
மனித இனம் வளர வளர மதுவும் வளர்ந்துள்ளது .மதுவைத் தவிர்த்து மனித வரலாற்றை அறிய முடியாது . அது ,மனித இனத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது .நெடுங்காலமாக கொண்டாட்டத்தின் அடையாளமாக மட்டுமே மது இருந்து வந்துள்ளது . காலப்போக்கில் மதுவின் பயன்பாடு விரிவடைந்து இன்று நம் சமூக அமைப்பையே மிகவும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் ஒன்றாக மாறிவிட்ட சூழல் நாம் வாழும் காலத்தின் அவலம் . மற்ற வரலாற்றைப் போலவே மதுவின் வரலாறும் சுவாரசியமானது தான் .
' நாகரீகமும் புளிக்கவைப்பதும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாதது ' என்றார் ஓர் அறிஞர் . காடு காடாக அலைந்த ஆதிமனிதன் விவசாயம் செய்யக் கற்றுக் கொண்டதன் பலனாக நிலையாக வாழ ஆரம்பித்தான் . அறுவடை செய்த தானியத்தை தண்ணீரில் ஊறவிட்டபோது அது புளித்தது தற்செயலாக நடந்த ஒன்று . அது தான் வெறித்தன்மையைக் கொடுத்த முதல் பானம்....