Saturday, June 11, 2016

புத்தக வாசிப்பும் சமூக மாற்றமும் !

புத்தக வாசிப்பிறகும் சமுக மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.நம் சமூகம் குறித்து  நாமே நம்மை குறை கூறிக்கொள்வதற்கு காரணம் , புத்தக வாசிப்பு குறைவாக இருப்பது தான் .பரவலாக்கப்பட்ட புத்தக வாசிப்பின் முலமே சமூக மாற்றம் நிகழும். சமூக மாற்றத்தை விரும்புபவர்கள் புத்தக வாசிப்பை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும். நமது நண்பர்கள் , சொந்தங்கள் , குழந்தைகள் எல்லோருக்கும் குறைந்தபட்சம் ஓராண்டுக்காவது எல்லா நிகழ்வுகளுக்கும் புத்தகங்களையே பரிசளிப்போம். அவர்களை ஒரு புத்தகத்தை முழுதாக வாசிக்க வைத்துவிட்டால் போதும் ,வாசிப்பின் ருசியை உணர்ந்து கொள்வார்கள். அடுத்தடுத்த புத்தகங்களை அவர்களே தேடிக் கொள்வார்கள்.
புத்தக வாசிப்பை நாமெல்லோரும் இணைந்து ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். முடிந்தால் நாலைந்து பேர் இணைந்து குறு நூலகங்கள் அமைக்கலாம். பரந்து வாசிக்கக்கூடிய சமூகமே சமூக நீதிக்காக சிந்திக்க ஆரம்பிக்கும் ; குரல் கொடுக்கவும் தொடங்கும். சாதி , மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு சுயத்தை பற்றிய தேடல் வாசிப்பின் முலமே தொடங்கும்.
பள்ளி , கல்லூரி நூல்களைத் தவிர மற்ற நூல்களை வாசிக்க அனுமதிக்கக்கூடிய சூழல் பெரும்பாலும் நமது வீடுகளில் இல்லை. சுயநலத்தை மட்டுமே மக்களின் மனங்களில் வளர்த்துவிட்டு மக்களைக் குறை கூறிக்கொண்டிருக்கிறோம். சமீபத்திய தேர்தலில் படித்தவர்கள் , படிக்காதவர்கள் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் ஓட்டுக்காக பணத்தைப் பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலைக்கு காரணம் படித்தவர்களாக இருந்தாலும் கூட மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு இல்லாதது.
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் எந்தக்கட்சியும் காசு கொடுத்து ஓட்டு கேட்டுவிட முடியுமா ? முடியாது. காரணம், கேரள மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள். பத்திரிகையாளர் சமஸ் சொன்னது போல கேரள மக்களின் இத்தகைய அரசியல் விழிப்புணர்விற்கு காரணம் அவர்களின் பரந்துபட்ட வாசிப்பு தான்.
படித்தவர்களாக இருந்தாலும் சாதி , மத பேதங்களுக்குள் புதைந்து கிடக்கிறோம். மூடநம்பிக்கைகள் இன்னும் மண்டிக்கிடக்கின்றன. தமிழகத்தில் படிப்பறிவு உயர்ந்த விதத்தில் இங்கே சமூக மாற்றம் நிகழவில்லை. காரணம் , அறியாமை . சுயநலத்தைத் தாண்டி எதையும் அறியாமை. உலகுக்கே நீதி சொல்லும் வகையில் பல நீதி நூல்கள் நம்மிடையே இருக்கின்றன. நாம் தான் வாசிப்பதில்லை.
சக மனிதனை மனிதனாக மதித்து நடக்க ஆரம்பித்தாலே போதும் இங்கே சமூக மாற்றம் நிகழ ஆரம்பித்து விடும். அதற்கு புத்தக வாசிப்பு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
வாசிப்போம் ! மாற்றமடைவோம் !

மேலும் படிக்க :

ஜப்பானும் தனிமனித ஒழுக்கமும் !

மரணத்திற்கும் விலை உண்டு !

எது கலாசாரம் - கி.ரா...!
..................................................................................................................................................................

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms