அரசியல் நிலைப்பாட்டில் இரண்டே பிரிவுகள் தான். ஒன்று இடதுசாரி அரசியல், மற்றொன்று வலதுசாரி அரசியல். இந்தியாவில் ஆயிரக்கணக்கான கட்சிகள் இருந்தாலும் அவற்றை இந்த இரண்டே பிரிவுகளுக்குள் அடக்கிவிட முடியும். சமத்துவத்தை வலியுறுத்துவது இடதுசாரி அரசியல், சமத்துவத்திற்கு எதிரானது வலதுசாரி அரசியல்.
மக்கள் நலனை முன்வைத்து அரசியல் செய்வது இடதுசாரி அரசியல். இனம், மதம், மொழி,சாதி போன்ற பிரிவினைவாதத்தை முன்வைத்து அரசியல் செய்வது வலதுசாரி அரசியல். வலதுசாரி அரசியலில் அதிகாரம் ஒரே இடத்தில் குவியும். இடதுசாரி அரசியலில் அதிகாரம் பரவலாக்கப்படும். இடதுசாரி அரசியல் என்பது கம்யூனிச இயக்கங்களை மட்டுமே குறிக்காது. எல்லோரையும் சமமாக நடத்தும் எல்லா அரசியல் இயக்கங்களும் இடதுசாரி இயக்கங்கள் தான். ஆனால் இந்த இடதுசாரி இயக்கங்கள் கம்யூனிச இயக்கங்களைப் போல தீவிரமாக இடதுசாரி கொள்கைகளை பின்பற்றுவதில்லை. இது தான் கம்யூனிச இயக்கங்களுக்கும் மற்ற இடதுசாரி இயக்கங்களுக்கும் உள்ள வேறுபாடு.
இன்றைய அரசியல் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கார்பரேட்கள் கைகளில் தான் இருக்கிறது. கார்பரேட்கள் தாங்கள் நினைத்ததை நினைத்தவுடன் செய்வதற்கு வலதுசாரிகள் ஆட்சியில் இருக்க வேண்டும். உலகெங்கிலுமே இது தான் நிலைமை. முன்பை விட தற்போது வலதுசாரி இயக்கங்கள் புத்துணர்வு பெற்றிருப்பதற்கு கார்பரேட்களே முக்கிய காரணம். இயற்கையும், மனிதமும் காக்கப்பட வேண்டுமானால் வலதுசாரி இயக்கங்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
வாக்களிக்கப் போவதற்கு முன்பு சிந்தியுங்கள். நீங்கள் வாக்களிக்கப் போவது இடதுசாரிக்கா ? வலதுசாரிக்கா ?
பாஜக ஒரு வலதுசாரி இயக்கம், பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அனைத்து கட்சிகளையுமே வலதுசாரிகள் என்று தான் அழைக்க வேண்டியுள்ளது. வலதுசாரிகளால் என்றுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியாது. அனைத்து இடங்களிலும் வலதுசாரிகள் தோற்றுப்போவது தான் அவர்கள் மக்களுக்கு செய்யும் ஒரே நன்மை. பாஜக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் !
திமுக-வும் வேண்டாம், அதிமுக- வும் வேண்டாம், காங்கிரஸ்-ம் வேண்டாம், பாஜக-வும் வேண்டாம் என்றால் இவற்றுக்கு மாற்றாக நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது கம்யூனிச இயக்கங்களை தான். ஆனால் யதார்தத்தில் கம்யூனிச இயக்கங்களுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட மக்களிடத்தில் இல்லை. நீங்கள் இந்த கட்சிகளை எதற்காகவெல்லாம் புறக்கணிக்கிறீர்களோ அதற்காகவெல்லாம் ஆதரிக்க வேண்டியது கம்யூனிச இயக்கங்களைத் தான். ஆனால் ஆதரிக்க மாட்டீர்கள்.
வலதுசாரி இயக்கங்கள் மாற்றாக இருக்க முடியாது . ஆம், நாம் தமிழர் கட்சியும் , மக்கள் நீதி மய்யமும் வலதுசாரி இயக்கங்கள் தான். இன்றுவரை தனது ஜாதி மீதான பற்றை துறக்க முடியாத கமலஹாசன் சொல்வது போல ஒருவரால் ஒரே நேரத்தில் இடதுசாரியாகவும், வலதுசாரியாகவும் இருக்கவே முடியாது. தனது ஜாதி பற்றை மறைக்க முற்போக்கு வேடம் போடுவது போல தான் ஒரு வலதுசாரி என்பதை மறைக்க இடதுசாரி வேடம் போடுகிறார்.
பாஜக மதத்தை வைத்து பிரிவினைவாதம் செய்கிறது. நாம் தமிழர் கட்சி இனத்தை வைத்து பிரிவினைவாதம் செய்கிறது. பிரிவினைவாதத்தை உரக்கப் பேசுவதால் உள்ளம் மட்டுமே களிப்புறும். பிரிவினைவாதத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை.
ஏன் மனிதத்தை எல்லோரும் பேச மறுக்கிறோம் ? எல்லா மனிதர்களும் சமமானவர்கள். இந்த பூமி அனைவருக்கும் சொந்தம். ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் வாழ்வதற்கு சம உரிமை இருக்கிறது. இந்த பூமியில் நாம் வாழும் வாழ்க்கை ஒரு கூட்டியக்கம். நாம் இந்த பூமியில் ஒரு நிமிட வாழ்க்கையை வாழ்ந்து முடிக்க கண்ணிற்கு தெரியாத எத்தனையோ மனிதர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. ஆனால் நொடியில் இதை மறந்து விடுகிறோம். இனம், மதம், சாதி பார்த்து உணவு உண்ண வேண்டுமெனில் நம்மால் ஒரு வாய் உணவைக்கூட உண்ண முடியாது. அப்புறம் என்ன கூந்தலுக்கு இவ்வளவு பிரிவினைவாதங்கள்.
மனிதம் வெல்லட்டும் !
1 comments:
திமுக இனத்தை வைத்து பிரிவினை வாதம் பேசுகின்றது
இதையும் சேர்த்து கொள்ளுங்கள்
Post a Comment