Wednesday, December 19, 2012

சிறகசைவில்...!


அத்தனையும்
அற்றுப்போன நிலையிலும்
துளிர்க்கிறேன்
உன் சிறகசைவில்
ஒவ்வொரு முறையும்...!


நன்றி :-   http://praying-mantis101.blogspot.in/

மேலும் படிக்க :

பிரியாத பிரியங்கள் ...!

 ஒற்றையடிப் பாதை ! 

கேணி வீடு !

..........................................................................................................................

Friday, December 14, 2012

காந்தி அழுகிறார் ! புத்தர் சிரிக்கிறார் !

மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றினாலும் ,அங்கேயே தங்கிவிட இயற்கை அனுமதிக்கவில்லை . மனித இனம் , தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பூமியின் பல்வேறு இடங்களுக்கும் இடம்  பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது .பல்வேறு மாறுதல்கள் அடைந்த பிறகு நாடு என்ற அமைப்பு உருவானது . இன்றும் பல்வேறு விலங்குகள் தங்களுக்கென்று எல்லைகள் வகுத்துக் கொண்டு வாழ்கின்றன . தனது எல்லைக்குள் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு விலங்கை அனுபதிப்பதில்லை . அது போலவே மனிதனும் தனக்கென்று எல்லைகள் வகுத்துக்கொண்டு வாழ்கிறான் . வீடு ,வயல் ,பாதை ,ஊர் ,வட்டம் ,மாவட்டம் ,மாநிலம் ,நாடு என்று வெளிப்புறத்திலும் மொழி , ஜாதி ,மதம் ,இனம் ,மாநிலம் ,நாடு என்று உள்ளுக்குள்ளும் எல்லைகள் வகுத்துக்கொண்டு நிதமும் தன் சக இனத்திடம் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறான் .மனிதன் இன்னமும் விலங்கு தான் ; இனிமேலும் விலங்கு தான் .மனிதன் என்று ,எல்லாவற்றையும் கடந்து சக மனிதனை ,சக மனிதனாக நினைக்கிறானோ , தானும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்று உணர்கிறானோ, அன்று சொல்லிக் கொள்ளலாம் "தான் ஆறறிவு படைத்த விலங்கு" என்று .

ஒரு நாட்டின் வளம் ,செல்வம் என்பதெல்லாம் நீண்ட காலம் நீடிப்பதில்லை . அன்று செல்வ வளமுடன் இருந்த நாடு , இன்று ஏழை நாடு .அன்று மனிதர்களே இல்லாமல் இருந்த நிலப்பரப்பு இன்று வளர்ச்சியடைந்த நாடு . அன்று அனைத்து விலங்குகளாலும் அடித்து துரத்தப்பட்ட மனித இனம் , இன்று  மற்ற அனைத்து விலங்குகளையும் அடித்து துரத்துகிறது ; இயற்கையைக் கட்டுப்பாடில்லாமல் அழிக்கிறது . எல்லாம் ஒரு சுழற்சி தான் போல . வரலாற்றைப் புரட்டும்போது இந்தியா ,ஒரு காலத்தில் மிகவும் அதிகமான செல்வ வளங்கள் நிறைந்த நாடாக இருந்திருக்கிறது . இந்தியாவை அடைய பல நாடுகளில் இருந்து கடல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . இந்தியாவை கண்டுபிக்கும் சாக்கில் கண்டறியப்பட்ட நிலப்பகுதிகள் அதிகம் . அப்படி வந்த மெக்காலே இங்கிலாந்தில் ஆற்றிய உரை சுவாரசியமானது .

1835 ம்  ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதியன்று பிரிட்டிஷ் பார்லிமென்டில் லார்டு மெக்காலே ஆற்றிய உரை இது :

"நான் இந்திய நாட்டை குறுக்கிலும் நெடுக்கிலுமாகச் சுற்றுப் பயணம் செய்து பார்த்துவிட்டேன் . எங்கும் ஒரு பிச்சைக்காரனையோ , திருடனையோ நான் காணவில்லை ! இந்திய நாடு ஏராளமான செல்வம் கொழிக்கும் ஒரு நாடு ! உயர்ந்த பண்பு நலன்கள் கொண்ட நாடு ! சிறந்த மனநலமும் குணநலமும் கொண்ட மக்கள் . இப்படி ஒரு நாட்டை நாம் வெற்றி கொள்ள முடியும் என்று நான் எண்ணவில்லை . அவ்வாறு நாம் இந்திய நாட்டை வெற்றி கொள்ள வேண்டுமானால் நாம் முதலில் அந்த நாட்டின் முதுகெலும்பாக உள்ள ,காலம் காலமாக வளர்ந்து வந்த ஆன்மீகத்தையும் , பண்பாட்டையும் உடைத்து எறிய வேண்டும் . எனவேதான் இந்தியாவின் பழமை மிக்க கல்வி முறையையும் இயல்பான பண்பாட்டையும் நாம் மாற்றி விட வேண்டும் என்று யோசனை கூறுகிறேன் .

இந்தியர்கள் தங்களது நாட்டையும் , தங்கள் மொழியையும் விட இங்கிலாந்து நாடும் , ஆங்கில மொழியும் சிறந்தது என நினைக்கும்படி நாம் செய்துவிட்டால் அவர்கள் தங்கள் கெளரவத்தையும்  சொந்த கலாசாரம் , பண்பாடு முதலியவற்றையும் இழந்து விடுவார்கள் . பிறகு நாம் எப்படி நினைத்தோமோ அப்படி அவர்கள் மாறிவிடுவார்கள் . அடிமைகளாகி  விடுவார்கள் . இந்தியா ஓர் உண்மையான அடிமை நாடாகிவிடும் ."

விடுதலை பெற்று இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்னும் நாம் ஆங்கில மொழிக்குத் தான் அதிக மரியாதை கொடுக்கிறோம் . மக்களே கவனியுங்கள் , பிச்சைக்காரனோ ,திருடனோ கண்ணில் படவில்லையாம் . அப்படி வளம் மிகுந்த நாட்டை பல்வேறு படையெடுப்புகள் மூலம் கொள்ளையடித்துச் சென்றனர் . பிரிட்டிஷ்காரர்கள்  நிலையாக வியாபாரத் தளத்தை அமைத்து கொஞ்சம் கொஞ்சமாக சுரண்டி இனி கொள்ளையடிப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்தார்கள் . இந்தியாவின் வளம் குன்றாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக சுதந்திரம் கிடைத்திருக்காது . ஒரு நெடிய சுதந்திரப் போராட்டமும்  பல ஆயிரம் உயிர்களும் தேவைப்பட்டன அந்த சுதந்திரத்தைப் பெற . அப்படி வாங்கப்பட்ட சுதந்திரம் , சாதாரண இந்திய மக்களுக்கு பெரிய அளவில் எந்தப் பயனையும் தரவில்லை . சுரண்டலும் ,கொள்ளையடித்தலும் நிகழ்கிறது ,அன்று வெள்ளையர்களால் ,இன்று இந்தியர்களால் ,நாளை வெள்ளைக்காரர்களால் ?

இன்று இந்தியா தான் உலகின் மிகப்பெரிய சந்தை . எதைக் கண்ணில் காட்டினாலும் மறு பேச்சு இல்லாமல் வாங்கும் கூட்டம் அதிகமுள்ள நாடு இந்தியா . சாப்பாட்டை விட மற்ற விசயங்களுக்கு  அதிகம் செலவு செய்யும் மக்கள் நிரம்பிய நாடு . அதனால் , வணிக நிறுவனங்களின்  ஒரே நோக்கம் எப்படியாவது இந்தியாவில் கடை விரித்து லாபம் பார்ப்பது . அதற்கு எதை வேண்டுமானாலும் செய்ய பெரு முதலாளிகள் தயாராக உள்ளனர் . சின்ன உதாரணம் , வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைய மட்டும் 125 கோடி செலவு செய்துள்ளது . உள்ளே நுழையவே 125 கோடி என்றால் இந்தியாவின் சந்தை மதிப்பை கற்பனை செய்து கொள்ளுங்கள் . இந்தியாவை மறுபடியும் வெள்ளைக்காரர்கள்  உரிமையுடன் ஆளப் போகிறார்கள் .

இந்த விசயமெல்லாம் தெரியாத ஒரு மனுஷன், சமாதியில இருந்து எந்திருச்சு உட்கார்ந்து  கத்துறார் ,கத்துறார் .கேட்க நாதியே இல்லை .எல்லாப் பேரும்  கோடிகளில்  புரள்கிறார்கள் .அரசியவாதிகள் பணக் கோடிகளில் ,மக்கள் தெருக் கோடிகளில் . அதனால் அவர் கத்துவது யாருக்கும் கேட்கவில்லை . அவர் ஒன்றைத் தான் சதா புலம்பிக் கொண்டே இருக்கிறார்  .அது  "இப்படி ஒரு நிலை வரவா சுதந்திரம் பெற்றோம் . சுதந்திரம் பெறாமலே இருந்து இருக்கலாமே ! " என்பது தான் . அந்த வெவரம் கெட்ட மனுஷன் வேற யாரும் இல்ல நம்ம "காந்தி" தான் .

ரூபாய்க்கு மதிப்பு இருந்த வரை காந்திக்கும் மதிப்பு இருந்தது .ரூபாயின் மதிப்பு குறைந்து  கோடிகள் எல்லாம் சாதாரணம் என்றாகிவிட்ட நிலையில் இன்று காந்திக்கும் மதிப்பு இல்லை . காந்தியின் கொள்கைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன . காந்தி வளர்த்து  விட்ட " காங்கிரஸ் கட்சி " மட்டும் இன்று தேவைப்படுகிறது , ஊழல் மட்டும் செய்யவும் , கொள்ளையடிக்கவும் ,நாட்டை சகாய விலையில் விலை பேசவும் . இன்றைய  காங்கிரஸ் கட்சிக்கும் காந்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை . மக்கள் என்றால்  யார் ? அவர்கள் எப்படி இருப்பார்கள் ?என்று அறிவுப்பூர்வமான  கேள்விகள் கேட்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே இன்று காங்கிரஸ் கட்சியில்  இருக்கிறார்கள் . மக்களாட்சி என்பதற்கும் காங்கிரஸ் ஆட்சி என்பதற்கும் துளியும் தொடர்பில்லை . கிராமப்  பொருளாதரத்தை மேம்படுத்தாமல் வளர்ச்சியை கொண்டு வர முடியாது . வளர்ச்சி கீழிருந்து மேல் நோக்கியதாக இருக்க வேண்டும் .இந்தியாவில் வளர்ச்சி என்பது அந்தரத்தில் இருக்கிறது .

தேசிய ஒருமைப்பாடு என்பது மிகவும் மோசமடைந்து வருகிறது . தண்ணீர் ,மின்சாரம் ,இனம் ,பகுதி என்று பலவித பிரிவினைகள் . இந்தியன் எல்லா இடத்திலும் இந்தியனாக இல்லை . மின்சாரத்தைப் போல தண்ணீரையும் தேசியமயமாக்கினால் தான் என்ன ? எப்படியாவது பதவிக்கு வர வேண்டும் என்று நினைக்காமல் ,பல்வேறு பட்ட மக்கள் ,பல்வேறு கலாசாரங்களுடன் வாழும் இந்தியாவைப் பற்றி கொஞ்சமாவது அரசியல் கட்சிகள் நினைக்க வேண்டும் .இல்லையென்றால் இவர்கள்  பதவிக்கு வர எதுவும் இருக்காது .

ஆசையின் விளைவாக உலகில் நிகழும் மாற்றங்களை மெளனமாக பார்த்து ரசித்துச் சிரிக்கிறார் ,புத்தர் .

புத்தர் சிரிக்கிறார் !

பின் குறிப்பு :

உலகம் அழியுமா ? இப்போதைக்கு அழியாது . ஒரு காலத்தில் டைனோசர்கள் உலகை ஆண்டன .இன்று ,மனிதர்கள் ஆள்கிறார்கள் .நாளை ,வேறு ஏதாவது ஒரு விலங்கு உலகை ஆளலாம் . பூமி அழியவே அழியாதா .அழியும் ,சூரியன் என்று அழிகிறதோ அன்று பூமியும் அழிந்துவிடும் . மனிதர்கள் அழிந்தாலும் சூரியன் இருக்கும் வரை, பூமி உயிருடன் இருக்கும் என்று தான் தோன்றுகிறது .

நன்றி :- தினமணி ,  Wall Street journal.

மேலும் படிக்க :

சிரிப்பு வருது ! சிரிப்பு வருது !

" இந்தியா " - சர்வாதிகாரிகளின் தேசம் !

காங்கிரஸை அழிப்போம் !

.................................................................................................................................................



Wednesday, December 5, 2012

எது கலாசாரம் - கி.ரா...!

 கி.ராஜநாரயணன் ,வட்டார மொழி இலக்கியத்தின் முன்னோடி , தமிழ் இலக்கியத்தின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர் . ஊரூராக தேடியலைந்து நாட்டார் கதைககளை ஆவணப்படுத்தியவர் . நாட்டார் வழக்கில் இயல்பாகவே  இழையோடியிருந்த பாலியலையும் ,பாலியல் கதைகளையும் பதிவு செய்தவர் . தலைசிறந்த கதைசொல்லியான அவரது நேர்காணல் 14-11-12 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவந்தது . ஒரு சில வார்த்தைகளின் மூலம் மட்டுமே பெரிய கோட்டையையே தகர்க்கும் சக்தி உண்மையான படைப்பாளிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது . எந்தவித விழுமியங்களிலும் சிக்காமல் வாழ்க்கையை எளிமையாக அணுகுகிறார் ,கி .ரா . அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது . கலாசாரம் குறித்து அவர் சொன்னதை மட்டுமே இங்கே பகிர்ந்து கொள்கிறேன் .


சமஸ் :-

" கட்டுக்கோப்பான கலாசாரத்திற்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம் ; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு  கலாசாரச்  சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம் .. இரண்டிலும் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் . எந்தக் கலாசாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது ?"

 கி.ரா :-

" பிரெஞ்சு கலாசாரம் தான் உன்னதமாத் தெரியுது . இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோசமா வாழனும் . அதுதான் நோக்கம் .சந்தோசமா எப்படி வாழறது ? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும் . எந்தக் கட்டுப்பாடும் இல்லாம , அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா,சந்தோசமா வாழனும் . அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது ? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கல .அட , விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே ? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு . விருப்பம்போல வாழலாம் ; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம் .இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம் . புள்ளைங்களுக்கும்  தெரியும் . அம்மாதான் நம்மளோட அம்மா ,நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது . ஊருக்கும் தெரியும் . யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை .சந்தோஷமா இருந்தாங்க .ஆனா ,அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது . நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான் .கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடுச்சு அலையுறோம் ."

சமஸ் :-

"அப்படி என்றால் , ஒரு கலாசாரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம் தான் அளவுகோலா ? "


கி.ரா :-

" ஆமா ,கலாசாரம்னு பேசுனா , மொதல்ல அங்கே இருந்து தானே தொடங்கணும் ? ஒழுக்கம் ,ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ ,அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும் . ஒவ்வொருத்தனும் மனுசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான் .வெளியே பேசுறது பதிவிரதத்தனம் .சென்னையிலேயே,ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா ? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு , குழாயை  உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா ? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு ? அட , பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது ? என்னடா , இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது .இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது , இல்லையா ?மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன் ."

சமஸ் :-

" இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா? "

கி.ரா.:-

" கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும் . எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும் . பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும் . மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விசயமாக்கிட்டோம் . பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு , அந்த ஞாபகமாகவே அலையுது . நான் கேட்குறேன் ... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா , அது சிக்கலா, இல்லையா ? அது அவனோட சிக்கல் மட்டும்தானா .. சமுதாயத்தோட சிக்கலுமா ? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே ,அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன ? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி , கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க . ரெண்டு பசியுமே மோசமானது . ஆனா, இங்கே எல்லோருமே மேல் வயித்துப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம் . கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம் .  "


சமஸ் :-

" இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா ? "

கி.ரா :-

"     முதல் காதல் ... ஹா ... ஹா ... பசிக்குது . அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு .உடனே கிடைச்சுட்டா ,அதை ஒரு விசயமா நெனைப்போமா ? அப்படித்தான் இந்தக் காதலும் . கிடைச்சுட்டா , அந்த நேரச் சாப்பாடு . கிடைக்காட்டி , அதுக்குப் பேர் காதல் . கிடைக்கவே கிடைக்காட்டி , அது  அமரக் காதல் , காவியக் காதல் . ஒரு விஷயம் சொல்லலாம் . காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை .வந்துக்கிட்டே இருக்குறது . "


இந்த 90 வயதுக்காரரிடம் நாம் கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது ...!

நன்றி - ஆனந்த விகடன் .


மேலும் படிக்க :

மெதுவான எளிய வாழ்க்கை !

உண்மையான கொண்டாட்டம் !

வாழ்க்கை ஒரு போராட்டம் !
.................................................................................................................................................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms