"மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்" என்ற ஜி.நாகராஜனின் கூற்று எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியது. அப்படியான மனிதர்களின் சல்லித்தனத்தை இத்திரைப்படம் பேசுகிறது. மதுபோதையால் நிகழும் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் ஆளும் அரசுகள், குற்றங்கள் எதுவுமே நடக்காதது போலவே நடந்து கொள்கின்றன. மது விற்பதோ , மது குடிப்பதோ குற்றமில்லை. ஆனால் அது இன்னொரு தனி மனிதரை பாதிக்கும் போது குற்றமாகிறது. மது விற்பனையை தீவிரமாக கண்காணிப்பது போலவே அதனால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுப்பதும் அரசின் கடமைதான். அப்படியான ஒரு அரசு இன்னும் தமிழ்நாட்டில் அமையவில்லை.
என்னதான் மனிதர்கள் குடும்பமாக, சமூகமாக இயங்கினாலும் சுயநலம் தான் மனிதர்களின் அடையாளம். எவ்வளவு நெருங்கிய உறவாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் பிரச்சனை என்று வரும் போது பெரும்பாலும் சுயநலமாகவே சிந்திப்பார்கள்.
அப்படியான நண்பர்கள் மது போதையால் நடந்து கொள்ளும் விதமும் அதனால் உருவாகும் சிக்கல்களும், அவர்களின் சுயநலமான மனநிலையும், சல்லித்தனமும்தான் இந்த ' மனிதர்கள் ' திரைப்படம்.
தெரிந்தோ தெரியாமலோ குற்றம் நிகழ்த்தப்பட்ட பிறகு அதிலிருந்து எப்படியாவது தப்பித்துக் கொள்ளவே மனிதர்கள் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். குற்றம் நிகழ்த்தப்படுவதற்கு முன்பு அவர்களது வாழ்வு எப்படி இருந்ததோ அதே வாழ்வை குற்றம் நிகழ்ந்த பிறகும் அடைய விரும்புகிறார்கள். நண்பர்களுக்குள் நிகழும் குற்றமும் அதன் பிறகான அவர்களின் மனநிலையும் திரையில் காட்சிகளாக விரிகின்றன.
Crowd Funding மூலம் இப்படிப்பட்ட ஒரு திரைப்படத்தை எடுப்பதற்கு முதலில் துணிச்சல் வேண்டும். நல்ல முயற்சி. நடிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தங்களது பணியைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் சிறப்பாகவே அமைந்திருக்கின்றன. இரவு நேர கிராமச் சாலைகளையும் விதவிதமான கோணங்களால் அழகாக காண்பித்து இருக்கிறார் , ஒளிப்பதிவாளர். கார் சக்கரங்களை படம் பிடித்த விதமும் அழகு. இரவில் படம் பிடித்திருந்தாலும் மற்ற காட்சிகளை விட தொடக்க காட்சியும் இறுதி காட்சியும் ரொம்பவே இருட்டாக இருந்தன. இதைக் கொஞ்சம் கவனத்தில் கொண்டிருக்கலாம். ஒரு வேளை , தொடக்கத்திலும் இறுதியிலும் மனிதர்களின் இன்னும் இருட்டான பக்கங்களைச் சொல்வதால் கூடுதல் இருட்டாக இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்களோ என்னவோ.
பேச்சு வழக்கும் கதை நிகழும் களமான திண்டுக்கல் பகுதியைச் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. அதே போல இது தானாக நிகழ்ந்த குற்றமா அல்லது வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட குற்றமா? என்ற சந்தேகத்தையும் கடைசி வரை கொண்டு சென்றிருக்கிறார், இயக்குநர், ராம் இந்திரா.
'குற்றத்தை மறைத்தல்' என்ற வகைமையில் இதற்கு முன்பும் நிறைய திரைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை நகைச்சுவையை முன்வைத்த திரைப்படங்களாகவே இருக்கின்றன. இதே பின்னணியில் ஒரு சீரியஸ் திரைப்படமாக, மனிதர்களின் அக உணர்வுகளை, மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு திரைப்படமாக நாம் ' மனிதர்கள் ' திரைப்படத்தை அணுகலாம். இயக்குநர் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள் 🎉
Aha மற்றும் SunNext OTT தளத்தில் காணக்கிடைக்கிறது.
மேலும் படிக்க: