Wednesday, February 22, 2012

மரங்களை வெட்டுங்கள்!!

காட்டு கருவேல மரம் ,சீமை கருவேல மரம் மற்றும் சீத்தை மரம் ( இவை அனைத்தும் ஒரே மரத்தின் வேறு பெயர்களா ? தெரியவில்லை ) நம் மண்ணின் வளத்தை பாதிக்கும் நஞ்சு மரங்கள் . ஆனால் , தமிழ்நாட்டில் இந்த மரங்கள் தான் எங்கெங்கு காணினும் நீக்கமற நிறைந்திருக்கின்றன . இவை அழிக்கப்படுவதின் அவசியத்தை இந்தக் கட்டுரை விளக்குகிறது .இந்தக் கட்டுரையை நிறைய பேர் படித்திருக்கலாம் .இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் கருதி  படிக்காதவர்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது .இது என் சொந்த கட்டுரை அல்ல . இரவல் கட்டுரை .

உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் (குளோபல் வார்மிங்) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும்' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.

மண்ணின் வில்லன் :

 
அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. (பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை
வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )


நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம்) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று 'யாம் அறியேன் பராபரமே' ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!?, இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.

இதன் கொடூரமான குணங்கள் :

 
இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!
இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது. இப்படி காற்றின் ஈரபதத்தையும், நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.

உடம்பு முழுதும் விஷம் :

 
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது, ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும், அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், உயிரிவளி (Oxygen) மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது, ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது .நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு :

 
நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??!

என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

 
ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

நல்ல மரம் ஆரோக்கியம் :

 
வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம். சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் ! அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள் .இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
 

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

எப்படி அந்நியர்களை நாட்டை விட்டே விரட்டினோமோ ! அதே போல் நம் நீர் வளத்தை சுரண்டும் இந்த அந்நியனையும் விரட்டுவோம் ! !
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்ற வற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்

இதை வெட்டுவதோடு நிறுத்திவிடாமல், வேரோடு புடுங்கி எறியுங்கள்..உங்கள் ஊர் பள்ளி ஆசிரியரை சந்தித்து இதை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் உருவாக்கச்  சொல்லுங்கள்.
 

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! 

நம் மண்ணின் மாண்பை காப்போம்..!! 

பின்குறிப்பு :
அறிவியல் படி பார்த்தால்  இந்த மரங்கள் தமிழ்நாட்டின் வெற்றியாளர்கள் தான் . எத்தனையோ வகையான மரங்கள் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்  இந்த வேளையில் இவை தங்களின் இருப்பை நிலை நிறுத்திக் கொண்டுள்ளன . வலுத்தது நிலைக்கும் !

மேலும் படிக்க :

 நியூட்ரினோ ஆய்வுமையம் தேவையா ? 

நாமெல்லாம் குற்றவாளிகளே ! 
..................................................................................................................................................................... 

13 comments:

கோவை நேரம் said...

அருமை...எனினும் இந்த கட்டுரையை வேறு எதிலோ படித்த ஞாபகம் ...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! வாழ்த்துக்கள் சார் !

JOTHI said...

கண்டிப்பாக மற்றாவர்களிடமும் இதை பகிர்ந்து கொள்வேன்..ந‌ன்றி..

ckravindran72 said...

நண்பருக்கு வணக்கம்,

உங்கள் இரவல் கட்டுரைக்கு எங்கள் இயற்க்கை வரலாறு அறக்கட்டளையின் ஆய்வாளர் முனைவர் யோகானந்த் அவர்களின் பதிலை பார்வைக்கு வைக்கிறேன். ஏற்கனவே இந்த கட்டுரையை அவர் பார்வைக்கு அனுப்பி அவர் எனக்கு அளித்த பதிலுரை தான் கீழே ..........

எந்த மரத்தைப்பற்றி எழுதுகிறோம் என்ற பெயர் கூட தெரியாமல் எழுதப்பட்ட அபத்தமான கட்டுரையாகவே இது தெரிகிறது. இதிலுள்ள பல செய்திகளை நாம் அலட்சியப்படுத்தலாம்.

மற்றபடி, இங்கு குறிப்பிடப்படுவது வேலிகாத்தான் (அ) வேலி முள் (அ) சீமை வேல் எனப்படும் Prosopis juliflora எனப்படும் புதர்ச்செடி/ குறு மரம். இத்தாவரம் பற்றிய சிறு குறிப்பு கீழே (ஆங்கிலத்தில்). மேலும் பார்வைக்கு சில இணைப்புகள்.

இது ஒரு அந்நிய, ஊடுருவும், இயற்கை சூழலுக்கு சில பாதிப்புகளை ஏற்படுத்தும் தாவரம் என்பது பரவலாக தெரிந்த செய்தி. அதே சமயம் இது பல நண்மைகளையும் செய்திருக்கிறது. இது கொடுக்கும் விறகு இல்லாதிருந்திருந்தால் பல காடுகள் வெகு விரைவில் காணாமல் போயிருக்கும். மேலும் பசுந்தீவனமாகவும் பயன் தருகிறது. குறிப்பாக, இத்தாவரத்தை பரவச் செய்வதே ஆடு மாடுகள் மற்ற காட்டு விலங்குகள் இதன் காயை உண்டு விதை பரப்புவதால் தான்.

இத்தாவரம் வளரும் இடங்களில் மண் அரிப்பைத் தடுப்பதுடன், உவர் மண்ணின் வளத்தைக்கூட கூட்டுகிறது. மொத்தத்தில், பொருளாதார பார்வையில் இது பெரும் நன்மை பயப்பதாகக் கருதப்படுகிறது.

இந்தத் தாவரம் வளர்வதால் வறட்சி வரவில்லை. வறட்சி வந்ததற்குப் பின்னரே இது அறிமுகப்படுத்தப்பட்டது, வறட்சியின் பாதிப்பைக் மட்டுப்படுத்த!

ஆஸ்திரேலியா-வில் இது பரவுகிறது என்றால் அது வேறு பிரச்சினை, காரணிகள் வேறு, தீர்வு வேறு. இந்தியாவில் அதுவே வேறு விதமான பிரச்சினையாக இருக்கும், தீர்வு வேறாக இருக்க வேண்டும்.

இதை முற்றிலுமாக அழிப்பதை விட மேலாண்மை செய்வதே பல வகைகளிலும் சிறந்ததாக கருதப்படுகிறது.

சூழலியலில், ஒவ்வொரு தனித்தனி அங்கமாக பிரச்சினைகளைக் கையாண்டால் அது நீண்ட கால தீர்வாக இருக்காது. நமது வாழ்க்கை முறையிலிருந்து, பொருள் நுகர்விலிருந்து, மக்கட் பெருக்கத்திலிருந்து, இவைகள் பின்னிப்பிணைந்துள்ளன. அனைத்துக்கும் சேர்த்து அடிப்படியான தீர்வுகள் காணப்பட வேண்டும்.

ckravindran72 said...

தொடர்ச்சி ..........

மேலும் பார்வைக்கு:
http://www.worldagroforestrycentre.org/sea/products/afdbases/af/asp/SpeciesInfo.asp?SpID=1354

http://www.asareca.org/a-aarnet/Asal%20based%20project/Prosopis%20pods%20TF/Publications/Prosopis%207.pdf

http://www.gardenorganic.org.uk/pdfs/international_programme/Prosopis-PolicyBrief-2.pdf

மானிடன் said...

நல்ல தகவலை தந்ததற்கு ரவீந்தரன் அவர்களுக்கு நன்றி ....

Kumar K.P said...

இந்த சந்தேகம் எனக்கு முன்னாடியே தோணிச்சு ...காரணம் இந்த் மரங்கள் இங்கே அரபு நாட்டிலும் வளருது.

இந்த பதிவிற்க்கு நன்றி

மலர்வண்ணன் said...

நல்ல பதிவு ,நீண்ட நாட்களாக பார்க்கும் அனைவரிடமும் இதை வற்புருத்துகின்றேன் ,அதை இங்கே ஒரு பதிவாக பார்க்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது ,அரசு ,அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ,தனியார் அமைப்புகள் ,சமூக ,அரசியல் இயக்கங்கள் என்று அனைவரும் ஒன்று கூடி செய்ய வேண்டிய செயல்

Anonymous said...

// தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை// காக்கை இனம் கூடு கட்டி பார்த்திருக்கிறேன்,

முயற்ச்சி செய்கிறோம்

நாடோடி இலக்கியன் said...

இந்த கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் மரமும், இங்கே படத்தில் இருக்கும் மரமும் வேறு. இங்கே படத்தில் இருப்பவை வேலிகாத்தான் வகை.

மானிடன் said...

இந்த மரத்தின் உண்மையான தமிழ்ப் பெயர் வேலிகாத்தான் என்பது தான்..

Anonymous said...

ientha maram vetti nattin nalam kana our amaiyippu venndum..

Selvi said...

nandru

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms