Tuesday, November 11, 2014

போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் !


கலாச்சாரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பகுதிக்குட்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறை என்று சுருக்கமாக சொல்லலாம் . தனித்த உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமய நம்பிக்கைகள் உள்ளிட்டவை வாழ்வியல் முறைக்குள் அடங்கும் . உலகெங்கிலும்  உள்ள இனக்குழுக்களால் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு  வந்த விதவிதமான கலாச்சாரங்கள் உலகமயமாக்கலின் விளைவாக கரையத் தொடங்கி நெடுநாட்களாகி விட்டன . அரை நூற்றாண்டுக்கு முன்பிருந்த கலாச்சார வாழ்வியல் முறை இன்று உலகமயமாக்கல் தடம் பதித்துள்ள எந்த இடத்திலும் இல்லை . நாகரிகத்தின் பெயரால் ,வளர்ச்சியின் பெயரால் பாரம்பரிய விழுமியங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன . வளர்ச்சியின் வாடை படாத  பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை மட்டும் மாறாமல் இருக்கிறது .  காடுகளில் பயணம் செய்கிறோம் என்ற பெயரில் நகரத்து மக்கள் காடுகளில் நுழைவதால் அவர்களின்  வாழ்வியல் முறையும் மாறி வருகிறது .

கலாச்சாரம் மாறி வருவதை ஒரு பிரச்சனையாக கருத முடியாது .பூமியின் சுழற்சியில் எல்லாமும் ஒரு நாள் மாறித் தான் ஆக வேண்டும் . மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத எதுவும் இங்கே நிலை ( கொஞ்ச காலத்திற்காகவாவது ) பெற முடியாது . கலாச்சாரமும் இதற்கு விதிவிலக்கல்ல . உணவு ,உடை ,இருப்பிடம் ,மொழி ,சமயநம்பிக்கைகள் என எல்லாமும் மாற்றத்தைச் சந்தித்தே வருகின்றன.

20 ஆண்டுகளுக்கு முன்பு உண்ணப்பட்ட எந்த உணவும் இன்று பரவலாக உண்ணப்படவில்லை. அப்படியே உண்ணப்பட்டாலும் பயன்படுத்தும் பொருட்கள் முதற்கொண்டு சமைக்கும் முறை, உண்ணும் முறை என அனைத்திலும் பலவிதமான மாற்றங்கள். நாம் வாழும் பகுதியில் என்ன விளைகிறதோ ,எந்தக் காலநிலையில் என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே உண்டு வாழ்ந்த சூழியலுக்கும் உடலுக்கும் உகந்த வாழ்வியல் முறை எங்கும் இல்லை. உடலைப்பற்றி எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் வணிக விளம்பரங்களில் மயங்கி கண்டதையும் உண்கிறோம். அன்று ,என்ன சாப்பிடுகிறோம் என தெரிந்து உணவே மருந்து என்றெண்ணி உண்டோம் இன்று,நாம் சாப்பிடும் ஒரு வாய் உணவில் என்னென்ன கலந்திருக்கிறது என்பதைத் தெரியாமலே உண்கிறோம். உலகவணிகமயமாக்கத்தால் நம் உணவுக் கலாச்சாரத்தில் நிகழ்ந்த இத்தகைய  மாற்றங்களையும்,பாதிப்புகளையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக்கொண்டது நம் கலாச்சாரம்.

நமது வாழிடங்களுக்கு அருகில் கிடைத்த பொருட்களை வைத்து வீடு கட்டி இயற்கையின் நண்பனாக வாழ்ந்த வாழ்வியல் முறை இன்று இல்லை. விதவிதமான கட்டம் கட்டமான எலிக்கூண்டுகளைக் காற்று புகாதவாறு கட்டிக்கொண்டு அதை வீடுகள் என்று சொல்கிறோம். செங்கல் , மணல்,ஜல்லி,கம்பி,கண்ணாடி,மரச்சாமான்கள் என வீடு கட்டப் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளும் இயற்கையின் அழிவிலிருந்து தான் பிறக்கிறது. முன்பு கட்டுமான பொருட்களை இயற்கையில் மிஞ்சியவையிலிருந்து எடுத்தோம்;எடுத்ததை மீண்டும் உருவாக்கினோம் .நமது வீடுகளின் கலாச்சாரக் கூறுகளாக இருந்த திண்ணையும் ,முற்றமும் இன்றைய வீடுகளில் இல்லை . இன்றைய சூழலில் வீடு குறித்த அதிக முக்கியத்துவமும்,அதிக கவனமும் தேவையற்றது என்றே நினைக்கிறேன். இந்த மாற்றங்கள் குறித்து நம் கலாச்சாரம் எந்தக் கேள்வியும்  கேட்கவில்லை.

