Saturday, May 26, 2012

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !




சிரிப்பு  வருது  சிரிப்பு  வருது
சிரிக்க  சிரிக்க   சிரிப்பு  வருது

சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன்
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது
சின்ன  மனுஷன்  பெரிய  மனுஷன்
செயலைப்  பார்த்து  சிரிப்பு  வருது...

மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
மேடை  ஏறிப்  பேசும்  போது  ஆறு  போலப்  பேச்சு
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு
கீழே  இறங்கிப்  போகும்  பொது  சொன்னதெல்லாம்  போச்சு
பணத்தை  எடுத்து  நீட்டு  கழுதை  பாடும்  பாட்டு
ஆசை  வார்த்தை  காட்டு  உனக்கும்  கூட  வோட்டு...

உள்ளே  பணத்தைப்  புட்டி  வச்சி  வள்ளல்  வேஷம்  போடு
உள்ளே  பணத்தைப்  புட்டி  வச்சி  வள்ளல்  வேஷம்  போடு
ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டம்  போட்டு  உத்தமன்  போல்  பேசு
ஒளிஞ்சி  மறைஞ்சி  ஆட்டம்  போட்டு  உத்தமன்  போல்  பேசு
நல்ல  கணக்கை  மாதி  கள்ளக்  கணக்கை  ஏத்தி
நல்ல  நேரம்  பாத்து  நண்பனையே  மாத்து...



1964 ஆம் ஆண்டு M.S.விசுவநாதன் -ராமமூர்த்தி இசையமைப்பில் வெளிவந்த  " ஆண்டவன் கட்டளை " என்னும் திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம் பெற்றுள்ளது . இந்தப்பாடலை எழுதியவர் கண்ணதாசன் . பாடியவர் சொல்லித் தெரியவேண்டியதில்லை , காலத்தைக் கடந்தும் எல்லோராலும் ரசிக்கப்படும் குரலுக்குச் சொந்தக்காரரான சந்திரபாபு .

இந்தப்பாடல் எளிமையாக , வித்தியாசமாக அதே சமயம் மிக அழகாக படமாக்கப்பட்டுள்ளது . சந்திரபாபுவின் உடல்மொழி மிகவும் ரசிக்கப்படும் வகையில் அமைந்துள்ளது . இந்தப்பாடலின் வரிகள் அரசியல்வாதிகளையும் ,பொய்க்கணக்கு காட்டி அரசை ஏமாற்றும் பணமுதலைகளையும் நேரடியாக சாடுகின்றன . பெரிய மனுசன் என்னும் போர்வையில் இருந்துகொண்டு மிகக் கீழ்த்தரமான் செயல்களைச் செய்பவர்களையும் கேலி செய்கிறது இந்தப்பாடல் .

ஒரு அரசியல்வாதி ஒரு ஆண்டு முழுக்க கொடுத்த பேட்டிகளை ஒரு முறை தொகுத்து படித்துப்பாருங்கள் , உங்களுக்கு அவ்வளவு சிரிப்பு வரும் . நம்மை எவ்வளவு எளிதாக ஏமாற்றி உள்ளனர் என்பதும் புரியும் .

ஈழத்தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்துவிட்டு , தனி ஈழம் சாத்தியமில்லை என்று சொல்லியவர் தற்போது தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன் என்று சொல்லும் போது சிரிப்பு வருது !

ஒரு நாளைக்கு 28 ரூபாய் மேல் சம்பாதிப்பவர்கள் ஏழை அல்ல என்று சொல்லும் மத்திய அரசை நினைத்துச்  சிரிப்பு வருது !

இடைத்தேர்தலுக்கு முன்பு வரை கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டாம் என்று சொல்லியவர் ,இடைத்தேர்தலுக்கு பின் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படும் ;தயாராகும் மின்சாரம் நிறைய வேண்டும் என்று சொல்லும்போது சிரிப்பு வருது !

நாட்டில் ,உலகில் ,பிரபஞ்சத்தில் எவ்வளவோ விசயங்கள் நடந்து இருக்கும் போது சம்பந்தமே இல்லாத விசயத்தை தலைப்பு செய்தியாக போடும் நாளிதழ்கள் மற்றும் வாரயிதழ்களைப் பார்க்கும் போது சிரிப்பு வருது !

தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்க்கும் போது அவ்வளவு சிரிப்பு வருது ! புதிதாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் அசத்தும் புதிய விளம்பரங்களான " சென்னைக்கு மிக அருகில் ...." என்று ஆரம்பிக்கும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. 1980 களில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் ஒரு காட்டுப்பகுதியை பார்த்து கவுண்டமணி பேசும் வசனம் " இங்க இப்படி ஒரு இடம் இருக்கா , எங்க ஆளுகளுக்குத் தெரிஞ்சா " சென்னைக்கு மிக அருகில் " னு பிளாட் போட்டு வித்துருவாய்ங்க " . 30 வருடங்களுக்குப் பிறகும் நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம் !

இதற்கு முன்பு வரை இந்திய ஜனாதிபதி பதவி ஒன்றுக்கும் உதவாத ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்று தான் நினைத்தேன் . இப்போது தான் தெரிகிறது 200 கோடி ரூபாய் வரை மக்கள் பணத்தில் ஊர் சுற்றும் உரிமை உள்ள பதவி என்று . இங்கு ஒரு விசயம் கவனிக்க வேண்டும் " 28 ரூபாய் சம்பாதிப்பவர் ஏழை அல்ல " அதே சமயம் எந்த அதிகாரமும் இல்லாத நாட்டின் முதல் குடிமகன்/ குடிமகள் 200 கோடி வரை செலவு செய்யலாம் . சிரிப்பு வருது !

டாஸ்மாக் வருமானத்தில் இலவசங்கள் கொடுக்கும் அரசுகளை நினைக்கும்போது  சிரிப்பு வருது ! இதில் புதிய வகை மதுவுக்கு செயல் விளக்கப் பயிற்சி வேறு கொடுக்கப்படுகிறதாம் .ஒசத்தியான சரக்கு விக்க எலைட் பார் வேறு வருதாம் .அப்படியே ஒவ்வொரு டாஸ்மாக் பக்கத்திலையும் ஒவ்வொரு  காவல் நிலையம் கொண்டு வந்தா பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் . மாதக் கடைசியில் காவலர்கள் வழக்கு பதிவு செய்ய சந்து சந்தாக நிக்க வேண்டிய நிலைமையும் வராது . 

இதையெல்லாம் நினைக்கும் போது என்னை நினைத்து எனக்கே சிரிப்பு வருது !உலகத்த விட்டுடுவோம் . நீங்க கடைசியா எப்ப வாய் விட்டு சிரிச்சீங்க ??? ( நான் "கலகலப்பு" படம் பார்க்கும் போது வாய் விட்டு கண்ணில் நீர் வரச் சிரித்தேன் )  வாய் விட்டு  சிரிக்கும் தருணங்கள் குறைந்து வருகின்றன . வாய் விட்டு  சிரிக்கும் தருணங்களை அதிகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்  . எளிமையான மனதைப் பெற்றால் மட்டுமே நம்மால் வாய் விட்டு சிரிக்க முடியும் .

சிரிப்பு வருது !
      
மேலும் படிக்க :


உண்மையான கொண்டாட்டம் !

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு !

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms