Chat With Chen ரொம்பவே விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சி. பங்கு பெறும் ஒவ்வொருவரையும் அவர்களின் மனம் திறந்து பேச வைக்கிறார், ஷாஜி. மனம் சோர்வாக இருக்கும் போது Chat With Chen தொடரில் இருக்கும் ஏதேனும் ஓர் நேர்காணலைக் காண்பது வழக்கம். அதனாலேயே முழுவதும் பார்க்க வாய்ப்பிருந்தாலும் இன்னும் பலரின் நேர்காணல்கள் பார்க்கப்படாமலே இருக்கின்றன. இடையில் எப்பவாவது ஒரு புது நேர்காணலை காண்பது வழக்கம். அப்படி உடனே பார்த்தது தான் அலெக்ஸ் அவர்களின் நேர்காணல்.
நாம் எல்லோருக்குமே இசை பிடிக்கும். அது எந்த மாதிரியான இசை என்பது மட்டும் தான் வித்தியாசம். இசையை, இசைக்கலைஞர்களை அங்கத உணர்வோடு அலெக்ஸ் அணுகும் விதம் தான் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இசையை அங்கத உணர்வோடு அணுகியவர்கள் சமீபத்தில் நம் சூழலில் இல்லை. நம்மில் பெரும்பாலானோர்களுக்கு டைமிங் காமெடி ரொம்பவே பிடிக்கும். இசையுடன் டைமிங் காமெடியும் கலந்தால் இன்னும் சுவாரசியம் தானே. அந்த இடத்தில் தான் அலெக்ஸ் ஜெயிக்கிறார்.
நம்மில் பெரும்பாலானோர், நமக்கு பிடித்த வேலையைச் செய்வதில்லை அல்லது அப்படி பிடித்த வேலையைச் செய்ய முயற்சிப்பதும் இல்லை. பிழைப்பிற்காக கிடைத்த வேலையைச் செய்பவர்களே அதிகம். கிடைத்த வேலையைச் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கும் தோன்றியிருக்கும், " இந்த வேலையை விட்டுவிட்டு நமக்கு பிடித்த வேலையைச் செய்ய வேண்டும்" என்று. ஆனால் அதற்கு முக்கியத்துவம் தராமல் பிழைப்பிற்கான வேலையை தொடர்ந்து செய்பவர்களே அதிகம். பிடித்த வேலையை செய்வதற்காக கிடைத்த வேலையை விட்டவர் தான், அலெக்ஸ். இவரைப் போல உலகெங்கும் உதாரணங்கள் நிறைய உள்ளன.
Prime Video -ல் வெளியான அவரது ' Alex in Wonderland ' அற்புதமான நிகழ்ச்சி. தமிழ் திரையிசை ரசிகர்கள் அனைவரும் ரசித்து பார்த்த நிகழ்ச்சி. இசை விமர்சகர் ஷாஜிக்கு பிறகு மலேசியா வாசுதேவன் அவர்களை பொதுவெளியில் முன்னிலைபடுத்திய நிகழ்ச்சியாக அது அமைந்தது. அதற்கு காரணம் நம்மை போல் அவரும் ஷாஜியின் ' மலேசியா வாசுதேவன் மகத்தான திரைப்பாடகன்' கட்டுரையை படித்ததின் பிறகான பாதிப்பில் தான் இதைச் செய்திருக்கிறார் என்பது இந்த நேர்காணல் மூலமாக தெரிய வருகிறது. அலெக்ஸ் பங்கு பெற்றதாக சொல்லும் ஷாஜி அவர்கள் ஒருங்கிணைத்த மலேசியா வாசுதேவன் நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு சென்னையில் இருந்த போது எனக்கும் அமைந்தது. அது ஒரு அற்புதமான நிகழ்வு.
ஒவ்வொரு மனிதரின் வாழ்வும், கேட்கும் நமக்கு கதை தான். கதை கேட்பது என்பது நமக்கு சலிப்பதேயில்லை. அதனால் தான் இத்தகைய நேர்காணல்கள் நம்மை ஈர்க்கின்றன. அலெக்ஸ் பற்றி நமக்குத் தெரியாத நிறைய விசயங்களை இந்த நேர்காணல் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அலெக்ஸ் இந்த இடத்தை அடைவதற்கு நிறைய உழைத்திருக்கிறார். நிறைய பயிற்சிகள் செய்திருக்கிறார். எத்தனையோ நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உழைப்பில் உருவாகும் எத்தனையோ திரைப்படங்கள் நமக்கு சலிப்பைத் தருகின்றன. தனிமனிதனாக 2 , 3 மணி நேரம் நமக்கு சலிப்பில்லாமல் ஒரு நிகழ்ச்சியைக் கொண்டு செல்வது ரொம்பவே பெரிய விசயம்.
Amazon நிறுவனத்தின் Prime Video இவரது புதிய மேடை நிகழ்ச்சியான ' Alexperience ' நிகழ்ச்சியை வாங்க மறுத்த சூழலில் மற்ற இடங்களிலும் முயற்சி செய்தும் பலனளிக்காததால் தானே ஒரு பதிய OTT தளத்தை உருவாக்கி அதில் இந்த Alexperience நிகழ்ச்சியை கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்டு இருக்கிறார். அந்த OTT ன் பெயர் ANBA TV. இதுவும் ரொம்பவே பெரிய விசயம். இதிலும் அலெக்ஸிற்கு வெற்றி கிடைக்கட்டும்.
மொத்தத்தில் நல்லதொரு நேர்காணல் ❤️
மேலும் படிக்க :
0 comments:
Post a Comment