ஒரு நூற்றாண்டிற்கு முன்பிருந்த எழுத்து முறையும் ,பேச்சு வழக்கும் இன்றைய தமிழ் மொழிக்கு இல்லை. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் புதிப்பித்துக் கொண்டதாலேயே தமிழ் மொழி இன்று வரை இருக்கிறது. இந்த மாற்றம் குறித்தும் கலாச்சாரம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

ஒரே மாதிரியான சமயநம்பிக்கைகள் நம் கலாச்சாரத்தில் இல்லை. அன்றே குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை என ஐந்திணைகளுக்கும் ஐந்துவிதமான சமயநம்பிக்கைகள் இருந்துள்ளன. கால மாற்றத்தாலும் பல்வேறுவிதமான நாடுகளின் படையெடுப்புகளாலும் பல்வேறுவிதமான சமயநம்பிக்கைகள் இன்று பின்பற்றப்படுகின்றன. இதற்கும் நமது கலாச்சாரம் ஒன்றும் சொல்லவில்லை.

ஆங்கிலேயர் இந்தியாவை ஆளாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இன்றைய  நிலை எதிலும் இருக்காது.கலாச்சாரத்தின் அனைத்து கூறுகளையும் ஆங்கிலேய ஆட்சி முறை வெகுவாக பாதித்தது. உடையும் பலவிதமான மாற்றங்களை அடைந்தது. தொழில் ரீதியாகவும் மதரீதியாகவும் தனித்த அடையாளத்துடன் அணியபட்ட உடைகள் மாற்றம் அடைந்து ஒரு பொதுவான முறையில் அணியப்படுவது நல்ல விசயம். ஆனால் அதிலும் சூழலுக்குப் பொருந்தாத இறுக்கமாண உடைகளையே பெரிதும் விரும்புகிறோம்.ஆண்களைப் பொருத்தவரை ஒரே வேட்டியை தாங்கள் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப மாற்றிக் கட்டியவர்கள் ,பட்டாப்பட்டி டவுசர் போட்டவர்கள் ,இன்று விதவிதமான பேண்ட்களையும் ,ஜாக்கியும் ,சார்ட்ஸும் அணிகிறார்கள். இதற்கும் கலாச்சாரம் மூச்சே விடவில்லை.

உணவு ,உடை,இருப்பிடம் ,சமயநம்பிக்கைகள் ,மொழி உள்ளிட்ட கலாச்சாரக் கூறுகளில் நிகழ்ந்த ,நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்களை நாம் தவறென்றே சொல்ல முடியாது. சில இழப்புகள் இருக்கலாம். 'அன்று இருந்தது ,இன்று இல்லை ' என்ற மனநிலை எல்லா காலகட்டங்களிலும் இருக்கிறது. ஒரு குற்ப்பிட்ட காலகட்டத்தில் எல்லாமுமே மாற்றத்தைச் சந்தித்தே தீருகின்றன. ஒரு தலைமுறை என மதிப்பிடப்படும் 33ஆண்டுகளில் அதிகபட்ச விசயங்கள்,பொருட்கள் மாற்றத்தைச் சந்திக்கின்றன. உலகவணிகமயமாக்கல் கால்பதித்த எந்த இடத்திலும் முன்பிருந்த தனித்த கலாச்சாரம் இன்றில்லை. பணம் ஒரே இடத்தில் குவிய அனுமதிக்கும் சுயநலமிக்க நுகர்வு கலாச்சாரம் தான் உலகமயமாக்கலின் சாதனை.

நிகழ்ந்த இவ்வளவு மாற்றங்களையும் எந்தவித தயக்கமும் இல்லாமல் ஏற்றுக்கொண்ட நமது சமூகம் பெண்களின் உடை என்று வரும் போது மட்டும் பிந்தைய கலாச்சாரத்தை வலுக்கட்டயாக உள்ளே இழுப்பதன் பின்ணணியில் எவ்வளவு படித்திருந்தாலும் நாங்கள் ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகளே என்று ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் நிருபிக்கிறார்கள்.

ஆண்பிள்ளைகள் செய்யும் எவ்வளவு பெரிய தப்பையும் சிறிதும் தயக்கமே இல்லாமல் மூடி மறைக்கவே நமது பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அதேசமயம் பெண்பிள்ளைகள் செய்யாத தப்பிற்கும் கேள்வி கேட்கப்படுகிறார்கள். பெண்கள் சம்பந்தபட்ட எல்லாக் குற்றங்களிலும் பெண்களையே குற்றவாளிகளாக்கி அழகு பார்ப்பது தான் கலாச்சாராமா ?

பொதுஇடத்தில் கண்ணியமாக உடை அணிய வேண்டியது ஆண்கள் மற்றும் பெண்களின் பொதுக்கடமை . இதைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு .ஆனால் ,யாருக்கும் முக்கியமாக பெண்களுக்கு இந்த உடை தான் அணியவேண்டும் என்ற எந்தக்கட்டுபாடும் விதிக்க வேண்டியதில்லை. ஆண்கள் எந்த உடை அணிந்தாலும் எப்படி அணிந்தாலும் உடையே அணியாவிட்டாலும் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதும் ,  ஆண்கள் ஆபாசமாக உடை அணிந்தால் பெண்கள் கண்ணை மூடிக்கொண்டு போக வேண்டும் என்பதும் எழுதப்படாத விதி .அதே சமயம் ,பெண்கள் என்று வரும் போது மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறார்கள் .

ஏன் பெண்களின் உடையை மட்டும் எதிர்க்கிறார்கள் ?

உணவில் என்ன மாற்றம் நிகழ்ந்தாலும் இன்றும் வீடுகளில் பெண்களே சமைக்கிறார்கள் , இருப்பிடம் மாறினாலும் பெண்களை இருப்பிடங்களை நிர்வகிக்கிறார்கள் , சமய நம்பிக்கைகள் மாறினாலும் பெண்கள் தான் முக்கிய பங்குவகிக்கிறார்கள் இவை அனைத்தும் பெண்கள் வேலைகள் என்று முத்திரையுடன் இன்றுவரை பெண்களாலேயே செய்யப்படுகிறது . ஆனால் ,பெண்கள் பொதுவெளியில் தங்களுக்குச் சரிசமமாக உடை அணிவதை மட்டும் ஆணாதிக்கச் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .

அன்று பெண்கள் வீட்டிற்குள் முடங்கிக்கிடந்த வரை உடை ஒரு பெரிய விசயமாக தெரியவில்லை. இன்று நிலமை அப்படியில்லை,   பல்வேறு விதமான  வேலைகளின்  நிமித்தமாக பெண்கள் பொதுவெளியில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டிய இன்றைய சூழலில்  அணிய சவுகரியமில்லாத உடைகளை அணியச்சொல்வதில் எந்தவித நியாயமும் இல்லை . இது அடிப்படை உரிமை சார்ந்த விசயம் .நாகரிக சமூகத்தில் அவரவருக்கு பிடித்தமான உடைகளை அணிவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு .நாம் நாகரிக சமூகமா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் எப்படி உடை அணிந்தாலும் வெறிக்க வெறிக்க பார்ப்பது தான் ஆண்களின் பொதுக்குணம். அப்படிப் பார்ப்பதன் பின்னாலும் ஒரு நெடிய வரலாறு இருக்கிறது . இப்போது அதுவல்ல பிரச்சனை . சரி , பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் ? எல்லாப் பெண்களையும் சேலை மட்டும் அணியச் சொல்லலாமா ? சேலை சவுகரியமான  உடை என்று யாராவது ஒருவர் நிருபித்து விட முடியுமா ? முடியாது .

சேலையை எப்படி அணிந்தாலும் உடல் பகுதி வெளியே தெரியவே செய்யும் . யார் முதலில் இந்த உடையை கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. " அணிந்துகொண்டிருக்கும் நேரம் முழுவதும் கவனத்தைக் கோரும் ஓர் உடை, புடைவை. இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை இழுத்து இழுத்துவிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 'இடுப்பு தெரிகிறதா, உள்ளாடை வெளியே தெரிகிறதா?’ எனச் செய்யும் வேலைகளில் இருந்து கவனம் பிசகிக்கொண்டே இருக்கும். இயல்பாகக் குனியவோ, வேகமாக நடக்கவோ, விரைவாக மாடி ஏறவோ, வண்டி ஓட்டவோ, பேருந்தில் ஏறவோ எதுவும் முடியாது. செல்போன், பர்ஸ் என எதையும் வைத்துக்கொள்ள முடியாது. இறுக்கமான உள்ளாடைகள், அதற்கு மேல் இறுக்கமான பாவாடை, ஜாக்கெட், அதற்கு மேல் வெயிட்டான புடைவை... என நம் காலநிலைக்கு கொஞ்சமும் தொடர்பு இல்லாத இந்த உடையை முதலில் உடுத்தியது யார்? 45 டிகிரி வெயிலில் பேருந்திலும் சமையலறையிலும் சேலை கட்டிக் கொண்டிருப்பது... அனுபவித்தால்தான் தெரியும். " என்று சேலை அணிவதில் இருக்கும் அசவுரியங்களை பட்டியலிடுகிறார், பிரியா தம்பி .உண்மையிலேயே பெண்களுக்கு மிகவும் அவஸ்தையை தரும் ,நம் சூழலுக்கு பொருந்தாத உடை தான், சேலை.இன்னும் எத்தனை நாளைக்குத் தான் கலாச்சார உடை என்று சொல்லியே அவஸ்தையை தரும் சேலையை பெண்களை அணியவைக்கப் போகிறோமோ தெரியவில்லை . வேட்டி எல்லா இடங்களிலும் அணியச் சவுகரியமாக இல்லாததாலேயே ஆண்கள் வேறு உடைகளை அணிகிறார்கள் . ஆண்களின் இந்த உடைக் கலாச்சாரத்தை மீறும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்படுகிறது . எனக்கெல்லாம் அதிகாரம் இருந்தால் சேலை என்ற உடையையே முற்றிலுமாக தடை செய்து விடுவேன் . அடுத்த நூற்றாண்டில் இந்தியாவில் சேலை இருக்குமா என்பதே சந்தேகம் தான். 

சேலையை விட சுடிதார் , ஜீன்ஸ் போன்றவை சவுகரியமானதாகவும்  ,தன்னம்பிக்கை தருவதாகவும்  இருப்பதாலேயே பெண்கள் இன்று அவற்றை அதிகம் அணிய ஆரம்பித்து இருக்கிறார்கள் . லெக்கிங்ஸ் அணியும் போது மட்டும் பெண்கள் கண்டிப்பாக கவனம் செலுத்தியே ஆக வேண்டும் . மற்ற உடைகளை விட லெக்கிங்ஸ் நிறைய பெண்களுக்கு பொருந்தாத உடையாகவே இருக்கிறது . இதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் . அதே சமயம், பெண்கள் லெக்கிங்ஸ் அணியவே கூடாது என்று கட்டளையிட முடியாது .

இயல்பாகவே எப்போதும் எந்த வயதிலும் பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுவதையும் , ஆண்கள் பெண்களால் ரசிக்கப்படுவதையும் பெரிதும் விரும்புகிறார்கள் . விதவிதமான ஆடைகளைத் தேடி அணிவதிலும் ,விதவிதமான அலங்காரங்களைச் செய்து கொள்வதற்குப் பின்பும் இந்த ரசிக்கப்படுதல் தான் இருக்கிறது . ஏன் ஒரு பெண் பெண்களால் ரசிக்கப்படுவதையும் , ஒரு ஆண் ஆண்களால் ரசிகப்படுவதையுமே விரும்புகிறார்கள் தானே . மற்றவர்களின் கவனத்தைக் கவர எந்த உடை அணிந்தாலும், ஏன் சேலையே அணிந்தாலும் தங்கள் உடல்பகுதி வெளியே தெரியும்படி அணியும் பெண்கள் இருக்கிறார்கள் .இவர்கள் மொத்த சதவீதத்தில் எண்ணிக்கையில் மிகவும் குறைவு . ஆண்களிலும் இப்படி நடந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள் தானே . 

ஆண்களின் மன வக்கிரம் உச்சத்தை அடையும்போது, அருகே பெண் என்ற உருவில் யார் இருந்தாலும், எந்த உடை அணிந்திருந்தாலும் தங்களின்  ஆதிக்கத்தைச் செலுத்துகிறார்கள் . இந்த மாதிரி உடை அணிந்ததால் தான் இந்த வன்முறை நிகழ்ந்தது என்று யாராலும் நிரூபிக்க முடியாது .

 கலாச்சாரத்தில் நிகழும் தங்களுக்குத் தோதான மாற்றங்கள் குறித்தும் யாரும் கேள்வி கேட்கவில்லை . தனது அதிகாரத்தைத் தக்க வைக்க கலாச்சாரத்தைக் ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள் . ஜாதி , மதம் , பெண் அடிமை போன்ற கூறுகளைத் தக்கவைக்கவே கலாச்சாரத்தை மீண்டும் மீண்டும் கையிலெடுக்கிறார்கள் . ஆண்களே , பெண்களை நோக்கி எந்தக் கேள்வி கேட்பதற்கு முன்பும் உங்களைப் பார்த்து அதே கேள்வியை கேளுங்கள் . பிறகு பெண்களைப் பார்த்துக் கேளுங்கள் . சுதந்திர காற்றை அனுபவிக்கத் தொடங்கியிருக்கும் பெண்கள் , அந்தச் சுதந்திரத்தை அதிகமாக அனுபவிக்கவே விரும்புவார்கள் . அதிலும் கூடுதல் வாய்ப்பு பெற்றுள்ள பெண்ணியவாதிகள் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே அலட்டிக் கொள்வார்கள் . இது இயல்பு தான் .

 நண்பர்களே , கலாச்சாரக் காவலர்களே ,ஆணாதிக்கவாதிகளே பெண்கள் அணியும் உடைக்கும் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும் துளியும் சம்பந்தமில்லை .  ஈரான் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட 26 வயது ரேஹானே ஜபாரி (Reyhaneh Jabbari ) என்ன ஆபாசமான உடையா அணிந்திருந்தார் . உடலை முழுதுமாக மறைத்து தானே உடை அணிந்திருந்தார் , அப்புறம் எதற்கு அவரை வன்புணர்ச்சி செய்ய ஒருத்தன் முயன்றான் . அவனை சுய பாதுக்காப்பின் பொருட்டு கொன்றதற்காக ரேஹானேவை கொலைகாரி ஆக்கி  தூக்கிலிட்டு கொன்று விட்டோம் . இனியும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு  பெண்களையும், அவர்களின் உடைகளையும் காரணமாக்க கலாச்சாரத்த இழுத்தீங்கனா " போங்கடா நீங்களும் உங்க கலாச்சாரமும் " என்று தான் சொல்ல வேண்டிவருகிறது .

வரலாறை வைத்துப் பார்க்கும்போது , ஆணாதிக்க தந்தைவழிச் சமூகத்தின் ( பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல்  ) கூறுகளாகவே பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை குறிப்பிட முடிகிறது .அடுத்து வரும் பெண்ணாதிக்க தாய்வழிச் சமூகத்தில் ( ஆண்கள் அடிமைகளாக நடத்தப்படுதல் ) ஆண்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படலாம் . இன்றைய காலகட்டம் இரண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கிறது .

மேலும் படிக்க :

பெண் விடுதலையும் சாதி ஒழிப்பும் !

கலாச்சார விடுதலையே சமூக விடுதலை ! 

எது கலாசாரம் - கி.ரா...!
.....................................................................................................................................................................

2 comments:

Divya said...

அடுத்து வரும் பெண்ணாதிக்க சமுதாயத்தில் ஆண்கள் மீது எண்ணற்ற அடக்குமுறை விதிக்கப்படும். ஒட்டுரிமை, பணத்தை கையாளும் உரிமை, ஏன் உடை அணியும் உரிமை கூட கிடையாது. பெண்கள் என்ன சொல்கிற்களோ அந்த உடைதான் அணிய வேண்டும். உயர்ந்த பதவிகளை பெண்கள் மட்டுமே வகிப்பார்கள். பொதுவாக மூளையை உபயோகிக்கும் வேலை அனைத்தும் பெண்கள் வகிப்பார்கள். உலகளாவிய அமைதி நிலவும். அது ஆண்கள் அடிமைப் படும்போது மட்டுமே வரும். ஆனால் நிச்சயமாக வரும்.

மானிடன் said...

👍

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms