Sunday, June 5, 2011

வேடந்தாங்கலில் ஒரு நாள் !

" வேடந்தாங்கல் " - பாடப்புத்தகங்களிலும் , வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டு முறையோ நாளிதழ்களிலும்  இடம்பெறும் ஒரு பெயர் . ஒவ்வொரு முறையும் இந்தப்பெயரை பார்க்கும்போதும் , கேட்கும்போதும் ஒரு முறையாவது அங்கு செல்ல வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்கும் துளிர் விடும் . நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு இன்று தான் வாய்ப்பு அமைந்தது . 

வேடந்தாங்கல் - இந்தியாவின் மிகப்பழமையான நீர் சார்ந்த பறவைகள் சரணாலயம் . இது 300 ஆண்டுகள் பழமையானதாகும் . 250 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளூர் கிராம மக்களால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்தது . பறவைகளை தங்கள் குழந்தைகள் போலே பாவித்து , அவைகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர் . இந்த கிராம மக்களின் இந்த உயர்ந்த பண்பால் தான் நமக்கு இந்த சரணாலயம் கிடைத்துள்ளது . 1962 முதல் இந்தச் சரணாலயம் வனத்துறையின்  
கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது .

வேடந்தாங்கல் சரணாலயம் 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவிலும் , செங்கல்பட்டிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது . சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் சென்று விடலாம் . நானும் எனது நண்பனும் சென்னையிலிருந்து சென்றோம் . பறவைகளின் உலகைக் காண மிகுந்த ஆவலுடன் செங்கல்பட்டு வரை மின்சார ரயிலிலும் , செங்கல்பட்டிலிருந்து பேருந்திலும் சென்றோம் . பேருந்தில் செல்லும்போதே சரணாலயம் எங்கு இருக்கிறது என்று அறிய முடிந்தது . காரணம் ,சரணாலயம் இருக்கும் இடத்தில் நிறைய பறவைகள் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன .

நவம்பர் முதல் ஜூன் வரை பறவைகளைப் பார்க்க முடியும் . டிசம்பர் மாதம் பறவைகளைக் காண மிகச்சிறந்த மாதம் . காலை 6 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே அதிக பறவைகளைக் காண முடியும் . அதற்குமேல் இரை தேடச் சென்றுவிடும் . மாலை 5 க்கு மேல்தான் மீண்டும் கூட்டுக்குத் திரும்பும் . அதிகாலை அல்லது மாலை பொழுதில் அங்கு இருக்கும் வரையில் நம் பயணத்திட்டம் அமைய வேண்டும் . நாங்கள் காலை 9 மணிக்குத்தான் அங்கு சென்றோம் .சொந்த கிராமத்துக்குச் சென்றது போல உணர்ந்தோம் . சுற்றுலாப்  பகுதி என்பதற்க்கான அடையாளம் சிறிது கூட இல்லை . இந்நிலை தொடரட்டும் . நபருக்கு 5 ரூபாய் நுழைவு கட்டணம் . 9 மணி ஆனபோதும் நீரில்  இருந்த  மரங்களில்  நிறைய பறவைகள் இருந்தன . பறவைகளை காண்பதற்கு உயர்ந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது . அதில் வனத்துறை சார்பில் பைனாகுலர் மூலம் பார்க்கும் வசதி செய்து தரப்பட்டுள்ளது . பைனாகுலர் மூலம் பறவைகளைக் காண்பது ஒரு நல்ல அனுபவம்  .  

வனத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது . உணவு மட்டும் நாம் கொண்டு சென்றுவிட வேண்டும் .  
மாலையில் கூட்டுக்குத் திரும்பும் பறவைகளைப் பார்த்த பிறகுதான் வீட்டுக்குச்  செல்ல வேண்டும் என்று முடிவு செய்து நாள் முழுவதும் அங்கேயே தங்கினோம் . எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்தோம் . மதிய உணவு கொண்டு செல்லவில்லை . 50 ரூபாய்க்கு வாங்கிய  நுங்கு தான் மதிய உணவு . காலியாக இருந்த இடத்தில் கொஞ்ச நேரம்  படுத்துத் தூங்கினோம் . தினமும் இயந்திர ஒலிகளை மட்டுமே கேட்ட எங்கள் காதுகளுக்கு இன்று நல்ல விருந்து ,  இடைவிடாமல் நாள் முழுவதும் பறவைகளின் ஒலிகளை உண்டு மகிழ்ந்தன .  

குறைந்த உயரம் முதல் அதிக உயரம் வரை வானத்தில் பறவைகள் வட்டமாக  
பறந்து கொண்டிருந்தன . படுத்துக்கொண்டே காரணத்தை ஆராய்ந்தபோது இரை தேடச் சென்ற மற்ற பறவைகளுக்கு இருப்பிடத்தை உணர்த்தவே அவை இவ்வாறு ( கலங்கரை விளக்கம் போல சரணாலய விளக்கமோ ! ) பறப்பதாக உணர்ந்தோம் . கிளைடர் விமானம்,  இவை பறப்பதைப் பார்த்துதான் உருவாக்கி இருக்க வேண்டும் . அவ்வளவு அழகாக காற்றில் மிதக்கின்றன .பல்வேறு வகையான பறவைகள் இருந்தன .

Spot-Billed Grey Pelican :


Snake Bird with fish in Water  :




Snake Bird in Tree :



Spoon Bill :




Large Egret :








Night Heron:




 Painted Stork :










Glossy Ibis :




Open-billed Stork :



இணையத்தின் உதவியால் இந்த படங்கள் கிடைத்தன . இவை மட்டுமல்ல இன்னும் நிறைய பறவைகள் இருந்தன . பாம்பு பறவை ( Snake Bird ) அவ்வளவு அழகு . நீருக்குள் மூழ்கி மீனைப் பிடிக்கிறது . மீனைப் பிடித்தவுடன் கரைக்குச் சென்று மீனை உண்ணுகிறது . பறவைகள் தண்ணீரின்மேல் இறங்கும் முறை அவ்வளவு அழகு . பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது . பார்த்துக்கொண்டே தான் இருந்தோம் . 

வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரிடம் பேசினோம் . இந்தப் பறவைகள் மற்றும் அங்கு இருந்த குரங்குகள் , இவற்றை தங்கள் குடும்பத்தில் உறுப்பினர்களாகவே கருதுகிறார்கள் . இவற்றுக்கு யாரும் எந்த தீங்கும் செய்வதில்லை . அவர் சினிமா பார்த்து 20 வருடங்கள் ஆகின்றதாம் ( கொடுத்து வைத்தவர் !) . விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்னார் . தமிழ்நாடு முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது . இதற்குத் தீர்வு ?

மாலை 5 மணிக்கு மேல் இரை தேடச் சென்ற பறவைகள் கூட்டுக்குத் திரும்ப ஆரம்பித்தன . நான்கு திசைகளிலும் இருந்து ஏராளமான பறவைகள் பறந்து வந்து கொண்டே இருந்தன .6 மணி வரை பறவைகள் வருவதை பார்த்துவிட்டு 
வெளியே வந்தோம் . பேருந்துக்கு இன்னும் நேரம் இருந்ததால் பக்கத்தில் இருந்த வயல்வெளிக்குச் சென்றோம் . எங்கள் கண்களே எங்களால் நம்ப முடியவில்லை . தூக்கனாகுருவிகளைப் பார்த்தோம் . ஆமாம் , 15 வருடங்களுக்குப்பிறகு இப்போது  தான் நான் அவற்றைப் பார்த்தேன் . அவை ஒரு பனைமரத்தில் கூடுகள்  கட்டியிருந்தன . சில பறவைகள் கூடு கட்டிகொண்டிருந்தன . எங்களைப் பார்த்ததும் நிறைய பறவைகள் அருகில் இருந்த மின்சாரக்கம்பியில் போய் அமர்ந்தன . ஒரு சில பறவைகள் மட்டும் தொடர்ந்து கூடு கட்டிக் கொண்டிருந்தன . மின்சாரக்கம்பியில் அமர்ந்து இருந்த பறவைகள் தொடர்ந்து ஒலி எழுப்பின . அதைத் தொடர்ந்து மிஞ்சிய பறவைகளும் மின்சாரக் கம்பிக்குச் சென்றன . நாங்கள் அந்த மரத்தை விட்டு கொஞ்ச தூரம் வந்ததும் , சில பறவைகள் மட்டும் மரத்திற்குச் சென்றன . அவை  சைகை ஒலி எழுப்பியவுடன் அனைத்து பறவைகளும் மீண்டும் மரத்திற்கு வந்தன . என்ன ஒரு எச்சரிக்கை உணர்வு ! 
நன்றி - மோகன் 

இந்தப்படத்தை பெரிதாக்கிப் பாருங்கள் . தூக்கனாகுருவி கூடுகள் தெரியும் .

தூக்கனாகுருவி மட்டுமல்ல நம் ஊரில் அழிந்து வரும் பறவைகளான ரெட்டை வால் குருவி , தைலன் குருவி , மைனா , காடை ,மற்றும் செம்பூத்து போன்றவற்றைக் கண்டோம் .  பல வகையான பட்டாம்பூச்சிகள் மற்றும் தட்டாம்பூச்சிகளையும் காண முடிந்தது . 6 . 15 குப் பிறகு மீண்டும் சரணாலயத்தின் உள்ளே சென்றோம் . நம்ப முடியாத எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கான பறவைகள் எல்லாத்திசைகளிலும் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக பறந்து வந்து கொண்டே இருந்தன . ஜூன் மாதத்தில் இவ்வளவு பறவைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை . 

நன்றி - மோகன் 


இவ்வாறு பறவைகள் பறந்து வந்தது " Fly Away Home " என்ற ஆங்கிலத் திரைப்படத்தை நினைவு படுத்தியது . 


இப்படி ஒரு வாய்ப்பை இழக்க இருந்தோம் . 6 மணிக்கு வரவேண்டிய பேருந்து வராத காரணத்தால் எங்களுக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்தது . இந்த முழு நாளையும் 6 மணிக்குப் பிறகான நிமிடங்கள் முழுங்கி விட்டன . எவ்வளவு பறவைகள் ! . சூரிய உதயத்தில் புதிய நாளைத்தொடங்கி சூரிய மறைவில் முடிக்கின்றன .  இந்த பறவைகளைப்  போல் தானே முன்பு நாமும் இருந்தோம் .பறவைகள் விதைப்பதும் இல்லை ;அறுப்பதும் இல்லை !

பிரிய மனமில்லாமல் சரணாலயத்தை விட்டு வெளியே வந்தோம் . அப்போது ஒரு குறுந்தகவல் வந்தது " இன்று உலக சுற்றுச்சூழல் தினம் ( World Environment Day )" என்று . இவ்வளவு பொருத்தமான நாளில் பறவைகளின் உலகைக் கண்டது மேலும் களிப்பை உண்டாக்கியது . அடுத்த பயணத்திற்கு காத்திருக்கிறேன் !

உலக சுற்றுச்சூழல் தினம் ! 

 ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாகும் .  


வனங்கள் இல்லாமல் நமக்கு வாழ்க்கை இல்லை . இயற்கை இல்லாமல் நம்முடைய ஒரு நிமிட வாழ்க்கைகூட சாத்தியமில்லை .

இயற்கையைக் கொண்டாடுங்கள் !

ஏனெனில் , இயற்கையைக் கொண்டாடாமல் வாழ்க்கையைக் கொண்டாட முடியாது .

எல்லோரும் கொண்டாடுவோம் !

மேலும் படிக்க :

ரயில் வண்டிப் பயணம் !

பூமியைக் காப்போம் வாருங்கள் !

சூரியன் - உலக சக்திகளின் மையம் !

நீரின்றி அமையாது உலகு !

..................................................

3 comments:

sakthivel said...

Arumai...

பா.சதீஸ் முத்து கோபால் said...

சிறப்பான பதிவு

http://ivansatheesh.blogspot.com/

Anonymous said...

hey.....i am going to vedantangal next week.....tks

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms