பகுதி முழுவதும்  நூற்றுக்கணக்கான புறாக்கள் மண்ணைக் கிளறி தங்கள் உணவைத் தேடித் தின்றதைக் காண முடிந்தது . கடற்கரையை ஒட்டியிருந்த ஒரு மரத்திற்கு அடியில் பத்துக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் இருந்தன . போக்குவரத்து நெரிசல் குறைவான தெருக்களில் ஒன்றிரண்டு சிட்டுக்குருவிகளைக் காண முடியும் . முன்பு , எங்குமே இவற்றைக் காண முடியாது .

சிறிய செடிகள் , எவ்வளவு நெருக்கடியான இடத்திலும் முளைத்து விடுகின்றன     .செடிகளில் இருக்கும் பூவில் தேனை எடுக்க பட்டாம்பூச்சிகள் எங்கிருந்தாவது வந்து விடுகின்றன . பறவைகளைக் கூண்டில் அடைத்து வளர்ப்பதற்குப் பதில் ஒரு பழ மரத்தை வளர்த்தாலே போதும் பறவைகள் மரத்தைத் தேடி வந்துவிடும் .காகங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை . அவை , நம் சகோதரனாய் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன . இயற்கையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதை தான் . எதவும் தனக்காக மட்டுமே வாழாமல் எல்லோருக்காகவும் வாழ்ந்து எல்லோருக்கும் பலனைக் கொடுத்து , எல்லோரிடமிருந்தும் பலனைப் பெறுகின்றன . 

தினமும் பயணம் செய்தே ஆகவேண்டிய சூழ்நிலை ,  நகர வாழ்க்கையின் ஓர் அங்கம் . முடிந்தவரை பயணத்திற்கு தனிநபர் வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள் . பேருந்துக்காக நிற்கும் போதும் , பேருந்து மற்றும் ரயிலில் செல்லும் போதும் நம் அருகில் இருக்கும் கவலை தோய்ந்த முகங்களை மட்டும் பார்க்காமல் கொஞ்சம் வானத்தையும் பாருங்கள் . முதலில் மேகங்களை ரசியுங்கள் , பிறகு பறவைகள் பறப்பதை ரசியுங்கள் .  காலை மற்றும் மாலையில் சூரியனையும் , இரவில் நிலவையும் ரசிக்கலாமே !

வலுத்தது நிலைக்கும் - Survival of the fittest !

மேலும் படிக்க :

.......................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms