Saturday, July 15, 2023

தக்காளியும் விவசாயியும் பின்னே கார்ப்பரேட்களும் !


தக்காளியும் வெங்காயமும் வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ தான் உற்பத்தி குறையும் போது கிலோ 100 ரூபாயைத் தாண்டுகிறது. உற்பத்தி அதிகமாகும் போது தானாகவே குறைந்துவிடுகிறது.சில சமயங்களில் விலை கிடைக்காமல் கிழே கொட்டும் நிலையும் ஏற்படுகிறது. அப்போதெல்லாம் அவர்களுக்காக யாரும் கவலைப்படுவதில்லை. இப்போதைய விலையேற்றமும் 1000-ல் ஒரு விவசாயிக்கு பலன் கொடுக்கலாம்.


இந்திய நாட்டில் விவசாயியாக வாழ்வது பெரும் சவால். தமிழ்நாட்டைப் பொருத்தவரை பால் வருமானம் என்ற ஒன்று இருப்பதால்தான் விவசாயிகள் நிலத்தையே உழுகின்றனர். இல்லையென்றால் பாதி நிலங்கள் தரிசாக மாறியிருக்கும். தற்போது மாட்டுத் தீவனங்களின் விலையேற்றத்தால் பால் வருமானமும் குறைய ஆரம்பித்துவிட்டது. இலவச மின்சாரம் மற்றும் மானியங்கள் கொடுக்கப்பட்டாலும் விவசாயிகளின் வாழ்வு இன்னமும் மேம்படவில்லை. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வது தீர்வாக சொன்னாலும் இது எல்லோருக்கும் சாத்தியமானதாக இல்லை.


இன்றைய தொடு திரை வாழ்விலும் " உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது " என்பது மட்டும் மாறவேயில்லை. எல்லா உழைப்பிற்கும் விலை இருக்கிறது. விவசாயிகளின் உழைப்பிற்கும் விலை இருக்கிறது. ஆனால் பெரும்பாலான நேரங்களில் விவசாயிகளின் உழைப்பிற்கு விலையே கிடைப்பதில்லை. ஏதோ இந்த விலையேற்றம் தற்போது தக்காளி, சின்ன வெங்காயம் அறுவடை செய்யும் விவசாயிகளுக்கு கொஞ்சம் நம்பிக்கையை அளிக்கலாம் அவ்வளவு தான்.


தற்போதைய காலநிலை மாற்றத்தால் முதல் பாதிப்பைச் சந்திப்பவர்கள் விவசாயிகள்தான். விளைச்சலின் போது பெய்ய வேண்டிய மழை பெய்வதில்லை. அறுவடையின் போது பெய்யும் மழை அனைத்தையும் அழித்துவிட்டு போய்விடுகிறது. சமீப ஆண்டுகளில் அனைத்து விதமான விவசாய பயிர்களுக்கும் மிக அதிக அளவிலான ரசாயன உரங்களும் , பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு புறம் இது ஒட்டு மொத்த சமூகத்தின் உடல்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கிறது. மறுபுறம் இதற்கான செலவுகளும் விவசாயிகளைப் பாதிக்கின்றன. இயற்கை விவசாயம் குறித்தான புரிதல்களும் பயன்பாடுகளும் அதிகரிக்க வேண்டும். 


விவசாயிகளும் பணப்பயிர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் உணவுப்பயர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை தாங்களே விளைவித்துக்கொண்டு மீதியை விற்க வேண்டும். அப்படி செய்தால் விவசாயிகளுக்கும் பலன் கிடைக்கும். சந்தையில் தேவை குறைவதால் மக்களுக்கும் பலன் கிடைக்கும். இதைப் படிப்படியாகவாவது தொடங்க வேண்டும்.   


'100 நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது' என்பது ஏற்புடையதல்ல. 100நாள் வேலை வந்த பிறகுதான் விவசாய கூலிகளின் தினசரி கூலி உயர்ந்திருக்கிறது. " அப்போதெல்லாம் சோத்த மட்டும் போட்டோம் நாளெல்லாம் பாடுபட்டாங்க. இப்ப சம்பளம் எல்லாம் கேட்கிறாங்க " என்ற‌ நிலபிரபுத்துவ மனநிலை தான் 100 நாள் வேலையை குறை கூறுவதற்கு காரணம்.  


'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்' என்ற 100 நாள் வேலைத்திட்டம் நிச்சயமாக முந்தைய காங்கிரஸ் அரசின் சாதனைதான். இன்றும் கடைக்கோடி மக்களையும் நேரடியாக சென்று சேரும் ஒரே மத்திய அரசின் திட்டம் இது மட்டும்தான். எல்லோராலும் கைவிடப்பட்டவர்களை , முதியவர்களை இந்த திட்டம் தான் சோறு போட்டு காப்பாற்றுகிறது. மற்றவர்களுக்கு இது உபரி வருமானம். இந்த பணம் முழுவதும் உள்ளூர் சந்தையிலேயே செலவிடப்படுவதால் உள்ளூர் பொருளாதாரத்தைக் காப்பாற்றும் திட்டமாகவும் இதனைப் பார்க்கலாம். இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும்.


100நாள் வேலையால் விவசாயிகள் பாதிக்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் களத்தில் இறங்க வேண்டும். வெகு சில இடங்களில் 100நாள் வேலைத்திட்டம் விவசாயிகளுடன் இணைந்து செயல்பாட்டில் உள்ளது. விவசாயிகள் உள்ளாட்சி அமைப்பில் தங்களுக்கு தேவையான ஆட்களை பதிவு செய்தால் 100 நாள் வேலை செய்பவர்கள் அங்கே அனுப்பப்படுவார்கள். இது தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வந்தால் '100நாள் வேலையால் விவசாயம் பாதிக்கிறது ' என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.


விவசாய விளைபொருட்களின் ( காய்களிகள், பழங்கள், அரிசி, பருப்பு, எண்ணெய்... ) உற்பத்தி குறையும் போது விலை கூடும். உற்பத்தி அதிகமாகும் போது விலை தானாகவே குறைந்துவிடும். ஆனால் ஊடகங்களில் எப்போதும் இவைதான் பெரிதுபடுத்தப்படுகின்றன. இதே சூழலில் ஏறினால் இறங்காத பொருட்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள்தான். இவை பற்றி யாரும் வாய் திறப்பதில்லை. இரண்டு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய விவசாய பொருட்களின் விலைகளுக்கும், தற்போதைய விவசாய விளைபொருட்களின் விலைகளுக்கும் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் பெரிய வித்தியாசம் இருக்காது. அதே போல இரண்டு ஆண்டுகளில் ஏற்றம் மட்டுமே கொண்டிருக்கும் கார்ப்பரேட் நிறுவன தயாரிப்புகளைக் கவனியுங்கள். எதற்காக நாம் அதிகம் செலவு செய்கிறோம் என்பது தெளிவாகும்.


சோப்புகள், பற்பசை, டீத்தூள், நேப்கீன்கள், மருந்து, மாத்திரைகள், பெட்ரோல், டீசல், எரிவாயு, கார், பைக், கட்டுமான பொருட்கள் என்று பலவும் அதிக விலையேற்றத்தை சந்தித்து இருக்கின்றன. இவற்றை எல்லாம் சத்தமே இல்லாமல் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். காரணம் இவை தொடர்ந்து விளம்பரங்கள் செய்யப்படுதன் மூலமாக நமது மூளையில் ஏற்றப்பட்டுள்ளன. அதனால் இந்தப் பொருட்களின் விளையேற்றத்தை நாம் கண்டுகொள்வதில்லை. நமது வாழவின் ஒவ்வொரு நிமிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களால் பணமாக மாற்றப்படுகிறது. 


விவசாயமும், விவசாய விலை பொருட்களின் விற்பனையும் எளிய மக்களின் கைகளில் இருக்கும் வரை மட்டுமே உற்பத்தி சார்ந்த ஏற்ற இறக்கங்கள் பொருட்கள் விலையில் எதிரொலிக்கும். என்று இவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைகளுக்குப் போகிறதோ அன்றிலிருந்து எதற்கும் ஏற்றம் மட்டுமே இருக்கும். இறக்கம் என்பதே இருக்காது. உற்பத்தியே அதிகரித்தாலும் விற்பனை விலை குறையாது. இந்த நிலை உருவாகாமல் தடுக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் தள்ளிப் போடலாம். எல்லாம் நம் கைகளில் தான்.


மேலும் படிக்க :

உணவிற்கான உள்நாட்டுப் போர் ?

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms