திண்டுக்கல் நகரில் வருடம் ஒரு முறை நடைபெறும் புத்தகத் திருவிழா தவிர்த்து இலக்கியம் சார்ந்த வேறு நிகழ்வுகள் நடைபெறுவது அரிது. துளிர் நண்பர்கள் ஒருங்கிணைப்பில் கலந்து கொண்ட முதல் நிகழ்வு லக்சர்ட் பள்ளியில் நடைபெற்ற ' பவா செல்லத்துரையின் பெருங்கதையாடல்'. உண்மையிலேயே நீண்ட காலம் நினைவில் இருக்கும் நல்ல நிகழ்வு. ( https://www.facebook.com/share/p/14sGXSXmHR/ ) அதன் பிறகு இப்போது தான் அந்த அமைப்பின் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. காரணம் சனிக்கிழமை. சனிக்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொள்ள முடிகிறது.
திண்டுக்கல் GTN கல்லூரி அருகிலிருக்கும் RK மஹாலில் இந்த துளிர் நண்பர்கள் அமைப்பின் 2வது விருது வழங்கும் விழா தொடங்கியது. துளிர் நண்பர்கள் இதற்கு முன்பு ஒருகிணைத்த நிகழ்வுகள் குறித்தான தகவல்கள் சொல்லப்பட்டன.முதலாவது நிகழ்வாக ந.செந்தில்குமரன் அவர்களின் தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடு பற்றிய 'நீலகிரி வரையாடு' எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. அவர் பதிவு செய்த வரையாடு பற்றிய காணொளியும் ஒளிபரப்பப்பட்டது. செந்தில்குமரன் பொறியாளராக இருந்தும் வனவிலங்குகள் மீது உண்டான கவனம் பற்றியும், இந்த நூல் எப்படி சாத்தியமானது என்பது பற்றியும் பேசினார்.
ஜெ.பிரான்சிஸ் கிருபா விருது வெய்யில் அவர்களுக்கு வழங்கப்பட்டது." ஜி.நாகராஜன் பெயரிலும், ஜெ.பிரான்சிஸ் கிருபா பெயரிலும் விருது வழங்க முடிவெடுத்ததே மிகவும் நல்ல விசயம். அந்த பெயரில் நான் விருது வாங்குவது மிகவும் மகிழ்ச்சி " என்று வெய்யில் குறிப்பிட்டார். நிறைய வாசர்களுக்கும் இதுவே தோன்றும். ஜி.நாகராஜன் எழுத்தை வாசித்துவிட்டு கடந்து போகவே நிறைய பேர் விரும்புவார்கள். அவர் பெயரில் விருது என்பது ரொம்பவே பெரிய விசயம்தான். தனக்கும் பிரான்சிஸ் கிருபாவிற்கும் இடையிலான நட்பு குறித்தும் வெய்யில் குறிப்பிட்டார்.
ஜி.நாகராஜன் விருதை நரன் பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கி அப்புறம் சிறுகதை எழுத ஆரம்பித்தது. கவிஞர் வெய்யிலுக்கும் அவருக்குமான நட்பு. மூன்று விருதுகள் வெய்யிலுடன் சேர்ந்து பெற்றிருப்பது. பதிப்பகம் தொடங்கி எழுதும் திறமையுள்ள புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பது என நரன் பேசினார்.
வெய்யிலும் சரி , நரனும் சரி ஒரு ஜென் மனநிலையில் தான் அமர்ந்திருந்தனர். எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை. அவ்வளவு முதிர்ச்சி அவர்களிடத்தில். விருது கொடுப்பதற்கு பதிலாக யாராவது அவர்களைக் கூப்பிட்டு வைத்து திட்டினால் கூட அலட்டிக்கொள்ள மாட்டார்கள் போல. ரொம்பவே நல்ல விசயம். நாமும் கற்றுக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக வாழ்நாள் சாதனையாளர் விருது திண்டுகல்லைச் சேர்ந்த தமிழ்ச்செம்மல், து.இராசகோபால் அவர்களுக்கு வழங்கப்பட்டது. துளிர் நண்பர்கள் அமைப்பின் அ.முகமது யூசுப் அன்சாரி முதல் நாள் தனது முகநூல் பக்கத்திலும், நிகழ்வின் போது தனது பேச்சிலும் குறிப்பிட்டது தான் ஐயா, இராசகோபால் அவர்கள் நமக்கு அளிக்கும் செய்தி " சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்".
வெய்யில் அவர்களின் கவிதைகள் குறித்தும், நரன் அவர்களின் 'கேசம்' மற்றும் 'வாரணாசி' சிறுகதைகள் குறித்தும் பவா செல்லத்துரை பேசினார். மைக்கை கையில் வாங்கியவுடன் ஒட்டு மொத்த கூட்டத்தையும் வசீகரிக்கும் வல்லமை தோழர் பவா செல்லத்துரை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதனால் தான் அவர் எவ்வளவு நேரம் பேசினாலும் சலிப்பில்லாமல் நம்மால் கேட்க முடிகிறது. அவர் குறிப்பிட்டது போல எந்தக் கதையாக இருந்தாலும் எழுத்தாளர் எழுதியிருக்கும் கோணத்திலிருந்து சொல்லாமல் வாசிக்கும் போது எப்படி உணர்ந்தாரோ அப்படியே சொல்வது தான் அவர் கூறும் கதைகள் மீதான நெருக்கத்தை நமக்கு உருவாக்குகிறது. நிகழ்வில் அவர் சொன்ன நரனின் 'வாரணாசி' கதையும் அப்படியானதுதான்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பெரும்பாலானோர் வாழ்க்கையில் கூடுதல் இறுக்கம் சேர்ந்துள்ளது. அந்த இறுக்கத்திலிருந்து இசை, புத்தகம், சினிமா, ஓவியம் என கலை சார்ந்த செயல்பாடுகளே நம்மை தளர்த்துகின்றன. இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுக்கவே அரசுகள் அனைத்தும் உலகவணிகமயமாக்கலின் பிடியில் சிக்கியுள்ளன. தற்போதைய சூழலில் பூமியில் மக்களுக்கான அரசுகள் என்று இருப்பவை மிக மிக குறைவு. இப்படியான சூழலில் கலை மட்டுமே நாம், இந்த சூழலை எதிர்கொள்ளவும், இந்த சூழலிலிருந்து வெளிவரவும் துணை நிற்கும். அந்த வகையில் நிகழ்கால வாழ்வு தரும் இறுக்கத்தைத் தளர்த்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது.
இலக்கியத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இயங்கும் துளிர் நண்பர்கள் அமைப்பிற்கு பாராட்டுகள் மற்றும் நன்றி. தொடர்ந்து திண்டுக்கல் நகரில் இலக்கிய நிகழ்வுகள் நடத்த துளிர் நண்பர்கள் அமைப்பை வாழ்த்துகிறோம்.
நாளை மற்றொரு நாளே !
0 comments:
Post a Comment