Wild Wild Country ❤
- Documentary About OSHO !
மிகவும் சிறப்பான ஆவணப்படம்.ஆறு பகுதிகளாக எடுக்கப்பட்டிருக்கின்றன. சார்பு நிலைகள் இல்லாமல் உருவாக்கப்படுள்ளது. ஒஷோவோடு தொடர்பில் இருந்தவர்களின் குரல்களின் வாயிலாகவும், 1981 முதல் 1985வரை அமெரிக்காவில் ஒரு குட்டி நகரத்தையே எப்படி உருவாக்கினார்கள் என்பதும் காட்சிகளாக விரிகின்றன. 40 ,50 பேர்கள் மட்டுமே இருக்கும் ஆன்டலோப் எனும் சிறு நகரத்திற்கு பக்கத்தில் 'ரஜ்னீஷ்புரம் ' என்ற ஒன்றை உருவாக்குகிறார்கள். இந்த ஆவணப்படத்தின் மூலம் ஓஷோவை விட அதிகம் கவர்ந்தவர் , ஓஷோவின் உதவியாளர், மா ஆனந்த் ஷீலா.
மொரார்ஜி தேசாய் அரசு , பூனாவில் இருந்த ஓஷோவின் ஆசிரமத்திற்கு அளித்து வந்த வரிச்சலுகையை ரத்து செய்கிறது. ஏற்கனவே பூனா ஆசிரமத்தை விட பெரியதாக இந்தியாவில் வேறு இடம் கிடைக்குமா என்று அவர்கள் தேடிக்கொண்டிருந்த சூழலில் வரிச்சலுகையும் ரத்து செய்யப்பட அமெரிக்காவிற்கு பயணமாகிறார்கள். ஓஷோவிற்கு பெற்றோர் வைத்த பெயர், சந்திர மோகன் ஜெயின். அதை 'ரஜ்னீஷ்' என்று மாற்றிக்கொள்கிறார். 'பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ் ' என்றே அமெரிக்காவில் அழைக்கப்படுகிறார்.
மா ஆனந்த் ஷீலாவின் பெரும் உழைப்பால் 'ரஜ்னீஷ்புரம்' உருவாகிறது. ரஜ்னீஷ் மீது எல்லையற்ற அன்பும்,நம்பிக்கையும் வைத்திருந்தார், வைத்திருக்கிறார். சில அதிகார பிரச்சனைகளால் ஷீலா அமெரிக்காவை விட்டு வெளியேறினாலும் இன்று வயோதிகத்தை அடைந்திருந்தாலும் ரஜ்னீஷ் மீதான அன்பும், நம்பிக்கையும் குறையவேயில்லை. அவரது நினைவுகளில் இன்றும் ரஜ்னீஷே நிறைந்திருக்கிறார்.
இப்போதும் மிரட்சியாகவே இருக்கிறது. அமெரிக்கா மாதிரியான ஒரு நாட்டில் போய் எவ்வளவு வேலை பார்த்திருக்கானுக. சொந்தமாக விமானநிலையம், ஆயுதம் ஏந்திய போலீஸ், ஆயவுக்கூடம் என்று ஐந்து ஆண்டுகள் மிரட்டியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு தொழிற்நுட்பத்தில் சிறந்தவர்கள் ரஜ்னீஷை பின்தொடர்பவர்களாக இருந்திருக்கிறார்கள். பணத்திற்கும் குறைவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு இந்த சாமியார்களை கையிலயே பிடிக்க முடியாது போல. அதிலும் நவீன சாமியார்கள் படித்தவர்களையும் எளிதில் உள்ளே இழுத்துவிடுகிறார்கள்.
காலம், காலமாக இருந்து வருவதை தங்களுக்கு தகுந்தவாறு உடைத்துவிட்டு கவர்ச்சிகரமான பத்து, இருபது வார்த்தைகளை சிதறவிட்டால் போதும் கூட்டம் தானாக சேர்ந்துவிடும் போல. ஆசிரமங்கள் எல்லாம் பிரம்மச்சரியத்தை கடைபிடித்து வந்த சூழலில் எங்கள் ஆசிரமத்தில் பிரம்மச்சரியம் இல்லை. விரும்புபவர்கள், விரும்புபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னால் ஏன் கூட்டம் சேராது ? ஓஷோவிய் ஆசிரமத்தில் சேர்ந்தது உலகம் முழுவதிலும் இருந்து.
'ஆசையே துன்பத்திற்கு காரணம் ' என்றார் புத்தர். இதற்கு மாற்றாக ' அத்தனைக்கும் ஆசைப்படு ' என்று சொல்லியே ஜக்கி என்னும் விஷக்கிருமி காட்டை அழித்ததோடு, இன்று கோவை பகுதியின் அமைதிக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஜக்கியின் ரோல் மாடல் ஓஷோதான். சொல்லி வைத்ததுபோல இருவரும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்கள். இவர்களுக்கு பக்தி, ' Enlightenment ' என்பதெல்லாம் பணத்திற்கு பின்புதான்.
ஷீலா ஆசிரமத்தை விட்டு வெளியேறிய பிறகு ரஜ்னீஷூம் , ரஜ்னீஷ்புரத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார். அப்புறம் அங்கிருக்கிருந்த மற்றவர்களும் வெளியேறிவிடுகிறார்கள். ஆன்டலோப் மக்கள், அன்றும் சரி, இன்றும் சரி இந்த ரஜ்னீஷ் கூட்டத்தை காமெடியாகவே அணுகியிருக்கிறார்கள். அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட பிறகு 21 நாடுகள் ரஜ்னீஷை உள்ளே விட அனுமதிக்கவில்லை. கடைசியில் மீண்டும் பூனா ஆசிரமத்திற்கே வருகிறார். இறப்பதற்கு ஒரு வருடம் (1989) முன்புதான் 'ஜென் ' தாக்கத்தால் தனது பெயரை 'ஓஷோ' என்று மாற்றிக் கொள்கிறார். இப்போது அதுவே நிலைத்துவிட்டது. ஓஷோவை அமெரிக்கா விரட்டி அடித்தது போல , ஜக்கியை நாம் கோவையை விட்டு விரட்டியடிக்க வேண்டும்.
இன்றும் ஓஷோவை பின்தொடர்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தைப் பார்த்த பிறகும் ஓஷோவை நம்புகிறார்கள். ஆனால்
எல்லா சாமியார்களும் போலிகள்தான். Osho also a Fake.
Very admiring personality, Ma Anand Sheela ❤
நெட்பிளிக்ஸ் தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள். பெரிய அளவிலான ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன !
மேலும் படிக்க :
Ennio : The Maestro (The Glance of Music ) (2021) , Documentary Movie
சர்தார் உத்தம் (Sardar Udham)- உலகத்தரம் !
Thursday, July 7, 2022 Jana Gana Mana - பாசிச எதிர்ப்பு சினிமா !
1 comments:
எல்லா சாமியார்களும் மட்டுமல்ல,... நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் அத்தனை கடவுள்களும் பொய்கள்தான்....
https://www.scientificjudgment.com/
Post a Comment